கண்டனையோ, கேட்டனையோ!
இறைக் கவிதைகள்
- Author ஜார்ஜி --
- Friday, 04 Oct, 2024
திருவிவிலியத்தில் 73 நூல்களும், 35,526 இறைவார்த்தைகளும் (verses) உள்ளன. எல்லாமே முக்கியமானவை. கடவுளால் தூண்டப்பட்டச் சொற்கள். இருந்தாலும், ஒவ்வொருவருக்கும், பிடித்த திருவிவிலிய நூல், விருப்பச் சொற்றொடர்கள் எனச் சில இருக்கும். செல்லங்கள்!
போப் பிரான்சிஸ் ‘ரூத்’ நூலைப் பற்றி அடிக்கடி ஆசையோடு பேசுவதைக் கேட்க முடிகிறது. ஜோசப் ராட்சிங்கருக்குப் பிடித்த திருவிவிலிய நூல் யோவான் நற்செய்தி. அவருடைய பிரபலமான ‘Jesus of Nazareth’ புத்தகம், யோவானின் கிறிஸ்தியலை அடிப்படையாகக் கொண்டது. ஆபிரகாம் லிங்கனின் விருப்பநூல் திருப்பாடல்கள். உள் நாட்டுப் போரின் பல சோர்வான தருணங்களில், அவர் “ஆண்டவர் என் ஆயர்” என்ற 23-ஆம் திருப்பாடலை வேண்டுவாராம். கறுப்பின அமெரிக்கர்களின் விடுதலைக்காகப் போராடிய பாப்டிஸ்ட் திரு அவை அருள்பணியாளர் மார்ட்டின் லூதர் கிங்கிற்குப் பிடித்தது இறைவாக்கினர் ஆமோஸ் நூல். “நீதி தண்ணீரைப்போல் வழிந்தோடட்டும்! நேர்மை வற்றாத நீரோடைபோல் பாய்ந்தோடட்டும்!” (ஆமோஸ் 5: 24) என்பது அவர் அடிக்கடி மேற்கோள் காட்டிய இறைவார்த்தை. இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு யூதர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். எனினும், அவர் ‘சபை உரையாளர்’ நூலை விரும்பி வாசித்தார். வாழ்வின் அர்த்தம், நேரம் குறித்த சபை உரையாளரின் கூற்றுகள் ஐன்ஸ்டைனை ஆர்வப்படுத்தின என்று சொல்கிறார்கள்.
இந்த விசயத்தில் நான் லிங்கன் கட்சி. எனக்குப் பிடித்த திருவிவிலிய நூல் திருப்பாடல்களே.
திருப்பாடல்கள் மிக அழகாக எழுதப்பட்ட இறைக் கவிதைகள். மூலமொழி எபிரேயம். சந்தம், மீட்டர் போன்ற நுட்பங்கள் அடிபட்டாலும், மொழி பெயர்ப்பில் திருப்பாடல்கள் அவற்றின் கவிதைத் தன்மையை இழக்காதது தனிச்சிறப்பு. “விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கிறது” (திபா 130: 6) போன்ற கண்முன் விரியும் காட்சி உவமைகளும், “ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கிறது” போன்ற இரகசிய உருவகங்களும், “எகிப்தினின்று திராட்சைச் செடி ஒன்றைக் கொண்டு வந்தீர்” போன்ற உருவகக் கதைகளும், “மண்ணுலகம் அப்போது அசைந்து அதிர்ந்தது; மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன” போன்ற மிகை மொழிகளும், இடையிடையே உலவும் லிவியத்தான் போன்ற மர்ம விலங்குகளும் சேர்ந்து, திருப்பாடல்கள் வாசிப்பை ஒரு மகா இலக்கிய அனுபவம் ஆக்குகின்றன.
திருப்பாடலின் மற்றொரு சிறப்பு - அதன் உள்ளடக்கத்தில் உள்ள நேர்மை. ஆசிரியரின் பாசாங்கற்ற பேச்சு. கடவுளோடு நிகழ்த்தும் இந்தப் பாடல்-உரையாடல்களில், திருப்பாடல் ஆசிரியர் எதையும் மறைப்பதில்லை.
