No icon

தமிழகத்தில் கிறிஸ்தவம் – 25

திண்டுக்கல் பகுதியில் மறைப்பணி

திண்டுக்கல் பகுதிகள் மலையடிப்பட்டி மறைத் தளத்தின் ஓர் அங்கமாக இருந்தன. பழனி, உத்தம பாளையம் வரை இதன் எல்லைகள் விரிந்திருந்தன. மனுவேல் தெரேஸ் 1708-இல் நல்லமநாயக்கன் பட்டியில் ஓர் ஆலயத்தை அமைத்தார். இதுவே இப்பகுதியின் முதல் ஆலயமாகக் கணிக்கப்படுகிறது. திண்டுக்கல்லில் தலித் சமூக மக்கள் பெரும் எண்ணிக்கையில் திருமுழுக்குப் பெற்றனர். அருள்தந்தை மனுவேல் ஒருமுறை ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும்போது, இந்நகரின் ஆளுநர் அருள்தந்தை, வேதியர் மற்றும் உடன் உழைப்பாளர் ஒருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். “எதற்காக எங்களைக் கைது செய்தீர் கள்?” எனக் கேட்டபோது, “நீ எல்லாருக்கும் சமமான சட்டத்தைக் கொண்ட சமயத்தைப் போதிக்கின்றாய்; பறையர் சமூகக் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கின்றாய்என்றார்கள். இப் பதிலைக் கேட்டு மகிழ்ந்த தந்தை, “இப் பணியே இறைவனுக்கு உகந்தது; அதை தொடர்ந்து ஆற்றுவேன்என்றார். மூன்று நாள்கள் சிறையில் உணவு உண்ணாமல் போராட்டம் நடத்தி விடுதலையானார். ‘திண்டுக்கல்லுக்குள் நுழையக் கூடாதுஎன்ற கட்டுப்பாட்டுடன் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கு வந்து 383 பேர்களுக்குத் திருமுழுக்கு வழங்கினார்.

1712 முதல் திண்டுக்கல் நகரில் பணியாற்றிய தந்தை இக்னேஷியஸ் கார்தோசோ பழனிக்குச் சென்று அங்கு வாழ்ந்த ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆன்மிகப் பணி புரிந்தார். தந்தை அந்தோணி ரிக்கார்டி பழனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நான்கு ஆலயங்களை எழுப்பினார்.1716 முதல் திண்டுக்கல், மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளைச் சுற்றி மறைப்பணிகள் சுழல ஆரம்பித்தன. ஒருவர் தன் வீட்டினுள்ளே ஒரு சிற்றாலயம் அமைத்து வழிபட்டு வந்தார். 1727-இல் தந்தை பிரான்சிஸ் ஹோமம் 46 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளித்தார். நல்லமநாயக்கன்பட்டியில் திருடர்கள் கொட்டம் அதிகரிக்க, ஊர்த் தலைவர் தந்தை ஜான் அலெக்சாண்டரைத் தேடிவந்து, திருப்பலி ஒப்புக் கொடுக்கக் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்விற்குப் பிறகு திருடர்கள் அட்டகாசம் அடங்கியது. மக்கள் கிறிஸ்துவின்மீது நம்பிக்கைக் கொண்டனர். எனவே, 17 பெரியோரும், 45 குழந்தைகளும் திருமுழுக்குப் பெற்றனர். சைவ சமயத்தில் ஊறித் திளைத்த சமயப் பெரியோர் ஒருவர் தனது மனைவியுடன் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டார். ஆனால், இரண்டு மாதத்தில் மீண்டும் சைவ சாமி சிலைகளுக்கு வழிபாடு நடத்த, அவர் பெரும் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது மனைவியோ தன் இறுதி மூச்சுவரை சாட்சிய கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்து மரித்தார்.

திருமுழுக்குப் பெற்ற பிறகும் கிறிஸ்தவர்கள் பலர் மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கினர். அருள் தந்தையர்கள் அரும்பாடுபட்டு மக்களை நற்செய்தியின் பாதையில் நல்வழிப்படுத்தினர். 1736-37 இல் முகலாயப் படைகள் மதுரையைத் தாக்கியபோது சந்தா சாகிப்பின் பாதுகாப்பையும் மீறி, மதுரை, திண்டுக்கல், தாடிக்கொம்பு ஆலயங்கள் தகர்க்கப்பட்டன. தந்தை ஜான் பாப்டிஸ்ட் புத்தாரி தனது ஒன்பது மாத மறைப்பணியில் 100 பெரியோருக்கும், 400 சிறாருக்கும் திருமுழுக்கு அளித்தார். 1745-இல் இப்பகுதிக்கு வந்த தந்தை ஜேக்ஸ் ஹார்ட் மேன் மங்கமனத்து என்ற ஊரில் புனித சந்தியாகப்பருக்கு ஆலயம் எழுப்பினார்.

