இறைவேண்டலின் பரிமாணங்கள் –21
ஆழ்நிலைத் தியான வேண்டல்
- Author அருள்முனைவர் குமார் ராஜா --
- Friday, 27 Sep, 2024
இறைவேண்டலில் பல வகைகள், பல கூறுகள், பல வடிவங்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். எங்கே ஒன்றுக்கு மேற்பட்டவை இருக்கின்றனவோ, அங்கே ஒரு படிமுறை (hierarchy) வந்துவிடுகிறது என்பதையும் நாம் அறிய வேண்டும். எனவே, இறைவேண்டலின் வகைகள், கூறுகள், வடிவங்களுக்குள்ளும் ஒரு படிமுறை உள்ளது. ஒரு கூறு, ஒரு வடிவம் மற்றொன்றைவிட மேலானது, சிறந்தது என்பதே அப்படிமுறை.
சில வேளைகளில் வாய்விட்டு மன்றாடுவதை விட, அமைதியில் மன்றாடுவது உயர்ந்தது. அமைதி இறைவேண்டலை விட மேலான ஒன்றுதான் தியான வேண்டல் (meditation). தியான வேண்டலைவிட உயர்ந்ததே ஆழ்நிலைத் தியான வேண்டல் (meditation) என்று நம் திரு அவை கற்பிக்கிறது.
கீழை நாடுகளின் யோகா, பதஞ்சலி போன்ற தியான மரபுகளிலிருந்து பெரிதும் மாறுபடுகிறது கிறிஸ்தவத் தியானமும், ஆழ்நிலைத் தியானமும். யோகா, தியானம் முதலியன மூச்சுப் பயிற்சியின் வழியாக வலிமை, நெகிழும் தன்மைக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றன. கிறிஸ்தவத் தியானம் இறைவார்த்தை, இறைவனைப் பற்றிய சிந்தனைகளுக்கு முதன்மை தருகின்றது. மன அமைதி, ஆன்மிகப் புத்துணர்ச்சி ஆகியன யோகாவின் நோக்கங்கள். ஆனால், கிறிஸ்தவத் தியானம் இறைவனோடு உறவில் நெருக்கமடைவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. உடல் மற்றும் மனப்பயிற்சி என்னும் அளவில் யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகியவற்றை நாம் செய்யலாம். ஆனால், இறைவேண்டல் என்னும் பார்வையில் அவை உதவுவதில்லை.
கிறிஸ்தவத் தியானம் பற்றிய திரு அவையின் போதனையைக் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி மிக விரிவாகப் பேசுகிறது. கிறிஸ்தவ மரபின்படி இறைவேண்டல் சொல்லால் வேண்டல், தியானம், ஆழ்நிலைத் தியானம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம் (கதிம 2721).
இவற்றில் அடிப்படை அலகான சொற்களைப் பயன்படுத்தி இறைவேண்டல் செய்யும்போது, நம் ஆளுமையின் உடல், ஆன்மா இரண்டும் இணைகின்றன. இயேசுவே தாம் இறைவேண்டல் செய்தபோதும், தம் சீடருக்குக் கற்றுத் தந்தபோதும், சொற்களைப் பயன்படுத்தினார் (கதிம 2722).
இதன் அடுத்த கட்டமாகத் தியான இறைவேண்டல் வருகிறது. எண்ணங்கள், கற்பனை, ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டு இறைவனைத் தேடுவதே தியானம் (கதிம 2723). இவை வழியாக இறைவனோடு நாம் நெருக்கம் கொள்ளவேண்டும். இயேசுவின் வாழ்வின் மறையுண்மைகளை நாம் தியானிக்க வேண்டும். உண்மையில், செபமாலை, இறைமொழித் தியானம் (Lectio Divina) ஆகியன இறைநெருக்கத்தை நோக்கியே நம்மை இட்டுச் செல்ல வேண்டும் என்கிறது மறைக்கல்வி (கதிம 2708).
தியானத்தின் அடுத்த படியே ஆழ்நிலைத் தியானம். இறைநம்பிக்கையின் அடிப்படையில் இயேசுவை உற்றுநோக்குதல், இறைவார்த்தைக்கு ஆழ்ந்து செவிமடுத்தல், அமைதியில் அன்பு ஆகியவையே ஆழ்நிலைத் தியானம் என்கிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (கதிம 2724).
திருப்பாடல்கள் நூல் திருவிவிலியத்தின் இறைவேண்டல் ஏடு என்பதால், அங்கே இறைவேண்டலின் பல வடிவங்களும் காட்சி தருகின்றன. தியானம், ஆழ்நிலைத் தியானம் இரண்டு பற்றியும் பல திருப்பாடல்கள் பேசுகின்றன. “உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்! உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந் திப்பேன்” (திபா 77:12) என்பது ஓர் எடுத்துக்காட்டு.
கிறிஸ்தவத் தியானத்தின் நடுவமாக இறைவார்த்தையும், இறைவனும், இறைவனின் வல்ல செயல்களும் விளங்குகின்றன. ‘இறைவார்த்தையைத் தியானிப்பவர் நற்பேறு பெற்றவர்’ என்று முதல் திருப்பாடலால் அழைக்கப்படுகிறார். ‘அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்’ (திபா 1:2) என்கிறது இத்திருப்பாடல். ‘நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இராவிழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்’ (திபா 63:6) என்னும் தாவீதின் வரிகள் இறை மையத் தியானத்திற்கோர் எடுத்துக்காட்டு. ‘உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன். உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன்’ (திபா 77:12) என்பது இறைவனின் வல்ல செயல்களை மையப்படுத்திய தியானம்.
திருவிவிலிய வழியில் தியான இறைவேண்டலில் ஈடுபட்டனர் பல புனிதர்கள். அவர்களில் புனித பிரான்சிஸ் சலேசியார் (பக்திநிறை வாழ்வு), புனித இலொயோலா இஞ்ஞாசியார் (ஆன்மிகப் பயிற்சிகள்) இருவரின் எழுத்துகளும் தியான வேண்டலுக்கு மிகவும் உதவுகின்றன. புனித சிலுவை யோவான் (ஆன்மாவின் இருண்ட இரவு), புனித அவிலா தெரசா (உள்புறக் கோட்டை) இருவரின் படைப்புகளும் ஆழ்நிலைத் தியானத்திற்கு வழிகாட்டுகின்றன.
“நண்பர்களுக்கிடையிலான நெருங்கிய பகிர்வே ஆழ்நிலைத் தியானம்” என்கிறார் புனித அவிலா தெரசா. இறைவனோடு அதிக நேரம் செலவழிக்க ஆர்வமாயிருத்தல், அவரோடு தனித்திருத்தல், அவருக்காக ஏங்குதல் ஆகியன இத்தியானத்தின் கூறுகள். சில நேரங்களில் செபிக்க ஆர்வமின்றி இருந்தாலும்கூட, நேரம் ஒதுக்குவதே போதுமானது. ஒரு குழந்தைபோல நம்மையே இறைவனிடம் ஒப்படைத்தால் போதும்; அதுவே ஆழ்நிலைத் தியானம் என்று விளக்குகிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி.
தியானத்தில் சொற்கள், சிந்தனை, கற்பனை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இவை அனைத்தையும் கடந்த அமைதியே ஆழ்நிலைத் தியானம். நம் இறைவேண்டலில் இவையும் இடம்பெறட்டும்.
(தொடரும்)
Comment