No icon

தெய்வீகத் தடங்கள் -13

உணர்வுகளுக்குப் பெயரிடல்?

சொல்லில் சொல்ல

என் வலுவினைத் திரட்டும்போது

கொடூரமான

வலி உணர்வுகள் வாட்ட

இன்னுமிரண்டு

ஒலி உணர்வுகள்

அவற்றை மருத்துவர் ‘குத்துதல்’, ‘குடைதல்’

எனப் பெயரிட்டார்.

வார்த்தைகள் அருக உவமைகள் உதவின!

கடும்பாறைகளை வெட்டும் துளைப்போடும் கருவி

கல்லின் பல அடுக்குகளை நசுக்கி உடைப்பது போல

இருமுனைக் கத்தி ஊடுருவும்போது

மனித உடலின்

இரத்தக் குழாய்களையும் தசைகளையும் அறுப்பது போல

மேற்கை, முழங்கை,

புறங்கை, உள்ளங்கை,

முதுகுத் தண்டு, விரல்கள்

வழியாய்ப் படரும் ஓர் உணர்வு.

தேனெடுக்கத்

தேனடையைப் பிழிவதுபோல

என் ஆழ் உடல் அடுக்குகள் கீழே தள்ளப்பட்டன.

பிறகு உடலின்

சமாளிக்கும் இயக்க நுட்பம் பொறுப்பேற்கிறது

தலை கவிழ்ந்து தாடை நெஞ்சைத் தொடுகிறது

தோள் நரம்புகள்

தசைகள் விறைக்கின்றன.

கழுத்து நரம்புகளும் குழாய்களும் புடைக்கின்றன,

மூச்சு விடுதல் கடினமாகிறது, வியர்வை சுரப்பிகள் திறக்கின்றன,

முகத் தசைகள்

முறுக்கிக் கொள்கின்றன,

விளைவாய் பற்கடிப்பு,

கண் துடிப்பு

மாவாலையில் தானியத்தை அரைப்பதைப் போல அரைக்கின்றன,

உடலின் சமாளிக்கும்

இயக்க நுட்பம்

அதிர்ச்சியைத் தாங்குகிறது,

கண்களில் கண்ணீர்

மடையைத் திறக்கின்றது;

இனி முடியாது என்ற உணர்வு தலையெடுக்கும்

நேரமும் உண்டு,

என் உடலில் உயிர்ச்சத்து உலர்ந்துபோக

என் சக்தி வடிந்துபோகிறது.

கொந்தளிக்கும் தண்ணீரில் நான் தனியாக அலைமோதுகிறேன்.

அப்போது நாளைக்கும்

அதன் பிறகும் நம்பிக்கை விடிவதில்லை

ஓ கடவுளே,

எந்த நிலையில் நான்? ஏன்?

இடையில் ஐயம் என்ற

பகை திடீரென்று புகுகிறது.

முடியுமா? முடியாதா?

என் கை எவ்வளவு

வேலை செய்யும்?

காத்திருத்தல் பயன் தருமா? உடனடி உடல் நலம் சாத்தியமா?

அப்போது மனம் எதிர்பாரா விருந்தாளியாக வருகிறது,

கடவுளிடம் கேள்விகள் பல கேட்கத் தூண்டுகிறது,

அவரை வசை பாடுகிறது, குற்றம் சாட்டுகிறது,

அவரோடு போராடுகிறது,

அவர் இல்லாமையை ஆழ்மனத்தில் உணர

தாங்கமுடியாத சுமை

எனக்கு மட்டும் ஏன்?

என்று கேட்கிறது,

குழம்பிய மனம்

வெறுமைக்குத் தாவுகிறது,

அந்நேரம் ஆன்மா

மனத்தை எச்சரிக்கிறது,

‘அமைதி கொள், அவர் திருவுளத்திற்கு

உன் துன்பத்தை அர்ப்பணி’

என்ற மந்திரத்தை உச்சரிக்கிறது!