கோவிலூர் முதல் உத்தமபாளையம் வரை மராத்திய படைகள் அட்டூழியம் செய்ததால், மக்கள் அங்கிருந்து தப்பி எமக்கல்லாவரத்தில் தஞ்சம் புகுந்தனர். மங்கமனத்து ஆலயமும் தரைமட்டமாக்கப்பட்டது. திண்டுக்கல் பகுதியிலும் 1756-இல் போர் நடை பெற்றுக் கொண்டிருந்தது. எனவே, மக்கள் அங்குமிங்கும் அலைந்து திரிந்தனர். தந்தை ஜேக் மக்களைத் தேடிச் சென்று, பணியாற்றி 344 பேர்களுக்குத் திருமுழுக்கு வழங்கினார். திண்டுக்கல், மேட்டுப்பட்டி, பஞ்சம்பட்டி, கொசுவப்பட்டி, சிலுக்கு வார்பட்டி போன்ற பகுதிகளில் வாழ்ந்த வன்னியர்கள் திரளாகக் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். இவர்களின் நலனுக்காக 1729-இல் மேட்டுப்பட்டியில் ஆலயம் எழுப்பப்பட்டது. திண்டுக்கல் பகுதியில் வாழ்ந்த பறையர், பள்ளர், குறும்பர், கப்பிள்ளையார், நாயக்கர், வன்னியர், வெள்ளாளர் எனப் பல சமூகத்தினர் 18-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.

கி.பி. 1662 செப்டம்பர் 9 அன்று தந்தை அந்தோணி தெபுராவென்சா எழுதிய கடிதத்தின்படி, 1659-ஆம் ஆண்டே உத்தமபாளையம் பகுதியில் தந்தை மனுவேல் ஆல்வாரெஸ் 93 பேர்களுக்குத் திருமுழுக்களித்துள்ளார் எனக் குறிப்பிடுகின்றார். 1666-இல் இங்கு 500 பேர்களுக்குத் தான் திரு முழுக்களித்ததாகத் தந்தை ஆன்ரூ பெரைரா கூறுகின்றார். தந்தை ரோட்ரிக்ஸ் 1683-இல் உத்தம பாளையம், கம்பம் பள்ளத்தாக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர், இராஜபாளையம் போன்ற ஊர்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார். தந்தை ரிக்கார்டி அவர்களால் 1714-இல் திருமுழுக்குப் பெற்ற ஓர் உயர் சாதிப் பெண் பெற்றோராலும், ஊராலும் கடுமையாகக் கொடுமைப்படுத்தப்பட்டப் போதும், விசுவாசத்தில் உறுதியாயிருந்து சான்று பகர்ந்தார். புனித கன்னி மரியா பரிந்துரையில் நலம் பெற்ற கப்பிள்ளையர் சாதி சிறுமியும், அவள் பெற்றோரும் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். தந்தை ஹார்ட் மேன் 1737-இல் கம்பம் பகுதியில் நற்செய்தி அறிவித்துப் பலரைக் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்தார்.

ஆவூர் மறைத்தளம்

திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் கீரனூர், இலுப்பூர், விராலிமலை ஆகிய ஊர்களின் சமதூரத்தில் ஆவூர் அமைந்துள்ளது. பசுக்கள் நிறைந்த ஊர் என்பதால்ஆவூர்எனப் பெயர் பெற்றது. மதுரைப் பணித்தளத்தில் பழமையான புகழ் பெற்ற பணித்தளம் ஆவூர் என 1708-இல் எழுதப்பட்ட மடல் குறிப்பிடுவதும் ஆவூரின் சிறப்பு. 300 ஆண்டுகள் பழமையான புனித பெரிய நாயகி அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமும், பாஸ்கு நாடகம், பாஸ்கு தேர்ப் பெருவிழா மற்றும் ஐந்து குருக்களின் கல்லறைகள் இங்கு இருப்பது சிறப்பு. காந்தலூர் கள்ளர்களின் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்த தந்தை மனுவேல் ரொட்ரிகஸ் 1682-இல் ஆவூரில் தஞ்சம் புகுந்தார். 1688-இல் தந்தை லூயிஸ் தெ மெல்லோவும் காந்தலூரில் துன்பத்திற்குள்ளாகி ஆவூரில் சில ஆண்டுகள் பணி செய்து, 1691, பிப்ரவரி 4-இல் இறந்து அடக்கம் செய்யப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஜான் வெனான்சியுஸ்புசே என்ற பெரிய சஞ்சீவி நாதர் 1689-இல் ஆவூரை ஒரு மறைத்தளமாக உருவாக்கினார். இவர் 1655 ஏப்ரல் 10 அன்று பிரான்சில் பிறந்தார். 1670-இல் இயேசு சபையில் சேர்ந்து, 1687-இல் மறைப்பணிக்காகத் தாய்லாந்து சென்றார். 1688-இல் அங்கு ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தால் இந்தியா வந்து, பிரெஞ்சு கப்புச்சின் துறவிகளோடு சில மாதங்கள் புதுச்சேரியில் தங்கினார். மறைப்பணிக்கு ஏற்ற இடம் ஆவூர் என உணர்ந்து பழைய ஆவூரில் புனித விண்ணேற்பு அன்னைக்கு ஆலயம் எழுப்பி, ஆகஸ்டு 15 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடினார். மக்கள் சுற்றுப்புறமெங்கும் பெருந்திரளாக ஆண்டுதோறும் பங்கேற்றனர்.