இறைவேண்டல் என்றால் என்ன? கடவுளுக்கு நம் உள்ளத்தை உயர்த்துவது. அப்படித்தானே? ஆனால், நம் மன்றாட்டுகளைக் கவனித்துப் பாருங்கள். உண்மையில் அங்கே நாம் உள்ளத்தைக் கடவுளிடம் உயர்த்துகிறோமா? இல்லை, ஒரு பெரிய அளவு தார்ப்பாய் போட்டு மறைக்கத்தான் முயற்சி செய்கிறோம். நம் இறைவேண்டல், ஏதோ ஓர் உயர் அதிகாரியோடு நாம் பேசும் அலுவலக உரையாடல் போல இருக்கிறது. ரொம்ப நாடகீயமாக, பார்த்துப் பார்த்துச் சொற்களைத் தேர்ந்தெடுத்து, அரசியல் சரிகளைக் கடைப்பிடித்து.... இது என்ன வேண்டலா? இல்லை, கட்டுரைப் போட்டியா? பிழையில்லாமல் செபம் சொல்பவர்க்குக் கடவுள் ஏதும் பரிசு கொடுப்பதாக அறிவித்திருக்கிறாரா? ‘நம் வாயில் சொல் உருவாகும் முன்பே அவற்றை அறிந்திருக்கிற...’ (திபா 139:4) கடவுளிடம், நாம் ஏன் டி.வி. நிகழ்ச்சிகளில் வைரமுத்து போல இலக்கணச் சுத்தமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்? யோசிக்க வேண்டும்.
திருப்பாடல் ஆசிரியருக்கு இந்தச் சிக்கல் இல்லை. அவர் தன் மனத்தில் தோன்றும் உணர்வுகளையும், கொந்தளிப்புகளையும் அப்படியே எந்த விதத் தணிக்கையும் செய்யாமல், கடவுள் முன் வைக்கிறார், சிரிக்கிறார், அழுகிறார், கொந்தளிக்கிறார், வருந்துகிறார், பற்றி எரிகிறார், உருகுகிறார், மருளுகிறார், சண்டையிடுகிறார், சரணடைகிறார். கடவுளிடம் மிக வெளிப்படையாக இருக்கிறார். குறுக்கே எந்தத் திரைச்சீலையும் இல்லை. Refreshingly honest!
சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
கோபம்: “ஆண்டவரே, எனக்குப் பகைவர் பலர் இருப்பதால், உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும். அவர்கள் வாயில் உண்மை இல்லை; அவர்கள் உள்ளம் அழிவை உண்டாக்கும்; அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி; அவர்கள் நா வஞ்சகம் பேசும். கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய தண்டனையை அவர்களுக்கு அளியும்” (திபா 5: 8-10).
ஏமாற்றம்: “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகுதொலைவில் இருக்கின்றீர்? என் கடவுளே, நான் பகலில் மன்றாடுகின்றேன்; நீர் பதில் அளிப்ப தில்லை, இரவிலும் மன்றாடுகின்றேன்; எனக்கு அமைதி கிடைப்பதில்லை” (திபா 22:1-2).
புகார்: “உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்? கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்; கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர். எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப் பொருள் ஆக்கினீர்; எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள்” (திபா 80:4-6).
துயரம்: “ஆண்டவரே, எனக்கு இரங்கும்; ஏனெனில், நான் இக்கட்டான நிலையில் உள்ளேன். துயரத்தால் என் கண்ணும், என் உயிரும், என் உடலும் தளர்ந்து போயின. என் வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது; ஆம், என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது; துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது; என் எலும்புகள் தளர்ந்து போகின்றன” (திபா 31:9-10).
குற்ற உணர்ச்சி: “நீர் கடுஞ்சினம் கொண்டதால் என் உடலில் நலமே இல்லை; என் பாவத்தால் என் எலும்புகளில் வலுவே இல்லை. என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன; தாங்கவொண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன. என் புண்கள் அழுகி நாற்றமெடுக்கின்றன” (திபா 38:3-5).
