மரியியல் தொடர் – 24
கிறிஸ்தவ ஒன்றிப்பு நோக்கில் நடைபெற்ற மரியா பற்றிய உரையாடல்கள்
2. கிறிஸ்தவ ஒன்றிப்புச் செயலகமும் சில பெந்தகோஸ்து திரு அவையினரும் இணைந்து வெளியிட்ட இறுதி உரை (1977-1982):
கீழைத் திரு அவையினரும், பழைய கத்தோலிக்கரும் மரியா பற்றிய படிப்பினையில் கத்தோலிக்கத் திரு அவையோடு பல தளங்களில் இணைந்து செல்லக்கூடிய நிலையில், பெந்தகோஸ்து திரு அவையினர் மரியா பற்றிய படிப்பினையில் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகின்றனர். கிறிஸ்தவ ஒன்றிப்புச் செயலகமும், சில பெந்தகோஸ்து திரு அவையினரும் இணைந்து வெளியிட்ட இறுதி உரையில் (1977-1982), மரியா பற்றிப் புதிய ஏற்பாட்டில் நேரடியாக, வெளிப்படையாகக் கூறப்பட்டவற்றை மட்டுமே தங்களால் ஏற்க முடியும் என்று பெந்தகோஸ்து திரு அவையினர் கூறினர்.
கத்தோலிக்கத் திரு அவை வரையறுத்த மரியா பற்றிய நான்கு மறைக்கோட்பாடுகளுமே நேரடியாக, வெளிப்படையாகப் புதிய ஏற்பாட்டில் காணப்படவில்லை; எனவே, அவற்றை ஏற்க முடியாது என்றனர். இவர்கள், மரியாவுக்கு வழங்கப்பட்ட பட்டமாகிய ‘கடவுளின் தாய்’ என்பதை ஏற்றுக்கொண்டாலும், இதை மரியாவுக்கு வழங்கப்பட்ட ஒரு புதிய பட்டமாக ஏற்கவில்லை; மாறாக, இப்பட்டத்தைக் கிறிஸ்தியல் சார்ந்த ஒன்றாக, இயேசு கிறிஸ்துவின் இயல்பை விளக்கும் ஒன்றாகத்தான் காண முடியும் என்றனர். மேலும், இயேசுவைத் தம் வயிற்றில் கருத்தாங்கிய நேரத்தில் இருந்துதான் மரியாவைக் ‘கடவுளின் தாய்’ என அழைக்க முடியும் என்றனர்.
மரியா கன்னியாக இருந்துகொண்டே இயேசுவைப் பெற்றெடுத்தார் என்பதைப் பெந்தகோஸ்து திரு அவையினர் ஏற்றுக்கொண்டனர். இருப்பினும், இயேசுவைப் பெற்றெடுத்த பின்பு, மரியா யோசேப்புடன் இணைந்து கணவர்-மனைவி போன்று வாழ்ந்தார்; ஏனைய பிள்ளைகளைப் பெற்றெடுத்தார் என்பதற்குப் புதிய ஏற்பாட்டில் போதுமான சான்றுகள் உள்ளன என்றனர்.
மரியாவின் அமல உற்பவத்தைப் பெந்தகோஸ்து திரு அவையினர் ஏற்பது இல்லை. காரணம், இது பற்றி திருவிவிலியம் நமக்கு எதுவும் கூறவில்லை என்றனர். மரியாவின் விண்ணேற்பைப் பொறுத்த மட்டில், மரியாவும் எல்லாக் கிறிஸ்தவர்களைப்போல் உயிர்ப்பின் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார் என்றனர். இறுதி நாளில் மரியாவும் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணக மாட்சியில் பங்கெடுப்பார் என்றனர். தவிர, மரியா, புனிதர்களின் பரிந்துரை செபத்தையும் பெந்தகோஸ்து திரு அவையினர் ஏற்கவில்லை. மரியாவுக்குச் செய்யப்படும் வணக்கத்தை அவர்கள் சிலை வழிபாடாகக் காண்கின்றனர்.
3. நற்செய்தித் திரு அவைக்கும் (Evangelical Church), உரோமைக் கத்தோலிக்கத் திரு அவைக்கும் இடையே நடைபெற்ற ‘பணி’ பற்றிய உரையாடல் (1977-1984)
பெந்தகோஸ்து திரு அவையினரைப் போன்றே, நற்செய்தித் திரு அவையினரும் மரியா பற்றிய படிப்பினைகளையும், மரியா வணக்கத்தையும் மறுக்கின்றார்கள். நற்செய்தித் திரு அவைக்கும், உரோமைக் கத்தோலிக்கத் திரு அவைக்கும் இடையே நடைபெற்ற ‘பணி’ பற்றிய உரையாடலில் (1977-1984), இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மரியா பற்றிய படிப்பினையும், ‘மரியா வணக்கம்’ எனும் திருத்தந்தையின் சுற்றுமடலும் முக்கியத்துவம் பெற்றன. இந்த உரையாடலில் மரியா பற்றிய எல்லா மறைக்கோட்பாடுகளையும் அவர்கள் மறுத்தார்கள். மேலும், கத்தோலிக்கத் திரு அவை மரியாவை ‘இணை மீட்பர்’ நிலைக்கு உயர்த்தி விட்டது. இது அவர்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தடையாக உள்ளது என்று கூறினர்.
