No icon

பற்றி எரிந்தது மணிப்பூர்!

பதற்றத்தில் வாழும் கிறிஸ்தவர்கள்!

வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் இந்திய-மியான்மர் எல்லையில் அமைந்துள்ளது. 22 ஆயிரத்து 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இம்மாநிலத்தின் மக்கள்தொகை 30 முதல் 35 இலட்சம் மட்டுமே. இங்கு 34 வகையான பழங்குடியினர் வாழ்கின்றனர். இவர்களின் பெரும்பான்மையினர் நாகா மற்றும் குக்கி ஆகிய பழங்குடி சமுதாயத்தினர்.

மைதேயி மக்கள்

பள்ளத்தாக்குகளில் வாழும் பழங்குடியினரல்லாத மைதேயி (Meitei) மக்கள் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர். இதில் மைதேயி சமூகத்தினர்தான் பெரும்பான்மையினர்; மதரீதியாக இவர்கள் இந்துக்கள் - வைணவர்கள். முன்னேறிய வகுப்பினர். இவர்கள் பேசும் மொழியானமெய்தெய்யிலோன் என்ற மொழி அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இணைக்கப்பட்டிருக்கிறது. இச்சமூகத்திலிருந்து குறைந்த அளவில் முஸ்லீம்களும் உள்ளனர். மணிப்பால் முதல்வர் பிரேன் சிங்கும் மைதேயி இனத்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேறியவர்களான மைதேயி இனத்தவர்கள், மணிப்பூர் அரசியலில் நீண்டகாலமாகக் கோலோச்சிவருபவர்கள். ஏனைய சமுதாயத்தினரான நாகர்களும் குக்கிகளும் மிஸோக்களும் கிறிஸ்தவர்களாக உள்ளனர். மைதேயி மக்கள் அனைவருமே சமவெளிப்பகுதிகளில் பள்ளத்தாக்குகளில்தான் வாழ்கின்றனர்; மைதேயி மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் பழங்குடிகள் இல்லை என்பதாலும் சமவெளிப்பகுதிகளில் வாழ்வதாலும் இவர்கள் குறைந்த நிலப்பரப்பை உடைமைகளாக கொண்டுள்ளனர். ஏனெனில், 22 ஆயிரத்து 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே சமவெளிப்பகுதியாக உள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள 90 சதவீத நிலங்கள் பழங்குடியினர்களிடம் உள்ளன. இங்குள்ள சட்டமன்றத்தில் 60பேரில் 40பேர் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 20 பேர் மட்டுமே நாகா மற்றும் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மணிப்பூரின் தலைநகரான இம்பால் மட்டுமே மிகப்பெரிய நகரம். இதில் மட்டுமே மைதேயி மக்கள் வாழ்ந்தாக வேண்டிய நிலை. ஆகையால், மலைப்பகுதிகளில் குடியேற இவர்களுக்கு அனுமதியில்லை. ஆனால், ஏனைய மலைவாழ் பழங்குடியினர் சமவெளிப்பகுதிகளில் குடியேற அனுமதியுண்டு. ஆகையால் குடியேற்றம், நில உரிமை உட்பட அனைத்திலும் மோதல் முற்றி வந்தது.

பட்டியலின பழங்குடி அந்தஸ்தும் போராட்டமும்

இந்த நிலையில்தான் மாநிலத்தின் பெரும்பான்மைச் சமூகமான மைதேயி மக்கள் பட்டியல் பழங்குடி அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து பெரிய அளவிலான சட்டவிரோத குடியேற்றத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். எனவே, மைதேயி சமூகத்தின் பட்டியலின பழங்குடியினர் கோரிக்கைக் குழு கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளாக எந்த அரசும் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முன்வராத காரணத்தால் பழங்குடி அந்தஸ்து கோரி உயர்நீதிமன்றத்திலும் வழக்குத்தொடுத்திருந்தனர்.

அண்மையில் பாஜக அரசு கொண்டுவந்த 10 சதவீதம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் மைதேயி சமூகத்தினர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் மைதேயி சமூகத்தினர் பழங்குடியினர் அல்ல என்பதால், எஸ்சி, ஓபிசி மற்றும் பிராமணர்களுக்கான சமூக அந்தஸ்தையே பெறமுடியும் என பழங்குடி சமூகத்தினர் கூறுகின்றனர். மேலும் மைதேயி

சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து அளித்தால் தங்களுக்கு வாழ இடம் இல்லாமல் போய்விடும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூகத்தினர் கூறுகின்றனர்.

மேலும் மைதேயி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கினால், மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள இச்சமூகத்தினர் மட்டுமே பலனடைவார்கள் என்பதால், சிறுபான்மை பழங்குடி மக்களாகிய தங்களுக்கு அரசு வேலை, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் என குக்கி உள்ளிட்ட பழங்குடி மக்கள் அஞ்சுகின்றனர். மேலும் மலைகளில் குடியேற இவர்களை அனுமதித்தால், தாங்கள் வாழ இடமில்லாத வகையில் இவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள மைதேயி மக்கள் ஆக்கிரமிப்பார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.

பாஜக அரசின் நடவடிக்கை

இத்தகைய சூழலில்தான், வனப்பகுதிகளில் அதிரடி நடவடிக்கைகளை பிரேன் சிங் அரசு எடுக்க ஆரம்பித்தது. லங்கோல் பாதுகாப்பு வனப்பகுதியில் இருக்கும் 26 கிராமங்களில் இரண்டு கிராமங்களிலுள்ள குடியிருப்புகளைக் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அரசு இடித்து காலிசெய்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி, சுராசந்த்பூரிலுள்ள கே.சொங்காஜ் என்ற கிராமத்தில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அது ஒரு புதிய குடியிருப்பு என்று அரசு சொல்கிறது. எனவே, இது போன்ற பல குடியிருப்புகள் அங்கீகாரமற்றவை என்று கூறி வனத்துறை நோட்டீஸ் அளித்தது. ஆனால், கடந்த 50-60 ஆண்டுகளாக இந்தக் குடியிருப்புகளில் பழங்குடி மக்கள் வசித்து வருவதாகக் கூறும் குக்கி பழங்குடியினத்தவர், தங்களுக்கு எதிராக பிரேன் சிங் அரசு குறிவைத்துச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.

