No icon

இயேசுவின் பிறப்பு தரும் மகிழ்ச்சி

கிறிஸ்துமஸ் தரும் வாழ்வியல் பாடங்கள்

இயேசுவின் பிறப்பு வரலாற்றை மாற்றிய ஒரு நிகழ்வு. இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மெசியா ஓர் அமைதியின் மன்னராக, ஏழையாக, திருச்சட்டத்தையும், இறைவாக்கையும் நிறைவேற்றும் வகையில், கடவுளின் மகனாக மரியா (லூக் 1:34) என்னும் கன்னியிடம் பிறந்தார் (மத் 1:22-23). இயேசு யூதர்கள் எதிர்பார்த்த அரசியல் மெசியாவாக அல்ல; மாறாக, அனைவரையும் பாவத்திலிருந்து மீட்கும் வரலாற்று இயேசுவாக வந்தார் (மத் 1:21). அந்த மெசியாவை இடையர்களும், ஞானிகளும் கண்டனர். எனவே, இயேசு பிறந்தபோது, இருந்த அரசியல்-சமுதாய-சமய-பண்பாட்டுப் பின்னணிகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, இன்றைய வாழ்வுக்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில வாழ்வியல் பாடங்களை இச்சிறுகட்டுரையில் காண்போம்.

வரலாற்றுப் பின்னணி

இயேசு பிறந்தபோது, யூதர்களும், யூதரல்லாத சாமானிய மக்களும் தங்களின் எல்லா அடையாளங்களையும், பாதுகாப்பையும் இழந்து, அரசியல்-சமுதாய-சமய அடிமைகளாக வாழ்ந்து வந்தனர். இந்த அடிமைச் சூழல் வரலாற்றுப் பின்னணியை மூன்று கோணங்களிலிருந்து அணுகுவது நல்லது.

ஒன்று, உரோமையரின் ஆட்சிப் பின்னணி;

இரண்டு, பெரிய ஏரோது ஆட்சியாளரின் பின்னணி;

மூன்று, யூதச் சமய-சமுதாய-பண்பாட்டுப் பின்னணி.

1. உரோமையரின் ஆட்சிப் பின்னணி

கி.மு. 67-லிருந்து, யூதேயா நாடு உரோமையர்களின் நேரடி அரசியல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதன் விளைவாக, அரசியல் ரீதியாக இரண்டு காரியங்கள் நடைபெற்றன.

ஒன்று, உரோமையர்களின் ஆட்சிக்குட்பட்ட நகர்களிலும் ஊர்களிலும், ‘Pax Romanum’ என்று எழுதிவைத்தனர். இதன் பொருள் என்ன? உரோமையர் ஆட்சியால் அமைதி நிலவுகிறது என்பதே இதன் பொருள். அதைக் காணும் எதிரிகள் அவ்வூர்களைத் தாக்குதல் செய்யாமல் விட்டுவிட்டுப் போயினர். அதாவது, உரோமையரின் பெயரே அமைதியைக் கொண்டு வந்தது என்றே மக்களை நம்பவைத்தனர்.

இரண்டாவது, உரோமையில் கூட்டாட்சி முறை மாறி, முடியாட்சி முறை வந்தபோது, அகுஸ்துஸ் சீசர் ஆட்சிக்குவந்தார். அதனால் அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் கிழக்காசிய நாடுகளில் உரோமை ஆதரவு ஆட்சியாளர்கள் தங்கள் நகர்களுக்குச் சீசரின் பெயரை வைத்தனர் (எ.கா. செசாரியா, பிலிப்பு-செசாரியா). அதுபோல, அகுஸ்துஸ் சீசரின் பிறந்த நாளையும் தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில், விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கொண்டாடினர். இவ்வாறு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அகுஸ்துஸ் சீசரை ‘அமைதியின் மன்னர்’ என்றும் அழைத்துப் பெருமைப்படுத்தினர். இவ்வகையான உரோமையர் ஆட்சியின் வரலாற்றுப் பின்னணியில் தான், விண்ணகத் தூதர் பேரணி, ‘உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக’ (லூக் 2:13-14) என்று பாடினர்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்வியல் விழுமியம் என்ன? உரோமையர்கள் தங்களின் ஆயுதங்களால் அமைதியைக் கொண்டுவந்ததாகவும், அகுஸ்துஸ் சீசரை அமைதியின் மன்னர் என்றும் அழைத்தனர். ஆனால், இயேசுவே ‘அமைதியின் அரசர்’ அவரே உண்மையான அமைதியைத் தருபவர். அதாவது, இயேசு கடவுளுக்கு இணையான தன் நிலையை இழப்பதன் வழியாக, தன்னையே வெறுமையாக்குவதன் வழியாக (பிலி 2:5-9), ஏழைகளோடு ஏழையாக பிறப்பதன் வழியாக ‘பெத்லகேமில் பிறந்துள்ள இயேசுவே உண்மையான அமைதியின் மன்னர்’ என்ற வானவரும் விண்ணகத் தூதர் பேரணியும் முழக்கமிட்டனர் (லூக் 2:10-14). இதையே பிற்காலத்தில் இயேசு தன் வழியாகவே அமைதி கிடைக்கும் (யோவா 16:33) என்று சொல்லி, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” (யோவா 14:27) என்று தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

