No icon

இந்திய இளைஞர்களின் கேள்விக்கு என்ன பதில்???

‘அக்னிபத்’ யோஜ்னா ஆக்கவா? அழிக்கவா?

தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து மக்கள் போராடிவிடக்கூடாது என்பதற்காகவே எப்பொழுதும் திசை திருப்புதல் செயல்களைச் செய்தே வலம் வருகிறது - மோடி தலைமையிலான வலதுசாரி ஆட்சி.

தாராளமயக் கொள்கை மூலம் பெருமுதலைகளுக்கு சேவகம் செய்து கட்சி நிதி, தனி நன்கொடையைப் பெருக்கி, நாட்டிற்கு அநீதி இழைப்பது; அதை எதிர்க்கும் மக்களை சாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்தி, மக்களுக்குள் மோதல்களை வளர்ப்பது... சிறுபான்மை மக்களை எப்போதும் அச்சத்தின் பிடியில் இறுக்கிப் பிடிப்பது, இப்படியே தொடர்கிறது இவர்களின் தற்போதைய புல்டோசர் அரசியல்.

அக்னி வெயிலாய் ‘அக்னிபத் யோஜ்னா’

சுரண்டப்பட்ட இயற்கையால் அக்னி வெயில் ஒருபுறமெனில், 4 வருட ஒப்பந்த அடிப்படையில் இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் சேர “அக்னிபத் யோஜ்னா” திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியிட்டது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நெஞ்சில் பால் வார்க்க வேண்டிய இந்திய அரசு நஞ்சை வார்த்துள்ளது. இத்திட்டத்தில் சேரும் நபர்கள் அக்னி வீரர்களாம். ஆம், எதிர்காலம் குறித்த கேள்விகளை, ஐயங்களை வயிற்றில் நெருப்பாய் சுமந்துகொள்ளும் வீரர்கள்.

இத்திட்டத்தில் கூறப்பட்டிருக்கும் அம்சங்கள் என்னென்ன?

4 வருட பணியில் 6 மாதம் பயிற்சி; 4 வருடங்களுக்குப் பின், இவ்வீரர்களில் 25 விழுக்காட்டினர் வரை மட்டுமே இந்திய இராணுவத்தில் நிரந்தரமாக மேலும் 15 வருட ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவர்.

பதினேழரை வயது முதல் 21 வயதிலான ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தில் இணையலாம்.

இந்த வருடம் மட்டும் வயது வரம்பு 23.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம்; உடற்தகுதியைப் பொறுத்தவரை இராணுவத்தில் சேருவதற்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே பொருந்தும்.

இத்திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய்.

பின் ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வு. கடைசி வருடமாகிய 4 ஆவது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதச்சம்பளம்.

அதாவது, கிட்டத்தட்ட கடைசி வருடம் மட்டும் வருட சம்பளம் 6.92 லட்சம் ரூபாய்.

இந்த சம்பளத்தில் 30ரூ பிடித்தம் செய்யப்பட்டு, சேவா நிதியாக மத்திய அரசின் பங்களிப்புடன் (அதே 30ரூ அளவிலான தொகை) பணி நிறைவின்போது, ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 11.7 லட்சம் வரிப்பிடித்தமின்றி வழங்கப்படும்.

இதர ஓய்வூதியம் இல்லை.

இந்த 4 வருட பணிக்காலத்தில், ஏதாவது இராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 46 லட்சம் ரூபாய் வரை காயத்தை பொறுத்து நிவாரணமாக வழங்கப்படும்.

பணிக்காலத்தில் வீர மரணம் அடையும் அக்னிபத் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடியும், அவர்கள் பணி புரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும்.

மொத்தம் 45 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இத்திட்டத்திலிருந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியேறும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை, மற்றும் உள்துறையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், இரு துணை இராணுவப் படைகளில் சேரும் ‘அக்னிபத்’ வீரர்களுக்கு வயது வரம்பு சலுகையும் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிவித்த சில நாட்களிலே அவசர அவசரமாக, இத்திட்டத்தின் கீழ், ஜூன் 24 ஆம் தேதி முதல் விமானப்படை புதிய நியமனங்களை தொடங்கும் என்று, விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சௌத்ரி கூறியுள்ளார். அதன்படி இராணுவ ஆள்சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய ஏழரை இலட்சம்பேர் இம்முகாம்களில் பங்கேற்றுள்ளனர்.

