No icon

தமிழ்நாட்டில் கிறிஸ்தவம்

3.7. புனித அருளானந்தர் மறைப்பணி

தாயின் நேர்ச்சியே வாழ்வாக

ஜான் தெ பிரிட்டோ என்ற புனித அருளானந்தர் போர்த்துக்கல் தலை நகரான லிஸ்பன் மாநகரில் 1647, மார்ச் முதல் நாசின்று, சால்வதோர் தெ பிரிட்டோ, டோனா பிரிட்டெஸ் தம்பதியரின் கடைசி மகனாகப் பிறந்தார். பிறந்தபோதேஇக்குழந்தை பிழைக்காதுஎன மருத்துவர்கள் கைவிரித்தனர். எனவே, இக்குழந்தைக்கு உடனடியாகயோவான் யஹக்டர் தெ பிரிட்டோஎன்ற பெயரில் திருமுழுக்கு அளித்தனர். இறையருளால் குழந்தை தப்பிப் பிழைத்தது.

இவரின் தந்தை பிரேசில் நாட்டில் ஆளுநராக இருந்தபோது கொலை செய்யப்பட, நான்கு வயதிலிருந்தே தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்ததால், அரசனின் பிள்ளைகளோடு இணைந்து அரண்மனையில் விளையாடி மகிழ்ந்தார். முதல் இளவரசன் பெத்ரோவின் உற்றத்தோழனாக அரண்மனையிலே தங்கினார். 11-வது  வயதில் பிரிட்டோ மீண்டும் நோயுற்றுப் படுத்தப் படுக்கையானார். தன் அன்பு மகன் தன்னை விட்டு அகன்று விடுவானோ என அஞ்சிய தாய், தன் பிள்ளை நலம் பெற்றால் ஓராண்டு இயேசு சபைத்துறவித் திருவுடையை அணிவார் எனப் புனித சவேரியாரிடம் நேர்ச்சி செய்தார். வேண்டுதல் நிறைவேறியது. பிரிட்டோ நலம் பெற்று ஓராண்டு இயேசு சபை அங்கி அணிந்து ஒரு துறவிபோல் வாழ்ந்தார். பிரிட்டோ அப்புனித வாழ்வைத் தொடரவே விரும்பினார். ஆனால், தாய் தன் மகனைப் பிரிய விரும்பாமல் மறுத்துவிட்டார்இருப்பினும், அன்னையிடம் தொடர்ந்து போராடி  பிரிட்டோ வெற்றி கண்டு 1662, டிசம்பர் 17 அன்று இயேசு சபையில் சேர்ந்தார். எவோரா நகரில் இலக்கியமும், கோயம்ப்ராவில் மெய்யியல் மற்றும் இறையியல் பயின்று 1673-இல் குருவாகத் திருப்பொழிவு பெற்றார்.

சவேரியாரின் பாதையில்

மதுரை மறைத்தளத்தின் மாபெரும் மறைப்பணியாளர், அழுத்தப்பட்ட மக்களின் முதல் தந்தை பல்தசார் தெ கோஸ்தா 37 ஆண்டுகள் தமிழ் மண்ணில் மறைப் பணிக்குப் பிறகு, தன் தாயகமான போர்த்துக்கல் சென்றார். அங்குத் தன் மறைப்பணி அனுபவங்களை எடுத்துக்கூற, பல இளைஞர்கள் பெரிதும் ஈர்க்கப்பெற்றனர். கோயம்ப்ராவில் இறையியல் பயின்ற ஜான் தெ பிரிட்டோ, அவரின் அனுபவங்களால்  உந்தித்தள்ளப்பட்டு, புனித பிரான்சிஸ் சவேரியாரைப்போல தமிழகத்தில் மறைப் பணியாற்ற முன்வந்தார். மகனின் முடிவைக் கண்டு தாய் பதறினார். மகனோ, “இறைவன் என்னை மதுரை மறைத்தளத்திற்கு அழைக்கின்றார். எனவே, எனக்கு விடை தாருங்கள் அம்மாஎனக் கேட்டுக் கொண்டார். தந்தை பல்தசார் தெ கோஸ்தா தலைமையில், பிரிட்டோ போன்ற பல இளம் இயேசு சபை குருக்கள் கோவா நோக்கி 1673, மார்ச் 23 அன்று பாய்மரக் கப்பலில் பயணமாயினர். பல மாதங்கள் தொடர்ந்த கப்பல் பயணம், திடீரென காற்றின் இயக்கமின்றி பல நாள்கள் நடுக்கடலில் நின்றுவிட்டது. தந்தை பல்தசார் உள்பட பயணிகள் பலர் நடுக்கடலில் மடிந்தனர். திடீரென உருவான புயலால் கப்பல் மேலும் அலைக்கழிக்கப்பட்டதுகப்பல் பயணிகள் அனைவரும் மரியன்னையிடம் மன்றாடினர். சில நாள்களில் புயல் நின்று, சீரான காற்று வீச ஆரம்பித்தது, பிரிட்டோ உள்பட 16 இளங்குருக்கள் பாதுகாப்பாக 1673-ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று கோவா வந்தடைந்தனர்கோவா வந்தவுடன் புனித சவேரியார் உடல் வைக்கப்பட்டுள்ள ஆலயத்திற்குச் சென்று அவரின் உடலுக்கு வணக்கம் செலுத்தி, இந்திய மண்ணில் ஒரு மறைசாட்சியாக மடிய வேண்டுமென உருக்கமுடன் மன்றாடினார் பிரிட்டோ. கோவாவில் சில காலம் தங்கி இறையியல் இறுதிப் படிப்புகளை முடித்துக்கொண்டு மறைப்பணி துவங்கும் முன் 30 நாள்கள் ஞான ஒடுக்கம் மேற்கொண்டார்.

