No icon

இயேசுவின் தலைமைப் பண்புகள்

2 – மாற்றம் தரும் மந்திரச் சொல்!

“சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்”  (லூக்கா 19:5).

கடந்த கட்டுரையில் இயேசுவின் தலைமைப் பண்புகளில் ‘மக்களை ஈர்க்கும் காந்த சக்தி’ என்ற தலைப்பில் சிந்தித்தோம்.

ஒவ்வொரு மனிதனும் ‘மன,  நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தும் மேக்னெட்’ (BEING A  MAGNET FOR behavioural Change) என்ற தலைமைப் பண்பைக் கொண்டிருப்பது அவசியமான ஒன்று. இந்தத் தலைமைப் பண்பைப் பற்றி இங்குச் சிந்திக்கலாம். இயேசுவின் தலைமைப் பண்புகளில் ஒன்று, மக்களின் மனத்திலே மாற்றம், நடத்தையில் மாற்றம் ஏற்படுத்தும் ஒரு மேக்னெட் ஆக வாழ்ந்தது.

திருவிவிலியத்தில் மனமாற்றம் என்றதும் நம் நினைவுக்கு வருவது சக்கேயுவின் மனமாற்றம். சக்கேயு பிறரால் ‘பாவி’ எனக் கருதப்பட்டவர். குள்ளமானவர். இயேசுவைப் பார்க்க விரும்புகிறார். கூட்டம் அதிகமாக இருக்க, மரத்தின் மேல் ஏறி அமர்கிறார். ஆனால், அந்தக் கூட்டத்தில் இயேசு அவரை மட்டும் மேல்நோக்கிப் பார்க்கிறார். எதிர்பாராத சந்திப்பு. சக்கேயு மகிழ்கிறார்!

ஒரு மேல்நோக்கிய இயேசுவின் கனிவான பார்வை. ‘இன்று உன் வீட்டில், உன்னோடு நான் விருந்துண்ண வேண்டும்’ என்ற இயேசுவின் ஒரு வார்த்தை அங்கீகாரம் - சக்கேயுவின் மனத்தைப் புரட்டிப் போட்டது. அதன் விளைவு, தான் ஏமாற்றி அபகரித்த  சொத்துகளை எல்லாம் திருப்பிக் கொடுப்பதாக அவரை அர்ப்பணிப்பு செய்ய வைத்தது.

தலைவர்களாக நாம் வேலை செய்யும் இடங்களில், குடும்பத்தில், மக்கள்  மத்தியில் பிறர்  மனமாற்றத்துக்கு நாம் ஒரு தூண்டுகோலாக இருப்பது  இயேசுவின் ஆளுமைப் பண்புகள் சொல்லும் சிறப்பு. Behaviour Change - கொண்டு வருவது நம் பணியிடங்களில் மனிதவளத் துறையின் முக்கியப் பணி. நடத்தையில் மாற்றங்களைக் கொண்டுவர  நிறுவன அளவில் பல பயிற்சிகள் கொடுக்கிறோம். ஆனால், இயேசுவைத் தலைவனாகக் கொண்ட நான், பிறர்  நடத்தையில் மாற்றத்துக்காக ஒரு முன்னுதாரணமாக இருக்கிறேனா? என்பதே கேள்வி.

இது சம்பந்தமாக நாம், நமக்குள்ளே எழுப்ப வேண்டிய ஒரு சில கேள்விகள்:

1. ‘எனக்கு அங்கீகாரம் கிடைக்காதா?’ என்று ஏங்கும் ஊழியர்களை, நம் குடும்ப உறுப்பினர்களை என் கருணைப் பார்வை சென்றடைகிறதா?

2. ‘இவர் இப்படித்தான்; இவரைத் திருத்தவே முடியாது’ என்று முத்திரை குத்தப்பட்ட ஊழியர்களை, சகோதர சகோதரிகளை என் பார்வை நோக்கியிருக்கிறதா?

3. ‘எனக்குத் திறமைகள் இல்லையே’ என நினைத்து, தங்கள் வாழ்க்கைப்  பயணத்தில் தடுமாறும் நபர்களுக்கு, நம் இருப்பை வழங்க முடிகிறதா?

சக்கேயு, இயேசு என்னும் மீட்பைக் காண விரும்பியது போல, நாம் சந்திக்கும்  மனிதர்களில் முன்னேற்றம் என்னும் மீட்பைக் காண விரும்பும் நபர்களிடம் மேல்நோக்கிய பார்வை நம்மிடம் உண்டா?

