No icon

செபமாலையின் வரலாறு

செபம் செய்வோம், தினம் செபமாலை சொல்வோம், பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம், உலகை உய்வுறச் செய்வோம்!’

கி.பி. 4 -ஆம் நூற்றாண்டில் பாலைநிலத்தில், தங்களுடைய வாழ்க்கையைத் தியானத்திலும், செபத்திலும் ஊன்றியிருந்த துறவிகளே முதன் முதலில் செபமாலை பக்திக்கு அடிக்கோடிட்டவர்கள். இறை அன்னையின்மீது கொண்ட பக்தியின் பிரதிபலிப்பே செபமாலையாக உருவெடுத்தது. அவர்கள் உருவாக்கிய செபமாலை பக்தி, தற்போது உள்ள செபமாலையின் பக்தியைப் போன்று அல்லாமல், முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவர்களுடைய செபமாலையில் 500 மணிகள் கூட இருந்ததாகச் செய்திகள் உள்ளன. இப்பொழுதும் கூட 1000 மணிகள் கொண்ட செபமாலை இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். 13 -ஆம் நூற்றாண்டில் நமது இறை அன்னை, புனித தோமினிக் அவர்களுக்குச் செபமாலையைக் கொடுத்து, அதனுடைய பக்தியைப் பரப்பச் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகத் திரு அவையின் பாரம்பரியமும், செவிவழிச் செய்திகளும் உள்ளன. காலப்போக்கில் 500 மணி செபமாலை மறைந்து 150 திருப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, 150 மணிகள் கொண்ட செபமாலையாக உருவெடுத்தது.

14-ஆம் நூற்றாண்டில் இறை இயேசுவை அல்லது இறை அன்னை மரியாவைக் குறிக்கும் வசனங்கள், அதாவது மறையுண்மைகள், திருப்பாடல்களில் முதலிலோ அல்லது முடிவிலோ இணைத்துச் சொல்லப்பட்டன. நாளடைவில் திருப்பாடல்கள் கைவிடப்பட்டு, இறை அன்னை மரியா அல்லது இறை இயேசுவைக் குறிக்கும் வசனங்கள் அதாவது மறையுண்மைகள் மட்டும் சொல்லிச் செபிக்கப்பட்டது. பின்னர் 1480-ஆம் ஆண்டு ஒவ்வொரு மறையுண்மை என்ற பழக்கம் மறைந்து, ஒவ்வொரு 10 மணிக்கும் ஒரு மறையுண்மை என்ற வழக்கம் உருவாகியது.

16 -ஆம் நூற்றாண்டில்அர்ச்சிஷ்ட மரியாயேசெபமும், தமத்திருத்துவ இறைப்புகழ்ச்சியும் செபமாலையோடு சேர்க்கப்பட்டன. 1917 -ஆம் ஆண்டு பாத்திமாவில் நம் அன்னையாகிய பரிசுத்த நித்திய கன்னி மரியா காட்சி கொடுத்தபோது, சிறுவர்களுக்கு அவர் கற்றுக்கொடுத்த எங்கள் இயேசுவே!’ என்ற செபமும் செபமாலையோடு இணைக்கப்பட்டது. அடுத்து மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் 2002, அக்டோபர் முதல் 2003 வரை உள்ள காலத்தைச் செபமாலையின் ஆண்டாக அறிவித்துஒளியின் மறையுண்மைகள்என்ற 4 -ஆம் தலைப்பில் மேலும் ஐந்து மறையுண்மைகளைத் தந்து, சிறப்பித்து, செபமாலை பக்தியைப் பெருக்கி, இறைவனின் மீட்பின் செயலை முறையாகத் தியானித்து மீட்பின் பலனைத் தினமும் பெற்று வாழ உதவியுள்ளார். இவ்வாறு பல கட்டங்களில் செபமாலை பக்தியானது வளர்ச்சி பெற்றது.

 

Comment