No icon

தலையங்கம்

த பிஜேபி ஸ்டோரி Vs த கேரளா ஸ்டோரி

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று இந்தியாவில் ஆங்காங்கே மையம் கொண்டுள்ள திரைப்பட மையங்கள் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் ஏன் உலக அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. வட இந்தியாவைவிட ஆந்திரா மற்றும் தமிழகத்தின் அரசியல் அமைப்பை, அதன் எதிர்காலத்தை தீர்மானித்ததும் வழிநடத்தி வருவதும் திரைப்படத்துறையில் கோலோச்சியவர்கள்தான். வட இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில், ஒரு சில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளில் திரைத்துறையைச் சார்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; அல்லது மாநிலங் களவையின் நியமன உறுப்பினர்களாக திரைத்துறையினரே முன்மொழியப் படுகின்றனர் என்பதும் வரலாறு.

மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச புராணத் தொடர்களில் நடித்தவர்கள் குறிப்பாக சீதையாக ஸ்மிர்தி ராணி போன்றவர்கள் மத்திய அமைச்சர்களாக கோலோச்சுவதும் கண்கூடு. கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள், இசையமைப்பாளர்கள் இந்த வரிசையில் ஏதோ ஒரு வகையில் அரசியல் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இளையராஜாவை மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக மத்திய பாஜக நியமித்ததும், அவரும் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு சர்ச்சையாகப் பேசியதும் நாமறிந்த அரசியல் நிகழ்வுதான்.

நமீதா, குஷ்பு என்று திரைப்பட பட்டாளமே அவர்களின் கவர்ச்சி ஆயுதமாக உள்ளது. கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில், கேரளாவில், தெலுங்கானாவில் என்று பாஜக கலைப்பிரிவு என்று ஒன்றையே ஏற்படுத்தி வாக்கு கவர்ச்சி வலை வீசுகின்றனர். பாஜகவின் மதவாத ஆக்டோபஸ் கரங்கள் விட்டு வைக்காத துறைகளே இல்லை.

இந்தியா முழுவதும் மகாபாரதம் - இராமாயணம் தொலைக்காட்சித் தொடர், அதனைத் தொடர்ந்து ரத யாத்திரை என்று அரசியல்களத்தில் அனல் கக்கிய பாஜக, அண்மைக்காலமாகவே திரைப்படத்துறையின்மீது கன்னம் வைத்து செயல்படுகிறது. திரைப்பட தணிக்கைத்துறை முதல் திரையரங்கத்தில் தேசிய கீதம் பாடப்படுதல் வரை அனைத்திலும் தன் மதவாதப் போக்கைத் திணிக்கிறது.

அட்டன்பரோவின் ‘காந்தி’ படத்தின் உலகளாவிய வீச்சு நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமைக்குத் தெரியும். ஆகையால்தான் அண்மைக்காலமாக பாஜகவின் அமோக ஆதரவில், நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையின் நல்லாசியுடன், பல்வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு பிரிவான சான்ஸ்கார் பார்தி, பாரதீய சித்ரா சாதனா போன்ற அமைப்புகள் மிகவும் திட்டமிட்டு தாராளமான நிதியுதவியுடன் வலதுசாரி திரைப்பட உருவாக்கத்தில் களமிறங்கியுள்ளன.

2019 ஆம் ஆண்டு வெளிவந்த பிஎம் நரேந்திர மோடி படம் ஓர் உதாரணம் மட்டுமே. அக்டோபர் 2023 ஆம் ஆண்டு சன்னி மண்டாவாராவின் இயக்கத்தில் வெளிவரவுள்ள டாக்டர். ஹெக்டேவார், 2023 டிசம்பரில் வெளிவரவுள்ள மெயின் அட்டால் ஹூன், ரன்தீப் ஹூடா இயக்கத்தில் ஸ்வாதந்திரியா வீர் சவார்க்கர், ரன்ஜீத் சர்மா தயாரிப்பில் மயி தீன்தயாள் ஹூன், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் விஜயேந்திர பிரசாத் கதைவசனத்தில் பகவா த்வாஜ், ராஜ்குமார் சாந்தோஷி இயக்கத்தில் காந்தி-கோட்சே ஏக் யுத்தா, சந்திர பிரகாஷ் துவேதி இயக்கத்தில் சாம்ராட் பிரித்விராஜ், கரன் ஜோகர் இயக்கத்தில் தாக்த், ஏற்கனவே காஷ்மீர் பண்டிட்டுகளைப்பற்றி வெளிவந்து மிகவும் சர்ச்சைக்குள்ளான காஷ்மீர் ஃபைல்ஸ்.. அந்த வரிசையில்தான் தற்போது மே மாதம் 5 ஆம் தேதி வெளிவந்துள்ள ‘த கேரளா ஸ்டோரி ’ திரைப்படம்.

