No icon

மரியியல்  தொடர் - 25

மரியாவும், கிறிஸ்தவ  ஒன்றிப்பும்!

7. கிறிஸ்தவ ஒன்றிப்பு நோக்கில் உரை யாடல் நடத்தும் பிரான்ஸ் நாட்டு இறையியலாளர்கள் வெளியிட்ட ஏடு (Le Groupe des Dombes) (1997-1998)

கிறிஸ்தவ ஒன்றிப்பு நோக்கில் உரையாடல் நடத்தும் பிரான்ஸ் நாட்டு இறையியலாளர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பு நோக்கில் மரியா பற்றி உரையாடல் நடத்தி ஓர் ஏட்டை வெளியிட்டு, அதற்குக் ‘கடவுளின் திட்டத்தில் மரியாவும், புனிதர்களின் தோழமையும்: ஒரு பொதுவான கிறிஸ்தவப் புரிதல்’ எனப் பெயரிட்டார்கள். இந்த ஏடானது மரியா பற்றிய மறை கோட்பாடுகளை எவ்வாறு புரிந்துகொள்வது? அல்லது ஏற்பது? என்பதை விளக்கியது.

‘மரியா முப்பொழுதும் கன்னி’ என்ற மறை கோட்பாட்டைப் பொறுத்தமட்டில் உரையாடல் நடத்தியவர்களிடம் ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. இயேசுவின் சகோதர, சகோதரிகள் என்று புதிய ஏற்பாடு கூறுவது, இயேசுவின் இரத்த உறவினராகிய சகோதர, சகோதரிகளைத்தான் குறிக்கின்றது என்றோ அல்லது அவரின் பெரியப்பா, சித்தப்பா ஆகியோரின் பிள்ளைகளைத்தான் குறிக்கின்றது என்றோ நாம் அறுதியிட்டுக் கூற முடியாது; எனவே, ‘மரியா முப்பொழுதும் கன்னி’ என்ற மறை கோட்பாட்டிற்கு எதிராகப் புதிய ஏற்பாட்டில் எந்தவித வலுவான ஆதாரமும் இல்லை என அவர்கள் கூறினார்கள். இந்நிலையில், கீழைத் திரு அவையைச் சார்ந்தவர்களும், கத்தோலிக்கர்களும் ‘மரியா முப்பொழுதும் கன்னி’ என்ற மறைகோட்பாட்டை நீண்ட காலமாகத் தங்கள் நம்பிக்கையாகக் கொண்டிருப்பதை ஏனையத் திரு அவையைச் சார்ந்தவர்கள் மதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.

மரியாவின் அமல உற்பவம், மரியாவின் விண்ணேற்பு ஆகிய மறைகோட்பாடுகளைப் பொறுத்தமட்டில் விவிலிய ஆதாரம் இல்லாததால் இந்த இரண்டு மறைகோட்பாடுகளையும் சீர்திருத்தத் திரு அவைகள் ஏற்க மறுத்ததைச் சுட்டிக்காட்டினர். கீழைத் திரு அவையினர் இந்த இரண்டு மறை கோட்பாடுகளையும் ‘தேவையற்றவை’, ‘இன்றியமையாதவை அன்று’ என்று கூறியதையும் அவர்கள் எடுத்துரைத்தார்கள். மேலும், இவ்விரண்டு மறை கோட்பாடுகளுமே புனித அகஸ்டின் அவர்களின் தொடக்கப் பாவம் பற்றிய சிந்தனையைத் தழுவிய ஒன்றாக உள்ளது. எனவே, இந்த இரண்டு மறை கோட்பாடுகளையும் ஏற்க முடியாது என்றும், இந்த இரண்டு வரையறைகள்தான் கத்தோலிக்கத் திரு அவைக்கும், ஏனைய திரு அவைகளுக்கும் இடையேயான பிளவை மேலும் ஆழப்படுத்தின என்று கூறினார்கள்.

மேலும், 1854, 1950-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட மரியா பற்றிய மறை கோட்பாடுகளை, ஏனைய கிறிஸ்தவத் திரு அவைகளைக் கலந்தாலோசிக்காமல் கத்தோலிக்கத் திரு அவை வெளியிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்கள். மேலும், இன்று இறையியல் தளத்தில் ‘உண்மைகளின் படிமுறை’ (Hierarchy of truths) பற்றி அதிகம் பேசுகின்றோம். இவ்வகையில், மரியா பற்றிய மறைக்கோட்பாடுகளை, இயேசு பற்றிய மறை கோட்பாடுகளுடன் தொடர்புப்படுத்திப் பார்க்கும் போது, மரியா பற்றிய கோட்பாடுகள் இரண்டாம் நிலையில் பார்க்கப்பட வேண்டும் என்றும், மரியா பற்றிய எல்லா மறை கோட்பாடுகளுமே இயேசுவைச் சார்ந்த ஒன்று என்றும் கூறினர். இருப்பினும், மரியா பற்றிய கோட்பாடுகள் இரண்டாம் தரமானவை என யாரும் கூறக் கூடாது என்றனர். இப்பின்னணியில், கத்தோலிக்கத் திரு அவை மரியா பற்றிய இவ்விரண்டு மறை கோட்பாடுகளையும், ஏனைய திரு அவைகள் ஏற்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என உரையாடலில் பங்கேற்றவர்கள் கூறினார்கள். அதேவேளையில் மரியா பற்றிய கோட்பாடுகள், நற்செய்திகளுக்கோ, கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கோ முரணானவை அல்ல என்று கத்தோலிக்கரல்லாத ஏனைய கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டால், அதுவே போதும் எனக் கத்தோலிக்கர்கள் கூற வேண்டும் என்றனர்.

