No icon

Desiderio Desideravi -மிக மிக ஆவலாய் இருந்தேன்

மலரட்டும் புதிய அருள்வாழ்வு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், “Desiderio Desideravi” அதாவது, “மிக மிக ஆவலாய் இருந்தேன்” திருத்தூது மடல் அடிப்படையில்

“Desiderio Desideravi”

நற்செய்தி அறிவிப்பில்லாத கொண்டாட்டமும், உயிர்த்த இறைவனைச் சந்திக்க வழிவகுக்காத அறிவிப்புகளும் சத்தமில்லாமல் முழங்கும் சங்கைப் போன்றது  - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூன் 29 புதன்கிழமை, 2022,  தூய பேதுரு பவுல் பெருவிழாவாகிய அன்று, நம் திருத்தந்தை பிரான்சிஸ், “Desiderio Desideravi” அதாவது, “மிக மிக ஆவலாய் இருந்தேன் ”என்கிற தனது புதிய திருத்தூது மடலை வெளியிட்டார். அதில் அவர் வலியுறுத்துகின்ற கருத்துகள் கொரோனா பெருந்தொற்று தொடரும் இக்காலக்கட்டங்களில் நமது அருள் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடித்தளம் இடுவதாய் அமைந்துள்ளன.

 நற்செய்தியை அறிவிக்காத கொண்டாட்டம் உண்மையான கொண்டாட்டம் அல்ல; கத்தோலிக்கர்கள் வெளிப்புறக் கொண்டாட்டங்களை மட்டுமே முன்னிறுத்தும் அல்லது வழிபாட்டு முறைகளில் சோம்பேறித்தனத்தை அனுமதிக்கும் அழகிய வடிவங்களை முறியடிக்க வேண்டும்.

 கிறிஸ்தவக் கொண்டாட்டத்தின் அழகும், திரு அவையின் வாழ்க்கைக்குத் தேவையான செயல்பாடுகளும், அதன் மதிப்பைப் பற்றிய மேலோட்டமான புரிதலால் சீர்கெட்டுவிடக்கூடாது.

 நாம் வழிபாட்டின் அழகைக்கண்டு வியந்து கொண்டே இருப்போம். இந்த அழகை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். இந்த மறு கண்டுபிடிப்பு என்பது, ஆடம்பர சடங்குகளில் அதாவது, வெளிப்புற அழகியல் கொண்டாட்டங்களில் அல்ல; மாறாக, அகம் சார்ந்த தேடலில் திருப்தி அடைவது.

 வழிபாட்டுக் கொண்டாட்டத்தின் ஒவ்வொரு அம்சமும், அதாவது, இடம், நேரம், அடையாளங்கள், வார்த்தைகள், பொருள்கள், ஆடைகள், பாடல், இசை ஆகிய அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

  ஒட்டுமொத்த அவைக்கும் சொந்தமான வழிபாட்டுச் சடங்குகளில் “அமைதி” ஒரு முழுமையான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இது, பாவத்திற்காக நம்மை மனம் வருந்த தூண்டுவதோடு, மனமாற்றத்திற்கான விருப்பத்தை நோக்கி நம்மை நகர்த்தி செல்கிறது. இது இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கு நம்மை ஒரு தயார்நிலைக்கு உட்படுத்துவதோடு இறைவேண்டல் செய்யவும் நம்மை ஊக்குவிக்கிறது.

 நற்செய்தி அறிவிப்பில்லாத ஒரு கொண்டாட்டம் உண்மையானது அல்ல; அதேபோல் கொண்டாட்டத்தில் உயிர்த்த இறைவனை சந்திப்பதற்கு வழிவகுக்காத அறிவிப்புகள் உண்மையானவை அல்ல; இவை இரண்டும் இல்லாத நிலை, சத்தமில்லாமல் முழங்கும் சங்கைப் போன்றது.

 ஆவியானவர் திரு அவைக்குச் சொல்வதை ஒன்றிணைந்து கேட்பதற்காக நமது விவாதங்களைக் கைவிட்டு நமது ஒற்றுமையைப் பாதுகாப்போம்.

 நற்கருணைக் கொண்டாட்டத்திற்குத் தலைமைதாங்குவது என்பது, கடவுளின் அன்பின் பிரசன்னத்திற்குள் நுழைவதாகும். இதன் உண்மை எதார்த்தங்களைப் புரிந்து கொண்டு நாம் வழிபாட்டு சடங்குகளை அர்த்தம் பொதிந்த வகையில் கொண்டாட வேண்டும்.