ஏன் இந்த அவசரம்? என்கிற உணர்வு இயல்பாகவே பல கேள்விகளை நம்முள் எழுப்புகிறது.

ஆதரவும் - எதிர்ப்பும் போராட்டமும் - அடக்குமுறையும்

இத்திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் பீகார் மாநிலத்தில் பல ஆயிரம் இளைஞர்கள் போராடி வருகின்றனர். பீகாரில் தொடங்கிய இந்தப் போராட்டம் ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், டெல்லி, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் பரவியுள்ளது. ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இத்திட்டம் குறித்து போலியான செய்திகளைப் பரப்பியதாக 35 வாட்ஸ் அப் குழுக்களுக்கு மத்திய அரசு கடந்த ஜூன் 19 அன்று தடை விதித்தது. இளைஞர்களை போராட்டத்தில் பங்கேற்க தூண்டியதாக ஆந்திராவின் பல்நாடு மாவட்ட நரசராவ்பேட்டை நகரில் உள்ள பயிற்சி நிறுவன உரிமையாளர் அவுலா சுப்பாராவை தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒருபோதும் இத்திட்டத்தை வாபஸ் பெறமுடியாது என்று கூறி, வேலைவாய்ப்புக்காக போராடும் இளைஞர்களை ‘குற்றவாளிகள்’ என்றும், போராடியவர்களுக்கு பணி வழங்க இயலாது என்றும் மிரட்டுவது பாஜகவிற்கு கைவந்த கலைதானே! போர் வீரர்களாக மாற நினைத்த இளைஞர்களை போராட்டக்களத்திற்கு அழைத்து செல்வதை வரலாறு மன்னிக்காது.

இத்திட்டம் குறித்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்னிபத் இந்திய இராணுவத்தை, இந்திய மக்களைப் போலவே இளமையாக மாற்றிடும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்திய இராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த இராணுவமாக மாற்றும் என்கிறார்.

கடற்படை தலைமைத் தளபதி  அட்மிரல் ஆர். ஹரி குமார், “இத்திட்டம் பாதுகாப்புத்துறையில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நடவடிக்கை” என்கிறார்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வ.உ.சி - யின் 150வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “சனாதன தர்மத்தை உலகறியச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். நாம் இப்போது அந்த நிலையை நோக்கி நகர்ந்து வருகிறோம்... ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற நோக்கில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, அரசு செயல்பட்டு வருகிறது. இளைஞர்களுக்காக வெளிப்படைத் தன்மையுடன் கொண்டு வரப்பட்டுள்ள அக்னிபாதை திட்டம் ஒரு வரப்பிரசாதம். இதன்மூலம் இளைஞர்களிடம் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, நல்லொழுக்கம் உருவாகும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சுய தொழில் தொடங்கும் வகையில் பொருளாதார ரீதியாக அந்த இளைஞர்கள் உயர்வார்கள். அக்னிபாதை திட்டத்தை தவறாக புரிந்துகொண்டு, நாட்டின் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். நாட்டின் வளர்ச்சியில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும். 2047 இல் அக்னிபாதை திட்டம் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும். எனவே, அக்னிபாதை திட்டம் குறித்த புரிதல் அனைவருக்கும் அவசியம் வேண்டும்” என்றார்.

மோடி அரசு அறிவித்திருக்கும் ‘அக்னி பாதை’ திட்டம் வரவேற்புக்குரிய ஒன்று என்று குறிப்பிட்டிருக்கும் தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர் சமஸ், “இந்தத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரும் போராட்டங்கள் இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான வேலைவாய்ப்பின்மை சார்ந்து நாட்டின் கவனத்தைக் கோருகிறது. தனித்து விவாதிக்கப்பட வேண்டியது அது. வேலைவாய்ப்புக் களமாக ஆயுதப் படைகளைப் பார்ப்பது தவறான பார்வை” என்கிறார்.

அரசியல் தலைவர்கள் தாண்டி, சில தொழிலதிபர்களும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கான தங்களின் ஆதரவை தெரிவித்து, அக்னி வீரர்களைப் பணியமர்த்திக்கொள்வதாக தெரிவிக்கின்றனர். ஆனந்த் மகேந்திரா, அத்தகைய பயிற்சி பெற்றவர்களை வேலைக்கு எடுக்கும் வாய்ப்பை மகேந்திரா குழுமம் வரவேற்கிறது என்கிறார்.

ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹரிஷ் கோயங்கா, “அக்னி வீரர்களை வேலைக்கு எடுக்கும் வாய்ப்பை வரவேற்கிறேன். பிற கார்ப்பரேட் நிறுவனங்களும் இதற்கு முன் வரவேண்டும்” என்று டிவிட்டர் செய்துள்ளார்.

இதற்கிடையில் ‘அக்னிபத்’ திட்டத்தை எதிர்க்கும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். “இரு முனைகளில் இந்தியா அச்சுறுத்தல்களைச் சந்திக்கும் இந்த வேளையில் ‘அக்னிபத்’ திட்டத்தை கொண்டுவருவது நமது படையினரின் திறனை குறைப்பதாக உள்ளது. நமது படையின் மாண்பு, பாரம்பரியம், கட்டுக்கோப்பு ஆகியவற்றில் சமரசம் செய்வதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் ‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பபெற வேண்டும் என்றார்.

பீகாரில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளக் கட்சி தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங்: “அக்னிபத் திட்டத்தின் முடிவால் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி, விரக்தி மற்றும் இருண்ட எதிர்காலம் (வேலையின்மை) பற்றிய அச்சம் தெளிவாகத் தெரிகிறது. மத்திய அரசு உடனடியாக இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில், இந்த முடிவு நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது” என்று தெரிவித்துள்ளார்.

எம் கேள்விக்கு என்ன பதில்?

நிரந்தர வேலை பறிபோகிறது; ஓய்வூதியம் கிடையாது; வேலையில்லா திண்டாட்டம் இன்னும் அதிகரிக்கும் என்கிற எதிர்காலம் குறித்த அச்சங்களோடு இருக்கும் இளைஞர்களின் கேள்விகளுக்கு பாஜக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? இத்திட்டத்தை ஆதரித்து பேசியவர்களின் வாதங்களையே எடுத்துக்கொள்வோம்.

 வேலை வாய்ப்பு அச்சம் : கொரோனா காலகட்டங்களில் சுமார் இரண்டரை ஆண்டுகள் பாதுகாப்புத் துறைக்கு ஒன்றிய அரசால் ஆள் சேர்ப்பு நடத்தப்படவில்லை. இவ்வேலையை நம்பியிருந்த சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் 23 வயதைக் கடந்து, இராணுவத்தில் சேருவதற்கான தகுதியை இழந்துவிட்டனர். நிரந்தர இராணுவ வீரராக செல்ல வேண்டும் என்ற கனவோடு வலம் வந்த இளைஞர்களுக்கு பேரிடியாக வந்திருக்கிறது இத்திட்டம்.

‘தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என்று, மக்களவைப் பொதுத் தேர்தல் 2014 க்கு முன்னால் வாய்ச்சவுடால் விட்டவர்தானே மோடி. மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வந்தபிறகு, ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள், கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிற்கும் ரூ.15 லட்சம் தருவது போன்ற வாக்குறுதிகள் எங்கு போச்சு?

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பொருத்தவரையில் நிலைமை இப்போது ‘மோசம்’ என்ற நிலையிலிருந்து ‘படுமோசம்’ என்ற நிலையாகி விட்டது என்கிறார் ப.சிதம்பரம். தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, நம் நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு தீவிர வேலையின்மை தற்போது உருவாகியுள்ளதாக கூறுகிறது.

இத்திட்டத்தால் வெளியேற்றப்படும் 75 விழுக்காட்டினருக்கு அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறுகின்றனர்.

பல கோடி எண்ணிக்கையில் அரசு பணியிடங்கள் நிதிபற்றாக்குறை, ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மூலம் ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் பாஜக அரசு அறிவிக்கும் 10 விழுக்காடு ஒதுக்கீடு எந்த அளவு சாத்தியமாகும்?

 ஃபோர்டு, ஜெனரல் மோட்டார் உள்ளிட்ட பன்னாட்டு தனியார் நிறுவனங்களும், பல உள்நாட்டு கனரக தொழிற்சாலைகளும் மூடு விழா கண்டுவரும் எதார்த்த சூழலில் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்?

 போதிய ஊதியம் பெறுவதும் கேள்விக்குறி: ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வரையிலும், சம்பாதித்து ஓய்வு பெறும் அக்னி வீரர் அதே ஊதியத்துடன் தனியார் நிறுவனங்களால் வேலைக்கு எடுக்கப்படும் வாய்ப்பு இருக்குமா?

