No icon

தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் - 31

மறவ நாட்டில் மறைப்பணி

12 ஆண்டுகள் தஞ்சை, செஞ்சி, குடந்தை ஆகிய பகுதிகளில் மறைப்பணியாற்றிய அருளானந்தர், 1685-86 ஆகிய ஆண்டுகளில் மதுரை மறைப்பணித் தளத் தலைவராகப் பணியாற்றினார். மதுரைத் தளத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து, குருக்களையும் மக்களையும் நற்செய்தியின் பாதையில் வழிநடத்தினார். காந்தலூர், தத்துவாஞ்சேரி, கூவத்தூர் ஆகிய மறைத்தளங்களில் மறவ நாட்டுக் கிறிஸ்தவர்களைச் சந்தித்த அருளானந்தர், மறைப் பணியாளர்கள் இல்லாத அப்பகுதிக்குச் சென்று பணிபுரிய விரும்பினார்.

புனித அருளானந்தர் 1683-இல் எழுதிய மடலில் 4000-க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் மறவ நாட்டில் இருப்பதாகக் கூறுகின்றார். 1686-ஆம் ஆண்டு  அருளானந்தர் தஞ்சைப் பகுதியிலிருந்து மறவ நாட்டில் நுழைந்த இரண்டு மாதத்திற்குள் 2070 பேர்களுக்குத் திருமுழுக்கு வழங்கினார். 1686, ஜூலை 17 அன்று வெள்ளைக்குளம் புனித மரி மகதலா ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் போது, மன்னர் சேதுபதியின் அமைச்சர் குமாரப் பிள்ளையின் காவலர்கள் தந்தை அருளானந்தரையும், அவரின் இரு வேதியர்களான சிலுவை நாயக்கர், கனகப்பிள்ளையையும், நான்கு புதிய கிறிஸ்தவர்கள் சூரப்பன், சத்தியநாதன், அருளன் மற்றும் ஓர் இளைஞனையும் கைது செய்து மங்களம், காளையார்கோவில், பாகனேரி ஆகிய சிறைகளில் அடைத்தனர். மறுநாள் அருளானந்தரை இரு மரங்களுக்கிடையேவில்லை வளைத்ததுபோல் கட்டித் தொங்கவிட்டனர். மேலும், கைகளிலும், கால்களிலும் இரும்புகளை வைத்து அடித்தனர். வேதியர்களைக் கசையடிகளுக்கு உள்ளாக்கினர்.

பின்னர் இராமநாதபுரத்திற்கு இழுத்துச் சென்று அரண்மனையில் நிறுத்தி, தண்டனை வழங்குமாறு அரசனிடம் பரிந்துரைத்தனர். பத்துக் கட்டளைகள், நற்செய்தி மதிப்பீடுகள் ஆகிய கிறிஸ்தவத்தின் போதனைகள் தங்கள் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அருளானந்தரைத் தண்டித்து விடுதலை செய்து, மறவ நாட்டை விட்டு வெளியேறுமாறு சேதுபதி கட்டளையிட்டான்.

விடுதலைக்குப் பிறகு அருளானந்தர் தனது இரண்டு வேதியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் திருவிதாங்கூர் தோப்புப் பகுதிக்குச் சென்று மறை மாநில அதிபரைச் சந்தித்தார். அருளானந்தரின் உடல் நலிவுற்று இருந்ததால், போர்த்துக்கல் திரும்பி மறைப்பணியகத்தின் பொருளர் பொறுப்பை ஏற்க மன்னர் இரண்டாம் பேத்ரோவால் பணிக்கப்பட்டார். அரசனின் உத்தரவை ஏற்று, 1687 இறுதியில் கோவா சென்று, செப்டம்பர் 8, 1688-இல் லிஸ்பன் சென்றடைந்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தாயகம் சென்று அன்புத் தாய் மற்றும் நண்பர்களைக் கண்டு மகிழ்ந்தார்.

