No icon

அதிமுக

!இலைகள் - தலைகள் ஜாக்கிரதை!

திராவிட நாணயத்தின் ஒருபக்கம் திமுக என்றால் அதன் மறுபக்கம் அதிமுக என்பதே உண்மை. இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் மீறி சாதிக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் இங்கே வேரூன்ற முடியாத நிலை என்றும் உண்டு. இவர்களின் தோளில் ஏறியே சாதிக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் இன்றும் பயணிக்கின்றன. நம் தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளை தீர்மானித்தவை இந்த இரண்டு திராவிடக் கட்சிகள்தான். மாறி மாறி இவர்களின் தலைமையில்தான் ஆட்சி அமைந்துள்ளது. ஒரு சில முறை மத்தியில் ஆட்சியை யார் அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கிற திராணியையும் இந்த இருகட்சிகளும் கொண்டிருந்தன என்பது வரலாற்று உண்மை. தேய்க்கப்பட்ட தெற்கை தீர்மானிக்கும் சக்தியாக நிர்மாணித்ததும் இவர்கள்தான். கொள்கைகளில் இவர்கள் எலியும் பூனையுமாக இருந்தாலும் தமிழகத்தின் நான்கு தலைமுறையும் கரைசேர்ந்தது இவர்கள் தந்த நல்லாட்சியால்தான். இடஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பைக் கொடுத்து பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் அண்ணாவியத்தையும் கரை சேர்த்தவர்கள், கட்டிக் காத்தவர்கள் இவர்கள்தான். தாமரை மலரும்... தாமரை மலரும்... என்று கால் நூற்றாண்டு காலமாக சனாதனத்தைப் புலம்பவிட்டவர்கள் இவர்கள். இந்தித் திணிப்பை இன்று வரை ஏற்காமல் போர்க்கொடி தூக்கும் போர் வீரர்கள் இவர்கள். இனமானக் காவலர்களாக இன்றும் தொடர்கிறார்கள்.

அண்ணாவின் வழியில் பெரியாரின் பாதையில் நடைபயிலும் இக்கட்சிகளின் மாபெரும் தலைவர்களாக கருணாநிதியும் ஜெயலலிதாவும் அடுத்தடுத்து மறைந்த நிலையில் தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகும்? தமிழக அரசியலின் எதிர்காலம் என்னவாகும்? என்ற வினாக்கள் எழுந்தன. இருப்பினும் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கூட்டுத்தலைமையாக ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் கிளர்ந்தெழுந்து, கட்சி சின்னத்தை காலத்தே மீட்டு, ஆட்சியில் தொடர்ந்து தங்களின் ஆளுமையை ஏதோ ஒரு வகையில் நிரூபித்தனர். திராவிட முன்னேற்ற கழகமும் தனக்கான தலைவரை அடையாளங்கண்டு அவரின் தலைமையில் வீறுநடை போடுகிறது. ஆனால், அண்மையில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என்பது மறைந்து, இடைக்காலப் பொதுச் செயலாளர் என்று ஒற்றைத் தலைமை உருவாக தமிழக  திராவிட அரசியல் கடந்த ஓரிரு மாதங்களாக பரபரத்து கிடக்கிறது.

பெரியார் - அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா தலைமைத்துவத்தில் திராவிடத்தின் வளர்பிறையாக வளர்ந்து வந்த அதிமுக, ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தேய்பிறையாகி வருவது தமிழக திராவிட அரசியலுக்கு நல்லதல்ல. திராவிடத்தை வீழ்த்துவதற்கு படையெடுக்கும் சனாதனத்தின் கோரமுகமான பாஜகவிற்கு, திமுக - அதிமுக உள்ளிட்ட இரண்டு திராவிடக் கட்சிகளுமே பல்லக்கு தூக்கின என்றாலும், காலப்போக்கில் தன்மானத்தோடு திமுக தன் தவற்றைத் திருத்திக் கொண்டது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அதிமுக மிதவாத இந்துத்துவாவை தன் கொள்கையாகவே கொண்டு, திராவிடத்தின் கூர்முனையை மழுங்கடித்தது. மழுங்கடித்தும் வருகிறது.

அண்ணாவின் மறைவிற்கு பிறகு, கலைஞர் கருணாநிதி தலைமையில், திமுக கொண்ட கொள்கையின் அடிப்படையில் வெறுங்காலோடு திராவிடப்பாதையில் வீறுநடை போட்டது. மறுபுறம் அதிமுகவோ எம்ஜிஆர், ஜெயலலிதா என்று சினிமா அரிதாரத்தின் பளபளப்பில் கவர்ச்சி அரசியலால் காலத்தே கட்டமைத்துக்கொண்டு திராவிடப்பாதையில் காலணிகள் கொண்டு நடக்க ஆரம்பித்தது. திராவிடப்பாதையில் வெறுங்காலோடு நடந்தால் என்ன? காலணிகள் போட்டு நடந்தால் என்ன? அவர்கள் நடப்பது பெரியாரிய-அம்பேத்கரிய-அண்ணாவிய திராவிடப்பாதையில் என்று ஆறுதல் கொண்டோம்.