2. பெரிய ஏரோது ஆட்சியாளரின் பின்னணி

இதுமேய - யூதப் பெற்றோருக்குப் பிறந்த பெரிய ஏரோது (கி.மு.70) உரோமையர்களின் ஆதரவோடு கி.மு. 37 இல் யூதேயா நாட்டின் மன்னராகி, ஹஸ்மோனிய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தான். தன்னை ‘யூதர்களின் அரசர்’ என்று அழைத்துக் கொண்டான். கி.மு.26 இல் அந்தி கோஸை வீழ்த்தி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டான். அதன் நினைவாக, பெத்லகேமிற்கு தென்மேற்காக 5மைல் தொலைவில் உள்ள ஒரு மலையில் எரோதியம் (Herodium) என்னும் மிக அழகிய மாளிகை ஒன்றைக் கட்டியெழுப்பினான் (கி.மு. 22-15). மேலும், தன்னை யூதர்களின் அரசன் என்று காட்டிக் கொள்ள விரும்பிய பெரிய ஏரோது, இறைவாக்கையும் திருச்சட்டத்தையும் அறிந்து கொண்டு (மத் 2:4-5) இரண்டு வரலாற்று சிறப்புமிக்க செயல்களைச் செய்தான்.

ஒன்று, எருசலேம் கோவிலை விரிவுப்படுத்திப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டான். அப்பணியை அவரின் மகன் ஏரோது அந்திப்பாசும் தொடர்ந்தார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இரண்டு, எரோதியம் என்ற இடத்தில் கட்டப்பட்ட மாளிகையை மெசியாவின் பிறப்பிற்கான தயாரிப்பு மாளிகையாக மாற்றினான். திருச்சட்டத்தின் மீதும் இறைவாக்கின்மீதும் நம்பிக்கை கொண்டவனாக, அம்மாளிகையில் தாவீது வழியில் வந்த ஒரு கன்னிப் பெண்ணை வைத்து (எசா 7:14), காவலுக்கு அண்ணகர்களையும் வைத்தான். இவ்வாறு, தாவீது வழிமரபுக் கன்னிப் பெண் வழியாக நிகழவிருக்கும் மெசியாவின் பிறப்பிற்காகத் தயாரித்து வைத்திருந்தான். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி மெசியா வசதிபடைத்த எரோதியம் என்னும் மாளிகையில் பிறக்கவில்லை.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் வாழ்வியல் விழுமியங்கள் என்ன?

ஒன்று, பெரிய ஏரோது போன்று வெளித் தயாரிப்புகள் செய்து வைத்து, அதிகாரப் போக்கும், செல்வச் செழிப்பும், குள்ளநரித்தனமும் கொண்டிருந்தால் இயேசு என்னும் மீட்பர் நம்மிடையே, நமக்குள் பிறக்கப் போவதில்லை.

