இறைவேண்டலின் பரிமாணங்கள் – 17
உணர்வு மேலாண்மை இறைவேண்டல்!
கடவுள் மனிதரைப் படைத்தபோதே, நம்மை உணர்வுகள் நிறைந்தவராகவே படைத்திருக்கிறார். உணர்வுகளற்ற ஒரு மனிதர் ‘சொரணையற்ற ஜடம்’ என்று அழைக்கப்படுகிறார். உணர்வுகளே நம் வாழ்வை நிறைவுள்ளதாக மாற்றுகின்றன. உறவு, பணி, நிர்வாகம் போன்ற மனித வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் உணர்வுகள் பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இத்தளங்களின் இலக்குகள் முழுமையாக நிறைவடையும்.
அதுபோலவே, இறைவேண்டலிலும் உணர்வுகள் இணைக்கப்பட வேண்டும். உணர்வுகளை நாம் நேர்மறை உணர்வுகள், எதிர்மறை உணர்வுகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றோம். மகிழ்ச்சி, ஆர்வம், ஆர்ப்பரிப்பு, உற்சாகம், ஊக்கம் போன்றவை நேர்மறை உணர்வுகள். இந்த உணர்வுகளைக் கொண்டு நாம் ஆண்டவரைப் போற்ற வேண்டும். அது சற்று எளிதானதுதான். ஆனால், அச்சம், கவலை, துயரம், கோபம், அவமானம், ஏக்கம் போன்ற எதிர்மறை உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும்போது அவை நம் மகிழ்ச்சியைக் குலைக்கின்றன. எனவே, எதிர்மறை உணர்வுகளை நாம் மேலாண்மை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.
வியப்புக்குரிய விதத்தில் திருவிவிலியமும் நம்மை உணர்வு மேலாண்மை செய்ய அழைக்கிறது. “தம் நாவைக் காத்துக்கொள்பவரே அறிவாளி; தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்பவரே மெய்யறிவாளர்” (நீமொ 17:27) என்றும், “கீழான உணர்வுகளின்படி நடவாதே; சிற்றின்ப உணர்வுகளைக் கட்டுப்படுத்து” (சீஞா 18:30) என்றும் நமக்கு அறிவுரை பகர்கிறது இறைவார்த்தை. அது மட்டுமல்ல, நாம் அச்சம், கவலை, கோபம், துயரம், அவமானம், ஏக்கம் போன்ற பேரெதிர் உணர்வுகளால் ஆட்கொள்ளப்படும்பொழுது நமது பணிகள், உறவுகள் போன்றவற்றோடு, நமது இறைவேண்டலும் பாதிக்கப்படும். இத்தகைய சூழல்களில் இறைவேண்டல் செய்ய இயலாது அல்லது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால், திருவிவிலியத்தைக் கூர்ந்து நோக்கும்போது, எதிர்மறை உணர்வுகளின்போதும் நாம் இறைவேண்டல் செய்யலாம் என்று அறிகிறோம். அதுவே ஒரு நற்செய்திதானே!
திருவிவிலியம் காட்டும் உணர்வு மேலாண்மை மன்றாட்டுகள் சிலவற்றைக் காண்போம்:
1. அச்சம்: “அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில், உம்மையே நான் நம்பியிருப்பேன்” (திபா 56:3) என்னும் மன்றாட்டு நம் நம்பிக்கையை ஆழப்படுத்தி, அச்சத்தைக் குறைக்கும். “சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே, அஞ்சாதிருங்கள்” (மத் 10:31) என்னும் இயேசுவின் சொற்கள் நமக்கு விடுதலை தரும்.
2. கவலை: “என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது” (திபா 94:19) என்னும் இறையடியாரின் அனுபவம் நமக்கு ஆறுதல் தரும். “நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில், நாளையக் கவலையைப் போக்க, நாளை வழி பிறக்கும்” (மத் 6:34) என்னும் இயேசுவின் வாக்கு நம் கவலையைக் குறைக்கும்.
3. துயரம்: “ஆண்டவரே, எனக்கு இரங்கும்; ஏனெனில், நான் இக்கட்டான நிலையில் உள்ளேன்; துயரத்தால் என் கண்ணும் என் உயிரும் என் உடலும் தளர்ந்து போயின” (திபா 31:9) என்பது துயர மேலாண்மைக்கான ஒரு மன்றாட்டு. “நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” (யோவா 16:20) என்னும் இயேசுவின் வாக்குறுதி நிச்சயம் நம் துயரத்தைக் குறைக்கும்.
4. கோபம்: “தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்” (மத் 5:22) என்னும் இயேசுவின் இறைமொழி நம் கோபத்தைத் தணிக்கும். “சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்” (எபே 4:26) என்பது மிகச் சிறந்த சின மேலாண்மைப் பரிந்துரை.
5. அவமானம்: மேலாண்மை செய்வதற்குக் கடினமான ஓர் உணர்வு அவமானம். நம்முடைய தவறுகளாலோ அல்லது பிறரின் அவச்சொற்களாலோ நாம் அவமானம் அடைந்து, மன உளைச்சலுக்குள்ளாகிறோம். அத்தகைய நேரங்களில் “அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை” (திபா 34:5) என்னும் இறைமொழி நம்மை ஆற்றுப்படுத்தும். “அவமானத்திற்குப் பதிலாக நீங்கள் இருபங்கு நன்மை அடைவீர்கள்; அவமதிப்புக்குப் பதிலாக உங்கள் உடைமையில் மகிழ்வீர்கள்” (எசா 61:7) என்னும் இறைமொழி நமக்கு எதிர்நோக்கைத் தரும்.
6. ஏக்கம்: எதிர்மறை உணர்வுகளில் சிக்கலான ஒன்று இது. பதவி, செல்வம், வெற்றி, இன்பம், மனித உறவு போன்றவற்றுக்காக நம்மில் தீராத ஏக்கம் பிறக்கும்போது, “மண்ணுலகில் வேறு விருப்பம் உம்மையன்றி எனக்கேதுமில்லை” (திபா 73:25) என்னும் மன்றாட்டு நமக்கு உதவும். “கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல, என் உடல் உமக்காக ஏங்குகின்றது” (திபா 63:1) என்னும் தாவீதின் மன்றாட்டு நம் ஏக்கத்தை இறைவன் பக்கம் திருப்பி, அமைதியைத் தரும்.
உணர்வுகள் நமக்கு நன்மையும் தீமையும் செய்கின்றன. உணர்வுகளை உய்த்துணர்ந்து, ஞானத்துடன் கையாண்டு, இலக்குகளை அடைவதே வெற்றி. உணர்வுகளை மேலாண்மை செய்யவும், இறைவேண்டலில் இணைத்துக்கொள்ளவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
(தொடரும்)
Comment