இருபெரும் ஆளுமை களின் மறைவிற்குப் பிறகு, உருவாகாத வெற்றிடத்தை, சனாதனம் தனதாக்கிக் கொள்ள கானல் நீரில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அதிமுகவின் சரிந்த கோட்டை கொத்தளங்களுக்குள் எலும்புகளைத் தேடி சனாதனம் அலைந்து கொண்டிருக்கிறது. அதிமுக தலைவர்கள் சாதிகளாகப் பிரிந்து சண்டையிட்டுக்கொள்வது சனாதனத்திற்கு மூலதனமாக அமையும்; அதிமுகவிற்கோ மூலநோயாக அமையும். திராவிடத்தின் உச்சாணி கொம்புகளைப் பிடித்து எப்படியாவது ஓர் உலுக்கு உலுக்கிவிட வேண்டும் என்று துடிக்கும் ஆர்ய சனாதனத்திற்கு, இவர்களே ஏணி போட்டதுபோல் உள்ளன இவர்களுக்குள்ளான சண்டைகளும் பிளவுகளும் அடிதடிகளும்.

ஏற்றிவிட்ட ஏணியை வேண்டாம் என்று அதிமுக எட்டி உதைத்தால், கூரை ஏறி கோழிபிடிக்காத பாஜக, வானம் ஏறி வைகுந்தம் செல்வதற்கு உதவக்கூடும். தெற்கு தேய இவர்கள் ஒருபோதும் காரணமாகிவிடக்கூடாது. இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகிவிடும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குத்தான் கொண்டாட்டமாகிவிடும். பாஜகவின் கைப்பாவைகளாக ஆடிய ஆட்டம் போதும்.

சதுரங்கத்தில் திராவிடக் கறுப்புக் காய்கள் ஆரிய வெள்ளை காய்களை எதிர்த்தே ஆட்டம் ஆட வேண்டும். இது நியதி. பொன்விழாக் காணும் அதிமுக தன் பாரம்பரிய வேர்களிலிருந்து விடுபடாமல் இருக்க வேண்டும்.

தங்களின் வேர்களைப் பிடித்துள்ள ஊழல் கரையான்களை அப்புறப்படுத்தி, மரத்தின் உயிர்ப்புத்தன்மையை நீட்டிக்க வேண்டும். அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து, கட்சி உடையாமல், கட்சி சின்னம் முடக்கப்படாமல் பாதுகாத்து, சனாதனமும் பாஜகவும் தமிழக மண்ணில் வேரூன்றாத வண்ணம் மீள வேண்டும்.

பாஜகவை முதுகில் சுமந்து சுமந்து தோள்களில் உள்ள புண்கள் புரையோடாத வகையில் மருந்திட்டு தங்களைக் குணப்படுத்தி திராவிட நீரோட்டத்திற்கு திரும்ப வேண்டும். இளைய - மாணவர் தலைமுறையை சனாதனத்தின் பக்கம் சாயாமல் கவர்ந்திழுத்து, திராவிடத்தில் வேரூன்ற நாளும் உழைத்திட வேண்டும்.

கூட்டுத் தலைமையோ ஒற்றைத்தலைமையோ உங்களுக்குள் நடுநிலையாளர்களைக் கொண்டு பேசி, ஓர் இணக்கமான தீர்வு கண்டு, சாதிகளின் அடிப்படையிலும் வட்டாரத்தின் அடிப்படையிலும் கட்சி பிளவுப்படாமல், ஒவ்வொரு தலைவரும், அமைச்சரும், ஒன்றிய மாவட்டத் தலைவர்களும் தன்மானத்தோடும் சுதந்திரத்தோடும் அண்ணா-எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் மனசாட்சியாக செயல்பட வேண்டும்.

பாட்டி வடை சுட்ட கதையில் வருவதுபோல் சனாதன நரி, காக்கையைப் புகழ்ந்தும் (மிரட்டியும்) பாட்டுப்பாட வைத்தும் வடை விழுந்தால் போதும் என்று தமிழக மரத்தடியில் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றது. ஜாக்கிரதை! வடைபோச்சே... என்று பின்னர் அழக்கூடாது.

தமிழகத்தில் பாஜக வேரூன்ற அதிமுக ஒருபோதும் காரணமாகி வரலாற்றுப் பிழைக்கு வழிவகுக்கக் கூடாது. உங்கள் இரட்டை இலைகள் பசுமையாகவே இருக்கட்டும். ஒன்றும் பறிக்கப்படாமலும் பட்டுப்போகாமலும் கீழே உதிராமலும் ‘ஆடு - மாடுகள்’ கடிக்காமலும் இருக்கட்டும்! நீங்கள் திராவிடத்திற்கும் தமிழகத்திற்கும் என்றும் தேவை.

எதிர்க்கட்சியாக இருங்கள்!

எதிர்க்கப்படும் கட்சியாக இருக்காதீர்கள்!

Comment