No icon

கர்நாடகத் தேர்தல் தொகுப்பும் பகுப்பும்

ஒன்றியத்தில் மாற்றம் சாத்தியமே!

அனைவரும் உடன்பிறந்தோர்திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல், “உரிமைகளுக்கான மதிப்பே ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முதன்மையான நிபந்தனை. ஒருவரின் மனித மாண்பு மதிக்கப்பட்டு அவரின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, உத்தரவாதம் அளிக்கப்பட்டு, படைப்பாற்றலும், சார்புநிலை செழித்து வளர்கின்ற பொழுதுதான் மனித ஆளுமையின் படைப்பாற்றல், பொது நன்மைக்கான செயல்களில் வெளிக்கொணரப்படுகின்றது” (எண்:22). அவ்வகையில்அரசியல் என்பது உன்னத அமைப்பாகவும், பொதுநன்மையை நாடுகின்ற அன்பின் உயர்ந்த வடிவமாகவும் இருக்க வேண்டும்” (எண்:180). இதுதான் இன்று மக்கள் நல்ல அரசிடமிருந்து எதிர்பார்ப்பது.

224 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடந்த கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளிலும் இதனையே மக்கள் பிரதிபலித்திருக்கின்றனர். ஆளூர் ஷா நவாஸ் டுவீட்டர் பதிவில், “ஆரவாரம் இல்லை; அன்பு இருந்தது! வெறுப்பு இல்லை; வாஞ்சை இருந்தது! நெருப்பு இல்லை; நேயம் இருந்தது! நீலிக்கண்ணீர் இல்லை; நல்லிணக்கம் இருந்தது! நடை உடை சொல் செயலில் நம்பிக்கை விதைத்தாய்...கர்நாடகா ஏற்றது காத்திருக்கிறது நாடு!” என்று குறிப்பிட்டிருக்கிறார். மோடி நேரடியாகப் பங்கேற்று பிரச்சாரம் செய்த 20 பேரணிகள், அமித்ஷா பங்கேற்ற 30 பேரணிகள், பா.. தலைவர்களின் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட 30,000 பொதுக்கூட்டங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு கர்நாடக மக்கள் சனநாயக சக்தியை வெற்றி பெற வைத்துள்ளனர்.