இந்த ஏடு மானிட மீட்பில் மரியாவின் ‘ஒத்துழைப்பைப்’ பற்றியும் விவாதித்தது. கத்தோலிக்கத் திரு அவை பயன்படுத்திய மானிட மீட்பில் ‘மரியாவின் ஒத்துழைப்பு’ என்ற கூற்றைச் சீர்திருத்தத் திரு அவையினர் தொடக்கத்தில் இருந்தே ஒருவித ஐயப்பாடுடன்தான் பார்த்தார்கள். காரணம், கத்தோலிக்கத் திரு அவை தனது மரபுப் போதனையில், இயேசுவுக்கு இணையாக மரியாவைக் கூறாவிட்டாலும் கூட, இயேசுவுடன் இணைந்து மரியா மீட்புத் திட்டத்தில் பங்காற்றுகின்றார் என்றும், சில வேளைகளில் மரியாதான் மீட்பின் கால்வாய் என்றும் கூடக் கூறியதே இதற்குக் காரணம் என்று இந்த ஏடு சுட்டிக்காட்டியது. ஆனால், மரபுப் போதனையில் இருந்து விலகி, இரண்டாம் வத்திக்கான் சங்கம் “மரியா மானிட மீட்பில் இயேசுவுடன் இணைந்து ஒத்துழைத்தார் (Coredemptrix) என்பதைத் தவிர்த்தது என்றும், மரபில் மரியாவை இடைநிலையாளர் (Mediatrix) என்று அழைத்ததையும் சங்கம் தவிர்த்தது” என்றும் இந்த ஏடு சுட்டிக்காட்டியது. இப்பின்னணியில் மரியாவின் ஒத்துழைப்பைக்கூட, கடவுளின் அருளால்தான் மரியா இறைத் திட்டத்திற்குப் பதிலிறுத்தார் எனக் காண வேண்டும் என்று இந்த ஏடு கூறியது. இக்கருத்தை ஏற்றுக்கொண்டால் மரியா எல்லாத் திரு அவைகளாலும் ஏற்கப்படக்கூடிய நபராகத் திகழ முடியும் என இந்த ஏடு கூறியது.

தவிர, கத்தோலிக்கத் திரு அவை மிகைப்படுத்தப்பட்ட மரியா வணக்கத்தைத் தவிர்ப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என இந்த ஏடு வலியுறுத்தியது. அவ்வாறே, மரியியலைத் தனிப் பாடப்பிரிவாக அல்லாமல், மரியா பற்றிய அனைத்துப் படிப்பினைகளையும் கிறிஸ்தியலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்றது. அதேவேளையில், மரியா வணக்கத்தைப் பொறுத்தமட்டில் விவிலியத்தில் காணப்படும் ‘அருள்மிகப் பெற்றவரே’ (லூக் 1:28), ‘பெண்களுள் நீர் ஆசி பெற்றவர்’ (லூக் 1:42) போன்ற மரியாவுக்கு உரிய வாழ்த்துகளைச் சீர்திருத்தத் திரு அவையினர் ஏற்கத் தயாராக இருக்கின்றார்களா? என்றும் இந்த ஏடு கேள்வியை எழுப்பியது. மேலும், கிறிஸ்துவின் மறைபொருளோடு தொடர்புடைய, விவிலியத்தில் வேரூன்றிய விழாக்களை - இயேசுவின் பிறப்பு அறிவிப்பு, மரியா எலிசபெத்தைச் சந்தித்தல், இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படல் போன்றவைகளைச் சீர்திருத்தத் திரு அவையினர் கொண்டாட முன்வர வேண்டும் என்றும் இந்த ஏடு அழைப்பு விடுத்தது.