தடியத் தேவரின் மனமாற்றம்

ஓராண்டு ஓய்விற்குப்பின் 1690, ஏப்ரல் 8 அன்று 24 புதிய மறைப்பணியாளர்களுடன் லிஸ்பனிலிருந்து புறப்பட்டு அவ்வாண்டின் அக்டோபர் மாதத்தில் கோவா வந்தடைந்தார் அருளானந்தர். அங்கிருந்து பெரியதாழை வந்த அருளானந்தரை, தந்தை ஜான் தெ கோஸ்தா, மறைமாநில அதிபர் ஆன்ரூ பெரேரா மற்றும் வேதியர் சிலுவை நாயக்கர் ஆகியோர் வரவேற்றனர். தந்தை அருளானந்தர் மறைப்பணிப் பார்வையாளராக ஆவூர், மலையடிப் பட்டி, திருச்சி, வல்லம், வடுகர்பேட்டை போன்ற தளங்களுக்குச் சென்றார். இப்பகுதிகளில் 400 பேர்களுக்குத் திருமுழுக்கு வழங்கிய பிறகு 1691, மே 27 அன்று மீண்டும் மறவ நாட்டில் நுழைந்தார். ஆண்டாவூரணிக்கு அருகே கள்ளர்கள் வாழும் கருந்தாங்குடியில் தங்கினார். இவ்வாண்டு மட்டும் 4000 பேர்களுக்குத் திருமுழுக்களித்தார். புளியால் அருகிலுள்ள முன்னி என்ற இடத்தில் தங்கிக் கொண்டு, வழித்திடல் என்ற ஊரில் 3000 பேர்களுக்கு ஒரே நாளில் திருமுழுக்களித்து அப்பகுதியில் மூன்று சிற்றாலயங்களை நிறுவினார்.

தேவகோட்டைக்கு அருகேயுள்ள சிறுவல்லி பாளையத்தின் குறுநில மன்னன் திரையத் தேவர் (தடியத்தேவர்) தீரா நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். பல வைத்தியர்கள் சிகிச்சை அளித்தும் அவரின் நோய் நீங்கவில்லை. அருளானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டு, தன் அரண்மனைக்கு வரவழைத்தார். அருளானந்தர் மன்றாட ஆரம்பித்த உடனே, திரையத் தேவரின் உடலில் மாற்றம் ஏற்பட்டது. கொஞ்சம், கொஞ்சமாக உடலில் அசைவுகள் ஏற்பட்டு, முற்றிலும் குணமடைந்து எழுந்து அமர்ந்தார். இப்புதுமையைக் கண்ட அவரின் மனைவிகள், மக்கள், சுற்றத்தார் வியந்து கொண்டாடி மகிழ்ந்தனர். அவரும், குடும்பத்தாரும் இயேசுவை ஏற்று 1683-இல் திருமுழுக்குப் பெற்றனர்.

ஐந்து மனைவிகளைக் கொண்டிருந்த திரையத் தேவர், அருளானந்தரின் ஆலோசனைகளின்படி முதல் மனைவியை மட்டும் தன் மனைவியாக ஏற்று, மற்ற நால்வரைத் தனது சகோதரிகளாக ஏற்றார். இதனால் கோபங்கொண்ட மற்ற மனைவிகள் நான்கு பேரும், கடையவளாகிய காதலி நாச்சியாரைத் தூண்டிவிட்டு அவளின் பெரியப்பன் உறவான மறவ நாட்டு மன்னன் கிழவன் சேதுபதியிடம் முறையிட்டனர். தன் உறவினரான திரையத் தேவன் கிறிஸ்தவத்தைத் தழுவி, தன் தம்பி மகளைக் கைவிட்டதை எண்ணிக் கொதிப்படைந்தான் சேதுபதி. தன்னோடு அரியணைக்குப் போட்டிப் போட்ட தடியத் தேவன், தனக்குப் பிறகும் அரியணைக்கு வர வாய்ப்பு இருப்பதால், நாடே கிறிஸ்தவர்கள் வசம் சென்றுவிடும் என அஞ்சினான்

(தொடரும்)

Comment