No icon

தெய்வீகத் தடங்கள் - 3

நனவு நிலையை நோக்கி ஒரு பயணம்

2014 -ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று விடியற்காலையில் நான் கண்விழித்த போது, நான் உயிருடன் இருந்தது கண்டேன்!  எனக்குள்ளேயே நான், ‘அருள் நிறைந்த  மரியே, என்னோடு இருப்பதற்கு நன்றி’ என்று சொல்லிக் கொண்டேன். சுவரில் தொங்கிய அன்னை மரியாவின் படத்தைப் பார்க்க முயற்சி செய்தேன். ஆனால், அது அங்கில்லை. அது இருந்த இடத்தில் சன்னல்தான் இருந்தது. நான் கண்களைத் திருப்பி இடது பக்கம் பார்த்தேன். அங்கே ஒரு கழிவறைதான் தென்பட்டது. ‘திண்டுக்கல் பெஸ்கி கல்லூரியில் அலோசியஸ் விடுதியில் 75 -ஆம் அறையில் கழிவறையெல்லாம் இல்லையே’ என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். அங்கே பொதுக் கழிவறைதான் இருக்கும். ‘அப்படியானால் இது உறுதியாகப் பெஸ்கி வளாகம் இல்லை. அப்படியானால் நான் எங்கிருக்கிறேன்?’

எழுந்திருக்க முயற்சி செய்தேன். என்னால் கால்களையும், கைகளையும் அசைக்க முடியவில்லை. என்னால் அசைய முடியவில்லை. உடல் கனமாக இருந்தது. நான் இருந்த அறையை நன்றாகப் பார்க்க விரும்பினேன். என்னால் கண்களைத் திறக்க முடியவில்லை. வலது கண் என் சொல்படி கேட்க மறுத்துவிட்டது. பெரிதாக வீங்கிப் போயிருந்தது. இடது கண்ணைக் கொண்டு அறையையும், எனது உடலையும் பார்த்தேன். பயங்கரம்! எனது வலது கால் வெள்ளைத் துணியால் இடுப்பிலிருந்து கட்டை விரல் வரையில் கட்டுப்போடப்பட்டிருந்தது. அதேபோல எனது இடது காலிலும் இடுப்பிலிருந்து முழங்கால் வரையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. எனது வலது கை வெள்ளைத் துணியால் தோளிலிருந்து விரல் நுனி வரையில் சுற்றப்பட்டு, ஒரு தாங்கியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. கொஞ்சம் தூக்கி வைக்கப்பட்டிருந்த தலையிலும் கட்டு. எனது இடது கையின் மேற்புறத்தில் போடப்பட்ட துவாரத்தின் வழியாகத் திரவம் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

முகமும், கால்களும் ஈரமாக இருப்பதுபோல உணர்வு. அவற்றில் இன்னும் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. எனது உடல் நிலை என்னைக் கவலைக்குள் ஆழ்த்தியது. எதுவும் செய்ய முடியாத நிலையில் நான் இருந்தது எனக்குப் பயங்கரமாக இருந்தது. மயக்கம் வருவதுபோல இருந்தது. உடல் முழுவதும் தாங்க முடியாத வலி.

நனவு நிலை திரும்பிய நிலையில் நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்: ‘ஆம், ஏதோ பயங்கரம் நடந்துவிட்டது; பெரிய விபத்து நடந்து விட்டது; நான் மருத்துவமனையில் இருக்கிறேன். நான் உயிரோடு இருக்கிறேன்.’ கடவுளுக்கான நன்றியுணர்வு எனது உடல் துன்பத்தைத் தணித்தது. இறைவனின் காக்கும் ஆற்றலில் எனது முழுமையான நம்பிக்கை என் ஆன்மாவில் நிறைந்தது. உயிர்க் கொடையைக் கொண்டாடத் தொடங்கினேன். என்னை உயிரோடு வைத்திருப்பதற்காக நன்றிகூறிக் கொண்டிருந்தேன். இறப்பின் உறுதியிலிருந்து  வேறென்ன பரிசு வேண்டும்? ஒழுங்கான மூச்சு, நுரையீரலின் ஒழுங்கான செயல்பாடு, இதயத் துடிப்பு மீண்டும் வந்திருப்பது எல்லாம் ஒரு பரிசு அல்லவா!

இந்த எண்ணங்கள் என் மனத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது, கதவு திறக்கும் சத்தம் கேட்டது. செயல்படும் ஒரே கண்ணை வலப்பக்கம் திருப்பினேன். ஓர் உருவம் என்னை நோக்கி வந்து, என் அருகில் நிற்பது தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அது என் அண்ணன் என்பது தெரிந்தது. அவர் எனது கைகளை மென்மையாகப் பற்றிக் கொண்டார். அவர் தனது கண்ணீரை அடக்கிக் கொண்டிருக்க வேண்டும். மென்மையான குரலில் அவர் பற்றியும், வீட்டிலுள்ளோரைப் பற்றியும் கேட்டேன். நாள், நேரம் என்ன? என்று கேட்டேன். அது 2014 -ஆம் ஆண்டு பிப்ரவரி 26, காலை 6 மணி.