4. வயது வந்தோர் திருமுழுக்குத் திரு அவைக்கும் (Baptist Church), உரோமைக் கத்தோலிக்கத் திரு அவைக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் (1988)
வயது வந்தோர் திருமுழுக்குத் திரு அவையின் ஆன்மிக வாழ்விலும், இறையியலிலும் மரியாவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. இருப்பினும், இறைத்திட்டத்துக்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டிய சீடத்துவ வாழ்விற்கு மரியா ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார் என்கின்றனர் அவர்கள். அதாவது, மீட்பின் வரலாற்றில் ஒரு சிறப்பான பணியை ஆற்றுவதற்குக் கடவுளின் அழைப்பைப் பெற்றபொழுது, கடவுளின் அருளால் அதற்கு இசைவு கொடுத்த நபராக அவர்கள் மரியாவைக் காண்கின்றனர். இவை தவிர, மரியா பற்றிய கோட்பாடுகளை அவர்கள் ஏற்பது இல்லை. வயது வந்தோர் திருமுழுக்குத் திரு அவைக்கும், உரோமன் கத்தோலிக்கத் திரு அவைக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் (1988), கத்தோலிக்கத் திரு அவையில் மரியாவுக்குச் செலுத்தப்படும் வணக்கத்தில் இரண்டு சிக்கல்கள் உள்ளன என்று வயது வந்தோர் திருமுழுக்குத் திரு அவையினர் சுட்டிக்காட்டினர்:
1) இயேசுவே ஒப்புயர்வான ஒரே இடைநிலையாளர். எனவே, மரியாவை நமக்காகப் பரிந்து பேசுபவராகக் கூறக்கூடாது என்றனர். 2) 1854, 1950 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட மரியா பற்றிய மறைக்கோட்பாடுகள் திருவிவிலியத்தில் வேரூன்றாதவை; எனவே, அவற்றை ஏற்க முடியாது என்றனர். மேலும், மரியாவைத் திரு அவையின் ‘உருவ ஓவியம்’ (Icon) எனக் கத்தோலிக்கத் திரு அவை கூறுவதையும் அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.
5. லூத்தர் திரு அவையினருக்கும், உரோமைக் கத்தோலிக்கருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் (1983 - 1990)
லூத்தர் திரு அவையினருக்கும், உரோமைக் கத்தோலிக்கருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் (1983-1990) வெளிப்பாடாக, ‘ஒரே இடைநிலையாளர், புனிதர்களும் மரியாவும்’ எனும் ஏடு 1992 இல் வெளியிடப்பட்டது. 1திமொ 2:5 இல் காணப்படும் “கடவுள் ஒருவரே; கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்” எனும் பகுதிதான் இந்த ஏட்டின் மையக் கருவாக அமைந்தது. இவ்வகையில், இயேசு கிறிஸ்துவே ஒரே இடைநிலையாளர்; அவருடைய மீட்கும் அருளால் நாம் அனைவரும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆகின்றோம் என்பதை இவ்வேடு வலியுறுத்தியது.