வெறும் பள்ளிக் கல்வியை முடித்த ஒருவருக்கு, எந்த தனியார் நிறுவனம் நல்ல ஊதியத்தில் வேலை வழங்க தயாராக இருக்கும்? இப்போதே பல லட்சம் செலவு செய்து பட்டம் பெற்றவர்கள் 5000, 10000 ரூபாய் சம்பளத்தில் வேலைபார்க்கும் அவலம்.

பாரதத்தில் பக்கோடா விற்றால் தினம் 200 ரூபாய் கிடைக்கும் என, வேலைவாய்ப்பை கொச்சைப்படுத்திய மோடியின் வகையறாக்களுக்கு அக்னிபாதையில் இருந்து வெளியேற்றப்படும் இளைஞர்களின் வலி எப்படி புரியும்?

ஒப்பீடு செய்து ஏமாற்றுவதா?: வெளிநாடுகளிலும் அக்னிபாதை போன்று, இராணுவத்தில் 4 ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலாகவோ, குறைவாகவோ இராணுவத்தில் சேவை ஆற்றுதல் அமலில் இருப்பதாக ஒப்பீடு செய்கிறது இந்தியப் பாதுகாப்புத்துறை. உலகில் பல்வேறு நாடுகளில் குறுகிய காலத்திற்கு இராணுவத்தில் ஆட்சேர்ப்பு இருப்பது என்பது உண்மைதான். இதற்காக சட்டமே இயற்றப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு சில.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையில் ஆண்கள் மூன்று ஆண்டுகளும், பெண்கள் சுமார் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றுவது கட்டாயம். தென் கொரியாவில் உடற்தகுதியுடைய ஆண்கள் அனைவரும் இராணுவத்தில் 21 மாதங்களும், கடற்படையில் 23 மாதங்களும், விமானப்படையில் 24 மாதங்களும் பணியாற்றுவது கட்டாயம். ஆனால், ஒலிம்பிக் அல்லது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியாத வீரர்கள் மீண்டும் வந்து இராணுவத்தில் பணியாற்ற வேண்டும். சுவிட்சர்லாந்தில் 18 வயது முதல் 34 வயது வரையுள்ள ஆண்களுக்கு இராணுவ சேவை கட்டாயம்.

இந்தச் சட்டத்தைக் கடந்த 2013 ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து வாக்கெடுப்பின் மூலம் முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்தது.

பிரேசிலில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இராணுவ சேவை கட்டாயம். இவையனைத்திலும் உற்று கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மேற்கண்ட நாடுகளில் வேலை இல்லா கால நிவாரணம் என்ற சமூக பொறுப்பு அரசுகளால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

எனவே, அது தனிப்பட்ட இளைஞர்களின் மனநிலையை அல்லது தனக்கு பிடித்த வேலை தேடும் பொறுமையை பாதிக்காது. ஆனால், இங்கு அப்படி அல்ல; இங்கு வேலையின்மை விகிதம் 7.8 விழுக்காடு. நமது மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் சுமார் 10 கோடி. கோடிகளில் புரளும் அரசியல் தாதாக்களுக்கு இவ்வுண்மை புரியாதது ஏனோ?

சூனியமாகும் இளையோரின் எதிர்காலம்: இராணுவத்தில் நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் சேர்வதால் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் திருமண வரன்கள் அமைவதில்கூட சிக்கல்கள் ஏற்படும். மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் அவர்களின் இக்கூற்று எதார்த்தமானது. தகுந்த வேலை, போதிய ஊதியம் இல்லாதவருக்கு பெண் கொடுக்க பலரும் முன்வருவதில்லை. அதிலும் குறிப்பாக, ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கைக் குறைவாக உள்ள இக்காலச்சூழலில் இதுவும் மிகப்பெரிய சவாலே!

குத்தகை மூலம் தனியாருக்கு திறன் தாரை வார்ப்பு: பாதுகாப்புத்துறையில் 100 விழுக்காடு அந்நிய முதலீடு, இராணுவ தளவாட உற்பத்தியில் 74 விழுக்காடு அந்நிய முதலீடு போன்றவற்றின் மூலம் இராணுவத்தை தனியார்மயமாக்கும் வேலைகளைக் கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே பா.ஜ.க செய்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மேலும் இராணுவத்துறையை கார்ப்பரேட்களின் நலனுக்காக திறந்து விடுவதும், காவிகளின் செல்வாக்கை இராணுவத்தில் அதிகப்படுத்துவதும் தொடரும் என்பதில் மாற்றில்லை.