அதையடுத்துத்தான், போராட்டத்தில் இறங்குவதென்று பழங்குடியினர் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். கடந்த மார்ச் 10-ம் தேதி அனைத்து மலை மாவட்டங்களிலும் அவர்கள் பேரணி நடத்தினர்.

உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மணிப்பால் உயர்நீதிமன்றம்மைதேயி இனத்தை, பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பது குறித்து மாநில அரசு விரைவாகப் பரிசீலனை செய்ய வேண்டும். மாநில அரசு அனுப்பும் பரிந்துரை கிடைத்த பிறகு, அது தொடர்பான முடிவை மத்திய பழங்குடியின அமைச்சகம் எடுக்கும்என்று உயர் நீதிமன்றம் கூறியது. மேலும் அந்த உத்தரவில், ‘மைதேயிகளைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற பரிந்துரையை, மைதேயிகள் பெரும்பான்மையாக இருக்கும் அரசால் அனுப்ப முடியவில்லையே..’ என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

மைதேயி சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நிலையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்படியும் கேட்டுக்கொண்டது. இந்தப் பரிந்துரைதான் தான் தவறாகப் பரப்பப்பட்டு கலவரத்திற்கு காரணமானது.

வெடித்தது கலவரம்

இதனை எதிர்த்து, இம்பாலிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தின் டோர்பாங்கில் மே 3 ஆம் தேதி அனைத்துப் பழங்குடியின மாணவர் சங்கம் பேரணி ஏற்பாடு செய்து, ஆதிவாசி ஏக்தா மார்ச் என்று நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று அமைதியாக அகிம்சை முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். சுராசந்த்பூர் மாவட்டத்தைத் தவிர, சேனாபதி, உக்ருல், காங்போக்பி, தமெங்லாங், சண்டேல் மற்றும் தெங்னௌபால் உள்ளிட்ட அனைத்து மலைப்பகுதிகளிலும் இத்தகைய கூட்டங்களும் அணிவகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதனைப் பொறுத்துக்கொள்ளாத மைதேயி சமூகத்தினர் கற்களை வீசி ஆங்காங்கே வன்முறையை விதைத்தனர். பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோருக்கான மோதலாக உருமாறியது. விஷ்னுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான வன்முறைகள் நிகழ்ந்துள்ளன, தலைநகர் இம்பாலில் அதற்கடுத்த நாள் வன்முறை வெடித்தது.

மாநிலத்தில் வன்முறை வெடித்த பிறகு, சுமார் 35,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் 20,000-க்கும் மேற்பட்டோர் அவரவர் வீடுகளுக்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர் என்று மாநில அரசு தெரிவித்திருக்கிறது. கலவரத்தின்போது மிசோரம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் பற்றிய தகவல்கள் இல்லை. பிற மாநிலங்களைச் சேர்ந்த பலரை, அந்தந்த மாநில அரசுகள் விமானங்கள் மூலம் மணிப்பூரிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டன.

கலவரம் தொடங்கியவுடனே மாநிலம் முழுவதும் இணையசேவை துண்டிக்கப்பட்டது. இன்னும் இணையசேவை வழங்கப்படவில்லை. இன்னும் சில நாள்களுக்கும் இணையதள சேவை முடக்கம் நீடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சகஜநிலை திரும்பாத காரணத்தால், மக்கள் மத்தியில் அச்ச உணர்வு மேலோங்கியிருப்பதாகவும், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற சூழல் நிலவுவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் பிரேன் சிங் ஏற்கனவே ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா அமர்வு விசாரித்து, சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. அதில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், பொருள் சேதங்களும் மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக நீதிபதிகள் கூறினர்.

இந்த வன்முறையில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 231 பேர் காயமடைந்திருப்பதாகவும், 1,700 வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் முதல்வர் பிரேன் சிங் கூறியிருக்கிறார். ஆனால், ஏராளமான வழிபாட்டுத்தலங்கள் எரிக்கப்பட்டதாகவும், சேதப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்கள் என்கிற நிலையில், ஏராளமான தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. அது பற்றிய விவரங்களை முதல்வர் தெரிவிக்கவில்லை. கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ ஆலயங்களும் குறிவைத்து தாக்கப்பட்டன. பைபிள்கள் எரிக்கப்பட்டன. கிறிஸ்தவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. கிறிஸ்தவப் பள்ளிகள் சூறையாடப்பட்டன. பள்ளிப் பேருந்துகள் கொளுத்தப்பட்டன. வகுப்பறைகள் எரிக்கப்பட்டனஎங்கும் போர்க்கோலமே காணப்பட்டது.

தற்போது மணிப்பூரில் பல இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கிறது. மோதல்களும் வன்முறைச் சம்பவங்களும் முடிவுக்கு வந்திருந்தாலும், அங்கு இன்னும் சகஜநிலை திரும்பவில்லை. இந்த நிலையில், மணிப்பூரில் அமைதியையும், சகஜநிலையையும் விரைவில் கொண்டுவருவோம் என்று முதல்வர் பிரேன் சிங் உறுதியளித்திருக்கிறார். பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்காகவும் கலவரத்தால் கொல்லப்பட்டுள்ள மக்களுக்காகவும் செபிப்போம்.

Comment