தந்தை புசே புனித அருளானந்தரின் ஆன்ம குருவானார். 1691-இல் புனித அருளானந்தர் மதுரை மறைப்பணித்தள அதிகாரப்பூர்வப் பார்வையாளராக மலையடிப்பட்டி, ஆவூர் ஆகிய இடங்களுக்கு வருகைப் புரிந்தார். 10 நாள்கள் ஆவூரில் தங்கி, தந்தை புசேயிடம் ஆன்ம ஆலோசனைப் பெற்றார். ஓரியூரை நோக்கிப் பயணிக்கும் முன் 1692-இல் மீண்டும் ஆவூர் வந்து, தன் ஆன்ம தந்தையின் ஆசீரைப் பெற்றுச் சென்றார். அருளானந்தரின் வேதியர் சிலுவை  நாயக்கர் ஆவூரைச்  சார்ந்தவர், அவர் முதிர்ந்த வயதில் பார்வை குன்றியிருந்தார். அவரையும் சந்தித்திருக்கலாம். புசே அறிவும், தெளிவும் பெற்ற சிறந்த குரு. மறைப்பணியாளர்கள், மக்களைப் பாதுகாப்பதில் திடமாகச் செயல்பட்டனர். ஆட்சியாளர்களைச் சந்தித்து மறைப்பணிக்கான உதவிகளை அவ்வப்போது பெற்றுத் தந்தார்.

மரிய போர்கேசே என்ற மறைப்பணியாளரும், 4 வேதியர்களும், காமநாயக்கன்பட்டியில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். புசே, மதுரையில் இராணிமங்கம்மாளைச் சந்தித்து விடுதலை செய்ய உதவினார். இவர் தவறிய மூன்று வேதியர்களை நீக்கினார். அவர்கள் இராணி மங்கம்மாளின் அமைச்சர் நரசப்பையாவிடம் புசே பற்றி தவறாகக் கூறி, அவரைக் கைது செய்யத் தூண்டினர். புசே அமைச்சரைச் சந்தித்து உண்மையை விளக்க, அவர் தந்தைக்கு உரிய மதிப்பை வழங்கி அனுப்பினார். ஒருமுறை ஆவூரில் புசேயின் தங்குமிடத்தை ஒரு பூசாரி ஆக்கிரமித்து, அங்குச் சிலைகளை வைத்து வழிபட்டு, தந்தைக்குத் தொந்தரவு செய்தான். புசே இராணி மங்கம்மாளிடம் முறையிட, அவர் அச்சிலைகளைக் கொள்ளிடத்தில் தூக்கி எறிய அப்பூசாரிக்கு உத்தரவு பிறப்பித்தார். இவ்வாறு இராணி மங்கம்மாள் நற்செய்திப் பணிக்குப் பெரும் துணையாக நின்றார்.

1702-இல் தந்தை புசே ஆவூரிலிருந்து புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு, கர்னாடிக்மின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆவூரில் பணியாற்றிய 13 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானவர்களுக்குத் திருமுழுக்களித்தார். 1702 முதல் 1737 வரை சார்லஸ் மைக்கில் பெர்த்தோல்டி என்ற ஞானப்பிரகாசியார் ஆவூரில் பணியாற்றினார். இவர் தனது 30 ஆண்டு கால மறைப்பணியில் 25,000த்திற்கும் அதிகமான மக்களைக் கிறிஸ்தவ மெய்மறையில் சேர்த்தார். 1711-இல் வீரமாமுனிவர் இவரிடம் மறைப்பணி பயிற்சி பெற்றார். இந்த ஆண்டில் 12000 பேர்களுக்குத் திருமுழுக்களிக்கப்பட்டது. மயிலை ஆயர் பிரான்சிஸ் லேனெஸ் ஐந்து குருக்களுடன் வருகை புரிந்து, ஐந்து மாதங்கள் ஆவூரில் தங்கி, 20,000 பேர்களுக்கு உறுதிப்பூசுதல் வழங்கினார். கிறிஸ்தவர்களோடு நல்லுறவு கொண்ட புதுக்கோட்டை இளவரசர் இரகுநாதராய தொண்டைமான் ஆவூர் வந்து ஆயரைச் சந்தித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் ஊர்த் திருவிழாவின்போது மூன்று அல்லது நான்கு அதிகாரிகளைப் பாதுகாப்பிற்காக அனுப்பிவைத்தார் இளவரசர். குளத்தூர் சின்ன தொண்டைமான், திருச்சி முதன்மைப் பிராமண அமைச்சர், முதலியார் சமூகத்தைச் சார்ந்த ஆளுநன் ஆகியோர் கிறிஸ்தவச் சமயத்தைக் கூண்டோடு அழிக்கத் தீவிரமாகச் செயல்பட்டனர். ஆளுநன் குருக்களையும், வேதியர்களையும் அடிக்கடி கைது செய்தான். ஆலயங்களைத் தீக்கிரையாக்கினான். கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்தினான்.

