No icon

நூற்றாண்டு விழா

வெற்றி கண்ட ‘வைக்கம்’ சமூக நீதி போராட்டம்

சமூக நீதி போராட்டம் மனு நீதிக்கு எதிரான போராட்டம் ஆகும். மனித சமுதாயத்திற்குள் ஏற்றத்தாழ்வு தோன்றிய நாள் முதல், சமத்துவம், சமூக நீதிக்காக போராட்டம் தொடர்கிறது. வர்ண தர்மதம் என்ற சாதியின் அடிப்படையில் சமூக கட்டமைப்பு தொடங்கிய நாள் முதல், சமூக நீதி போராட்டம் தொடர்கிறது. புத்தர் முதல் இன்று வரை தொடரும் சமூக நீதி போராட்ட வரலாற்றில், வைக்கம் போராட்டம் வெற்றிப் போராட்டமாக அமைந்தது.

சமூக நீதி

சமூக நீதி என்பது, எல்லாரும் எல்லாம் பெற்றிட வேண்டும் என்பதாகும் (Everything for Everybody). சமூக அநீதியான மனுச்சட்டத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் நீதிக்கட்சி நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒதுக்கீட்டு உரிமைகள் அளித்து, சமூக நீதியை முன்னெடுத்து, திராவிட கட்சிகள் சமூக நீதியை பரவலாக செயல்படுத்தின. ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தி, சமத்துவ, சமூகம் அமைப்பது சமூக நீதி. அண்மையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சமூக நீதியை நிலை நாட்டிட, தேசிய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் மாநாட்டினை தமிழகம் (தி.மு.) நடத்தியது. அனைத்து மாநில தலைவர்களும் அதில் கலந்துகொண்டு, தீண்டாமை புறக்கணிப்பு, அடிமைத்தனம் ஆகியவைகளை களைந்து, சமூக நீதியை நிலைநாட்ட உறுதி எடுத்தனர். வைக்கம் போராட்டம் வரலாற்றின் சமூக நீதிக்கு வழிகாட்டிய போராட்டம் ஆகும்.

நூற்றாண்டு விழா

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் உள்ளது. சமூக நீதி வரலாற்றில் வெற்றி பெற்ற வைக்கம், அறவழிப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை 2023 மார்ச் 30 ஆம் நாள், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கேரள முதலமைச்சர் இணைந்து, வைக்கத்தில் கொண்டாடினார்கள். அங்கு அமைந்துள்ள இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய வைக்கம் வீரர் .வெ.ரா பெரியார் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர். இச்சமூக நீதி விழாவில் அனைவரும் பங்கேற்று, சமத்துவ, சமுதாயம் படைத்திட, இந்த ஆண்டு முழுவதும் இவ்விழாவை நடத்துவது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமூக நீதிக்காக இச்சத்தியாகிரகப் போராட்டத்தை, ஈழவர் தலைவர் கே. மகாதேவன் 1924 ஆம் ஆண்டு, மார்ச் 30 இல், வைக்கத்தில் முன்னெடுத்தார். தீண்டாமை ஒழிப்புக்குழு உருவாக்கப்பட்டது. வெற்றிகரமாக முடிந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, 2023 ஆம் ஆண்டு, மார்ச் 30 இல் தொடங்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டு, மார்ச் 30 வரை கொண்டாடப்படும்.

வைக்கம் போராட்டம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் வீதி, கிராம வீதி என்றழைக்கப்படும் சாலைகளில் எல்லாரும் நடந்துவிட முடியாது. கடவுளின் தேசமான கேரளத்தில் தீண்டாமை சட்டமாக்கப்பட்டு இருந்தது. தீண்டப்படாதவர்களைப் பார்த்தால் தீட்டு என்ற நிலை இருந்தது. கோயில் தெருவில் நடப்பதற்கு தடை. வைக்கம் கோயில் அருகாமைத் தெருக்களில் ஈழவரும், புலையரும் நடப்பதற்கான மனித உரிமையைக் கோரி, 1924-1925 ஆம் ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட போராட்டமே வைக்கம் போராட்டம் ஆகும்.

கே.பி.கேசவ மேனன், கேளப்பன், .வெ.ரா. பெரியார், ஜார்ஜ் ஜோசப், .கே.பிள்ளை, டி.ஆர் கிருஷ்ணசாமி ஐயர், அய்யாமுத்து போன்றோர் இப்போராட்டத்தின் முக்கியத் தூண்கள். ஆலோசகர் காந்தி சத்தியாகிரகம் தொடங்கிய 10 ஆம் நாட்களில், தலைவர்கள் இன்றித் தவித்தபோது, சிறையில் இருந்த ஜார்ஜ் ஜோசப் போராட்டத்துக்குத் தலைமை வகிக்கப் பெரியாரை அழைத்தார். தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, போராட்டம் முடங்கிய நிலையில், பெரியார் வந்து போராட்டத்துக்கு உயிர் தந்தார்.

