No icon

இறைவேண்டலின் பரிமாணங்கள் - 4

இறைவேண்டலில் மன்னிப்பு!

இறைவேண்டலின் பல பரிமாணங்களுள், இறைவேண்டலின் அடிப்படைக் கூறுகளான ஆராதனை, இறைப்புகழ்ச்சி, மன்னிப்பு, மன்றாட்டு, அர்ப்பணம் ஆகிய ஐந்தையும் நாம் ஆய்வு செய்கிறோம். ஆராதனை, இறைப்புகழ்ச்சிக்கு அடுத்து வருவதுமன்னிப்பு’.

மன்னிப்பின் முக்கியத்துவத்தை நாம் நன்கறிவோம். இருப்பினும், இறைவார்த்தையின் ஒளியில் நோக்கும்போதுதான் மன்னிப்புக்கும், இறைவேண்டலுக்குமான நெருக்கமான உறவு நமக்கு நன்கு புலப்படுகிறது.

1. பிறரை மன்னிப்பது இறைவேண்டலின் நிபந்தனை. பிறரை நாம் மன்னிக்கும்போதுதான், நாம் இறைவேண்டல் செய்வதற்கே தகுதி யானவர்கள் என்னும் உண்மை நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிய வேண்டும். “நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது, யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள்” (மாற் 11:25) என்பது இயேசுவின் போதனை.

2. நமது மன்னிப்புக்காக நாம் மன்றாட வேண்டும். நமது அன்றாட இறைவேண்டலில் நாள்தோறும் நமது மன்னிப்புக்காக இறைவனை மன்றாட வேண்டுமென இயேசு கற்பித்தார். எனவேதான், “எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால், எங்கள் பாவங்களையும் மன்னியும்” (லூக் 11:4) என்று நாம் மன்றாடுகிறோம்.

3. நமது பாவங்களை அறிக்கையிட வேண்டும். பாவ மன்னிப்புக்காக மன்றாடுவது என்பது ஒன்று; பாவங்களை அறிக்கையிடுவது என்பது வேறொன்று; பாவங்களுக்குப் பரிகாரம் செய்வது என்பது பிறிதொன்று என்னும் புரிதல் பெரும்பான்மை கிறிஸ்தவர்களிடம் இல்லை. எனவேதான், பாவ அறிக்கை செய்யும் ஒப்புரவு அருள்சாதனப் பழக்கம் அருகி வருகிறது. இறைவார்த்தையைக் கூர்ந்து வாசிக்கும்போதுதான், பாவங்களை அறிக்கையிடுவதன் அவசியத்தை நாம் உணர்கிறோம்.

என் பாவத்தை அறிக்கையிடாதவரை, நாள் முழுவதும் நான் கதறி அழுததால், என் எலும்புகள் கழன்று போயின. என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன் என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும், பாவத்தையும் போக்கினீர்” (திபா 32:3,5) என்கிறார் திருப்பாடல் ஆசிரியர்.

தொடக்கத் திரு அவையில்நம்பிக்கை கொண்டோர் பலரும் தாங்கள் செய்த தவற்றை ஒப்புக்கொண்டு அறிக்கையிட்டனர்” (திப 19:18) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு அவை வரலாற்றை அறிந்தவர்கள் முதல் நூற்றாண்டுகளில் பொதுப் பாவ அறிக்கையே நிலவியது என்பதை ஒப்புக் கொள்வார்கள். “ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்துகொள்ளுங்கள்; ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள்” (யாக் 5:16) என்னும் யாக்கோபின் அறிவுரை இதனை வலிமைப்படுத்துகிறது.

4. நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.பரிகாரம்என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ஈடாக, ‘பாவக்கழுவாய்என்னும் நல்ல சொல்லைப் பயன்படுத்துகிறது நம் திருவிவிலியம். பாவ மன்னிப்புக்காக மன்றாடி, பாவங்களை அறிக்கை செய்தால் போதுமா? கழுவாயும் செய்ய வேண்டுமென்பதுதானே நியாயம்?

பழைய ஏற்பாட்டில் பாவக் கழுவாய்க்கான பல ஒழுங்குகள் இருந்ததை லேவியர் நூல் பட்டியலிடுகிறது. எடுத்துக்காட்டாக, பலியிடும் விலங்குகளின் கொழுப்பை எடுத்துபலிபீடத்தின் மேல் ஆண்டவர் விரும்பும் நறுமணமாகக் குரு எரித்துப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். அந்த மனிதரும் மன்னிப்புப் பெறுவார்” (லேவி 4:31) என்பது அவற்றுள் ஒன்று.

ஆனால், இயேசு வந்த பிறகு கழுவாய்ப் பலிக்கான தேவை இல்லாமல் போய்விட்டது. காரணம், “இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார்” (உரோ 3:25); “நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே” (1யோவா 2:2); “எனவே, பாவமன்னிப்பு கிடைத்த பின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை” (எபி 10:18).

ஆனால், பாவக் கழுவாயின் புதிய பரிமாணங்களை இயேசு அறிமுகம் செய்தார். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் இயேசு, “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” (யோவா 8:11) என்றார். பாவமற்ற வாழ்வே மிகச் சிறந்த பாவக் கழுவாய் என்பது இயேசுவின் புதிய போதனை.

இதனையேதீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது; அநீதியைக் கைவிடுதல் பாவக் கழுவாய்ப் பலியாகும்” (சீஞா 35:3) என்றும், “தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர்” (சீஞா 3:3) என்றும் சீராக்கின் ஞானநூல் கூறுகிறது.

சக்கேயுவின் மனமாற்றத்தின்போது அவர் எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி, எதையாவது கவர்ந்திருந்தால், நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" (லூக் 19:8) என்று அறிக்கையிட்டது பாவக் கழுவாய்க்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. எனவேதான், இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” (லூக் 19:9) என்று அவரைப் பாராட்டி, ஏற்பிசைவு செய்தார்.

நமது இறைவேண்டலில் மன்னிப்பின் இத்தனை பரிமாணங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்வோம்.

Comment