No icon

மரியியல் தொடர் – 28

மரியா பற்றிய மறைக்கோட்பாடுகள்

கிறிஸ்தவ ஒன்றிப்பு நோக்கில்மரியா கடவுளின் தாய்எனும் மறைக் கோட்பாடு

மரியா பற்றி கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல்கள் பல நடைபெற்றுள்ளன. இவ்வுரையாடல்களில் மரியாகடவுளின் தாய்எனும் மறைக்கோட்பாடு பற்றி எழுந்த சிந்தனைகளை இங்குக் காண்போம். ‘மரியா கடவுளின் தாய்எனும் மறைக்கோட்பாடு கிரேக்க மொழியில் Theotokosஎன அழைக்கப்படுகின்றது (Theos-கடவுள்; Tokos - பெற்றெடுத்தவர்). இப்பட்டம்கடவுளைப் பெற்றெடுத்தவர் மரியாஎனும் பொருள் படும் விதத்தில் உள்ளது. இப்பட்டத்தைப் பெந்தக்கோஸ்து திரு அவையைச் சார்ந்த சிலர் ஏற்கத் தயக்கம் காட்டுகின்றனர். காரணம், இது தவறான புரிதலுக்கு, அதாவது, ‘மூவொரு கடவுளின் தாயாகமரியாவைப் புரிந்துகொள்ள வழிவகுத்துவிடும் என்கின்றனர். எனவே, மரியாவைக்கடவுளின் தாய்என அழைப்பதைவிடஇறைமகனின் தாய்என அழைப்பதே பொருத்தமானது எனக் கூறுகின்றனர்.

மேலும், சீர்திருத்தத் திரு அவையாளர்களைப் பொறுத்தமட்டில் மரியாவுக்கு வழங்கப்பட்ட இப்பட்டம் இறைமகனின் பிறப்புடன் மட்டுமே இணைத்துப் பார்க்கப்பட வேண்டும்; இறைமகன் இயேசுவை விடுத்து விட்டு மரியாவுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒரு தனிச் சிறப்பான பட்டமாக இப்பட்டத்தைக் கருதக்கூடாது என்கின்றனர். ஆனால், கத்தோலிக்கத் திரு அவையைப் பொறுத்தமட்டில்மரியா இறைவனின் தாய்எனும் மறைக்கோட்பாடுதான் மரியா பற்றிய ஏனைய மறைக்கோட்பாடுகளுக்கும், அவருக்கு வழங்கப்பட்ட ஏனைய சிறப்புப் பட்டங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது என்கின்றனர் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆனால், சீர்திருத்தவாதிகள் இக்கருத்தை ஏற்பதில்லை.

மேலும், பல சீர்திருத்தத் திரு அவைகள் மரியாவைத்தாய்என்று அழைப்பதைவிட (‘தாய்என்ற பட்டம் மரியா நமக்காகத் தாயன்புடன் பரிந்து பேசுகின்றார் என்பதற்கு வழிவகுக்கின்றது), அவரை நமதுமூத்த சகோதரிஎன்று அழைப்பதே பொருத்தமானது என்று கூறுகின்றன. பெண்ணிய இறையியலாளர்களும் மரியாவை நமது மூத்த சகோதரியாகக் காண்பதே பொருத்தமானது என்கின்றனர். இப்பார்வையே, மரியாவை நமது வாழ்வின் மாதிரியாகக் கண்டு பயணிக்க வழிவகுக்கும் என்பது அவர்களின் கருத்து.

3. மரியா திரு அவையின் தாய்!

திரு அவையின் தொடக்ககால மரபில் இருந்தே திரு அவை மரியாவைத் திரு அவையின் தாயாக அழைத்து வருகின்றது.

விவிலியச் சான்று: யோவா 19:26 - ‘இயேசு... தம் தாயிடம்அம்மா, இவரே உம் மகன்என்றார்.

திரு அவையின் மரபு: புனித அகஸ்டின், புனித பெரிய லியோ போன்றோர் மரியாவைத்திரு அவையின் தாய்என அழைத்துள்ளார்கள். இருப்பினும், ‘திரு அவைஎனும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஏட்டை உலகிற்கு வழங்கிய நேரத்தில், அதாவது, 1964-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ஆம் தேதியன்று திருத்தந்தை 6-ஆம் பால் அவர்கள்தான் மரியாவைத் திரு அவையின் தாயாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருப்பினும், திருத்தந்தையால் வழங்கப்பட்ட இப்பட்டம் சங்க ஏடுகளில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தையின் இந்த அறிவிப்பைச் சீர்திருத்தவாதிகள் ஏற்க மறுத்தனர். காரணம், மரியாவுக்கு வழங்கப்பட்ட இப்பட்டம் சங்கத்தின் ஏட்டில் இடம் பெறவில்லை என்றனர். ‘சங்கத் தந்தையர்களால் அங்கீகாரம் செய்யப்படாத ஒரு பட்டத்தைத் திருத்தந்தை ஏன் அறிவிக்க வேண்டும்?’ என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இருப்பினும், 1975-ஆம் ஆண்டு உரோமைத் திருப்பலி நூலில்மரியா திரு அவையின் தாய்என்பது நேர்ச்சைத் திருப்பலியாக இணைக்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெந்தகோஸ்துப் பெருவிழாவிற்கு அடுத்த நாளாகிய திங்கள்கிழமையைமரியா திரு அவையின் தாய்என்பதை நினைவு நாளாகக் கொண்டாட வேண்டும் என்றார்.

