No icon

நாட்டார் சமயநல்லிணக்க நடவடிக்கைகள்

மதநல்லிணக்க மாற்று உரையாடல்கள்

இந்திய சமயங்கள் அனைத்தும் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன; பல சமயங்களைப் பின்பற்றுபவர்கள் இங்கே சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றனர்.” இப்படிப்பட்ட ஒரு தோற்றத்தை மதவெறியர்கள் கட்டமைக்கின்றார்கள். இதற்கு மாற்றான உரையாடலே, எதிர் கதையாடலே மதநல்லிணக்கம். மதநல்லிணக்கம் என்றதும் நினைவிற்கு வருபவர்கள் நம் நாட்டின் சமயங்கள் அனைத்தையும் சமமாகவும் ஒன்றிணைத்தும் பார்த்த சில அரசர்கள், ஞானிகள் மற்றும் சான்றோர்கள். சமூக அமைதிக்கு அவர்களின் சமய நல்லிணக்க முயற்சிகள் பெரிதும் பங்களித்திருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதேவேளையில், அடித்தட்டு மக்களும் சமய நல்லிணக்கத்திற்கு பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் அசைக்கமுடியாத உண்மை. மதநல்லிணக்கத்தின் மாற்று உரையாடல்கள் இவை! தமிழக அடித்தட்டு மக்களின் சமயம் அல்லது நாட்டார் வழிபாடுகள் மற்றும் வெகுஜன கிறித்தவம், வெகுஜன இஸ்லாம் போன்றவற்றில் காணப்படும் இத்தகைய நடவடிக்கைகள் சிலவற்றை காண்போம்.

நாட்டார் சமயம்: சமய நல்லிணக்கத்தின் இலக்கணம்

1. மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள மாணிக்குப்பம் என்ற ஊரில், இஸ்லாம் சமயத்தவர் மொஹரம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகபூக்குழி இறங்குதல் அல்லது தீ மிதித்தல்சடங்கு நிகழ்த்துகிறார்கள். அவ்வூரில் உள்ள இந்துக்களே அந்நிகழ்விற்கு விறகுக்கட்டைகளைக் காணிக்கையாக தருகிறார்கள். மேலும், அப்போது பறை போன்ற இசைக்கருவிகளை வாசிப்பவர்கள் இந்துக்களும் கிறித்தவரும்!

2. சென்னை மந்தைவெளிப் பகுதியிலும் இதே போன்ற ஒரு நிகழ்வு நடக்கிறது. மொஹரம் பண்டிகையின் போது இஸ்லாம் சமயத்தவர் பூக்குழி இறங்கி முடித்ததும், அந்த சாம்பலை அங்குள்ள இந்துக்கள் மற்றும் கிறித்தவர்கள் ஒரு புனித பொருளாகக் கருதி தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்செல்கின்றனர்.

3. தூத்துக்குடி மாவட்டம் கோட்டூருக்கருகில் வீரப்பட்டி எனும் கிராமம் உள்ளது. அங்கு கிறித்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் ஒரே கல்லறைத் தோட்டம் உள்ளது. இரு

சமூகங்களும் இணைந்து ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதி கல்லறைத் திருவிழா கொண்டாடுகிறார்கள்.

4. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடிக்கு அருகில் புன்னைவனம் என்ற ஊர் இருக்கிறது. அங்கு சந்தியாகப்பர் திருவிழா பெரும்பான்மையாக உள்ள இந்துக்களாலேயே நடத்தப்படுகிறது.

5. அதே மாவட்டத்தில் சங்கனாங்குளம் திசையன்விளைக்கு அருகில் உள்ளது. கடந்த டிசம்பர் 3-ந்தேதி சவேரியார் திருவிழா வெகுவிமரிசையாக அங்குள்ள இந்துக்களாலேயே கொண்டாடப்பட்டது சில நாளேடுகளில் செய்தியானது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவ்வூரில் இரண்டு கிறித்தவக் குடும்பங்களே உள்ளன!

6. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இலாசர் ஆலயத் திருவிழாவின் போது நடத்தப்படும் தேர்ப்பவனியில் வரும் ஒன்பது தேர்களையும் கொடுத்து உதவுபவர்கள் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலைச் சார்ந்த இந்துக்களே.

7. சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள கைலாசபுரத்தில் வசிக்கும் இந்துக் குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவிற்கு விழா எடுத்து, தேர்பவனி நடத்தி, அன்னதானம் கொடுத்து சிறப்பிக்கிறார்கள்.

8. திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியில் தேரில் வருகின்ற இயேசுவுக்கு காளியம்மன் கோவிலிருந்து மாலை அணிவிக்கப்படுகிறது; இயேசுவின் மாலை அம்மனுக்கும் சாத்தப்படுகிறது. இந்நிகழ்வு பற்றிய காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது.

9. தேனி மாவட்டத்தில் உள்ள இராயப்பன்பட்டியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது, அங்குள்ள இந்துக்களே, பிறந்திருக்கிற குழந்தை இயேசுவுக்கு முதல் காணிக்கையாக பால் செலுத்துகிறார்கள்.

10. கிறித்தவ கும்மிப் பாடல்கள் பாடுகின்ற கோணான்குப்பத்தை (கடலூர் மாவட்டம்) சார்ந்த ஜான் மேரி என்பவர் அங்கு இருக்கிற மாரியம்மன் கோவிலிலும் பாடுவதாகவும், அங்கு மாதா பக்திப் பாடல்கள் பாடும்போது, மாரியம்மனை வழிபடும் பெண்கள் சேர்ந்து கும்மி கொட்டுவதாகவும், அவர்கள் பாடும்போது தானும் சேர்ந்து பாடுவதாகவும் குறிப்பிட்டதை ஆய்வாளர் நிவேதிதா லூயிஸ் பதிவுசெய்கிறார்.

11. நாகப்பட்டினம் வேளாங்கண்ணியில் உள்ள மாரியம்மன் மற்றும் தர்கா விழா கொண்டாட்டங்களின் போது, மாதா கோவிலில் உள்ள குருக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கௌரவிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வு பரவலாக நடைபெறுகிறது. நம் ஊர் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின்போது, பிற சமய தலைவர்களை அழைத்து மரியாதை செய்வது நாம் அடிக்கடி பார்க்கின்ற ஓர் அற்புதமான நிகழ்வு.

12. பல திருத்தலங்களுக்கு திருயாத்திரை செல்வோர் சர்வசமயத்தினர். உதாரணமாக, வேளாங்கண்ணிக்கு கணிசமான எண்ணிக்கையில் இந்துக்களும், இஸ்லாமியரும் வருகின்றனர். அதேபோல், வேளாங்கண்ணிக்குச் செல்லும் சில கிறித்தவர்கள், அருகேயுள்ள நாகூர் தர்காவிற்கும், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் செல்வது வழக்கம்.

வெகுஜன சமய சகோதர தெய்வங்கள்

இன்னும் ஒரு படி மேலே சென்று, தமிழக நாட்டார் தெய்வங்கள், கிறித்தவ புனிதர்களோடு சகோதர உறவு பாராட்டுவது என்பது வியப்பளிக்கும் உண்மை!

1. சிவகங்கைக்கு அருகில் உள்ள சூராணம் என்ற ஊரில் அண்ணன், தம்பியான சந்தியாகப்பரும், மதுரை வீரனும் இணைந்து இரவில் தம் குதிரைகளில் வலம்வந்து ஊர்க்காவல் புரிகிறார்கள் என்பது அவ்வூர் மக்களின் வலுவான நம்பிக்கை. நள்ளிரவில் அவ்விரு குதிரைகளின் சத்தத்தைக் கேட்டதாகப் பலரும் சொல்கிறார்கள்.

2. சென்னைக்கு அருகில் உள்ள பெரியபாளையம் என்ற ஊரில் பெரியபாளையத்தம்மன் அக்கா என்றும், பெரியநாயகி மாதா தங்கை என்றும் மக்கள் நம்புகிறார்கள். அம்மனுக்கு நேர்ச்சை செய்யும் இந்துக்கள், மாதா கோயிலுக்கும் வந்து மெழுகுதிரி ஏற்றிச் செல்கிறார்கள். கிறித்தவர்களும் அம்மன் கோயிலுக்குச் செல்கின்றனர்.

3. திண்டுக்கல் முத்தழகுபட்டியில் உள்ள புனித செபஸ்தியார் அண்ணன் என்றும், அவ்வூரில் உள்ள காளியம்மன் தங்கை என்றும் மக்கள் நம்புகிறார்கள். காளியம்மன் திருவிழாவின் போது கரகம் பாளிக்கும் நிகழ்வு (குடத்தில் அம்மனை ஜோடித்தல்) அண்ணன் செபஸ்தியார் கிணற்று அருகில்தான் நடைபெறுகிறது. காளியம்மன் மக்கள் மீது இறங்கிவந்துவாக்கு சொல்கிறபோது’, சில பரிகாரங்களுக்குஎன் அண்ணன் செபஸ்தியார் கோவிலில் மெழுகுவத்தி ஏத்தி வைஎன்று ஆணையிடுவது ஒரு சாதாரண நிகழ்வு.

4. கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மனும், அலங்கார மாதாவும் அக்கா, தங்கை என்று அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். பகவதி அம்மன் திருவிழாவின்போது ஏற்றப்படும் கொடிக் கயிறும், தேர் இழுக்கப் பயன்படும் வடக்கயிறும் அங்குள்ள கிறித்தவர்களாலேயே தயாரித்து கொடுக்கப்படுகிறது.

இப்படி எண்ணற்ற அடித்தட்டு மக்களின் சமய நல்லிணக்க நிகழ்வுகளை தோண்டி எடுத்து வெளிச்சத்திற்கு கொண்டுவரலாம். இவை போன்ற நிகழ்வுகள், பல சமயத்தைச் சேர்ந்த நபர்கள் வாழுகின்ற, வேலை செய்யும் மற்றும் வணிகம் தொடர்பான இடங்களில் இணைந்து இருப்பது என்பதையும் தாண்டிய, எளிய மக்களின் சமயம் சார்ந்த ஆழ்ந்த அர்த்தத் தேடல்களின் விளைவே!

நாட்டார் சமய ஆய்வுகள்

நிறுவன சமயங்களிலிருந்து (சைவம், வைணவம், சாக்தம், கணபதியம், குமாரத்துவம், ஸ்மார்த்தம், இஸ்லாம், கிறித்தவம், சமணம், பௌத்தம், சீக்கியம்) மாறுபட்டது அடித்தட்டு மக்கள் சமயம். “இதை பெருவழக்காண்மைச் சமயம் (பாப்புலர் ரிலிஜன்) என்றும் நாட்டார் சமயம் (ஃபோக் ரிலிஜன்) என்றும் அழைப்பதே பொருத்தமானதாகும்என்கிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் . சிவசுப்பிரமணியன். ஒழுங்குபடுத்தப்பட்ட எழுத்துப் பாரம்பரியத்திலிருக்கிற செவ்வியல் சமயங்களிலிருந்து தனித்து நிற்கிற சமயம்தான் நாட்டார் சமயம். இந்தச் சமயம் மக்களுடைய எழுதப்படாத பாரம்பரியத்தில், அதாவது வாய்மொழி பாரம்பரியத்தில் உள்ளது. என்ரிக் டசல் என்ற இலத்தீன் அமெரிக்க மெய்யியலார்வெகுஜன சமயம், மக்களுடைய சொந்த நம்பிக்கைகள், சின்னங்கள். சடங்குகள் இவற்றில் அடங்கியுள்ளனஎன்கிறார். பௌலோ சூயஸ் என்ற இறையியலார்வெகுஜன சமயம் வெகுஜன பண்பாட்டின் வெளிப்பாடுஎன்று கூறுகிறார்.

விளிம்புநிலை மக்களுடைய ஒவ்வொரு நாள் வாழ்வும் மதத்தோடு பின்னிப்பிணைந்து, பிறந்த வினாடி முதல், இறக்கும் வினாடி வரை அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் சடங்குகளால் ஆனது. சமய-சமூகவியலுக்கு வித்திட்டவர்களில் ஒருவரான எமில் டெர்க்கைம்புனித சக்தியான இறைமையை வழிபடுவதற்கான சடங்கார்ந்த நிகழ்வுகள் மூலமாகவே தனிநபர்கள் தங்கள் தனிமனிதத்துவத்தையும் தாண்டிச் சமூகமாக ஒன்றுபடுகிறார்கள்என்று கருதினார். சடங்கார்ந்த நிகழ்வுகளில் உயிர்பெறும் குறியீடுகள் ஒரு கூட்டு யதார்த்தத்தை வெளிப்படுத்தும் கூட்டுக்குறியீடுகளாகும். “ஒடுக்குவோரின் ஆதிக்கத்திற்கு எதிராக, ஒடுக்கப்படுவோர் மத தன்னாட்சியை விரும்புகின்றனர். எனவேதான் தங்களுக்கே உரிய தெய்வங்கள், சடங்குகளுடன் தனி மதத்தை உருவாக்குகின்றனர் என்கிறார்ஓட்டோ மதுரோ. அந்தோனியோ கிராம்ஷியின் பார்வையில், ஆதிக்க வர்க்கத்திற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிரான, ஒடுக்கப்பட்ட விளிம்பிற்குத் தள்ளப்பட்ட சுரண்டப்படுகின்ற வர்க்கங்களுடைய செயல்பாட்டின் ஒரு வடிவம்தான் அடிநிலை மக்களின் சமயம்.

