தெய்வீகத் தடங்கள் – 7
வலி நீக்கியாக இறைவன்
“நீ உன் காலணிகளை அணிந்து கொள்; உனக்கு அளிக்கப்பட்ட பணிக்காக எழ வேண்டிய காலம் வந்து விட்டது. உன்னைப் படைத்தவரால் உனக்கு அருளப்பட்ட இரண்டாம் வாழ்க்கையை நீ ஏற்க வேண்டும். உன் அருள்பணியில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடு. இந்த விபத்து ஒரு தடைக்கல் இல்லை; இருக்கவே இருக்காது. உன் உயிர் யாருக்கு உரியதோ, அவரில் நம்பிக்கையுடன் உன்னைக் கீழே இழுக்கும் எதிர்மறைகளுக்கு மேலே எழுந்து பற. உனது உள ஆற்றல், உறுதி, தன்னம்பிக்கை ஆகியவற்றில் நங்கூரம் இடு; ஏனெனில், அவர் உன்னை வானத்திற்கு உயர்த்துவார். புதியன படைக்கும் மனத்துணிவை, வாய்ப்பை அறிந்து, அதைப் பிடிக்கவும், வருங்காலத்தினை உருவாக்கவும் உன்னுள் இருக்கும் ஆன்மிக ஆற்றலை உறுதிசெய்.
கல்வி கற்றலை அர்ப்பணிப்புடன் மேற்கொள்; உன் கற்பனையையும், துணிவையும், புதியன காணும் ஆற்றலையும் பயன்படுத்து. எந்த வலியும், எந்தப் பகையும் உன் பயணத்தை நிறுத்த முடியாது.…எடுத்துக் கொள், எழுந்து கொள். உனது உலகைத் துணிவுடன் எதிர்கொள். உனக்குத் தரப்பட்ட அருள்பணியை அணைத்துக் கொள்!”
அந்தக் கணத்தில் என் ஆன்மா கடவுளின் பிரசன்னத்தோடு ஒன்றியிருந்தது; திண்டுக்கல் இயேசு சபை இல்லத்திற்குத் திரும்ப வேண்டும் என்பது கடவுளின் திருவுளம். என்னுடைய குடும்பத்தாரிடம், “உங்கள் இதயங்களில் கவலை கொள்ளாதீர்கள். சாவின் கொடு வாயிலிருந்து என்னை மீட்ட அவர் என்னுடன் இருக்கிறார்; நான் நலமுடன் இருப்பேன்” என்று சொல்லித் தேற்றினேன்.
நான் திண்டுக்கல் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. என்னுடைய அண்ணன் என்னைத் திண்டுக்கல்லுக்குக் கூட்டி வந்தார். நான் வாழ்க்கையின் நிகழ்வுநிலை பற்றி ஆழமாக அறிந்துகொள்ளும் என் இல்லத்துக்குத் திரும்புவதில் எனக்குப் பேரார்வம்.
வலி நம் அனைவரையும் தாக்கும். இவ்வாழ்க்கையில் துன்புறுதல் தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் வலியால் வேதனை அடையும்போது நேர்மறையான உணர்வோடு திரும்பி வரவேண்டும் என்றிருப்பவருக்கு அது ஒரு பெரும் அறைகூவல். என் மனம் ஐயங்களால், எரிச்சலால், கேள்விகளால் நிறைந்திருந்தது. ‘எனக்கு ஏன் இப்படி? எத்தனை நாள்கள், மாதங்கள் நான் துன்பப்பட வேண்டும்? கடவுளே நீர் எங்கிருக்கிறீர்? இதிலிருந்து வெளியில் வரவே முடியாதா?’
எனது நிலைமை நம்பிக்கை இல்லா ஒன்று. என்னுடைய நம்பிக்கை கடவுளின் பிரசன்னத்தை உறுதியாக ஏற்கும்போதும் தாங்க முடியாத வலி அதைத் தவறென்று எண்பிக்கிறது. திருவிவிலியத்தின் திருநூல்கள் (குறிப்பாக யோபுவின் நூல்) எனக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. யோபுவோடு என்னை நான் தொடர்புகொள்ளத் தொடங்கினேன். எனது நிலையை அவரது துயரச் சொற்கள் எதிரொலித்தன. ‘கடவுள்..என் வலியிலும் என்னை வழிநடத்துகிறார்’ என்பதை நான் அடிக்கடிச் சொல்லி நினைவுபடுத்திக் கொள்வேன். ஆறுதலுக்கு இறைவார்த்தையிடம் போவேன்.
