No icon

கடவுளின் பெண்ணியப் பார்வை! (பழைய ஏற்பாடு)

 ‘உனையழைத்ததும் நான்!

உயிர் கொடுத்ததும் நான்!

உள்ளங்கையில் உனைப் பொறித்ததும் நான்!

பெயர் சொல்லி அழைத்தேன்

உனை அள்ளி அணைத்தேன்

மார்போடு தாலாட்டி உருவாக்கினேன்!’

என்ற அழகிய வரிகளில் கடவுள் யார் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். கடவுள் தாயுமானவர்! நம் வாழ்வில் அவரை அம்மாவாக நம்மை அரவணைத்து, அப்பாவாக நம்மைப் பாதுகாத்து வழிநடத்துவதை நாம் உணர்ந்திருக்கிறோம். “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும்  முன்பே அறிந்திருந்தேன்” (எரே 1:5). அவர் தம்மை ஒரு தாயாக உருவகப்படுத்தியிருப் பதை நாம் பழைய ஏற்பாட்டில் இவ்வாறு காண்கிறோம்.

கடவுள் யார்?

நம் மத்தியில் உறவாடும் இறைவனாக, நம்மைத் தேடி வரும் இறைவனாக, மக்களோடு மக்களாக, அவர் நமக்காகத் தம் கடவுள் நிலையிலிருந்து இறங்கி வந்து நம்மை மீட்டார். தாயாக அன்பு செய்து, தந்தையாக வழிநடத்தி நம்மீது தம் அலாதி அன்பைப் பொழிகிறார்.

யூதச் சமுதாயத்தில் பெண்கள்

யூதச் சமுதாயத்தில் பெண்கள் இரண்டாம் நிலைக் குடிகளாகக் கருதப்பட்டனர். யூதச் சமுதாயத்தில் பெண்கள் தங்களின் தந்தைக்கும், இணையருக்கும் கீழானவர்களாக நடத்தப்பட்டாலும், கடவுள் தம் மீட்பு வரலாற்றில் ஆண்களுக்கு இணையாகப் பல பெண்களைத் தேர்ந்தெடுத்தார். கடவுளின் பார்வையில் அனைவரையும் சமம் என்பதை நிரூபித்தார். ஆனால், மனிதர்களோ பிரிவினை, ஏற்றத்தாழ்வு, பகைமை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். இவற்றிலிருந்து நம்மை விடுவிக்க கடவுள் மீண்டும் களமிறங்கியிருக்கிறார்.

1. பராமரிக்கும் கடவுள்: ஆதாமும்-ஏவாளும்

படைப்பின் தொடக்கத்திலிருந்தே நம்மை அன்பு செய்து, அரவணைக்கும் கடவுளாக இருக்கிறார். நம்மோடு வழிநடக்கும் தாயாக, தந்தையாக நம் வாழ்வில் வலம் வருகிறார். அதனாலேயே தம் உருவிலேயே தம்மைப் போலவே இருக்க வேண்டும் என மனிதர்களைப் படைப்புகளுக்கெல்லாம் சிறந்த படைப்பாகப் படைத்தார்:  “கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்” (தொநூ 1:27).  “பின்பு ஆண்டவராகிய கடவுள், ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்என்றார்” (தொநூ 2:18).  கடவுள் மனிதனின் தனிமையைப் புரிந்து கொள்ளும் தாயாகக் காட்சியளிக்கிறார். வாழ்வின் எல்லா நிலைகளிலும் மனிதன் பாவம் செய்த பொழுது, கடவுள் சினமுற்றிருந்தாலும் ஆதாம், ஏவாளைப் பராமரிக்கும் கடவுளாகக் களமிறங்குகிறார். பாவத்திலிருந்து விடுவிக்க, நமக்கு மீட்பைத் தேடித் தர இன்றும் நம்மோடு பயணிக்கிறார்

2. எளியவன் ஆபேலின் குரல் கேட்கும் கடவுள்

கடவுளுக்குச் சிறந்த காணிக்கையை அளித்ததால் பொறாமைக்குப் பலியான ஆபேலின் குரலை ஆண்டவர் கேட்கின்றார். விரைந்து வந்து, பாதிக்கப்பட்டவனுக்காக நீதி கோருகிறார். ஆண்டவர் காயினிடம், “உன் சகோ தரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான். அதற்கு ஆண்டவர், “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்” (தொநூ 4:9-11).

3. துன்பத்தில் துணை நிற்கும் கடவுள்: பணிப்பெண் ஆகார்

ஆதரவற்றுத் தன் உரிமையாளர் சாராவுக்கு அஞ்சி ஓடிய பணிப்பெண் ஆகாரை மீட்டு, அவள் வழியாக ஒரு சந்ததியைக் கடவுள் உருவாக்குகிறார். பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், “உன் வழி மரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்என்றார். மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், “இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு இஸ்மயேல் எனப் பெயரிடுவாய். ஏனெனில், உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். அப்பொழுது, ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?’ என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரைக்காண்கின்ற இறைவன் நீர்என்று பெயரிட்டழைத்தாள்” (தொநூ 16:10-11, 13). அடிமைப் பெண்ணின் கூக்குரலுக்குச் செவிசாய்த்து, துன்பத்தில் துணை நிற்கிறார்.

4. நீதி வழங்கும் கடவுள்: தாமார்

யூதாவின் மருமகளான தாமார், தன் மாமனாரை எதிர்த்து, தனக்கு நீதி வேண்டினாள். யூதச் சமூகம் அவளைப் பாவியாகச் சித்தரித்தது. அவளின் பக்கம்   நியாயம் இருந்தது. “அவள் என்னைக் காட்டிலும் நேர்மையானவள்என யூதாவின் வாயிலிருந்தே சான்று பகரச் செய்தார்  (தொநூ 38:25-26).

5. மீட்பின் கடவுள் : மருத்துவப் பெண்கள் சிப்ரா, பூவா

மீண்டும் கடவுள் தாம் உருவாக்கிய இனத்தைக் காக்க மோசேவைத் தேர்ந்தெடுக்கிறார். அவரைக்  காக்க கடவுள் பல பெண்களைத் தேர்ந்தெடுத்ததாக நாம் விடுதலைப் பயண நூலில் காண்கிறோம். பாரவோன் மன்னன், எபிரேயரின் ஆண் குழந்தைகளைக் கொல்லத் திட்டமிடுகிறான். எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது: “எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்; ஆண் மகவு என்றால், அதைக் கொன்றுவிடுங்கள்; பெண் மகவு என்றால், வாழட்டும்”. ஆனால், அந்த மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள். மன்னனின் கட்டளையைத் துணிவுடன் மீறுகின்றனர். கடவுளுக்குக் கீழ்ப்படிகின்றனர். இதன் பொருட்டு, கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார். அவர்கள் ஆள் பலம் மிக்கவர்களாக ஆயினர். இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார். இஸ்ரயேல் மக்களின் விடுதலைப் பயணமே பெண்களின் உதவியுடன் ஆரம்பமாகிறது.

6. பராமரிக்கும் கடவுள்:

மோசேயின் தாயும், சகோதரியும்

இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப் பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார். அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள். அது அழகாயிருந்தது என்று கண்டாள். மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள். இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து, அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்; குழந்தையை அதனுள் வைத்து நைல் நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டு வைத்தாள். அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ள குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள் (விப 2:1-4). சமூகம் புறக்கணிப்பதைக் கடவுள் உயர்வாக எண்ணினார். அவர்கள் மூலம் மீட்பைக் கொணர்ந்தார்.

(தொடரும்)

Comment