அவ்வாறே, விவிலியத்தில் காணப்படும் மரியாவின் சீடத்துவ வாழ்வுக்கும் சீர்திருத்தத் திரு அவையினர் முக்கியத்துவம் தர வேண்டும் என்றது இந்த ஏடு. இவ்வாறு திருவிவிலியம் மரியா பற்றிக் கூறியுள்ளதற்குச் செவிமடுக்காமல் இருப்பது சீர்திருத்தத் திரு அவையினரைப் பொறுத்தமட்டில் சரியான ஒன்றல்ல என இந்த ஏடு சுட்டிக்காட்டியது. மேலும், அவர்கள் தங்களது நம்பிக்கை வாழ்விலும், இறையியல் படிப்பினைகளிலும் மரியாவுக்கு உரிய இடம் வழங்க முன்வர வேண்டும் என்று இந்த ஏடு கூறியது. இருப்பினும், ‘மரியா நமக்காகக் கடவுளிடம் பரிந்து பேசுகின்றார்’ என்பதைப் பொறுத்தமட்டில் உடன்பாடு ஏதும் இவ்வேட்டில் எட்டப்படவில்லை.

8. உலகளாவிய ஆங்கிலிக்கத் திரு அவை யையும், உரோமைக் கத்தோலிக்கத் திரு அவையையும் உள்ளடக்கிய அமைப்பு (ARCIC) வெளியிட்ட கூட்டறிக்கை (2005)

உலகளாவிய ஆங்கிலிக்கத் திரு அவையையும், உரோமைக் கத்தோலிக்கத் திரு அவையையும் உள்ளடக்கிய அமைப்பு (ARCIC) 2005-ஆம் ஆண்டில் ‘மரியா: கிறிஸ்துவில் அருளும் எதிர்நோக்கும்’ என்ற ஏட்டை வெளியிட்டது. இந்த ஏடு மரியாவுக்கு உரிய இடத்தை நாம் வழங்காமல், திருவிவிலியத்திற்கு நாம் பிரமாணிக்கமாக இருக்க முடியாது என்று கூறியது. இவ்வகையில், மரியா பற்றிய பல விவிலியப் பகுதிகளை விளக்கும் இந்த ஏடு, மரியா கடவுளால் சிறப்பான வகையில் தெரிவு செய்யப்பட்டார் எனவும், கடவுள் அவரைத் தொடக்கத்தில் இருந்தே தமது அருளால் நிரப்பியிருந்தார் எனவும் விவிலிய அடிப்படையில் விளக்குகின்றது. அவ்வாறே, சீடத்துவ வாழ்விற்கு மரியா மிகச் சிறந்த மாதிரியாக உள்ளார் என விவிலியப் பின்னணியில் இந்த ஏடு விளக்குகின்றது.

மரபில் உருவான மரியா பற்றிய படிப்பினைகள், மரியா வணக்கம் ஆகியவற்றை மூன்று நிலைகளில் இந்த ஏடு விளக்குகின்றது: பிளவுபடாத் திரு அவைக் காலம், சீர்திருத்தத் திரு அவைகள் மலர்ந்த காலம், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிந்தைய காலம். பொதுவாகவே, மரபில் உருவான திரு அவையின் மரியா பற்றிய மறை கோட்பாடுகள் அனைத்துமே இயேசு கிறிஸ்துவுடன் நெருங்கியத் தொடர்புடையவை என இந்த ஏடு கூறுகின்றது. இவ்வகையில் மரியாவைக் ‘கடவுளின் தாய்’ என இரண்டு திரு அவைகளுமே ஏற்கின்றன என்று இந்த ஏடு கூறுகின்றது. இம்மறை கோட்பாடே மரியா பற்றிய ஏனைய மறை கோட்பாடுகளுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளது எனவும் இந்த ஏடு கூறுகின்றது. அவ்வாறே, மரியாவின் கன்னிமையையும் இரண்டு திரு அவைகளுமே ஏற்பதாகக் கூறுகின்றது. இவ்வகையில் மரியாவைப் புனிதத்தின் மாதிரியாக இவ்வேடு விளக்குகின்றது. மேலும், மரியாவின் கன்னிமையை உடல் சார்ந்த ஒன்றாக மட்டுமல்ல, கடவுளுடன் அவர் கொண்டிருந்த பிளவுபடா உள்ள ஒன்றிப்பைக் குறிப்பதாகவும் காண வேண்டும் என இந்த ஏடு வலியுறுத்துகின்றது.

இருப்பினும், ஏனையச் சீர்திருத்தத் திரு அவைகளைப் போன்றே ஆங்கிலிக்கத் திரு அவையும் மரியாவின் அமல உற்பவத்தையும், விண்ணேற்பையும் அத்திரு அவையைத் தோற்றுவித்த முன்னோடிகள் ஏற்கவில்லை என இந்த ஏடு சுட்டிக் காட்டியது. இருப்பினும், மரியாவின் அமல உற்பவம், விண்ணேற்பு ஆகிய இரண்டு மறை கோட்பாடுகளுமே விவிலியப் படிப்பினைகளிலும், திரு அவையின் தொடக்கக் கால மரபுகளிலும் வேரூன்றியவை என்கிறது இந்த ஏடு. மரியாவின் அமல உற்பவத்தை விளக்கும் இந்த ஏடு உரோ 8:30-ஐ (“தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கின்றார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.”) மையப்படுத்தி விளக்குகின்றது.   

(தொடரும்)

Comment