தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் – 35
மறவ நாட்டில் மறைப்பணி
முக்குலத்தோரில் ஒரு பிரிவான மறவர்கள் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்களது தலைமையில் 17 - ஆம் நூற்றாண்டு முதல் இந்நிலம் ஆளப்பட்டு வந்ததால் ‘மறவ நாடு’ என்று பொதுவாக அடையாளப்படுத்தப்படுகிறது. இராமநாடு ஆவணக் குறிப்பின்படி மறவ நாட்டின் முதல் சேதுபதி (குறுநில மன்னன்) சடையக்க தேவர் உடையான் 1605 முதல் 1621 வரை ஆட்சி செய்தார். இவரது மூத்த மகன் கூட்டன் சேதுபதி 1622-1635 வரை மறவ நாட்டை ஆண்டார். இவருக்குப் பிள்ளைகள் இல்லாததால் இவரின் தம்பி தளவாய் சேதுபதி என்ற 2 -ஆம் சடையக்கத் தேவர் 1635 முதல் 1646 வரை ஆட்சி செலுத்தினார். மேலும், தனக்குப் பிறகு தனது சகோதரி காத்தாலி நாச்சியாரின் மகன் இரகுநாத தேவனை தனது வாரிசாக அறிவித்தார். இதனால் காளையார் கோவில் பாளையத்தை ஆண்ட தளவாயின் தம்பி, தம்பித்தேவர் வெகுண்டெழுந்து மதுரை நாயக்கர் படையுடன் சென்று இராமநாதபுரத்தைக் கைப்பற்ற, சேதுபதி தளவாய் தப்பித்து, பாம்பன் தீவில் தஞ்சம் புகுந்தார். இதனால் மதுரை இரங்கன நாயக்கர் மற்றும் இராமையா பாம்பன் தீவை நோக்கி ஒரு கட்டுமரப் பாலத்தை எழுப்பி வீரர்களை அனுப்பினர். சேதுபதிக்கு உதவிக்கு வந்த 5 போர்த்துக்கீசியக் கப்பற் படைகள் மற்றும் சேதுபதியின் படைகளை வீழ்த்தி, அவரை மதுரை சிறையில் அடைத்தனர்.
பெருமாள் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருமலைநாயக்கர் தளவாய் சேதுபதியை விடுதலை செய்தார். ஆனால், தம்பித்தேவன் மீண்டும் போர் தொடுத்து 1646 - இல் தன் அண்ணன் சேதுபதி தளவாயைக் கொலை செய்தான். இந்நிகழ்விற்குப் பிறகு மன்னர் திருமலை நாயக்கர் மறவ நாட்டைப் பிரித்து இராமநாதபுரத்தைத் திருமலை இரகுநாத தேவருக்கும், சிவகங்கையைத் தம்பித் தேவருக்கும், திருவாடானையை இரகுநாததேவரின் தம்பிமார்கள் தனகத் தேவருக்கும், நாராயணத் தேவருக்கும் அளித்து ஆட்சி புரியச் செய்தார். குறுகிய காலத்திலே தம்பித்தேவர் இறந்துவிட, தனகத் தேவர் சிவகங்கைச் சீமையின் பாளையக்காரராக 1672 வரை மதுரை நாயக்கர் கீழ் இல்லாமல் தந்திரமாக ஆட்சி செய்தான். இவன் காலத்தில் கிறிஸ்தவர் சொல்லொண்ணா துன்பத்திற்குள்ளாகினர்.
மறவ நாட்டின் கடற்புரங்களில் போர்த்துக்கீசியர் ஆட்சி செலுத்தத் துவங்கிய 1540 முதல் நற்செய்திப்பணி நடைபெற்றாலும், நாட்டுப்புறங்களில் 17 - ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் ஆரம்பித்தது. 1640-இல் தந்தை பல்தசார் தெ கோஸ்தா போர்த்துக்கீசியப் படைகளுக்கு ஆன்மிகப் பணி ஆற்ற இராமேஸ்வரம் அனுப்பப்பட்டார். 1663 -இல் தந்தை அந்தோனி புரோவென்சா மறவ நாட்டில் முதன் முறையாக 252 பேருக்குத் திருமுழுக்களித்தார். அவர்களில் ஒருவர் இந்து சந்நியாசி, முடியப்பன் எனத் திருமுழுக்குப் பெற்று, மிகுந்த வாஞ்சையுடன் மறைப்பணி ஆற்றினார். அவரின் சொத்துகள் எல்லாம் பறிக்கப்பட்டன. ஆனால், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், இயேசுவைப் பற்றி மட்டும் அறிவிப்பதிலே பேரார்வம் கொண்டார். இவர் தனது சகோதரர் அருளப்பன் துணையுடன் சவத்தூரில் ஓர் ஆலயமும், குருக்கள் இல்லமும் எழுப்பினார். சேதுபதி படைவீரர் ஒருவரும் கிறிஸ்தவத்தில் இணைந்து, அளப்பரிய பணி செய்தார்.
மறவ நாட்டில் மறைப்பணி ஆற்ற தடையும், தண்டனையும் இருந்ததால், மறவ நாட்டுக் கிறிஸ்தவர்கள் ஆன்மிகக் காரியங்கள் பெற காந்தலூருக்கும், பின்னாள்களில் முள்ளிப்பாடிக்கும் சென்று வந்தனர்.
இவ்வாறு மறவ நாட்டில் வட எல்லையான கரையாம்பட்டியில் பணியாற்றிய புனித அருளானந்தரை 1679-80 ஆகிய ஆண்டுகளில் சந்தித்தனர். 1682-இல் கூவத்தூரில் புனித அருளானந்தர் நிகழ்த்திய பாஸ்கு திருப்பலியில் பங்கேற்றுத் தங்களது மறவ நாட்டிற்கு மறைப்பணி ஆற்ற அழைப்பு விடுத்தனர்.
(தொடரும்)
Comment