No icon

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி

தமிழக முதல்வருக்கு கிறிஸ்தவ மக்களின் நன்றி

பல ஆண்டுகளாக அரசு சலுகைகள் மறுக்கப்பட்டு வரும் தலித் கிறிஸ்தவர்களை இடஒதுக்கீடு பட்டியலில் சேர்த்து அவர்களுக்கும் அரசு சலுகைகளை தர வேண்டுமென்று ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டு முதல்வர் மு.. ஸ்டாலின் அவர்களின் அரசானது, தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. இதற்கு நன்றி கூறும் விதமாக 2023, ஏப்ரல் 22 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்களுக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்த அனைத்து கிறிஸ்தவ சபை கிறிஸ்தவர்களும் ஒன்று கூடினர். இக்கூட்டத்திற்கு ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட தமிழக கத்தோலிக்க திருஅவையின் ஆயர்களும், குருக்களும், அருட்சகோதரிகளும், தென்னிந்திய சபையைச் சார்ந்த மறைபோதகர்களும், இறைமக்களும் வந்திருந்தனர். ஏறக்குறைய காலை 10.45 மணியளவில் இசை வாத்தியங்கள் முழங்க, இருபுறமும் நின்று மக்கள் மலர் தூவ, தமிழக முதல்வர் அவர்களை அனைவரும் வரவேற்றனர்.

இக்கூட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் திரு. இனிகோ இருதயராஜ் அவர்கள் தொகுத்து வழி நடத்தினார். வந்தோரை வரவேற்ற பிறகு தமிழக கத்தோலிக்க சபை சார்பாக செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள் தலித் கிறிஸ்தவர்களின் நீண்ட கால கோரிக்கையை முதல்வர் மு.. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசானது ஒரே உள்ளத்தோடு தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதற்கு நன்றியைத் தெரிவித்தார். அவருக்கு பின் பேசிய தமிழக சிறுபான்மை நலத்துறை தலைவர் மாண்புமிகு திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், எந்த அரசும் செய்யாத இந்த நல்ல காரியத்தை துணிச்சலோடும் தைரியத்தோடும் நமது தமிழ்நாட்டு முதல்வர் அவர்களின் அரசானது நிறைவேற்றியிருப்பது உண்மையாகவே கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கக்கூடிய ஒன்று என்று தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

பிறகு பேசிய தென்னிந்திய திருச்சபை தலைவர்கள் இது ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்திற்கே கிடைத்த பரிசு என்று சொல்லி முதல்வரை வாழ்த்தினர். பிறகு மக்கள் கூட்டத்தினர் அளித்த மரியாதையை நமது தமிழக முதல்வர் இனிய உள்ளத்தோடும் இன்முகத்தோடும் ஏற்றுக்கொண்டார். இறுதியாக மக்களுக்கு நன்றி கூறி தனது அடுத்த அலுவல் பணிக்கு முதல்வர் விரைந்தார். கூட்டங்கள் முடிவுற்ற பிறகு தமிழக கத்தோலிக்க ஆயர்கள் மன்றத்தின் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம், ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகம் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்தார். இக்கூட்டத்தில் கத்தோலிக்க திருஅவையின் ஆயர்கள் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி, மேதகு நீதிநாதன், மேதகு . எம். சின்னப்பா அவர்களும். தென்னிந்திய சபையின் மறைபோதகர்களும் இறைமக்களும் பங்கேற்றது உண்மையாகவே நன்றியின் வெளிப்பாடாக அமைந்தது. இக்கூட்டத்திற்கு முன்பே இம்மிகப்பெரிய சாதனைக்காக கத்தோலிக்க வார இதழான நம் வாழ்வில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வெளியிடப்பட்ட கட்டுரையை கண்டு அனைவரும் பாராட்டினர்.

 

Comment