கேரளாவில் மட்டுமல்ல, இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம் வெளிப்படையாகவே வலதுசாரி சிந்தனையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் ஆளும்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுமே இந்தப் படத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க லவ்-ஜிகாத்தைப் பற்றி தவறானப் புரிதலுடன் வெளிவந்துள்ளது. இதில் கேரளாவில் 32000 பெண்கள் காணாமல் போனதன் பின்னணியை லவ் ஜிகாத் அடிப்படையில் விளக்குகிறது. கேரளாவில் உள்ள கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கியிருக்கும் நான்கு பெண்களில் ஒருவர் முஸ்லீம். அந்த முஸ்லீம் பெண்ணின் மூலம் மற்றவர்களும் மூளைச் சலவைச் செய்யப்பட்டு, மற்றவர்களும் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்காக நாடுகடத்தப்படுவதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஷாலினி உன்னி கிருஷ்ணன் என்ற இந்துப் பெண், லவ்-ஜிகாத் மூலம் முஸ்லீம் பெண் ஃபாத்திமாவாக மதமாறி, இன்னும் 48 பேரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்த்து வேலை செய்ய வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது போல காட்சிகள் உண்டு. ஷாலினி மதமாற்றம் செய்யப்படுதல், திருமணம், பாகிஸ்தானுக்கு கடத்தப்படுதல் என்று கதை நீள்கிறது. கேரள முன்னாள் முதல்வர் ஒருவர் அடுத்த இருபது ஆண்டுகளில் கேரளா இஸ்லாமிய மாநிலமாக மாறும் என்று உளறுவதுபோலவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என்று நான்கு மொழிகளில் மே 5 ஆம் தேதி வெளிவந்துள்ள இப்படம் நாலாந்தரமான படம் என்பதில் சந்தேகத்திற்கு துளியும் இடமில்லை.

கேரளாவை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கேவலப்படுத்தியுள்ளனர். ஐயப்பன் விவகாரத்தை எடுத்து கொஞ்ச காலம் அரசியல் செய்து பார்த்தனர். கேரள அச்சன்களிடம் இது எடுபடவில்லை. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் என்று வலம் வந்தனர். யாரும் வலதுசாரிகளைச் சீண்டவில்லை. ஆகையால் தற்போது கேரளா ஸ்டோரி மூலம் தீண்டுகின்றனர். சங்க் பரிவாரத்தின் வெறுப்பை விதைத்து, மத நல்லிணக்கத்தைச் சிதைக்க இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியுள்ள இந்தப் படம் மதவெறியின் உச்சம். ஆவணப்பட இயக்குநரான இவர் இயக்கிய தி அதர் வெல்த் (1997), தி லேண்ட் வித்தின் ரிப்பிள்ஸ் (1998), தி லாஸ்ட் மங்க் (2006) என்று அனைத்துப் படங்களுமே அறியப்படாத நிலையில் கற்பனையாக லவ் ஜிகாத், (இந்துப் பெண்களை போலியாக காதலித்து கட்டாய மதமாற்றம் செய்யும் முஸ்லீம் ஆண்கள், அப்பெண்களை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா போன்று நாடுகளுக்கு நாடுகடத்தி, இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு உதவுகின்றனர்). இதுதான் இப்படத்தின் கதைக் கரு. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, நாடாளுமன்றத்திலேயே லவ்-ஜிகாத் என்பதே இல்லை; எங்கும் எந்த வழக்கும் பதிவாகவில்லை என்று சொன்னபோதும் நம் காதுகளில் சுதிப்தோ சென் பூ சுற்றுகிறார். நான்கு ஆண்டுகளாக கேரளாவில் இந்தப் படத்திற்காக கள ஆய்வு செய்ததாகவும் கூடவே கதையளக்கிறார்.

அண்மையில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜோசப் நாகரத்னா ஆகியோர், "வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகப் பேசிய நபர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். இதுபோன்ற வெறுப்புப் பேச்சுகளை நிகழ்த்தியவர்கள் மீது யாரும் புகார் அளிக்காவிட்டாலும் அரசே முன்வந்து அவர்கள்மீது வழக்குகளைப் பதிவுசெய்து கைது செய்ய வேண்டும். அவ்வாறு வழக்கு பதியாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும்" என்று கண்டிப்புடன் சொல்லிய நிலையில், ஒன்றியப் பிரதமர் மோடியே கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி, கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தின்போது “ஒரு சமூகத்தில், குறிப்பாக கடின உழைப்பாளிகள், திறமையானவர்கள், அறிவுஜீவிகளின் அழகிய பூமியான கேரளா போன்ற மாநிலத்தில் பயங்கரவாதத்தின் விளைவுகளை வெளிப்படுத்தும் வகையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.காங்கிரஸ் கட்சி இப்போது படத்தைத் தடைசெய்து பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிக்க முயல்கிறது. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் பயங்கரவாதிகளுடன் துணைநிற்கும் துரதிஷ்டமான நிலையைப் பாருங்கள்... "என்று படத்திற்கான விளம்பர வேலையைச் செய்கிறார். காஷ்மீர் பைல்ஸ் படம் பார்க்க விடுமுறை அளித்த மேதாவிகள்தானே அவர்கள்.

காஷ்மீர் பைல்ஸ், த கேரளா ஸ்டோரி என்பதெல்லாம் வெறும் டிரெய்லர்தான். இனி வலதுசாரி தனத்துடன் திரைப்படங்கள் வரிசைக் கட்டும். இடதுசாரித்தனத்தைத் தூக்கிப்பிடிக்கும் படங்களுக்கு தணிக்கைக்குழு நெருக்கடி கொடுக்கும். மன்கிபாத் உரைக்கே திரைப்படம் பார்ப்பதுபோல கூடும் இவர்கள், திரைப்படம் பார்ப்பதற்கு கூடாதிருப்பார்களோ?! சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளைப் பரப்பும் இவர்கள், திரைப்படங்களிலும் போலிக் கதைகளைப் பரப்பத் தொடங்கிவிட்டனர். கறுப்புப்பணம் புழங்கும் திரைப்படத்துறை, இனி காவிப்பணம் புழங்கும் திரைப்படத்துறையாகும்.

ஆஸ்கர் விருது இவற்றிற்கு கிடைக்காவிட்டாலும் ஆர்எஸ்எஸ் விருது கிடைக்கும் அல்லவா?! பாரதமாதாகீ..ஜே!

Comment