இரண்டு, இயேசுவின் பிறப்பு இடையர்களுக்கும், ஞானிகளுக்கும் மகிழ்ச்சிதந்தது. ஆனால், ஏரோதுவுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் கலக்கத்தைக் கொடுத்தது (மத் 2:3). எனவே, இயேசுவின் பிறப்பு நமக்கு மகிழ்ச்சி தரும் பிறப்பாக மாற்றிக் கொள்ள, நமக்குரிய பாதுகாப்பான இடங்களை விட்டுவிட்டு இடையர்களைப் போலவும், ஞானிகளைப் போலவும் அவரைத் தேடிச் செல்ல வேண்டும்.

மூன்று, தலைமைக்குருக்களும், மறைநூல் வல்லுநர்களும் இயேசு எங்கே பிறந்துள்ளார் என்று அறிந்தும்கூட, இயேசுவைத் தேடிச் செல்ல வில்லை. அவர்களின் சமய அதிகாரமும், அரசியல்-பொருளாதாரப் பாதுகாப்புகளும் இயேசுவைத் தேடிச் செல்வதற்குத் தடைகளாக மாறின.

நான்கு, பெரிய ஏரோது தன்னை ‘யூதர்களின் அரசராக’ ஆக்கிக் கொண்டான். எனினும், உண்மையான யூதர்களின் அரசர் பெத்லகேமில் பிறந்த இயேசுவே. அதையே ஞானிகள் வந்து உறுதி செய்தனர் (மத் 2:2). அதையே இயேசுவின் இறப்பின் போது, பிலாத்துவும் உறுதி செய்தார் (காண்க. யோவா 19:19-22).

3. யூதச் சமய-சமுதாய-பண்பாட்டுப் பின்னணி

யூதச் சமுதாயமும், சமய வாழ்வும் கலாச்சாரம் என்னும் பண்பாடும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தன. அவைகளைப் பட்டியலிட்டுக் காண்போம்.

ஒன்று, யூதர்கள் தங்களின் இன-சமய அடையாளங்களால் தங்களை உயர்வாகக் கருதிக் கொண்டு, பிறப்பின் அடிப்படையில் பிற இனத்தவருக்கு மீட்பில்லை என்று நம்பினர்.

இரண்டு, பரிசேயர் தங்களையே புனித மக்களென்று கருதி, பிறரை இழிவாகக் கருதினர். மற்ற யூதர் அனைவரையும் பாவிகள் என்று கருதினர்.

மூன்று, தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தாரும் தங்களின் சமய-சமுதாய-பொருளாதாரப் பாதுகாப்புக்காக உரோமையர்களோடு சமரசம் செய்து கொண்டு, அரசியல் அடிமைகளாக இருந்த போதிலும், தாங்கள் யாருக்குமே அடிமையாக இருந்ததில்லை என்று பெருமைபட்டுக் கொண்டனர் (யோவா 8:33).

நான்கு, தலைமைக் குருக்கள் பிற இனத்தவர் வந்து கூடும் எருசலேம் கோவில் பகுதியில் கடைகள் அமைத்து வியாபாரம் நடத்தினர்.

ஐந்து, பிறப்பால் யூதர்களாக இருந்தாலும், செய்யும் தொழிலால் சிலர் சமுதாயத்தின் கடைநிலைக்குத் தள்ளப்பட்டனர் (பாவிகளான வரிதண்டுவோர், தீட்டுப்பட்டோரான இடையர்கள்). அதாவது, ஆபிரகாம் காலமுதல் உயர்வுக்குரியதாக இருந்த இடையர்களின் தொழில் இயேசுவின் காலத்தில் அசிங்கமான தொழிலாக மாறியிருந்தது.

ஆறு, நாடு, சமயம், மொழி ஆகியவற்றின்மீது பற்றுக் கொண்டவர்கள் தீவிரவாதிகளாக மாறி, ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிப் போராடித் தோற்றுப் போயினர் (திப 5:34-39 - தெயுதா, கலிலேயனான யூதா, பரபா).

ஏழு, எருசலேமிலிருந்த சடங்கு வழிக் குருத்துவ முறையை எதிர்த்து பலரும் கும்ரான் சமூகத்தை உருவாக்கினர். அவர்கள் மெசியாவின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் தூய்மைச் சடங்கு செய்து காத்திருந்தார்கள். இந்த மரபில் வந்த திருமுழுக்கு யோவான் ‘திருமுழுக்கை’ அறிமுகப்படுத்தி, மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தார்.