4. மரியா நம் தாய்!

திரு அவையின் தொடக்கக் கால மரபில் இருந்தே இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் மரியாவைத் தங்களின் தாயாக ஏற்று வாழும் மரபு உள்ளது.

விவிலியச் சான்று: யோவா 19:27: இயேசு தம் சீடரிடம், ‘இவரே உம் தாய்என்றார்.

திரு அவையின் மரபு: மரியா இயேசுவின் தாய் என்பதால், இறைநம்பிக்கையாளர்கள் அனைவருமே மரியாவைத் தம் மகனிடம் தங்களுக்காகப் பரிந்து பேசும் தாயாகத் திரு அவையின் தொடக்கக் கால மரபில் இருந்தே கண்டு வந்துள்ளனர். இதற்குச் சிறந்த சான்றாகத்தான்கடவுளின் அன்னை கன்னி மரியே, அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்எனத் தொடங்கும் செபம் மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே சொல்லப்பட்டதைக் காண முடியும். மேலும், எபேசு சங்கம் மரியாவைக் கடவுளின் தாய் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பு, இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் மரியாவைத் தங்களின் தாயாக ஏற்றுப் பல்வேறு வணக்கங்களைச் செய்ய ஆரம்பித்தனர்; அவருக்குப் பல பட்டங்களைச் சூட்டி மகிழ்ந்தனர். காலப்போக்கில் இச்செயல்பாடுகள் மரியாவைக் கடவுளுக்கு இணையாக, ஏன் ஒரு வகையில்கடவுளாகக் கூடப்பார்க்க அவை வழி வகுத்தன. கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் இச்செயல்பாட்டைச் சீர்திருத்தத் திரு அவைகள் ஏற்கவில்லை. எனவேதான், அவர்கள் மரியாவைத் தங்களின் தாயாக ஏற்கவில்லை; அவருக்குத் தங்கள் வழிபாடுகளில் எந்தவித முக்கியத்துவமும் தருவது இல்லை.

5. இன்றைய புரிதல்கள்

1) மரியாவை நாம்நமது தாய்என்று அழைப்பது மிகச் சிறப்பான ஒன்று. அதேவேளையில், ஆண்கள் தங்கள் நிலையைத் தக்கவைக்க, தாங்கள் உருவாக்கிய, கட்டமைத்தபெண்மைப் பண்புகளைமட்டுமே மரியாவுக்கும், ஏனைய பெண்களுக்கும் ஏற்றிக் கூறுவது முற்றிலும் ஏற்புடைய ஒன்றல்ல. நமது பண்பாட்டில் ஆண்களின் மனப்பாங்கைப் பொறுத்தமட்டில், ஒரு தாய் என்பவரைத்தாய்மைப் பண்புகளுடன்மட்டுமே இணைத்துப் பார்க்கும் நிலைதான் இன்றும் காணப்படுகின்றது; இன்னும் ஒரு படி மேலே சென்று, இச்சிந்தனையைப் பெண்கள் உள்வாங்கி ஏற்கும் நிலையையும் ஆண்கள் உருவாக்கியுள்ளனர். எனவே, ஒரு தாயைத்தாய்மைப் பண்புகளுடன்மட்டுமே இணைத்துப் பார்க்கும் மனோபாவத்தில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும்.

2) தாய் என்ற சொல் பெரும்பாலும்தாய்மைப் பண்புகளுடன் மட்டுமே இன்றும் இணைத்துப் பார்க்கப்படுவதால், மரியாவை நமது மூத்த சகோதரியாகக் காண வேண்டும் என்ற பார்வை இன்று பெண்ணிய இறையியலாளர்களால் அதிகம் அழுத்தம் தரப்படுகின்றது. இத்தகைய பார்வை இன்று வாழும் எல்லாப் பெண்களுக்கும் மரியாவை வாழ்வின் மாதிரியாகக் காட்ட வழிவகுக்கும் என்பது அவர்களின் கருத்து.  

(தொடரும்)

Comment