சோதனைகள் வரும்போது கடவுளோடு நமக்கு உள்ள தொடர்பு ஒன்றே போதுமா? நமது துன்பத்தின் மத்தியில் அவரை நம்புவோமா? இது பற்றி யோபுவின் வார்த்தைகளே ஓரளவு ஞானத்தைத் தருகின்றன. மேலும், யோபுவின் நூல் நமது இருண்ட நாள்களில் நமது வாழ்வில் கடவுளின் கால்தடங்களை உறுதி செய்கின்றது. “எங்கள் வேதனையில் நாங்கள் எங்கே இருக்கிறோம்? நமது சூழல்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், நாம் நம்மைப் படைத்தவர் மேல் நம்பிக்கை வைக்கிறோமா?” என்று கேள்வி கேட்க நம்மைத் தூண்டுகிறது. நான் வாழ்க்கையின் நிகழ்வுநிலையின் வரைபடத்தை (யோபு 1-42) ஆழமான தளங்களில் புரிந்துகொள்ளத் தொடங்கினேன்.
யோபுவின் திருநூல் பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும். முதல் பகுதியில், யோபு கடவுளின் அளவுகடந்த ஆசீரைப் பெற்று வந்தார். (யோபு 1-2).
இரண்டாவது பகுதியில், யோபு தன் செல்வத்தையும், பிள்ளைகளையும் இழக்கிறார். அவர் உடல் சார்ந்த, மனவெழுச்சி சார்ந்த, உள்ளம் சார்ந்த, உறவுகள் சார்ந்த, சமூகம் சார்ந்த அனைத்திலும் உடைந்து போகும் காலத்தைச் சந்திக்கிறார். “ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்? இறுதிவரை மறந்து விடுவீரோ? இன்னும் எத்தனை நாள் உம் முகத்தை எனக்கு மறைப்பீர்? எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்?” (திபா 13:1-2) என்ற திருப்பாடல் வரிகள் யோபுவின் நிலையைக் காட்டுகின்றன. இந்தக் காலகட்டத்தில், அவரது கண்ணோட்டங்கள், அவரது ஞானம், உலகம் பற்றிய அவரது நோக்கு, அவரது பார்வை அனைத்தும் கடவுளின் அருளால் தூய்மை அடைகின்றன (யோபு 3-41).
மூன்றாம் பகுதியில், அவர் இழந்த ஆசீர்களைத் திரும்பப் பெறுகிறார். மேலும், அவர் தனது இருண்ட நாள்களில் ஆழம் காண முடியாத கடவுளின் ஆற்றலுடனும், மகிமையுடனும் பயணம் செய்தோம் என்பதை அவர் உணர்கிறார். கடவுள்பால் அவர் கொண்டிருந்த நம்பிக்கை இன்னும் ஆழப்படுகிறது. “உம்மைப் பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்; ஆனால், இப்போது என் கண்களே உம்மைக் காண்கின்றன. ஆகையால் என்னையே நொந்து கொள்கிறேன்; புழுதியிலும், சாம்பலிலுமிருந்து மனம் வருந்துகிறேன்” (யோபு 42:5-6) என்று அறிக்கை இடுகிறார்.
யோபு தனது பயனற்ற வாதங்களைத் திரும்பப் பெற்றுக் கடவுளின் திட்டம் அவருக்கு நம்பிக்கையையும், வருங்காலத்தையும் அருள்வதுதான் என்பதை உணர்கிறார். “ஏனெனில், உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைப்பதற்கான திட்டங்கள் அல்ல” என்று ஆண்டவர் அறிவிக்கிறார் (எரேமியா 29:11).
(தொடரும்)
Comment