இங்ஙனம் திருத்தந்தை சுட்டிக்காட்டும் மதிப்பீடுகள் இன்றைய நம் வழிபாடுகளிலும், வாழ்விலும் உள்ளதா? குறிப்பாக கொரோனா பெருந்தொற்றின் அச்சம் தொடர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டங்களில் நமது வழிபாடுகள் வெற்று சடங்காக, ஆடம்பர கொண்டாட்ட விழாக்களாக மட்டும் நின்று விடுவதால் பயனில்லை. திருத்தந்தை எடுத்தியம்புவதுபோல், நற்செய்தி அறிவிப்பாக, உயிர்த்த இறைவனை சந்திக்கும் அனுபவமாக, ஒற்றுமையை பாதுகாப்பதாக, உள்ளமைதியை ஏற்படுத்துவதாக, அகம்சார் தேடலை தூண்டுவதாக, அன்பின் பிரசன்னத்திற்குள் அழைத்துச் செல்வதாக அமைதல் அவசியம்.

கோவிட் - 19 அருள்வாழ்வு (Covid -19 Spirituality)

கொரோனாவைத் தொடர்ந்து, இன்று எல்லாரும் கோவிட் பொருளாதாரம், கோவிட் அரசியல் பற்றி பேசுவதைக் கேட்கமுடிகிறது. இத்தருணத்தில் கோவிட் அருள்வாழ்வு பற்றிய சிந்தனையும் முக்கியத்துவம் பெறுகிறது.  காரணம், நம் கடவுள் ஏதோ வானத்தின் உயரத்தில் இருப்பவர் அல்ல; மாறாக, நம்கூட இருப்பவர். நம் துன்பங்களில் எட்டி நிற்பவர் அல்ல; மாறாக, கட்டியணைப்பவர். இன்னும் சொல்வதாயின் நம் கடவுள் தன்னை நாசரேத்தூர் இயேசுவாக ஓர் யூதக் கலாச்சாரத்துக்குள் அடையாளப்படுத்தியது போல, தொடரும் பெருந்தொற்றான கோவிட் -19 கலாச்சாரத்துக்குள் இன்று நம்மையும் அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

கொரோனாவைத் தொடர்ந்து எங்கும், எதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் மாற்றங்கள். பெருந்தொற்றின் ஆபத்தை உணர்ந்து, விதிக்கப்பட்டிருந்த விதி முறைகளால் நம்முடைய வழிபாட்டின் சிறப்புத் தன்மைகள் பல மாற்றம் கண்டிருக்கின்றன. அனுதின திருப்பலியில் பங்கேற்பது துவங்கி, அடக்கச் சடங்குகளில் பங்கேற்க இயலா கையறு நிலைகள் என, கடந்து வந்த வேதனைகள் சொல்லிமாளா.குழுவாக இணைந்து பங்கேற்பது என்கிற தத்துவம் மறைந்து தனிநபர், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசங்கள், கையுறைகள் அணிதல், குழுவாக ஒரே இடத்தில் நின்று இணைந்து பாடுவதைத் தவிர்த்தல், நாவில் நற்கருணை வழங்குவதைத் தவிர்த்தல், திருப்பலிக் கொண்டாட்டத்திற்கான நேரத்தைக் குறைத்தல் என பல கட்டுப்பாடுகள். ஞாயிறு கடன் திருப்பலியில் முழுமையாய் பங்கேற்று, நற்கருணை பந்தியில் கட்டாயம் பங்கேற்பதை வாழ்நாளின் அடிப்படை அருள்வாழ்வாக வளர்த்துக் கொண்டவர்களின் உணர்வுகளை இச்செயல்கள் கடினமாக்கின என்பதனை மறுப்பதற்கில்லை.