எல்லாம் நல்லதே நடக்கும் என்று படைத்தவர் உறுதியளிக்கிறார்,

அவர் சந்நதியில்

உன் உடைந்த

உடலை ஒன்று சேர்,

ஏனென்றால் அவர் அருளிலிருந்து புதிய நம்பிக்கை பிறக்கிறது.

நடக்கும் பாதை

கரடு முரடாய் இருக்காது,

பல மைல்கள் நீ நடக்க வேண்டியிருக்கும்.

பார்! உன் சுமை குறைந்து மகிழ்ச்சியாக மாறும்,

அவர் அருள் என்ற நங்கூரமே உனக்குப் போதும்!

கணினித் திறன்களையும் ஓரளவு வளர்த்துக் கொண்டேன். என்னுடைய பி.எச்டி. ஆய்வேடு ஏறத்தாழ 300 பக்கங்கள். முழுவதையும் ஒரு கையாலேயே தட்டச்சு செய்து முடித்தேன். பல்கலைக்கழக வழிகாட்டுதலின்படியான தேவைகளைத் திட்டமிட்டு நிறைவேற்றினேன். என்னுடைய ஆய்வேட்டை 2018  ஏப்ரல் 30 -ஆம் நாள் ஒப்படைத்தேன். இறுதி முடிவு 2018 ஆகஸ்டு 15 அன்று கிடைத்தது. நேர்முகத் தேர்வு 2018 ஆகஸ்டு 6 அன்று நடைபெற்றது. பட்டமளிப்பு விழா 2018 அக்டோபர் 10 அன்று நடைபெற்றது. அப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் மேதகு எம். வெங்கையா நாயுடு பட்டங்கள் வழங்கினார்.

2014 பிப்ரவரி 21 முதல், 2018 அக்டோபர் 10-க்குள் எனக்கு ஒன்பது அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன. பத்தாவது அறுவை சிகிச்சை 2019 ஏப்ரல் 11 அன்று நடைபெற்றது. ஏற்கெனவே கூறியது போல அது ஒன்பது மணி நேரம் நடந்தது. எனது வலது கையைச் செயல்பெறச் செய்ய மருத்துவர்களின் கடுமையான முயற்சிகள் அவை. அறுவை சிகிச்சைகளிலிருந்து மீள வேண்டும். அப்போது நான் இடைவிடாது என்னைத் துரத்தும் நரம்புநோய் வலியைத் தாங்கிக் கொள்ள ஆக்கப்பூர்வச் செயல்பாடுகள் உதவின. அந்தக் கால கட்டத்தில் எனது வாழ்க்கை சாட்சியத்துக்கான ஓர் அழைப்பு என்று உணர்ந்தேன்.

“நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று ஒருவர் மற்றொருவரைக் கேட்டார்.

அதற்கு அவர், “நரகத்தில் போய்க்கொண்டிருக்கிறேன்” என்று விடையளித்தார்.

உடனே நண்பர், “தொடர்ந்து போய்க்கொண்டிருங்கள். நிற்பதற்கான இடம் இல்லை அது” என்றார்.

உடல் துன்பம் எனும் ஆழமான தண்ணீருக்குள் போய்க் கொண்டிருப்பது போன்று, மன உறுதி கொண்டவருக்குத் தேவையான புரிதல் அக்கணத்தில் கிடைக்காது என்றால், உண்மையை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். “என் அருள் ஒன்றே உனக்குப் போதும்” என்ற ஆறுதல் தரும், வலிமையூட்டும் செய்தியை மீண்டும் கேட்பீர்கள். தெய்வீக அன்பு எனும் இறைவன் அவரது குழந்தையை முடிவின்றிக் காத்து வருகிறார். கோடைக் கதிரவன் கெட்டிப்பட்ட பனியையும் உருகச் செய்வது போல, உறுதியாக வலியின் சக்தியைக் கட்டிப் போடுவார்.”

- ஜாண் ராண்டால்டன்.

Comment