No icon

தலையங்கம்

திறக்கப்பட்ட அன்பின் கடைகள்

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி மதச்சார்பற்ற கூட்டணிக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. அதிகாரப் பசியில் மோடி தலைமையிலான மத்திய அரசும், நட்டா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியும் செய்த அனைத்து பகீரத பிரயத்தனங்களும் தோல்வியில் முடிந்தன என்பதே பெரும் வெற்றிதான். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தல் தேசிய ஜனநாயக முன்னணியில் இல்லாத அனைத்து கட்சிகளுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்புகள் மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் காங்கிரசுக்கும் அவநம்பிக்கையின் அடையாளமாக அமைந்த போதிலும் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கொள்ளி வைத்துள்ளது.

மதவெறியில் வேரூன்றி, தேவைப்படும்போது தேசப்பற்றைக் காட்டி பயமுறுத்தி, எவற்றிற்கும் வாக்காளர்கள் மசியாதபோது 92 முறை திட்டுனாங்க என்று பரிதாபத்தை ஏற்படுத்தி, சாதியத்தலைவர்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப வளைத்துப் போட்டு, மடாதிபதிகளை பிரச்சாரத்திற்கு புகைப்பட அடையாளமாக்கி, சிறுபான்மையினரை எல்லா நிலைகளிலும் விளிம்பு நிலையில் நிறுத்திவைத்து, ஒரு மாநகராட்சி மேயரைப் போல பிரதமரை பிரச்சாரத்திற்கும் தெருக்கூத்துக்கும் பயன்படுத்தி, மத்திய அமைச்சர்கள் சிலரை வேண்டுமென்றே பொறுப்பாளராக்கி, அண்ணாமலை போன்ற அண்டைமாநிலத் தலைவர்களை இணைப் பொறுப்பாளராக்கி.. பாஜக செய்த அனைத்து ஜனநாயக விரோத முயற்சிகள் அனைத்திற்கும் பாஜகவின் முகத்திற்கும் கர்நாடக வாக்காளர்கள் கரியைப் பூசியுள்ளனர்.

கர்நாடகா தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே மோடி ஒன்பது முறைக்கும் மேல் மோடி எடுத்த படையெடுப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் என்று வந்து விட்டாலே 56 இஞ்ச மார்பு 60 இஞ்சை எட்டிவிடும்போல.. மாநகராட்சித் தேர்தலைக் கூட பிரதமர் பிரச்சாரத்திற்கு விட்டுவைப்பதில்லை. இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா என்று அடுத்தடுத்து காங்கிரஸ் வென்றுள்ள சட்டசபைத் தேர்தல்கள் மதச்சார்பின்மைக்கு நம்பிக்கையை விதைத்துள்ளது. ‘தான் மட்டுமே யோக்கியன், மற்ற எல்லாருமே அயோக்கியர்கள் என்று வாழ்வாங்கு வாழ்ந்த பாஜக மீதே 40 சதவீத கமிஷன், PayCM என்று QR Code-ல் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் முகம் என்று பாஜகவின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தது.

காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாரும், முன்னாள்(இன்னாள்) முதல்வர் சித்தராமையா இருவரின் கூட்டியக்க முயற்சியும், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தந்த எழுச்சியும், காங்கிரஸ் கட்சியின் இலவசங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கையும், மதமாற்றத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சிறுபான்மையினர், ஹிஜாப், ஹலால் மற்றும் இடஒதுக்கீட்டு பறிப்பால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சிறுபான்மையினர், லிங்காயத் மாடாதிபதிகள் தந்த சமூக ரீதியான ஆதரவு என்று அனைத்தும் காலத்தே கைக்கூட காங்கிரசின் கை வெற்றிச்சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

உள்ளூர் தலைவர்களான எடியூரப்பா, ஜெகதீஷ் டைட்லர் உள்ளிட்ட தலைவர்களைப் புறக்கணித்து, தேசிய முகங்களை மட்டுமே முன்னிறுத்தி பாஜகவின் ஒரே இந்தியா பிரச்சாரம் புறக்கணிக்கப்பட்டது. கேரளா ஸ்டோரிக்கு பிரதமரே செய்த பட புரமோஷனும் எடுபடவில்லை. ஜெய் பஜ்ரங் பலி என்ற மதவெறியும் எடுபடவில்லை. எல்லா நிலைகளிலும் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் வேர்களுக்கு நீர் பாய்ச்சப்பட்டுள்ளது. காங்கிரஸ் வென்றது என்பதைவிட மதச்சார்பின்மையும் ஜனநாயகமும் வென்றுள்ளது என்பதே சரி. கொல்லைப்புறத்தின் வழியாக கோவா முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை ஆட்சிக்கட்டிலின் இன்பத்தை துய்க்கும் பதவி மோகம் பிடித்த பாஜக இனியாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கோஷ்டிப் பூசலுக்குப் பேர் போன காங்கிரஸ் இனியாவது தங்கள் குழு மனப்பான்மையை விட்டு விலகி நிற்க வேண்டும். ‘கை ஒன்றுதான்; விரல்கள் ஐந்துஎன்று பிரிவினை வியாக்கியானங்கள் இனியும் கூடாது; தேவையுமில்லை. ஒற்றுமை யாத்திரை என்று ஜோடோ யாத்திரையை தேசத்தில் மேற்கொள்வதைவிட கட்சிக்குள் மேற்கொள்ள வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் உணர வேண்டும். வெறிபிடித்த ஓநாயைப் போல வேட்டையாட பாஜக காத்திருக்கிறது. 2018 இல் மத்தியப் பிரதேசத்தில் ஏழே மாதங்களில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியைப் பறித்து, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுத்தது நினைவிருக்கலாம்.

