No icon

(22.10.2023 இதழ் தொடர்ச்சி...)

கடவுளின் பெண்ணியப் பார்வை! (பழைய ஏற்பாடு)

7. பராமரிக்கும் கடவுள்பாரவோன் மன்னனின் மகள்

அப்போது பாரவோனின் மகள் நைல் நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக் கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு, தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள். அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள். அது அழுது கொண்டிருந்தது. அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். ‘இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்றுஎன்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பாரவோனின் மகளை நோக்கி, “உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டாள். பாரவோனின் மகள் அவளை நோக்கி, “சரி, சென்று வாஎன்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். பாரவோனின் மகள் அவளை நோக்கி, “இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்என்றாள். எனவே, குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண். குழந்தை வளர்ந்தபின் அவள் பாரவோனின் மகளிடம் அவனைக் கொண்டு போய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக் கொண்டாள் (விப 2:5-10).

இஸ்ரயேலரை மீட்க கடவுள் மோசேவைத் தேர்ந்தெடுத்தார். அவரைப் பாதுகாத்து, பாரவோனின் கையிலிருந்து விடுவிக்க, மன்னனின் மகளையே கடவுள் தேர்ந்தெடுக்கிறார். ஒரு பிற இனத்துப் பெண்ணையும் தம் திட்டத்திற்காகப் பயன்படுத்துகிறார்.

8. சமத்துவத்தின் கடவுள்: செலொபுகாதின் புதல்வியர்: சொத்தில் சம உரிமை

யோசேப்பின் புதல்வரான மனாசே குடும்பங்களைச் சார்ந்தவர் செலொபுகாத்து. இவர் மனாசேயின் மைந்தர் மாக்கிரின் புதல்வர் கிலியாதுக்குப் பிறந்த ஏபேரின் மகன். இவருக்கு மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா என்ற புதல்வியர் இருந்தனர். அவர்கள் வந்து மோசே, குரு எலயாசர், தலைவர்கள், மக்கள் கூட்டமைப்பினர் அனைவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலருகில் நின்று கூறியது: “எங்கள் தந்தை பாலைநிலத்தில் இறந்து போனார். கோராகைச் சார்ந்தவர்கள் ஆண்டவருக்கு எதிராகக் கூடிய கூட்டத்தினுள் அவர் இல்லை. அவர்தம் பாவத்துக்காகவே இறந்தார். அவருக்குப் புதல்வர்கள் இல்லை. இப்போதும் தமக்குப் புதல்வர் இல்லாத காரணத்துக்காக, எங்கள் தந்தையின் பெயர் அவர் குடும்பத்திலிருந்து ஏன் நீக்கப்பட வேண்டும்? எங்கள் தந்தையின் சகோதரர்களிடையே எங்களுக்கும் பங்கு தாருங்கள்.”

மோசே அவர்கள் வழக்கை ஆண்டவரிடம் கொண்டு வந்தார். ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “செலொபுகாதின் புதல்வியர் கேட்பது சரியே; அவர்கள் தந்தையின் சகோதரரிடையே அவர்களுக்கும் உரிமைச் சொத்தில் பங்கு கொடுத்து, அவர்கள் தந்தையின் உரிமைச் சொத்து அவர்களுக்குக் கிடைக்கச் செய்” (எண் 27:1-11).

9. துணை நிற்கும் கடவுள்: யோசுவாவின் ஒற்றர்களும், இராகாபும்

யோசுவா அனுப்பிய ஒற்றர்களைப் பாதுகாக்க கடவுள் ஏன் கானானியப் பெண் இராகாபைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அதுவும் அந்நாட்டில் விலை மாது என முத்திரை குத்தப்பட்ட பெண்ணிடம் ஏன் அந்த ஒற்றர்கள் செல்ல வேண்டும்? “உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள். நான் உங்களுக்கு இரக்கம் காட்டியதுபோல் நீங்களும் என் தந்தை வீட்டிற்கு இரக்கம் காட்டுவீர்கள் என்று இப்பொழுது எனக்கு ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளியுங்கள். நம்பத் தகுந்த அடையாளம் ஒன்றினை எனக்குக் கொடுங்கள்” (யோசுவா 1:1-20). கடவுள் பார்வையில் அனைவரும் சமம். அவர் எதையும் தீட்டாக எண்ணவில்லை. ‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல்என்பதைக் கடவுள் நிரூபிக்கிறார்.

கடவுள் யாரை, எவ்வாறு, யார் மூலமாகத் தேர்ந்தெடுக்கிறார்? என நமக்குத் தெரியாது. ஆனால், உரிய நேரத்தில் தமக்குரியவர்களை அவர் தேர்ந்தெடுப்பார். பெண்கள் இரண்டாம் குடிகள், ஆண்களுக்குக் கீழானவர்கள் என அன்றிலிருந்து இன்றுவரை சமுதாயம் சொல்கிறது. ஆனால், கடவுளோ பெண்களைத் தேர்ந்தெடுத்து வழி நடத்துகிறார். பைபிளை எழுதியது ஆண்கள் என்றாலும், மீட்பின் வரலாற்றில் பெண்களின் பங்கு மறைக்கப்பட்டாலும், கடவுள் அவர்களின் மாண்பை உயர்த்துகிறார்.