எனது நினைவு நிலையில் பிப்ரவரி 22 முதல் 26 வரை நான்கு நாள்கள் அரை மயக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். குடும்பத்தினர் பலர், உறவினர், நண்பர்கள், குருக்கள், கன்னியர் பலரும் மருத்துவமனையின் அறுவை சிகிச்சைக்குப் பின் வைக்கும் அறையிலும், தனி வார்டிலும் என்னை வந்து பார்த்துச் சென்றார்கள் என்று சொன்னார்கள். அவர்களுடன் நான் சில வார்த்தைகள் பேசினேன் என்றும் சொன்னார்கள். என்னுடைய உடல் அசைவுகளின் மூலம் எனக்குக் கடுமையான வலி இருந்ததை வெளிப்படுத்தியிருப்பேன் போலும். எனக்கு அது ஒன்றுமே இப்போது நினைவில் இல்லை. அந்த நான்கு நாள்களும் என்ன நடந்தது என்பது நினைவில் இல்லாததால், அந்த நான்கு நாள்களையும் எனது வாழ்க்கை வரலாற்றிலிருந்து அழித்துவிட விரும்புகிறேன்! இதனைப் புனித லொயோலா இஞ்ஞாசியார் தன்னை அர்ப்பணித்த மன்றாட்டின் வழியாகச் செய்தேன்.

‘ஆண்டவரே, எனது சுதந்திரத்தையும்

எனது விருப்பம், எனது மனம், எனது நினைவு

அனைத்தையும் எடுத்துப் பெற்றுக்கொள்ளும்.

என்னிடமுள்ள எல்லாவற்றையும்

நீர்தான் கொடுத்தீர்!

இப்போது உமது திருவுளத்தால் ஆளப்பட்டுத் திருப்பித் தருகிறேன்.

உமது சொற்களை என்னிடம் கூறும்;

நான் உடனே பணிவேன்;

உமது அன்பு ஒன்றே எனது செல்வம்.

பிறவெல்லாவற்றையும் விட்டு விடுவேன்.’

நோயாளிகள் எந்த விபத்து பற்றியும் துல்லியமான விவரங்களையும் நினைவில் வைக்க முடியாது என்று மருத்துவர்கள் பின்னர்  சொன்னார்கள். ஏனென்றால், நினைவு நிலை மனம் செயல்பட முடியாதபோது நினைவிலி மனம் பொறுப்பேற்கிறது. நனவு நிலை மனம் எப்போதும் இயங்குகிறது. தொலைபேசி எண்கள், முகவரிகள் முதலான தரவுகளைச் சேமிக்கிறது. ஆனால், நினைவிலி மனம் உணர்ச்சி சார்ந்த விவரங்களை, துன்ப அனுபவங்களைச் சேமித்து வைக்கிறது.  ஏறத்தாழ மறந்து போன நினவுகளோடு தொடர்பை ஏற்படுத்துகிறது.

அரைத்தூக்கத்தில்

சொருகியிருக்கும்

கண்களை ஊடுருவ

எனது குழம்பிய மனத்தையும்,

அதன் பாதைகளையும்

செப்பனிடுவதுபோல

தொலைந்துபோன நினைவுகளைக்

கண்டுபிடித்துச் சேர்க்கும் முயற்சியாகக்

காய்ந்த நிலம் மழைநீரால்

தாகம் தணித்துக் கொள்வதுபோல

வறண்ட ஆற்றுப் படுகைகள்

பெருக்கெடுக்கும் நீரால்

நனைவதுபோல,

ஆற்றோரத்துக் காய்ந்த மரம் மீண்டும்

தளிர்விடுவது போல

வாடிய புல் பசுமைப்

புது வாழ்வு பெறுவதுபோல

வாழ்க்கையின் முழுமை மீண்டும்

புதிதாய் விடிய

உயிரோடு இருத்தலின்

பொருளையும், வாழ்வினையும்

அதன் பல்வேறு மர்மங்களையும்

அறியும் ஆசையோடு நான்

அறையின் வெள்ளை மேற்கூரையை

வெறித்துப் பார்த்துப் படுத்திருந்தேன்!

ஓர் உணர்ச்சி; நான் நீண்ட கனவிலிருந்து

விழித்துக் கொண்டேனோ?

மனத்தில் ஓர் எண்ணம்;

இது புதுமையா? அருங்குறியா?

ஓர் ஆழமான நன்றியுணர்வு

உள்ளே விரிகிறது.

இந்த உள்ளத்தின் ஆழத்து

மகிழ்ச்சியை எப்படி விவரிப்பது?

ஒழுங்கான மூச்சு உயிர் இருப்பதை

உறுதி செய்கிறது.

வலி நான் உயிர் வாழ்கிறேன் என்பதற்கு

அத்தாட்சி பகர்கிறது.

அனைத்தையும் நம்பிக்கையோடு

அணைத்துக் கொள்ளும்

எண்ணம் எழுகிறது.

இந்தப் பரிசினை உண்மையென்று

கொண்டாட ஓர் அறைகூவல் வருகிறது.

புதிய அழைப்பினை முழுவதும் வாழ

ஓர் அழைப்பு கிடைக்கிறது.          

(தொடரும்)

Comment