No icon

தெய்வீகத் தடங்கள் – 6

வலிநீக்கியாக இறைவன்!

நான் நற்கருணையைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரு வாரத்திற்குப் பிறகு மார்ச் 1 முதல் இடக்கையைக் கொண்டே திருப்பலி நிறைவேற்றத் தொடங்கிவிட்டேன். என் வயிற்றின் மேலேயே அப்பத்தையும், இரசத்தையும் வைத்துக் கொண்டேன். ஒன்பதாவது நாள் அன்னை மரியாவின் குணமாக்கும் தொடுதலை அனுபவித்தேன். என்னுடைய உடல் முழுவதும் உள்ளாற்றல் எழுவதை நான் கண்டேன். நற்கருணையின் மறைபொருளால் ஈர்க்கப்பட்டேன். மூவொரு கடவுள் அதன்மேல் ஆழ்ந்த பக்தியை எனக்குக் கொடையாக அளித்தார்.

இந்தக் காலகட்டத்தில் திருப்பெயர் மன்றாட்டும், அதாவது இயேசுவின் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்வதும், மூவொரு கடவுள் மன்றாட்டும் எனது செபிக்கும் முறையாக ஆயின. இதுவே எனக்கு அருமருந்தாக ஆயிற்று. என்னைச் சாவின் பிடியிலிருந்து மீட்ட ஆண்டவர் என்னோடு பயணிப்பார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருந்தது.

இந்த இறை அனுபவம் வலியின் மத்தியிலும் மகிழ்ச்சியாக இருக்கவும், வாழ்க்கை எனக்குத் தருவதற்கெல்லாம் நமது அன்னை மரியாவைப் போல ‘ஆம் (லூக் 1:37-38) என்று சொல்லும் ஆன்மிக வலிமையைப் பெறவும் எனது ஆன்மாவில் தெய்வீக நெருப்பை மூட்டிற்று.

நான் குணமடைந்து வரும் வேளையில், என்னைப் பார்க்க மதுரை, டில்லி மறைமாவட்டங்களிலிருந்து பல இயேசு சபையினர் வந்தார்கள். அவ்வப்போது பல அருள்சகோதரர்களும், சகோதரியரும், குடும்பத்தாரும், உறவினர்களும், நண்பர்களும், வகுப்புத் தோழர்களும், தெரியாதவர்களும் கூட என்னை உற்சாகப்படுத்த வந்தார்கள். பிற சமயத்தார் உள்பட பார்க்க வந்த பலரும் என்னுடைய கையை அவர்கள் கையில் வைத்து மௌனமாகச் செபித்தார்கள். சிலர் வாய்விட்டு மன்றாடினார்கள். பலர் தங்கள் உடல்மொழியால் உற்சாகப்படுத்தினார்கள்.

இந்த அனுபவங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரைப் பார்க்கப் போகும்போது நான் எவ்வளவு கருணையோடு இருக்க வேண்டும் என்று எனக்குக் கற்பித்தன. கங்கா மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்ற பிறகு 2014, மார்ச் 24 அன்று வீட்டிற்கு அனுப்பினார்கள்.

நான் ஏப்ரல் 2 அன்று மீளாய்வுக்கு மறுபடியும் வர வேண்டியதிருந்ததால், கோயமுத்தூர் போத்தனூரில் காணிக்கை அன்னை சபையினர் நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். மருத்துவமனை செவிலியர் பள்ளியோடு இணைந்தது. ஆகவே, அங்கு வசதிகள் மிகக் குறைவு. ஆனால், மருத்துவர்கள் நேரத்துக்கு வந்து பார்த்தது ஊக்கமளிப்பதாக இருந்தது.

செவிலியர் தொண்டுள்ளத்தோடு பார்த்துக் கொண்டார்கள். காணிக்கை அன்னை சபை சகோதரிகள் தொடர்ந்து செபித்ததோடு, மருத்துவர்கள் சொன்ன உணவும் கொடுத்தார்கள். வெப்பம் அதிகமாக இருந்ததால், இன்னும் ஆறாமல் இருந்த காயங்களுக்குக் குளிர்ச்சி தேவைப்பட்டது. குளிரூட்ட ஏர் கண்டிஷனர் வசதி இல்லை. உடனே என் சகோதரர் மைசூருக்குப் போய் ஓர் ஏர்கண்டிஷனர் வாங்கி வந்தார். அது இடத்துக்கு இடம் கொண்டு போகப்படக் கூடியது. இதனால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் தோல் ஒட்டப்பட்ட கால்களும், கைகளும் விரைவில் ஆறத் தேவையான குளிர்ச்சி கிடைத்தது.