திருமுழுக்கு, நற்கருணை, உறுதிபூசுதல், திருமணம் போன்ற இன்றியமையாத அருட்சாதனக் கொண்டாட்டங்களும் எண்ணிக்கையில் குறைந்த பங்கேற்பாளர்களோடு நடத்தப்பட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் வாழ்க்கை முன்புபோல் இருக்கப் போவதில்லை என்ற உணர்வையே கொடுத்தன. வீடுகளிலோ, மருத்துவமனைகளிலோ உடல் நலம் குன்றியோரைச் சந்திப்பதற்கு, நோயில் பூசுதல் அருட்சாதனத்தை வழங்குவதற்கும் விதிக்கப்பட்டிருந்த கடுமையான விதிமுறைகள் மனித அரவணைப்பு மற்றும் மனித நெருக்கம் போன்றவற்றிற்கு தடையாகவே அமைந்தன. இறந்தவரின் உடலுக்கு ஆசி வழங்குவது, இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்வது போன்றவை பெரும் சவாலாக மாறியதால் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் விரக்தியடைய செய்தது.

வழிபாட்டையும், சமய நிகழ்வுகளையும், இறைவார்த்தை பகிர்தலையும், திருப்பலிக் கொண்டாட்டங்களையும், மறைக்கல்வி வகுப்புகளையும், கோடை விடுமுறை வகுப்புகளையும், ஏனைய பக்தசபை இயக்க கூடுகைகளையும், ஊடகங்கள் வழியாக நேர்முக ஒளிபரப்புதல் செய்வதைத் தொடர்ந்தோம். இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது. ஆலயத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டுமென்றில்லை. வீட்டிலிருந்தும் திருப்பலியில் பங்கேற்கலாம் என்கிற மனநிலை மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது. கொரோனாவின் வீரியம் குறைந்த நிலையிலும், நேரடியாக மறைக்கல்வி வகுப்புகளுக்கும், ஏனைய பக்தசபை இயக்கங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையிலும் சுணக்கம் தொடர்கிறது. இருப்பினும், பெருந்தொற்று காலங்களில் அடுத்தவர்களை அணுகுவதற்கு மின்னணு ஊடகங்கள் நமக்கு உதவியாய் இருந்து கொண்டிருக்கின்றன என்பதனை இந்நாட்களில் கற்றுக் கொண்டிருக்கிறோம். இங்ஙனம் கடினமான ஆனால், ஏற்றுக்கொண்டே வாழ வேண்டிய புதிய ரீதியிலான அருள் வாழ்வை கொரோனா காலங்கள் நமக்கு கற்பித்துக் கொண்டே இருக்கின்றன.

உடலும், ஆன்மாவும் கொண்ட மனிதர்களும், சமய நம்பிக்கையுடையவர்களுமாகிய நமக்கு நேரடித் தொடர்பு எப்போதும் தேவை. காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப இணைந்து வந்து அருள் வாழ்வு கொண்டாட்டங்களை முன்னெடுப்பது அவசியம். விண்ணுலகுசார் காரியங்களைக் குறித்து திட்டமிடுவதற்கு மேலாக மண்ணுலகுசார் அர்த்தமிகு வாழ்வே விண்ணகத்தை பரிசளிக்கும் என்கிற நம்பிக்கை செயல்பாடுகளை குடும்பங்களில், அன்பியங்களில், பங்குதளங்களில் முன்னெடுக்க வேண்டியது கட்டாயம்.

இன்றைய நமது எதார்த்தங்களைப் புரிந்து கொண்டு, திருத்தந்தையின் திருத்தூது மடல் எதிர்பார்க்கும் வழிபாட்டு அருள் வாழ்வை கட்டியெழுப்ப சில வழிகாட்டுதல்கள் குறித்து சிந்திக்கலாம்.

அர்த்தம் தேடும் வழிபாடும் வாழ்வும் தனிநபர் பொறுப்புணர்வும் அவசியம்

கொரோனா அருள் வாழ்வு நம்மிடம் இன்று எதிர்பார்ப்பது தனிப்பட்ட பொறுப்புணர்வு. எதற்கும் பிறரை, சூழலை, மற்றவர்களை காரணம் காட்டுவது இன்று பலருக்கு எளிதாகிவிட்டது. உண்மையை மறைக்க நினைப்பவர்கள், எதார்த்தத்தை புதைக்க நினைப்பவர்கள், பொறுப்புணர்வுகளைத் தட்டிக்கழிப்பார்கள். நம்மட்டில், நமக்கு அடுத்திருப்பவர் மட்டில், நமது சமூகத்தின் மட்டில் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு நிறைந்த மனிதர்களாக வாழ வேண்டும். எப்படி கொரோனா நாட்களில் தனிநபர் பொறுப்பேற்பு நோய்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர உதவியாக அமைந்ததோ, அங்ஙனமே அருள் வாழ்விலும் தனிப்பட்ட பொறுப்புணர்வு அவசியம்.