இவ்வேடு பல தளங்களில் லூத்தர் திரு அவையினரும், கத்தோலிக்கத் திரு அவையினரும் இணைந்து செல்வதாகத் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டினார்கள்: 1. கிறிஸ்துவின் அருளால் மரியாவைக் கடவுள் தமக்கு ஏற்புடையவராய் ஏற்றுக்கொண்டார். 2. புனிதர்கள் இவ்வுலகில் வாழ்ந்தபோது அவர்கள் தங்கள் வாழ்வின் மூலம் பிறருக்கு எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தார்கள்; கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள். இவ்வகையில், உரோமைக் கத்தோலிக்கத் திரு அவையில் காணப்படும் புனிதர் வணக்கத்தைச் ‘சிலை வழிபாடு’ எனக் கூறக்கூடாது என லூத்தர் திரு அவையினர் கூறினர். அதேவேளையில், லூத்தரும், லூத்தரின் திரு அவையினரும் மரியாவுக்கு வழங்கிய வணக்கத்தைக் கத்தோலிக்கத் திரு அவையினர் பாராட்டினார்கள். 3. மண்ணகத் திரு அவையில் வாழக்கூடியவர்களுக்காகப் புனிதர்கள் செபிக்கின்றார்கள் என்பதை லூத்தர் திரு அவையினர் மறுக்கவில்லை. இருப்பினும், மானிட மீட்பில் புனிதர்களின் பங்களிப்பை அவர்கள் ஏற்கவில்லை. இவ்வகையில் இயேசு கிறிஸ்து மட்டுமே ஒரே இடைநிலையாளர் என்பதை அவர்கள் வலியுறுத்தினர். இதற்குப் பதிலிறுக்கும் வகையில், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், ‘கிறிஸ்துவே ஒரே இடைநிலையாளர்’ என்பதை ஏற்பதாகச் சுட்டிக்காட்டினார்கள். இருப்பினும், கடவுளின் மீட்புத் திட்டத்தில் மரியா உள்பட அனைத்துப் புனிதர்களும் ஒத்துழைக்க அவரே ஆற்றலை வழங்குகின்றார் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
மேற்கூறப்பட்ட தளங்களில் லூத்தர் திரு அவையினருக்கும், கத்தோலிக்கர்களுக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டாலும், பின்வரும் தளங்களில் கருத்து உடன்பாடு ஏற்படவில்லை:
1) கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தமட்டில், மரியாவுக்குத் தாங்கள் செய்யும் வணக்கம் எவ்விதத்திலும் கிறிஸ்துவுக்கு வழங்கும் ஆராதனையைக் குறைக்கக்கூடிய செயல் அல்ல என்றனர். மேலும், திரிதெந்தின் சங்கமானது மரியாவிடம் வேண்டுதல் செய்வது என்பதைக் கட்டாயமான ஒன்று என வலியுறுத்தவில்லை; மாறாக, அதை ‘நல்லது’, ‘பயன் வழங்கக்கூடியது’ என்று மட்டுமே கூறியது என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். மேலும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் மரியாவிடம் நாம் செபிப்பது என்பது ‘மிகவும் பொருத்தமானது’ என்றுதான் கூறுகின்றது என்றனர்.
இவ்வகையில், மரியாவுக்கு உரிய வணக்கம் செலுத்துவதில் இரு திரு அவையினரும் ஒத்த கருத்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், மரியாவிடம் நாம் செபிப்பது என்பதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற பரிந்துரையை இந்த ஏடு முன் வைத்தது. எனவே, மரியாவும், புனிதர்களும் நமக்காகப் பரிந்து பேசுகின்றார்கள் என்பதில் ஒத்தக் கருத்து ஏற்படவில்லை. காரணம், மரியா நமக்காகப் பரிந்து பேசுகின்றார் என்பதற்குத் திருவிவிலியத்தில் நேரடிச் சான்றுகள் எதுவும் இல்லை; மேலும், கிறிஸ்துவே ஒரே இடைநிலையாளர் என்பதைக் குறைத்து மதிப்பிடுவதாய் மரியாவின் பரிந்துரைச் செபம் உள்ளது என்றனர்.
2) மரியாவின் அமல உற்பவத்தை லூத்தரின் திரு அவையினர் ஏற்கவில்லை. காரணம், கிறிஸ்துவைத் தவிர, ஆதாம்-ஏவாள் வழியாகப் பிறந்த அனைவருமே தொடக்கப் பாவத்துடன் பிறக்கின்றார்கள் என்பதற்கு எதிராக மரியாவின் அமல உற்பவக் கோட்பாடு உள்ளது என்றனர். மேலும், இதற்கு திருவிவிலிய ஆதாரம் எதுவும் இல்லை என்றனர்.
3) மரியாவின் விண்ணேற்பையும் லூத்தர் திரு அவையினர் ஏற்கவில்லை. காரணம், அது திருவிவிலியத்தில் வேரூன்றவில்லை என்றனர். தவிர, கத்தோலிக்கத் திரு அவை இந்த இரண்டு மறைக்கோட்பாடுகளையும் அறிவித்தபோது, ஏனைய திரு அவைகளைக் கலந்தாலோசிக்கவில்லை என்றும், இக்கோட்பாடுகளைத் திருத்தந்தை தம் தவறா வரத்தால் அறிவித்தார் என்றும் சுட்டிக்காட்டி அவற்றை ஏற்க மறுத்தனர். இவ்வாறாக, மரியா பற்றிய படிப்பினைகளிலும், மறைக்கோட்பாடுகளிலும் லூத்தரின் திரு அவையினருக்கும், கத்தோலிக்கத் திரு அவையினருக்கும் பெரிய அளவில் இவ்வுரையாடலில் உடன்பாடு ஏற்படவில்லை.