சட்டசபைத் தேர்தல்களில் பாஜக தோற்றாலும் மக்களவைத் தேர்தலில் அசுரப் பலத்துடன் வெற்றிபெற்று வருகிறது என்பது கடந்த கால வரலாறு. ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆட்சியை இழந்தாலும் 90 சதவீத எம்பி தொகுதிகளை பாஜக வென்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சட்டமன்றத் தேர்தல்களில் பெறும் வாக்குவிகிதத்தைவிட நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெறும் வாக்கு விகிதத்திற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

மாநிலத் தேர்தல்களில் வெல்வதை விட மக்களவைத் தேர்தலில் வெல்வதுதான் காலத்தின்தேவை. ராகுல்காந்தியும் ப்ரியங்கா காந்தியும் கார்கேயின் கைகளை வலிமைப்படுத்தி காங்கிரசுக்கு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். விட்டுக்கொடுத்துப் போக வேண்டிய மாநிலங்களில் விட்டுக்கொடுத்து, அணி சேர வேண்டிய மாநிலங்களில் அணி சேர்ந்து, பிரிந்து சென்ற காங்கிரஸ் தலைவர்களை அரவணைத்து கட்சிக்கு புது இரத்தம் பாய்ச்ச வேண்டும். மதச்சார்பின்மைக்கு துணை நிற்கும் சிவசேனா, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சி, திமுக, மார்க்சிய கம்யூனிஸ்ட், பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஜனதா தளம், பிரிந்த சென்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து ஜனநாயகத்தின் நிலைத்த தன்மைக்கு அச்சாரமிடவேண்டும்.

பசு வளைய மாநிலங்களில், இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவின் ஆதிக்கத்தை களைந்திட, வட்டார காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும். காங்கிரசும் இந்துத்துவத்தில் வேரூன்றியிருக்கிறது என்பதை சிறுபான்மையினர் அறிந்திருக்கின்றனர் என்பதை அக்கட்சி உணரவேண்டும். காங்கிரஸ் ஜெய் பஜ்ரங்பலி என்று மேற்கொண்ட அனுமன் வழிபாடு எல்லாருக்கும் தெரியும். எச்சரிக்கை. பெரும்போருக்கு படையை அணிதிரட்ட வேண்டிய காலமிது. காங்கிரசின் கரங்களை வலிமைப்படுத்த அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் அணிதிரளுகின்றன.

கர்நாடக அமைச்சரவை பங்கேற்கும் நிகழ்வு இதற்கு அச்சாரமிட்டுள்ளது. நம்பிக்கை அனைவருக்குள்ளும் பூத்திருக்கிறது. இந்திய ஜனநாயக வானில் நம்பிக்கைநட்சத்திரம் தோன்றியிருக்கிறது. திராவிட நிலபரப்பிலிருந்து மட்டுமல்ல, திராவிடமல்லாத நிலபரப்பிலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டிய கட்சி பாஜக என்பதை உணர்ந்து, மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தன்னை நோக்கி வைக்கப்படுகின்ற கேமராக்களுக்கு மட்டுமே போஸ் கொடுத்து, தான் நேசிக்கும் மன்கிபாத் மைக்குகளுக்கும் மட்டுமே உரையாற்றும் மோடி ஓர் உள்முக ஜோடோ யாத்திரை மேற்கொள்ள வேண்டும். ரோடு ஷோகளில் கவனம் ஈர்த்த அந்த அர்பன் சங்கிகளின் ஆதரவு மட்டுமே தனக்குப் போதாது என்பதை உணர்ந்து, பாஜக ஆளாத மாநிலங்களுக்கும்டபுள் இன்ஜின்தேவை என்று  ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

கர்நாடகாவில் பாஜகவின் வீழ்ச்சி, காங்கிரசின் தனித்துவமிக்க எழுச்சி இந்தியாவின் ஜனநாயகத்திற்கு வெளிச்சம் பாய்ச்சும் என்று நம்புவோமாக. சர்வாதிகாரம் ஒருபோதும் நீண்டகாலம் ஆட்சி செலுத்தாது. ஜனநாயகம் மலரும். மலர்ந்தே தீரும். மோடி ஜூம்லாக்களுக்கு இனியும் எவரும் விலைப் போகத் தயாரில்லை. சௌக்கிதாரின் யோக்கியதையை புல்வாமா நாடகம் எங்களுக்கு உணர்த்திவிட்டது. கர்நாடகத்தில் உதித்துள்ள ஜனநாயகச் சூரியன் இந்தியாவெங்கும் பிரகாசிக்கட்டும். வெறுப்பின் சந்தைகள் எப்போதும் மூடப்பட்டே கிடக்கட்டும். அன்பின் கடைகள் எங்கும் எப்போதும் திறக்கப்படட்டும். கூட்டியக்கப் பயணம் திருஅவைக்கும் தேவை, தேசத்திற்கும் தேவை.

Comment