ரயில்வே, வங்கி, அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தற்போது தனியார் கட்டுப்பாட்டின்கீழ் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். குத்தகை மூலம் இராணுவத்திற்கு ஆள் எடுக்கும் அரசு இனிவரும் காலங்களில் முப்படைகளுக்கும் ஒப்பந்த முறையில் ஆட்களை தேர்வுசெய்வதை தனியாருக்கு நிச்சயம் கொடுக்கும்.

இந்த அக்னி வீரர்கள் நாளை உள்நாட்டு தரகு முதலாளிகளின் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்களாகவோ அல்லது வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் ஒப்பந்த ஊழியர்களாகவோ இருப்பார்கள். இராணுவ தளவாட தயாரிப்பு, பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உணவு ஆகியற்றை வழங்கும் உரிமையை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததன் மூலம், கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகின்றன அந்தத் தனியார் நிறுவனங்கள்.

தற்போது இராணுவ வீரர்களையும் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தத்திற்கு எடுத்தால் மேலும் தனது இலாபத்தை செழுமைப்படுத்தும் என்பதே வெள்ளிடைமலை.

எச்சரிக்கை

2025 - ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு நோக்கி

கூடுதலாக பாஜகவின் இன்னொரு சூழ்ச்சியையும் நாம் மறந்துவிடக்கூடாது.

2025 - ஆர்.எஸ்.எஸ் துவங்கியதன் நூற்றாண்டு. அதற்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவித்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் காய்களை நகர்த்தி வருகிறார்கள். ஏற்கனவே மோடி ஆட்சியின் கீழ் காவல் துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் என, அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் இதுவரை இல்லா அளவிற்கு நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இராணுவமும் அதற்கு விதிவிலக்கல்ல.

இராணுவத்திற்குள் ஊடுருவி அதைக் கைப்பற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் நீண்ட காலத்திட்டம். ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களுள் ஒருவரான மூஞ்சே, 1935 ஆம் ஆண்டிலேயே இராணுவத்தை இந்திய மையப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் பெயரில், மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகத்தை நாசிக்கில் நிறுவினார்.

மூஞ்சே தொடங்கிய இராணுவப் பள்ளியைப் போல, கடந்த 2020 ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேசத்திலும் ஆர்.எஸ்.எஸ் புதிதாக தனது இராணுவப் பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறது.

கடந்த 2018 இல் பீகாரில் நடந்த கூட்டமொன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் “இக்கட்டான சூழலில் போருக்கு வீரர்களைத் தயார்படுத்த இராணுவத்திற்கு 6 அல்லது 7 மாதங்கள் ஆகும். நம்முடைய நாட்டிற்கு தேவையென்றால், அரசியலமைப்பு சட்டம் அனுமதித்தால், நம்மை கேட்டுக்கொண்டால் மூன்றே நாட்களில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை இராணுவமாகத் தயார்படுத்தி விடுவோம். அதுதான் நம்முடைய திறமை” என்றார்.

இராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மையப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை அன்றே அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

ஹரித்துவார் மாநாட்டில், முஸ்லீம்களை இனப்படுகொலை செய்துவிட்டு, இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று, காவி கும்பல் அறைகூவல் விடுத்ததையும் நினைவில் கொள்வோம்.

2002 குஜராத் இனப்படுகொலைப் போல, நாடு தழுவிய அளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்த ஆர்.எஸ்.எஸ் இனி முயற்சித்தால் அதனை இராணுவத்தைக் கொண்டே இக்கொடுமை அரங்கேறும் நாள் தொலைவில் இல்லை.

நாடு முழுவதும் புதிதாக 100 இராணுவப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதன் முதல் கட்டமாக, இந்தியா முழுவதும் புதிதாக 21 இராணுவப் பள்ளிகளைத் தொடங்க ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று, அனுமதியளித்துள்ளது.

இதையெல்லாம் உற்று கவனிக்க வேண்டிய அவசரமும், அவசியமும் உள்ளது. இறுதியாக, பேரா. அருணன் சொல்வது போன்று, “முஸ்லீம்களை ஒடுக்க வேண்டியது, அவர்களிலிருந்து ஒருவரை குடியரசுத் தலைவராக்கி மறைக்க வேண்டியது! தலித்துகளை ஒடுக்க வேண்டியது, அவர்களிலிருந்து ஒருவரை குடியரசுத் தலைவராக்கி மறைக்க வேண்டியது, பழங்குடியினரை ஒடுக்க வேண்டியது, அவர்களிலிருந்து ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கி மறைக்க வேண்டியது”.

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கபட நாடகத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமோ?

Comment