கொழை - முதல் மறைத்தளம்

கேரளாவின் அம்பலக்காட்டில் ஜான் தெ பிரிட்டோ தமிழ்மொழி பயிற்சி பெற்றார். 1674-இல் தந்தை பெரேரா அம்பலக்காட்டிலிருந்து பிரிட்டோவைத் தரை வழியாகக் காடு, மலை, ஆறுகளெல்லாம் கடந்து 400 கி.மீ. நடைப்பயணமாகவே கொழை தளத்திற்கு அழைத்து வந்தார். இக்னேஷியஸ் என்ற மற்றொரு குரு கடல் மார்க்கமாக இங்கு வந்தடைந்தார். ஞானமுத்து என்ற உபதேசியார் இளங்குருக்கள் பிரிட்டோ, இக்னேஷியஸ் ஆகியோருக்குத் தரையில் மணல் பரப்பித் தமிழ் எழுத்துகளைக் கற்றுக் கொடுத்தார். இருவரும் ஆர்வத்துடன் தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, வரலாறு, விழாக்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டனர். தமிழ் செபங்களைப் பொருள் புரிந்து படித்தனர்.

தந்தை பெரேரா, இளங்குருக்கள் இருவரின் கண்காணிப்பில் கொழை மறைத்தளத்தை ஒப்படைத்து, தொலைதூரத்தில் இருக்கின்ற தளங்களுக்குக் குதிரையில் சென்று மக்களைச் சந்தித்துத் திரும்பினார். குருக்கள் மூவரும் இச்சுற்றுப்புறமெங்கும் பயணித்து, நற்செய்தி அறிவித்து, ஞாயிறு மற்றும் திருவிழா நாள்களில் மக்களைப் பெருந் திரளாகக் கொழையில் ஒன்று திரட்டினர். இதனால் கொழை மறைத்தளம் எப்போதும் கொண்டாட் டத்தின் தலமாகத் திகழ்ந்தது.

இந்நேரத்தில் கொள்ளை நோய் கொழை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தாக்க, ‘நமது கடவுள்களைக் கைவிட்டுக் கிறிஸ்தவத்தை ஏற்றதால் தீவினைஎன இந்து பூசாரி புரளியைக் கிளப்பிவிட்டான். மேலும் பலர் நோயினால் பீடிக்கப்பட்டார்கள். ‘என்னிடம் வந்து திருநீறு பூசினால் நலமாகும்என மீண்டும் தன் சமயத்திற்குத் திருப்ப முயற்சித்தான் பூசாரி. ஆனால், திருநீறு பூசியும் பலர் மாண்டதால், அவன் முயற்சி தோல்வியுற்றது. தந்தை பிரிட்டோ கொள்ளை நோய் பீடித்த ஊர்களுக்கெல்லாம் சென்று மருத்துவ உதவி வழங்கி, அருளாசீர் அளித்தார். கொள்ளை நோய் முற்றிலும் நீங்கியது.

நோயுற்ற அன்னம்மாள் என்ற பெண்ணைப் பூசாரி திருநீற்றோடு அணுகினான். அவரோகிறிஸ்து எனக்கு நலமளிப்பார்எனச் சொல்ல, தந்தை பிரிட்டோவின் ஆசிரால் அவளும், அவளது பிள்ளைகளும் நலம் பெற்றனர். கொள்ளை நோயின்போது தந்தை பிரிட்டோவும் அவரின் உபதேசியாரும், மரிக்கும் தறுவாயில் இருந்த பலருக்கு நோயில் பூசுதல் வழங்கி நன்மரணத்திற்குத் தயாரித்தனர். இந்த அறப்பணியில் பிரிட்டோவுக்கு உதவியாக இருந்த உபதேசியாரும் மரித்தார். கொள்ளை நோய் நீங்கிய பிறகு பலர் கிறிஸ்தவத்தில் இணைந்தனர். அனைத்துப் பயிற்சிகளையும் முடித்துக் கொண்ட தந்தை இக்னேஷியஸ் காந்தலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தத்துவாஞ்சேரியில் அருளானந்தர்

தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றை மதிக்கும் வகையில் தந்தை ஜான் பிரிட்டோ தனது பெயரை அருள் (ஜான்) + பிரிட்டோ (ஆனந்தர்) = அருளானந்தர் என மாற்றிக்கொண்டார். சிவாஜி படைகள் செஞ்சி நாட்டிலும் புகுந்ததால், கொழை மறைத்தளம் பாதுகாப்பற்றதாக மாறியது. எனவே, தந்தை ஆன்ரூ பெரேரா இத்தளத்தை வடக்கு, தெற்காகப் பிரித்தார். வடக்குப் பகுதிகளை இணைத்து, கொணரப்பட்டு மறைத்தளமாகவும், தெற்குப் பகுதிகளை ஒன்றிணைத்து, தத்துவாஞ்சேரியைத் தலைமையிடமாகவும் நிறுவினார். 1676-இல் மதுரை மறைமாநிலத்தின் அனுமதியைப் பெற்று தந்தை பெரேரா கொணரப்பட்டுக்கும், அருளானந்தர் தத்துவாஞ்சேரிக்கும் சென்றனர். இதனால், ஒரு காலத்தில் சிறப்புற்றுத் திகழ்ந்த கொழை, வந்தலை மறைத்தளங்கள் காலப்போக்கில் களையிழந்து முற்றிலும் மறைந்து போயின.

(தொடரும்)

Comment