இந்த இயேசுவின் கனிவான பார்வை, தனிப்பட்ட அங்கீகாரம், சிறப்புக் கவனம் நாம் சந்திப்போரின்  மனமாற்றத்தின் மேக்னெட் ஆக மாற்றும். இந்தச் சக்கேயுவின் நிகழ்வில் “இழந்து போனதை மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்” என்று  இயேசு முடிக்கிறார். “மருத்துவர் நோயற்றவருக்கு அன்று; நோயுற்றவருக்கே” எனவும் இயேசு மொழிந்திருக்கிறார். இயேசுவின் இந்த வழியில் நடக்கிற போது, சக்கேயுவின் மனமாற்ற அர்ப்பணிப்பு போல, நாம் பிறரில் ஏற்படுத்தும் தாக்கம், தங்கள் அர்ப்பணிப்பைப் பிறரின் வாழ்விற்காக முன்னேற்றத்துக்கு  வழங்குவார்கள் என்பதே இயேசு இந்த நிகழ்வில் நமக்குச் சொல்லும் செய்தி.

மேலும், நிறுவனத்தில் ஊழியர்களின்  மன மாற்றம், நடத்தை மாற்றம் ஏற்படுத்துவதில் நம் தலைமைப்பண்பு பங்கு பெரிது. இது நாம் சந்திக்கும் மனிதர்களின்  இலக்கை அடையவும், அவர்களின்  உயர்வுக்கான பயணமாகவும் அமையும். அதுபோல மற்றொரு நிகழ்வு: விபசாரத்தில் பிடிபட்டப் பெண்ணை இயேசு முன் கொண்டு வந்து, “சட்டப்படி இவளைக் கல்லால் எறிய வேண்டும்” என இயேசுவிடம் சொல்லி, “நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்கின்றனர். இயேசு மறு மொழியாக, “உங்களில் பாவம் செய்யாதவன் இவள் மேல் முதலில் கல்  எறியட்டும்” எனக் கூற, அதைக் கேட்டதும் ஒருவர் பின் ஒருவராகக் கலைந்து போக, யாரும் அங்கே இல்லை. இயேசு நிமிர்ந்து பார்த்து, “அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், “இல்லை ஐயா” என்றார். இயேசு அவரிடம் “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை; நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.

நிறுவனங்களில் சில நேரங்களில், ஒரு நபரை தண்டிக்க வேண்டும், வேலை நீக்கம் செய்ய வேண்டும்  என மேலாளர்கள்  அழுத்தம் கொடுக்கும் தருணங்கள் சில இருக்கலாம். குடும்பங்களில் குழந்தைகளைத் திருத்த வேண்டும் என்பதற்காக, தவறான தண்டனைகளை வழங்குவதுண்டு. அந்தத் தருணங்களில் அவர்கள் மனம் மாற, நடவடிக்கை மாற வாய்ப்புகள் வழங்குகின்றோமா? வழங்கும் சூழ்நிலையை உருவாக்குகிறோமா? வாய்ப்புத் தருவதோடு அல்லாமல், பாதிக்கப்பட்ட நபரின் செயலின் மூலக்காரணம், அதைக் கண்டு நிவர்த்தி செய்யும் வழிமுறைகள், தொடர் கண்காணிப்பு என நம் அன்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, அவர்கள் நடத்தை மாறும் பயணத்தில் சேர்ந்து பயணிக்கிறோமா?

ஒரு நபரைத் தீர்ப்பிடாத திருத்தங்களுக்கும்,  தீர்ப்பிடாத தீர்ப்புகளும் இயேசு கண்ட அணுகு முறை. நடவடிக்கை மாற்றத்திற்கு வாய்ப்புக் கொடுப்பதோடு நின்று விடாமல், அவர்களின் மன மாற்றத்துக்கு, நடவடிக்கை மாற்றத்திற்கு அவர்களோடு சேர்ந்து பயணித்து, அவர்கள் மனமாற்றத் தேவைகளைக் கொடுப்பது நம் பொறுப்பும், கடமையும் ஆகும்.

இறைவேண்டலோடு, இயேசுவின் தலைமைப் பண்பின் தோழமையோடு, அணுகுமுறையோடு   கூடிய  மனமாற்றச் சூழலை ஏற்படுத்தும்போது  அது மனமாற்றம் என்னும் பெரிய புதுமைகளை நம் இல்லங்களில், சமூகத்தில்  ஏற்படுத்தும்.

Comment