ஏப்ரல் 6 அன்று அதிகாலை அறையில் வழக்கம் போலத் திருப்பலி நிறைவேற்றினேன். பங்கு பெற்றவர்கள் இருவர்தான். சுவரில் சாய்ந்து கொண்டு காலை நீட்டி, மடியில் புனிதப் பொருள்களை வைத்துக்கொண்டேன். எழுந்தேற்றத்தின்போது ஆழமான இறை அனுபவம் எனக்கு ஏற்பட்டது. என் தலை முதல் கால் வரையில் ஓர் உள் ஆன்ம ஆற்றல் பரவியதை உணர்ந்தேன். நற்கருணை ஆண்டவர் உடைந்த என் உடலின் ஒவ்வொரு திசுவாகவும் மாறினார். அவரது இரத்தம் என்னுடைய இரத்தக் குழாய்களில் சென்று, அறுந்துபோன நரம்புகள் மீண்டும் உயிர்பெறத் தூண்டியது. என் உடல் முழுவதும் இருந்த தாங்க முடியாத வலியை ஏற்றுக் கொள்ள எனக்கு உள் ஆற்றல் மேலெழுவதை நான் உணர்ந்தேன். என் உயிரும், உடலும், ஆன்மாவும் மூவொரு கடவுளைப் போற்றித் துதித்தன.

மூவொரு கடவுளைச் சில நிமிடங்கள் தொழுத பிறகு, ‘கடவுள் என்னைக் கைவிட மாட்டார். நமது ஆண்டவரின் துன்பத்திலும் குறைவான இந்தத் துன்ப வேளையை நான் கடந்து போவேன்என்று உறுதி கூறும் நம்பிக்கையும், மனவுறுதியும் என்னுள்ளே தோன்றின. அச்சத்தையும், ஐயத்தையும் வெற்றி கொள்ள என்னுடைய துணிவு வலிமை பெற்றது. இறைவனின் காலடித் தடங்கள் ‘தொட்டிலிலிருந்து, ‘நடப்பதற்குப்பயணம் செய்வதைச் சாத்தியமாக்கிற்று.

என்னுடைய எலும்புகளையும், திசுக்களையும் மீட்டமைப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். மறு ஆய்விற்குப் பிறகு என்னை மைசூருக்குக் கொண்டு சென்றார்கள். ஏனென்றால், புண் ஆறுவதற்கும், குணமாவதைத் துரிதப்படுத்தவும் மைசூர் பருவ நிலை உதவியாக இருக்கும் என்று கருதினார்கள். அதன் பிறகு உடல் குணமடைய நீண்ட காலம் ஆனது.

2014, பிப்ரவரி 21 முதல், 2015 மே 24 வரையில் அத்தனை நாள்கள் ஓரளவு குணமடையத் தேவைப்பட்டன. காலம் பிடித்தது. நானே எழுந்து நிற்க முடிந்தது. தூக்குப் படுக்கையிலிருந்து சக்கர நாற்காலி, அதன் பிறகு கைத்தடியைப் பயன்படுத்தி அதிலிருந்து சுவரைப் பிடித்து நடத்தல். கடைசியில் உதவியின்றி நடத்தல் என்று முன்னேற்றம்.

உடல் பல இடங்களில் கிழிபட்டிருந்தது. வலது பாதத்தின் மத்தியில் நீண்ட வெட்டு. இதனால் சிறு விரலை எடுக்க வேண்டியதாயிற்று. வலது முழங்கால் உடைந்து போனதால் அதன் தசைநாரில் கரையக்கூடிய ஸ்க்ரூ நுழைக்கப்பட்டது. தசையை மறைக்க கை, கால் தோலைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இவ்வாறு ஓராண்டுக்கு மேல் உடல் தேறிய பிறகு நான் நிற்க முடிந்தது. எனினும், வலது முழங்காலும், பாதமும் வலுவின்றி இருந்ததால் நான் நொண்டி நொண்டி நடக்க வேண்டியிருந்தது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காகத் தோல் திசுக்களைச் சுரண்டி எடுத்ததால், எனது இடது தொடையில் ஏற்பட்ட புண் முழுவதும் ஆறவில்லை. இருந்தாலும், என்னால் சமாளிக்க முடிந்தது.

என்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் திண்டுக்கல்லில் எனது இயேசு சபை இல்லத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று சொன்னேன். அதுதான் எனக்குரியது; எனது இல்லம். குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ‘அதற்குள் என்ன அவசரம்? முதலில் நல்லா குணமாகட்டும், பிறகு பார்க்கலாம்என்றார்கள். ஆனால், என்னால் வாளாவிருக்க முடியவில்லை. என்னுள் ஓர் உந்து சக்தி என்னை முன்னோக்கித் தள்ளியது; என் காதுகளில் உச்சரித்தது...

(தொடரும்)

Comment