1730-இல் கொடிய அம்மைத் தொற்றுநோய் ஆவூர், மலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பரவியது. மக்கள் புனித செபஸ்தியாருக்கு நேர்ச்சை எடுத்துச் செபிக்க, புதுமையாக அந்நோய் நீங்கியது. இலுப்பூரிலும் அம்மை நோய் பரவியது. ஒரு சில கம்மாளர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவ அங்கும் நோய் அற்புதமாக நீங்கியது. கிறிஸ்தவர்களுக்குத் துன்பம் தந்த ஆளுநன் கடும் காய்ச்சலில் படுத்த படுக்கையானான். தந்தை அவர்களைச் சந்தித்து, தன் பாவங்களுக்கு மன்னிப்புக் கோரினான் என வீரமாமுனிவர் கூறுகின்றார்.

1740-இல் ஆளுநரின் பொறுப்பை ஏற்ற தந்தை பிரான்சிஸ் கோமெம், பழைய ஆவூர் ஆற்றங்கரை ஓரமாய் இருந்ததால் பருவக் காலத்தில் கடும் மழை பெய்யும்போது, வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும். எனவே, புதிய ஆவூரை அதன் தென் கிழக்கில் உருவாக்கி, புதிய ஆலயத்தை எழுப்பினார். அவ்வாலயத்தில் புதுமைகளைப் புரியும் புனித பெரிய நாயகி (விண்ணேற்பு) அன்னையின் சுரூபத்தை ஆடம்பரமாக எடுத்து வந்து நிறுவினார். ஆவூர் பங்கு பரந்து விரிந்தது. புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பெரும் பகுதி இதன் எல்லையாகும். கொல்லுப்பட்டி, இலுப்பூர் ஆகிய இடங்களில் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. இலுப்பூர் தலித் கிறிஸ்தவர்கள் நிறைந்த ஊர். ஆனால், அங்கு ஆலயம் எழுப்ப இலுப்பூர் ஜமீன் மறுத்து, ஊருக்கு வெளியே பத்து ஏக்கர் நிலம் வழங்கினார். அருள்தந்தை மனோயல் பிமெண்டால் என்ற சத்தியநாதர் 1746

-இல் அந்நிலப் பகுதியில் கிறிஸ்தவக் குடியிருப்பு ஒன்றை நிறுவி, அதற்குச் சத்தியநாதபுரம் என்று பெயரிட்டார். 1747-இல் மராட்டியப் படைகளால் ஆவூர் கோவில் தீயிலிட்டு அழிக்கப்பட்டது. மனம் தளராத தந்தை தோமாளனி அதே ஆண்டு ஆகஸ்டு 10 அன்று விண்ணேற்பு அன்னைக்குப் புதிய ஆலயம்  கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, 1750-இல் நிறைவு பெற்றது. புனித தேவசகாயத்திற்கு வடக்கன்குளத்தில் திருமுழுக்கு அளித்த தந்தை ஜான் பாப்டிஸ்ட் புட்டாரி என்ற பரஞ்சோதிநாதர் ஆவூரில் ஆறு ஆண்டுகள் பணியாற்றி 1751-இல் இங்கே இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பீட்டர் மச்சாடோ என்ற தர்மநாதர் சுவாமி திருச்சி, ஆவூர் என 32 ஆண்டுகள் அயராது பணியாற்றினார். 1766-இல் 50 அடி உயரமுள்ள பெரிய தேர் ஒன்றை மூங்கில் மரங்களினால் செய்து ஆவூர் பாஸ்கா திருவிழாவின் போது பவனியாக வர ஏற்பாடு செய்தார். இவர் காலத்தில் 1773-இல் இயேசு சபை தடை செய்யப்பட்டாலும், தனது மறைப்பணியைத் தொடர்ந்து ஆற்றி, 1789-இல் திருச்சியில் இறந்து ஆவூரில் அடக்கம் செய்யப்பட்டார்.                     

(தொடரும்)

Comment