10. வழிநடத்தும் கடவுள்: தெபோரா

கானானியர்களை வெற்றி கொள்ள கடவுள் முதல் பெண் நீதிபதியாக இறைவாக்கினர்    தெபோராவைத் தேர்ந்தெடுக்கிறார். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர். ஆட்சோரை ஆண்ட கானானிய மன்னன் யாபினிடம் ஆண்டவர் அவர்களை ஒப்படைத்தார். அவனுடைய படைத்தலைவன் சீசரா அரோசத்கோயிமில் வாழ்ந்து வந்தான். இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஏனெனில், அவனிடம் தொள்ளாயிரம் இரும்புத் தேர்கள் இருந்தன. அவன் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலரைக் கடுமையாக ஒடுக்கினான். அச்சமயத்தில் இஸ்ரயேலருக்கு இறைவாக்கினரும், இலப்பிதோத்தின் மனைவியுமான தெபோரா நீதித் தலைவியாக இருந்தார் (நீத 4:1-4).

11. முன் நிழலாகக் கடவுள்: அன்னா

பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இழிவாக நடத்தப்பட்ட போதும், கடவுள் மேல் கொண்ட தீராத நம்பிக்கையின் விளைவாகச் சாமுவேலைக் கடவுள் அன்னாவுக்குப் பரிசாகக் கொடுக்கிறார். தன் முதல் மகனின் உயிரை அன்பிலும், மரியாதையிலும் கடவுளுக்குக் கொடுத்தாள். அவளுடைய செயல்கள் கடவுளின் பார்வையில் உயர்வாக இருப்பதைக் காண்கிறோம் (1சாமுவேல் 1:2;2:21).

12. இரக்கத்தின் கடவுள்: ரூத்து

மத்தேயு நற்செய்தியில் காணப்படும் இயேசுவின் சந்ததியில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பெண்களில் ரூத், தாமார், ராகாப், உரியாவின் மனைவி (பெத்சேபா) மற்றும் மேரி ஆகியோருடன் ஒருவர். காத்தரின் டூப் சாகன்ஃபீல்ட், ‘ரூத் அன்பான, இரக்கத்தின் ஒரு முன்மாதிரிஎன்று வாதிடுகிறார். அவர் மற்றவர்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கும் வழிகளில் செயல்படுகிறார் (ரூத் 1:8-18).

13.  துணையாய் வரும் கடவுள்: எஸ்தர்

எஸ்தர் பாரசீகப் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஓர் இளம் யூதப் பெண்பேரரசின் அனைத்து யூதர்களையும்  படுகொலை செய்ய நீதிமன்ற அதிகாரி ஆமான் மன்னரை அங்கீகரிக்கும்படி வற்புறுத்துகிறார். எஸ்தரோ மன்னரின் தயவைப் பெற்று அரசியாகி, யூத மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற தனது உயிரைப் பணயம் வைக்கிறார்; அதில் வெற்றியும் பெறுகிறார். தம்மிடம் வந்தவரை மொர்தெக்காயிடம் எஸ்தர் அனுப்பி, “நீர் போய், சூசாவில் உள்ள யூதர்களை ஒன்றுகூட்டும். எல்லாரும் எனக்காக உண்ணா நோன்பிருங்கள். இரவு பகலாக மூன்று நாள்களுக்கு உண்ணவோ பருகவோ வேண்டாம். நானும் என் பணிப்பெண்களுங்கூட நோன்பிருப்போம். அதன்பின் சட்டத்துக்கு எதிராக நான் மன்னரிடம் செல்வேன். இதனால் நான் இறக்க வேண்டியிருந்தாலும் சரியேஎன்றார்  (எஸ்தர் 4:15-16).

14. போரிடும் கடவுள்: யூதித்து

கைம்பெண்ணான யூதித்தைக் கடவுள் இஸ்ரயேல் மக்களைக் காக்கத் தேர்ந்தெடுக்கிறார். “நான் சொல்வதைக் கேளுங்கள். நான் செய்யப் போகும் செயல் நம் வழிமுறையினர் நடுவே தலைமுறை தலைமுறையாய் நினைவுகூரப்படும். நீங்கள் இன்று இரவு நகர வாயில் அருகே வந்து நில்லுங்கள். அப்போது நான் என் பணிப் பெண்ணுடன் வெளியே செல்வேன். நீங்கள் நகரை நம் பகைவர்களிடம் கையளிக்கப்போவதாக உறுதியளித்த அந்த நாளுக்குள் ஆண்டவர் என் வழியாக இஸ்ரயேலை விடுவிப்பார்” (யூதித்து 8:32-33).

கடவுள் எளிமையிலும், தாழ்மையிலும் வாழ்ந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, நலிவடைந்தவர்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வருகிறார். பழைய ஏற்பாட்டில் ஒவ்வொரு பெண்களும் கடவுளின் பிரதிநிதிகளாக, அவரின் கைகளாக, கால்களாக, இருளில் கிடந்த மக்களை மீட்க, அடிமைப்பட்டவர்களை விடுவிக்க, இவர்கள் இல்லையேல் மீட்பு இல்லை எனும் நிலையை ஏற்படுத்துகிறார்.  

(தொடரும்)

Comment