எட்டு, அதைவிட மேலாக, யூதச் சமயப் பற்றும், வெளிப்பாட்டு இலக்கிய மற்றும் இறைவாக்கினர் வழி மரபில் வந்த நம்பிக்கையாளர்கள் மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். அதிலும் குறிப்பாக, மிஷ்னா, ஹலகா மற்றும் ஹகதா போன்றவற்றின் அடிப்படையில் மெசியாவின் வருகைக்கான அடையாளங்களைப் பட்டியலிட்டுக் காத்திருந்தனர். மேலும், ஆண்டவரின் நாளில் ‘மெசியா’ வந்து தங்களைத் துன்பங்களிலிருந்து மீட்பார் என்று இவர்கள் நம்பினர். இந்த நம்பிக்கையில் வந்த சீடர்கள் இயேசுவின் விண்ணேற்பின் போது, “ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?” (திப 1:6) என்று கேட்டனர்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்வியல் விழுமியங்கள் பல இருந்தாலும், ஒன்றை மட்டும் காண்போம். இன்றுள்ள சமுதாயம் ‘பின் நவீனத்துவ சந்தைப் பொருளாதார ஆன்ட்ராய்டு சமுதாயமாகும்.இந்தச் சமுதாயத்திற்கு இயேசுவின் பிறப்பு தரும் செய்தி, இயேசு நம்மைச் செல்வராக்க ஏழையானார் என்பதே அது. அதாவது, சமய-சமுதாய-பண்பாட்டு நிலைகளில் ஏழைகளாக உள்ள நமக்கு அதை மீட்டுத் தர நம்மைத் தேடிவருகிறார். அதனால், கால ஓட்டத்தில், உயர்வுக்குரியதாக இருந்த ‘இடையருக்குரிய தொழிலை’ அசிங்கத்துக்குரியதாக மாற்றிய யூதர்களைப் போலவோ, சமய வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இயேசுவையே ஏற்க மறுத்த தலைமைக்குருக்கள், பரிசேயர், மறைநூல் அறிஞர்களைப் போல் நாம் மாறிவிடக்கூடாது.

முடிவாக...…

‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை’ (யோவா 1:11) என்ற நிலை யூதர்களிடையே அரசியல்-சமய-சமுதாய-பண்பாட்டு நிலைகளில் இருந்தது. இன்றும் அதே நிலை நாம் வாழும் சமுதாயத்தில் நீடிக்கிறது என்றால், இயேசுவின் பிறப்பு தரும் மகிழ்ச்சியும், பகிர்வும், அமைதியும், மீட்பும் நமக்குக் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புண்டு. நாம் ஆயுதம் கொண்டு அமைதி தர முயன்ற உரோமையர்களைப் போலல்ல; அல்லது வெளித் தயாரிப்புக்குச் சிறப்பிடம் கொடுத்த, குள்ளநரி மனநிலையில் தன்னையே ‘யூதர்களின் அரசனாக்கிக் கொண்ட பெரிய ஏரோது போலல்ல; அல்லது இயேசு எங்கே பிறப்பார் என்ற உண்மையை அறிந்தும், இயேசுவைத் தேடிச் செல்லாமல் இருந்த சமயத் தலைவர்களைப் போலல்ல; அல்லது கால ஓட்டத்தில் உயர்ந்த விழுமியங்களையும், வாழ்வின் நிலையை மறந்து, இடையர்களை இழிவாகக் கருதிய யூதச் சமயம்-சமுதாயம் போலல்ல; மாறாக, நாம் இடையர்களைப் போல மாறி மகிழ்ச்சியின் நற்செய்தியைப் பிறருக்கும் அறிவிக்க வேண்டும் (லூக் 2:20). நாம் ஞானிகள் போலமாறி இயேசுவைத் தேடிச் சென்று, பகிர்வைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு நாம் அனைவரும் மாற்று வாழ்வியல் விழுமியங்களால் வாழ்வை அழகு செய்தால், இயேசு நமது உள்ளத்திலும், இல்லத்திலும் பிறப்பார். என்ன இயேசு பிறப்பதற்கு வழி செய்வோமா?

Comment