பங்கு தந்தையை, பங்கு மேய்ப்புப்பணிப் பேரவையை, பங்கேற்பு அமைப்புகளைக் காரணம் காட்டி அல்லது குற்றம் சுமத்தி ஆலயத்திற்கு வரமாட்டேன், இனி ஆலய காரியங்களில் ஈடுபடமாட்டேன் என்பது ஏற்புடையதல்ல. நமது அருள் வாழ்வு நமது கரங்களில் என்பதனை உணர்ந்து ஈடுபாட்டை வளர்ப்போம்.

ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் முக்கியம்

“What cannot be avoided must be endured”, அதாவது எவையெல்லாம் தவிர்க்க முடியாதவையோ, அவற்றையெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இன்று முகக்கவசமும், சமூக இடைவெளியும், தடுப்பூசியும் தவிர்க்க முடியாதவையாக இருப்பதால் நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஏற்றுக்கொள்வது தான் நமக்கு பாதுகாப்பு. மேலை நாடுகளில் இன்றளவும் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக எதிர்ப்புக்குரல்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் நம் திருத்தந்தையிடம் கொரோனா தடுப்பு மருந்து குறித்து கேட்டபோது அவர் பின்வருமாறு சொன்னார் : தடுப்பு மருந்து ஓர் நெறிமுறைச் செயற்பாடு (Ethics). தடுப்பூசி எடுத்துக் கொள்வது தமது விருப்பத்தின் தேர்வாக இருப்பினும், என்னைப் பொறுத்தவரையில் தடுப்பு மருந்து போடுதல் ஒவ்வொருவருடைய தார்மீகக் கடமை என்பதே சரி. எனது உடல் நலம், எனக்கு அடுத்திருப்பவரின் உடல் நலத்திற்கு உத்தரவாதம். இங்ஙனம் நாம் அனைவருமே தடுப்பு மருந்து போட வேண்டும் என்பதை திருத்தந்தை வலியுறுத்தினார்.

இங்குதான் நாம் ஒவ்வொருவரும் தனி மனிதர்களாக பொறுப்புணர்வுடனும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடனும் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இதுவே, அருள் வாழ்வு நிலையிலும் அவசியம். பொது செயல்பாடுகளில் ஈடுபடுகையில் மாற்றுக்கருத்துகள், வேறுபட்டச் சிந்தனைகள் எழுவது இயல்பு. தான் சொல்வதுதான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்கிற பிடிவாத நிலைகளைக் களைந்து, பொது நலனுக்காக நல்லதை, சமூகத்திற்கு பயன்தருவனவற்றை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமே உண்மையான அருள் வாழ்வின் வெளிப்பாடு என்று உணர்ந்து செயல்படுவோம்.

ஒருமைப்பாடும் சகோதரத்துவமும் அவசரம்

 கொரோனா தனிமனிதனுடைய அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டினுடைய பிரச்சனை அல்ல; மாறாக, அது ‘உலகளாவியப் பிரச்சனை’.

ஓட்டுமொத்த உலகமே இப்பெருந்தொற்றிலிருந்து விடுபட பல்வேறு உதவிக்கரங்களை மாறி மாறி வழங்கி வருவதை நாம் கண்ணுறுகிறோம். பல்சமயங்களை உள்ளடக்கிய நம் இந்திய தேசத்தில் மதங்களை வைத்து மக்களை கூறுபோடும் காட்சிகள் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அரசியல் வியாதிகளின் இத்தகு சதிவலைகளுக்குள் மக்கள் நாம் மாட்டிக்கொள்ளக்கூடாது.

சமீபத்தில்கூட குறிப்பிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு மற்ற மதத்தவர்கள் செல்வதற்கு தடைகோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்ததை நினைவிற்குகொண்டு மதம் கடந்து வாழ்வோம். இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று பிரித்துப் பேசி தனித்தனித் தீவுகளாக நின்று கொள்ளாது, காலத்தின் தேவையுணர்ந்து ‘நாம் அனைவரும் மனிதர்கள், சகோதர சகோதரிகள், மாண்புள்ளவர்கள்’ என்னும் வட்டத்திற்குள் நின்று ஒருமைப்பாட்டுடனும், சகோதரத்துவத்துடனும் பொறுப்புள்ள மனிதர்களை உருவாக்குவதில் ஆர்வமுடன் உழைக்க வேண்டும்.