6. இங்கிலாந்து நாட்டு மெத்தோடியத் திரு அவையும், கத்தோலிக்கர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கை (1995)
இங்கிலாந்து நாட்டு மெத்தோடியத் திரு அவையும், கத்தோலிக்கர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கையானது மரியா, ஆண்டவரின் தாய்: அருள், நம்பிக்கை, புனிதத்தின் அடையாளம் எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்தக் கூட்டறிக்கை கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா ஆகிய விழாக்களில் மெத்தோடியத் திரு அவையானது மரியாவை நினைவு கூர்வதைச் சுட்டிக்காட்டியது; அதே வேளையில், இத்திரு அவை மீட்புத் திட்டத்தில் மரியாவின் பங்கைப் பற்றிச் சிந்திக்கத் தவறிவிட்டது என்றது. தவிர, எல்லாத் தலைமுறையினரும் மரியாவைப் ‘பேறுபெற்றவர்’ (லூக் 1:48) என அழைக்கும் திருவிவிலியப் பகுதிக்கு அத்திரு அவையின் பதில் மொழி என்ன என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. மேலும், மரியாவை நம்பிக்கை வாழ்வு வாழ்ந்த மூத்த சகோதரியாகவும், சீடத்துவ வாழ்விற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் ஏற்க இவ்வறிக்கை வலியுறுத்தியது. இருப்பினும், மரியா கடவுளால் படைக்கப்பட்டவர்; எனவே, அவரும் ஒரு மானிடப் பிறவி என்பதை மறந்து, கடவுளுக்கு இணையாக மரியாவுக்கு வழங்கப்படும் அனைத்துப் பட்டங்களையும், வணக்கங்களையும் கைவிட வேண்டும் என இக்கூட்டறிக்கை வலியுறுத்தியது.
மெத்தோடியத் திரு அவையினர் மரியாவை இணை மீட்பர் என்பதை ஏற்க முடியாது என்றனர். இருப்பினும், கிறிஸ்து வழியாகக் கடவுள் ஆற்றிய மீட்புத் திட்டத்தில் இறையருளால் நிரப்பப்பட்டவராக மரியா சுதந்திரமாக ஒத்துழைத்தார் என்பதை மெத்தோடியத் திரு அவையினர் மறுக்க முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இவ்வாறு, கடவுளின் மீட்புத் திட்டத்தில் இறையருளின் துணையோடு மானிடம் ஒத்துழைக்க முடியும் என்பதை மெத்தோடியத் திரு அவையினரும், கத்தோலிக்கரும் ஏற்றுக்கொண்டனர். இறையருளின் துணையோடுதான் மானிடம் தனது ஒத்துழைப்பை வழங்க இயலும் என்ற சிந்தனை இவ்வுரையாடலில் அழுத்தம் பெற்றது. மேலும், மானிட மீட்பு என்பது கடவுளே வழங்கும் ஒரு மாபெரும் கொடை; மானிடம் தன் நற்செயல்கள் மூலம் அதைப் பெற முடியாது என மெத்தோடியத் திரு அவையாளர் கூறினர்.
மரியா பற்றிய கோட்பாடுகளைப் பொறுத்தமட்டில், இறைமகனின் தாயாக இருக்க மரியா சிறப்பான விதத்தில் அழைக்கப்பெற்றார் என்பதை மெத்தோடியத் திரு அவையினர் ஏற்றுக்கொண்டனர். மெத்தோடியத் திரு அவையைத் தோற்றுவித்ததில் சிறப்பான பங்காற்றிய ஜான் வெஸ்லே என்பவர், மரியா முப்பொழுதும் கன்னி என்பதை ஏற்றுக் கொண்டார். எனவே, மெத்தோடியத் திரு அவையினரும் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால், நேரடியான திருவிவிலிய ஆதாரம் இல்லாததால், மரியாவின் அமல உற்பவத்தையும், விண்ணேற்பையும் அவர்கள் ஏற்கவில்லை. இருப்பினும், இந்த இரண்டு கோட்பாடுகளும் வலியுறுத்தும் உண்மைகளை அவர்கள் ஏற்கின்றனர். மரியா கடவுளின் தாயாக இருக்க அழைப்புப்பெற்ற பின்னணியில், கடவுள் அவருக்குச் சிறப்பான முறையில் வழங்கிய அருளாக மரியாவின் அமல உற்பவத்தைக் காண்கின்றனர். மரியாவின் விண்ணேற்பைப் பொறுத்தமட்டில், மானிடத்திற்கு உலக முடிவில் வழங்கப்படவிருக்கும் விண்ணகப் பேரின்பம் மரியாவுக்கு முன்பே வழங்கப்பட்டது என ஏற்கின்றனர்.
(தொடரும்)
Comment