கைவிடப்பட்ட நிலை: “என் நண்பர்களும் தோழர்களும் நான் படும் வாதை கண்டு விலகி நிற்கின்றனர்; என் உறவினரும் என்னைவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர்” (திபா 38:11). “என் அன்பரையும் தோழரையும் என்னைவிட்டு அகற்றினீர்; இருளே என் நெருங்கிய நண்பன்” (திபா 88:18).
அச்சம்: “என் எதிரியின் கூச்சலாலும், பொல்லாரின் ஒடுக்குதலாலும் நடுங்குகின்றேன்; ஏனெனில், அவர்கள் எனக்கு இடையூறு பல செய் கின்றனர்; சினமுற்று என்னைப் பகைக்கின்றனர். கடுந்துயரம் என் உள்ளத்தைப் பிளக்கின்றது; சாவின் திகில் என்னைக் கவ்விக்கொண்டது. அச்சமும் நடுக்கமும் என்னை ஆட்கொண்டன; திகில் என்னைக் கவ்விக்கொண்டது” (திபா 55:3-5).
விவாதம்: “இறந்தோருக்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்? கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ? கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா? அழிவின் தலத்தில் உமது உண்மை அறிவிக்கப்படுமா? இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா? மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா? ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்? உமது முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைக்கின்றீர்?” (திபா 88:10-14).
ஆர்வம்: “என் சகோதரருக்கு வேற்று மனிதனானேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது” (திபா 69:8-9).
ஏக்கம்: “பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டிவைத்தோம். ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ‘சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர். ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?” (திபா 137:4).
வியப்பு: “உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும், அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?” (திபா 8:3-4).
நம்பிக்கை: “கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள்” (திபா 126:5-6).
அக்களிப்பு: “உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்” (திபா 98:4-5).
நன்றி: “நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத்துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர். ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்” (திபா 30:11-12).
உற்சாகம்: “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்” (திபா 122:1-2).
சரணடைதல்: “உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர்” (திபா 31:5).
கோபப்படுவதிலும் ஏங்குவதிலும் மகிழ்வதிலும் புலம்புவதிலும், “நீர் செய்வது ஒன்றும் சரியில்லை; ஆமாம், அவ்வளவுதான் சொல்வேன்” (திபா 80:4-6) என்று முறையிடுவதிலும், “நான் இறப்பதால் உங்களுக்கு என்ன பயன்? சொல்லுங்கள். நான் உயிரோடு இருந்தாலாவது உங்களைப் புகழ்ந்து கொண்டிருப்பேன்” (திபா 88:10-14) என்று கடவுளுக்கு ஆசை காட்டுவதிலும், “அந்தக் கையை மடியிலிருந்து எடுத்து, இந்த எதிரிகளை ஒரு போடுபோட்டால்தான் என்ன?” (திபா 74:10-11) என்று இலேசாகக் கிண்டல் செய்வதிலும் தெரிகின்ற திருப்பாடலாசிரியரின் வெளிப்படைத்தன்மை, பாசாங்கற்ற அணுகுமுறை, திருப்பாடல்களை அசல் இறைவேண்டல்கள் ஆக்குகின்றன.
திருப்பாடல்கள் திரு அவையின் முதன்மை இறைவேண்டல் ஏடு.
கடந்த ஜூன் 19-ஆம் நாள் உரோமை பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில், “திருப்பாடல்களைச் சொல்லி மன்றாடும் பழக்கம் கொண்டவன் என்ற தகுதியில் சொல்கிறேன். நீங்கள் திருப்பாடல்களை உங்கள் இறைவேண்டல் ஆக்கினால், உறுதியாக மகிழ்ச்சி அடைவீர்கள்” என்று கூறியுள்ளார்.
திருப்பாடல்கள் ஓர் ஆன்மிகப் பேழை. நான் அண்மைக் காலமாகத் திருப்பாடல்களைத் திரும்பத் திரும்ப வாசிக்கின்றேன். என் எல்லா மறையுரைகளிலும் ஒரு திருப் பாடலை மேற்கோள் காட்டும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளேன்.
உண்மையில் மகிழ்வாக உள்ளது. நீங்களும் செய்யலாமே!
(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)
Comment