           நாம் வாழும் பகுதியில் இருக்கும் ஏனைய சமயங்களைச் சார்ந்த சகோதர சகோதரிகளோடு இணைந்து பொங்கல், புத்தாண்டு போன்ற சமூக விழாக்களைக் கொண்டாடுவோம். நமது பங்கு விழாக்களில் ஏனைய சமயத்தவரையும் அழைப்போம். நாமும் பிறசமய கொண்டாட்டங்களில் பங்கேற்போம். பங்கு எல்லைகளைக் கடந்து பல்சமய உறவுகளைப் பேணும் குழுக்களை உருவாக்குவோம். அவற்றின் வழியாக மக்களின் அடிப்படை தேவைகளைப் பெற அரசிடம் இணைந்து கோரிக்கைகளை முன்னெடுப்போம்.

மனித மாண்பில் மையங்கொண்ட அருள்வாழ்வு தேவை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அண்மைக்கால சுற்றுமடலான ‘அனைவரும் உடன்பிறந்தோரே’ (Fratelli tutti) சொல்வதுபோல, அரசியல் என்பது வெறுமனே பொருளாதாரத்தில் மட்டும் நிலை கொள்ளாது, மனித மாண்பில் மையம் கொண்டு நிற்கவேண்டும். மனித மாண்பில் மையம் கொண்ட புதிய அரசியல் மற்றும் அருள்வாழ்வில் தான் சகோதரத்துவமும் (Fraternity), ஒருமைப்பாடும் (Solidarity) பிரசவமாகும்.

தொடரும் காலங்களில் தனி மனித செயற்பாடாயினும், கூட்டான அரசியல் மற்றும் அருள்வாழ்வு அமைப்புகளின் செயற்பாடாயினும் அனைத்துமே ‘பொது நன்மை’ கருதியே அமையவேண்டும். சுயநலத்தின் உச்சம் நமது பங்குத்தளங்களையும் விட்டு வைக்கவில்லை என்பதே இன்றைய எதார்த்தம். எத்தகு செயல்பாடுகளை முன்னெடுத்தாலும் ஆதாயம் தேடும் மனநிலைகள் இயல்பாக தொடர்வதைப் பார்க்க முடிகிறது. திருப்பலியின் இறுதியில் அருள்பணியாளர் வழங்கும் நீண்ட நன்றி உரைகள்கூட இதன் வெளிப்பாடோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

தனிப்பட்ட நபர்கள் தரும் நன்கொடைகளுக்காக நன்றி சொல்வதில் தவறில்லை. இதனால் ஒரு சிலர் மட்டுமே பங்குதளங்களில் அங்கீகாரம் பெறுவதும், ஏனையவர்கள் கண்டுகொள்ளப்படாமையும் தொடர்வது இயல்பாகிறது. பாராட்டு மழையில் நனைவதற்கென்றே நன்கொடையாளர்கள் குவிவதும் காண்கிறோம்.

போதிய அளவிற்கு நன்கொடைகள் வழங்க இயலாத எளியவர், வறியவர் இயல்பாகவே கடைநிலையில் வைக்கப்படுவது கவனிக்கப்பட வேண்டாமா? விழாக்காலங்களில் பங்கேற்கும் குருக்களுக்கு வழங்கப்படும் நீண்ட புகழ்ச்சி வார்த்தைகள் தேவைதானா? கொரோனா கால படிப்பினைகளால் இங்கு அரசியல்கூட அருள்வாழ்வாக மாறவேண்டும். மாறாக அருள்வாழ்வு ஒருபோதும் அரசியலாக மாறிவிடக்கூடாது.

அருகிருந்து அக்கறைக்காட்டும் கலாச்சாரம் வளர்ப்போம்

கத்தோலிக்கத்தைக் கடைபிடிக்கிறேன் என்று சில கடமைகளை நிறைவேற்றுவதில் நிம்மதி பெருமூச்சு விடுபவர்களே பலர். இவர்களுக்கு திருப்பலி, செபமாலை, நற்கருணை ஆசீர்வாதம் இவற்றிற்கு சென்றுவிட்டால் எல்லாம் சிறப்பு என்கிற திருப்தியை பெற்று விடுகிறார்கள்.