வெகுஜன இஸ்லாம்,

வெகுஜன கத்தோலிக்கம்

இறுக்கமான நிறுவனத்தன்மை வாய்ந்த இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க சமயங்களைத் தழுவிய தமிழக அடித்தட்டு மற்றும் இடைத்தட்டு மக்கள், அவர்களின் பாரம்பரிய வழிபாட்டு மரபுகளை (நாட்டார் சமய) உள்வாங்கிக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக வெகுஜன இஸ்லாம், வெகுஜன கத்தோலிக்கம் என்று குறிப்பிடுமளவில் புதிய வழிபாட்டு மரபுகள் இவ்விரு சமயங்களிலும் உருவாகியுள்ளன. இவற்றை வெகுஜன பக்திமுயற்சிகள் (பாப்புலர் டிவோஷன்ஸ்) எனலாம். “மதத் தூய்மையை வலியுறுத்துகின்றவர்கள் இவ்விரு சமயங்களிலும் இடம்பெற்றுள்ள நாட்டார் வழிபாட்டு மரபுகளை, அறிவுக்கு புறம்பானது என்று, மாற்றி அமைக்கும் அல்லது அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இம் முயற்சி உணர்ச்சி சார்ந்து வழிபடும் சராசரி பக்தனின் ஆன்மாவைச் சிதைப்பதாகும்என்கிறார் பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியன். இருப்பினும் நரபலி, மந்திர சக்தி, விதிக்கோட்பாடு, மூடநம்பிக்கை போன்றவற்றில் எச்சரிக்கை தேவை.

மாற்று உரையாடல்கள் அல்லது

எதிர்க் கதையாடல்கள்

நம் நாட்டில் மத அடிப்படைவாதம், மதவெறி திட்டமிடப்பட்டு பரப்பிவிடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் நாட்டார் மற்றும் வெகுஜன சமயத்தின் இத்தகைய சமய நல்லிணக்கத்தன்மையை வளர்த்தெடுத்து ஊக்கப்படுத்துவது மதச்சார்பின்மை போற்றுவோரின் கடமை. “நம்முடைய சிந்தனை, அடையாளம் எல்லாமே அதிகாரத்தின் உரையாடலால் (டிஸ்கோர்ஸ்) கட்டமைக்கப்பட்டவை. எனவே, அதற்கு எதிராக ஒரு மாற்று உரையாடல் தேவைஎன்கிறார் மிஷல் ஃபூக்கோ என்ற பின் அமைப்பியல் சிந்தனையாளர். மதவெறி, சமய பூசல்கள் போன்றவற்றைக் குறித்த உரையாடல்களை பொதுவெளியில் உலவவிடுவதாலேயே, அதை ஊக்குவிப்போர் பயனடைகின்றனர். செயல்கள் ஒருபுறம் இருக்க, அது தொடர்பான உரையாடல்களே அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. எனவே, மதவெறி எதிர்ப்புக்குரல்கள் ஒருபுறம் ஒலிக்கட்டும். அதேவேளையில், மதநல்லிணக்க மாற்று உரையாடல்களை உருவாக்குவதே, மத அடிப்படைவாதத்தை எதிர்கொள்வதற்கான சரியான வழியாகும்.

இதே கருத்தை, லியோடார்டு என்ற பின்நவீனத்துவ சிந்தனையாளரும் வேறு வார்த்தைகளில் சொல்கிறார். பெருங்கதையாடல்களின் தகர்வு (டிஸ்ரப்ஷன் ஆஃப் கிராண்ட் நரேட்டிவ் அல்லது மெட்டா நரேட்டிவ்) பற்றி அவர் பேசுகிறபோது, எதிர் கதையாடல்களின் உருவாக்கம் இன்றியமையாதது என்கிறார். எனவே, நாட்டார் சமயநல்லிணக்க நடவடிக்கைகள்ளை முன்னிலைப்படுத்தும் மாற்று உரையாடல்களும், எதிர் கதையாடல்களுமே காலத்தின் கட்டாயம்.

விவிலியமும் மதநல்லிணக்கமும்

விவிலியத்தின் பக்கங்களைப் புரட்டுகிறபோது, மூவொரு இறைவன் தம்மை அமைதியின் அரசராக நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். பவுல் அடிகள், “கடவுள் குழப்பத்தை ஏற்படுத்துபவரல்ல; அமைதியை ஏற்படுத்துபவர்” (1 கொரி 14:33) என சுட்டிக்காட்டுகிறார். இயேசு மலைப்பொழிவில்அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்” (மத் 5:9) என்கிறார். மேலும், “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்” (யோவா 14:27) எனச் சொன்னவர் இயேசு. “இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல; மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது” (உரோ 14:17) இவ்வாறாக, மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக, அமைதியோடு வாழவே நம் கடவுள் அழைப்பு விடுக்கின்றார். “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக” (யோவா 17:21).