வைக்கம் வீரர் பெரியார்

பெரியாருடன் கோவை அய்யாமுத்து, நாகர்கோவில் எம்பெருமாள் நாயுடு, சிவதாணுப்பிள்ளை, காந்தி ராமன், அருப்புக்கோட்டை திருமேனிநாதன், கும்பகோணம் சக்கரவர்த்தி ஐயங்கார், கல்லிடைக்குறிச்சி சங்கர ஐயர் உள்பட, காங்கிரஸ் தமிழர் பலரும் வைக்கம் போராட்டத்தில் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தனர். இதுவரை கிடைத்துள்ள சான்றுகளின்படி, வைக்கத்தில் மற்றொருவரையும் விட அதிகமாக பெரியார் 141 நாள்கள் முகாமிட்டிருந்தார். அவற்றுள் 74 நாட்களைக் கொடுஞ்சிறையில் கழித்தார். பெரியாரின் மனைவி நாகம்மையார், தங்கை எஸ்.ஆர் கண்ணம்மாள் என்று, குடும்பமே வைக்கத்தில் போராடியது. பெரியார் சிறைப்பட்டிருந்த காலத்தில், நாகம்மையார் வீடு திரும்பிவிடவில்லை. ஒரு முறை நாகம்மையாரும்ரிமாண்ட்செய்யப்பட்டுப் பெரும் துன்பத்தை அனுபவித்தார். பெரியார் வைக்கத்தில் செய்த தியாகத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் இயற்றி வரவேற்றது. ‘வைக்கம் வீரர்என்று திரு.வி. அவரை அழைத்தார்.

இங்ஙனம் சட்டத்தை எதிர்த்து போராடிய போராட்டக்காரர்கள், நீதிமன்றத்தை நாடவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டோர் பெரும்பாலும் வழக்கறிஞர்கள். ஆலோசனை வழங்கியவர்பாரிஸ்டர்மகாத்மா காந்தி தொடர்ந்து வழி நடத்தினார்.

காந்தியின் ஈடுபாடு

சம உரிமைகளுக்கான தீர்மானம், ஈழவர் தலைவர் திரு. குமரன் என்பவரால் முன்மொழியப்பட்டது. சட்டமன்றத்தில் தீர்மானம் தோல்வியுற்றதால், சத்தியாகிரகிகளின் நம்பிக்கை குலைந்தது. கைது நடவடிக்கையை அரசு நிறுத்திவிட்டதால், பரபரப்பு குறைந்தது. எதிர் சக்திகளின் தாக்குதல்களும் மிகுதியாகின. இருப்பினும், சத்தியாகிரக போராட்டத்தை விடாமல் தொடர்ந்தனர். இனியும் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த அரசாங்கம், பிரச்சனையைத் தீர்த்துவைக்க முனைந்தது. அனைத்துத் தரப்பினரிடமும் பேச காந்தி வரவழைக்கப்பட்டார். சத்தியாகிரகிகள் (பெரியார் உள்படப் பலர்), மரபுவாதிகள் (நீலகண்டன், இந்தன் துரத்தி உள்பட பலர்), அரசாங்கம் (அரசு காவல் துறை ஆணையர்) தலைவர்கள், (நாராயண குரு, மகாகவி வள்ளத்தோள்) என அனைத்துத் தரப்பினரிடம் மகாத்மா காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். 1925 ஆம் ஆண்டு, மார்ச் 09 அன்று வைக்கம் வந்த காந்தி, மார்ச் 18 வரை சமாதான சந்திப்புகள் நடத்தினார். நாராயண குருவையும், மகாராணி யாரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்தார்.

வைக்கம் வெற்றி

வைக்கம் போராட்டத்தின் விளைவாக, அரசாங்கம் தீண்டாமை சட்டத்தை மாற்றியது. மூன்று தெருக்களில் தீண்டப்படாதவர்கள், ஈழவர், புலையர்களை நடப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நுழைவு திருவிதாங்கூர், அரசு 1925 ஆம் ஆண்டு, நவம்பர் 23 அன்று, கோயில் தெருக்களில் அனைவரும் நடக்கலாம் என்ற ஆணையை வெளியிட்டது. பெரியார் தலைமையில் மக்கள் வெற்றிவிழா கொண்டாடினர்.

வைக்கம் போராட்டத்தின் விளைவாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு, 1936 இல், சகலருக்கும் கோயில்களைத் திறந்துவிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்கோயில் நுழைவுப் பிரகடனம்வெளியிடப்பட்டது. இந்த வெற்றி, நாட்டில் பல இடங்களில் பட்டியலினத்தார் கோயில் நுழைவு போராட்டத்திற்கு வழியாக அமைந்தது. இருப்பினும், இன்னும் தீண்டாமை தொடர்கிறது. சமூக நீதி, தொடர் போராட்டம், சமத்துவ சமூகத்தை அமைக்க முடியும் என்பதை வைக்கம் போராட்டம் வெற்றி உறுதி செய்கிறது.

Comment