அதே வேளையில் வீட்டிற்குள், வீதிகளில், அண்டை வீட்டாரோடு சண்டையிடுவது, சிறு விசயங்களையும் ஊதி பெருக்கி மற்றவர் நிம்மதியைக் கெடுப்பது தங்களது அருள்வாழ்விற்கு எதிரானது என்கிற உணர்வுநிலைகூட ஏற்படுவதில்லை. இத்தகு அருள்வாழ்வின் வறட்சி களையப்பட வேண்டும். கொரோனா சமூக இடைவெளியைக் கடைபிடிக்க கற்றுத் தந்தாலும் இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கையை குழுமத்தில் வாழ்வதே சிறந்தது என்பதை கடந்து வந்த அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

சக நம்பிக்கையாளர்களுடன் இயல்பான உறவு வைத்துக்கொள்ள இயலாத சூழலிலும் மாற்றுவழிகளில் உதவிக்கரம் நீட்டியது. வரும் நாட்களிலும் நாம் அனைவரும் இணைந்து ‘அலட்சியம் செய்யும் கலாச்சாரம்’(Culture of indifference) தகர்த்து ‘அருகிருத்தல் கலாச்சாரம்’ (Culture of Fraternity) உருவாக்குவோம்.

பொது இல்லம் பேணி எதார்த்த உலகில் வாழ்வோம்

பெருந்தொற்றுகள், சமய நம்பிக்கையுடையவர் மற்றும் சமய நம்பிக்கையற்றவர்களிடையே எந்தவொரு வேறுபாட்டையும் உருவாக்குவது கிடையாது. அதற்கு மாறாக, படைப்பாளராகிய கடவுள் நமக்கு தந்திருக்கும் ‘பொது இல்லத்தை’ கிறிஸ்தவர்களாகிய நாம் மற்ற அனைத்து மனிதர்களோடும் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றோம் என்ற உண்மையை நமக்கு ஆணித்தரமாக நினைவூட்டுகின்றது. கடவுள் நம்மை இவ்வுலகில் வாழவே படைத்தார்; இயேசு நம்மை இவ்வுலகில் வாழவே அழைத்தார். முழு நிறைவான உலகில் அல்ல; மாறாக, பாவத்தினால் பாதிக்கப்பட்ட உலகில் தான் வாழவேண்டும்.

ஏறக்குறைய 130-160 ஆண்டுகளில் எழுதப்பட்ட “டயோக்னிட்டஸ்” கிறிஸ்தவர்களைப் பற்றி குறிப்பிடுவதுபோல, “ஊனியல்பில் அவர்கள் வாழ்கின்றார்கள், ஆனால், ஊனியல்பின் விருப்பங்களினால் ஆட்கொள்ளப்படவில்லை. இந்த மண்ணில் அவர்களுடைய நாள்களைக் கடத்துகிறார்கள். ஆனால், அவர்கள் விண்ணகத்தின் குடிமக்கள். சட்டங்களுக்கு கீழ்ப்படிபவர்கள். ஆனால் சட்டங்களையும் விஞ்சும் நிலையில் வாழ்ந்தார்கள்...”.

ஆம், ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் தாங்கள் வாழ்ந்த சமூகம் மற்றும் உலகிலிருந்து தங்களை பிரித்துக்கொள்ளவில்லை. அவர்களுடைய வாழ்க்கைமுறை தான் அவர்களை வேறுபடுத்திக் காட்டியது.

உதாரணமாக, அதிகாரத்தை ஆராதனை புரிந்த, பேரரசரை கடவுளாக மதித்த மக்கள் வாழ்ந்த கலாச்சாரத்தில், தங்களுடைய வாழ்வும், வழிபாடும் உண்மையாக இறைவனுக்கு மட்டுமே என்று கூறினார்கள். இந்த நம்பிக்கைக்காக அவர்கள் கொல்லப்பட்டாலும் தங்களது வாழ்க்கைமுறையை அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. கருச்சிதைவு, மழலைக் கொலை போன்றவற்றை பொது வழக்கமாக கொண்டிருந்த சமூகத்தில் கருப்பையின் கனியை தூயதாகக் கருதினார்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாமும் பலவீனம் நிறைந்த இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே மாற்றத்திற்குரிய காரியங்களை முன்னெடுப்பதில்தான் கிறிஸ்தவ வாழ்வின் மதிப்பீடுகள் அடங்கியிருக்கிறது. இயற்கையைப் பேணுவதன் வழியாக நாமும் எதிர்வரும் தலைமுறையினரும் வாழத் தகுந்த இடமாக இப்பூவுலகை மாற்ற முடியும். கொரோனாவிலிருந்து நாம் காப்பாற்றப்பட்டிருக்கின்றோமென்றால், நாம் கடவுளை நம்பியதால் மட்டுமல்ல; மாறாக, ஒவ்வொருவரையும் போல, கறைபட்ட இவ்வுலகில் உள்ள அனைத்து இடர்களையும் நாமும் சந்தித்து அனுபவப்பாடம் கற்றிருப்பதால்! கற்றப் படிப்பினைகளைத் தொடர்ந்து கடைபிடித்து பூமியை எல்லாரும் வாழத்தகுந்த இடமாக உருவாக்குவது நம் இலக்காகட்டும்.