திருஅவையும் மதநல்லிணக்கமும்

இரண்டாம் வத்திகான் சங்க ஏடுகளும் அதற்குப் பின் வந்த திருத்தந்தைகளின் திருமடல்களும் மதநல்லிணக்கத்தைப் பெரிதும் வலியுறுத்துகின்றன. குறிப்பாக 1965 இல் வெளியிடப்பட்டநோத்ரா ஏத்தாத்தேஅல்லதுநம் காலத்தில்என்ற ஏடுகிறித்தவமல்லாச் சமயங்களோடு திருஅவைக்குள்ள உறவுபற்றி விரிவாக பேசுகிறது. “கிறித்தவமல்லாச் சமயங்களைப் பின்பற்றுபவர்களோடு முன்மதியுடனும் அன்புடனும் உரையாடல் நிகழ்த்தவேண்டும். அவ்வாறே அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். மேலும், கிறித்தவமல்லாச் சமயங்களைப் பின்பற்றுபவர்களிடத்தில் காணப்படுகிற அருள் நெறி மற்றும் அறநெறி சார்ந்த நலன்களையும் சமூக-பண்பாட்டு விழுமியங்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றைப் பேணி வளர்ச்சியுறச் செய்யவேண்டும்” (எண் 2).

நம் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மதநல்லிணக்கத்தின் திருத்தந்தை என அழைக்கப்படுகிறார். உதாரணமாக, அவர் 1986 இல் பல மத தலைவர்களை இத்தாலியில் உள்ள அசிசி நகரில் கூட்டி, அவரவர் மதமுறைப்படி உலக அமைதிக்காக இறைவேண்டல் செய்யச்செய்தார். இதுவரை, பிற சமயங்களோடு உரையாடல் என்பது பிறநிறுவனசமயங்களுடனான உரையாடல் என்கிற அளவில்தான் புரிந்துக்கொள்ளப்பட்டு வந்துள்ளது. நாட்டார் மற்றும் பழங்குடி சமயங்களோடும் நாம் உரையாடல் செய்ய வேண்டும் என ஒரு சில இறையியல் வல்லுனர்கள் வலியுறுத்திக்கொண்டே இருந்துள்ளனர். இக்கருத்தை நம் திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்களும் பிரதிபலிக்கின்றார்.

அவர் நவம்பர் 2015 இல் கென்யா, உகாண்டா மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு திருத்தூது பயணம் மேற்கொண்டார். அங்கு அதிக எண்ணிக்கையில் முஸ்லீம்களும், பழங்குடி மதத்தைப் பின்பற்றுபவர்ளும் இருக்கின்றனர். அந்நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் பின்வருமாறு பேசினார், “கிறித்தவரும் இஸ்லாமியரும் சகோதர சகோதரிகள், …கடவுளை நம்புவதாகக் கூறுபவர்கள், அமைதியின் மக்கள். இங்கு கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பாரம்பரிய மதங்களைப் பின்பற்றுபவர்கள் பல ஆண்டுகளாக அமைதியுடன் வாழ்ந்துவருகின்றனர். எனவே, அவர்கள் அனைவரும் பொதுநலன் எனும் இலக்கை அடைய தொடந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒன்றாக இணைந்து, வெறுப்பு, பழிவாங்கல் மற்றும் வன்முறை வேண்டாம் என்று சொல்ல வேண்டும். குறிப்பாக, மதத்தின் பெயரால் அல்லது கடவுளின் பெயரால் நடைபெறும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில், இறைவன் அமைதியானவர், இறைவன் சலாம்.”

தேனீ வெவ்வேறு பூக்களிலிருந்து தேனைச் சேகரிப்பது போல, ஞானமுள்ள மனிதன் வெவ்வேறு மதங்களைச் சார்ந்த புனித நூல்களின் சாரத்தை ஏற்றுக்கொள்கிறான். மேலும், எல்லா மதங்களிலும் உள்ள நல்லதை மட்டுமே பார்க்கிறான்.” - காந்தியடிகள்

(‘நம்வாழ்வுவாசகர்கள் தங்கள் பகுதி அல்லது பங்கில் கடைப்பிடிக்கப்படுகின்ற, கட்டுரையின் முன்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற சமய நல்லிணக்க நிகழ்வுகளை கட்டுரையாக, தகவல்களாக நம் இதழில் பதிவு செய்யலாமே - ஆசிரியர்)

Comment