திரு அவையில் உலகப்போக்குகள் குறையட்டும்

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 25 ஆம் நாளில் ப்ரெய்பெர்கில் (Freiburg) உள்ள கத்தோலிக்கர்களிடம் பேசிய வார்த்தைகளை இங்கு நினைவு கூர்வோம்: திரு அவையில் உலகப் போக்கு குறைவாக இருந்தபொழுது அதன் மறைபரப்புச் சாட்சிகள் மிக பிரகாசமாக ஒளிர்ந்தது என்பதை வரலாறு வெளிப்படுத்தியுள்ளது. அரசியல், பொருள் சுமைகளிலிருந்து, தனிச் சலுகையிலிருந்து விடுபட்டால், திரு அவை உண்மையான கிறிஸ்தவ வழியில் பெரும் சிறப்போடு உலகனைத்தையும் அடைய முடியும். உண்மையான வெளித்தன்மையோடு இருக்க முடியும். இறை வழிபாடு, மனித சேவை போன்ற பணிகளை செய்வதற்கான தனது அழைத்தலை விடுதலை உணர்வோடு வாழ முடியும்....மீண்டும் திரு அவையை துவங்குவதற்காக புதிய உத்திகளைக் கண்டுபிடிப்பது இங்கு கேள்வியல்ல; மாறாக, நமது தற்கால சூழலின் உண்மைத் தன்மையிலிருந்து எதையும் புறக்கணிக்காமல், அல்லது அடைத்து வைக்காமல், முற்றிலும் நிதானமான பகல் ஒளியில் நம்பிக்கையை இங்கேயே, இப்பொழுதே முழுமையாக வாழ, நம்பிக்கையை முழுமையாக பொருத்தமானதாக்க, நம்பிக்கையைச் சார்ந்திருப்பதைப் போன்று தோன்றக் கூடியவற்றை களைய வெறும் உத்திகளை அமைப்பது, முழுமையான வெளிப்படைத் தன்மையை தேடுவது தான் கேள்வியே... திருத்தந்தை இக்கூற்று தொடர்ந்து நமக்குள் கேள்விகளை எழுப்பட்டும். உண்மை அருள்வாழ்வை நாம் கண்டடைய, கட்டியெழுப்ப உதவட்டும்.

நிறைவாக, இறையியலார் டிட்ரிக் போன்ஹோபர் (Dietrich Bonhoeffer) ஹிட்லரின் நாசிக் படையால் கொல்லபடுவதற்குமுன் சிறையிலிருந்து தமது அன்பு உள்ளங்களுக்கு எழுதிய கவிதை வரிகளோடு நிறைவு செய்ய விழைகிறேன்.

“அன்புச் சக்திகளினால் வியத்தகுமுறையில் பாதுகாப்படைந்துள்ளோம்.

என்ன நேர்ந்தாலும் அச்சமின்றி சந்திக்க காத்திருக்கின்றோம்.

விடியலிலும் காலையிலும் கடவுள் எங்களோடு இருக்கின்றார்.

மிக உறுதியாக ஒவ்வொரு நாளும் எங்களோடு இருக்கின்றார்”.

இம்மறையுண்மையை ஆழமாக புரிந்துகொண்டு எதிர்வருகின்ற நாட்கள் தரும் சவால்களைச் சந்தித்து அகவிடுதலையும் புறவிடுதலையும் பெற உழைப்போம். இதுவே உண்மையான அருள்வாழ்வு!

 

Comment