சனநாயகத்துக்கான வெற்றிக்கு தலைவர்கள் பாராட்டு

தெற்கு பா...வை நிராகரித்துவிட்டது (The South Rejects BJP), “பா.. அல்லாத தென்னிந்தியா (BJP mukth southindia) போன்ற முழக்கங்கள் இந்நாட்களில் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 135 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மையை காங்கிரஸ் பெற்றிருக்கும் இச்சூழலில், இவ்வெற்றியை ஒரு கட்சியின் வெற்றி என்பதைத் தாண்டி சனநாயக உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தின்; முதல் படிக்கல்லாகவே பலரும் பார்க்கின்றனர். எனவேதான் இதுகுறித்து வேறுபட்ட கட்சி தலைவர்களும்; தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா..கவை கட்டாயம் வீழ்த்த வேண்டும் என்கிற மையப்புள்ளியிலும் சுழன்று வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் குறிப்பிடுகையில், “பா...வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி மக்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா... முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்!” என்று சூளுரைத்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் பேசுகையில், “கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் போக்கு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சூழலை பிரதிபலிக்கின்றன. பா..-வை தோற்கடிப்பது ஒன்றே எங்களின் நோக்கமாகும். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான், தில்லி, ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தற்போது பா.. ஆட்சியில் இல்லை. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகத்தில் வெற்றி பெற உதவி உள்ளது. கர்நாடகத்தில் பா.. முன்வைத்தமோடி ஹை தோ மம்கின் ஹைஅதாவதுமோடி இருந்தால் அனைத்தும் சாத்தியம்என்ற முழக்கத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். ஒரு தனி நபர் அனைத்து அதிகாரங்களையும் வைத்திருப்பதை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகி உள்ளதுஎன்கிறார். “கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்து அன்புமிக்க அரசியலை ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கர்நாடக  சட்டப்பேரவைத்  தேர்தலையொட்டி பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி கடுமையாக சாடினார். மேலும், கடவுள் அனுமன் கோஷமிட்டு பிரச்சாரம் செய்து பா..-வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் விமர்சித்தார். இவைதான் கர்நாடகத்தில் பா..-வின் வீழ்ச்சிக்குக் காரணம். அனுமனின் சூலாயுதம் பா..-வின் மேலேயே விழுந்துள்ளது. இது பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தோல்வி. கர்நாடகத்தில் இப்போது என்ன நடந்துள்ளதோ, அது 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நடக்கும்என்று சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் .சிதம்பரம் குறிப்பிடுகையில், “மக்கள் பிரச்சனையை திசைத்திருப்பும் முயற்சிகள் இனி பலிக்காது. ஒரு மாநிலத்தின் பேரவைத் தேர்தல் என்பதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட இத்தேர்தல் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை நிலைநிறுத்தியதோடு மேலாதிக்க கொள்கைகள், பாகுபாடுகளால் நாட்டுக்கு ஆன சேதங்களைத் தடுத்துள்ளது. இரட்டை இயந்திர அரசு என கூறிக்கொண்ட பா..கவின் பணபலம் மற்றும் ஆள்பலத்தை கர்நாடக மக்கள் எதிர்த்து நின்றுள்ளனர்என்கிறார். “பா..-வின் எதிர்மறையான, வகுப்புவாத, ஊழல் கறைபடிந்த, முதலாளிகளுக்கான, பெண்கள், இளைஞர்களுக்கு எதிரான, சமூகத்தைப் பிளவுபடுத்தும் மற்றும் தனிமனித துதிபாடும் அரசியலின் முடிவுக்கான தொடக்கமாக கர்நாடகத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் மற்றும் பகைமைக்கு எதிரான - நேர்மறை இந்தியாவுக்கான புதிய தொடக்கம் இதுஎன்று உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் அவர்களின் கவனத்தை திசைத் திருப்பும் அரசியல் முயற்சிகள் இனி பலனளிக்காது என்பதை கர்நாடகத் தேர்தல் வெற்றி காட்டுகிறது. இமாசலப் பிரதேசம், கர்நாடகாவில் இதை பார்த்தோம். தங்களின் பிரச்சனைகளை விவாதித்து அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கூறியுள்ளார். “ஏழைகளுக்கான நலத்திட்டங்களும், மதச்சார்பற்ற நிலைப்பாடும் கர்நாடகத்தில் காங்கிரஸ்க்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் உரிய பாடங்களைக் கற்று, தேசிய அரசியலிலும் காங்கிரஸ் முறையாக கவனம் செலுத்த வேண்டும். மோடி வெல்ல முடியாதவர் அல்ல. அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்தால் அடுத்த ஆண்டில் பா..- வின் ஆட்சிக்கு முடிவெழுதலாம்என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி பினோய் விஸ்வம் தெரிவித்துள்ளார். “மோசமான மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை நிராகரித்தமைக்காக கர்நாடக மக்களுக்கு நன்றி. முதலீடுகள் ஈர்ப்பு மற்றும் தேச நலனுக்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கத்தில் ஹைதராபாத்தும், பெங்களூருவும் ஆரோக்கியமாக போட்டியிடும். கர்நாடகத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் அரசுக்கு வாழ்த்துகள்என்று பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், தெலுங்கானா அமைச்சருமான கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் இருக்கும் போது பா..-வினர் தங்களின் வேலையை செய்ய மாட்டார்கள். ஆனால் பிரச்சாரத்தின்போது குப்பையான பிரச்சனைகளை கிளறி வெற்றி பெற முயற்சிப்பார்கள். இனியும் இதுபோன்ற தந்திரங்கள் பலிக்காது என்பதை பா.. உணர வேண்டும்என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் அளித்த பேட்டியில், “இது தென்னிந்தியாவின் கதை. அதாவது, பா..-வின் பிடியில் இருந்து தென்னிந்தியா விடுபட்டு விட்டது. பா..-வின் வீழ்ச்சி தென்னிந்தியாவில் இருந்து தொடங்கிவிட்டது. தெலுங்கானாவில் பா..-வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைநிமிர கிடைத்த வெற்றி

காங்கிரஸ் கட்சி தங்களுக்குள்ளே உள்ள முரண்பாடுகளை சமாளித்து, தீவிரப்பிரச்சாரம் செய்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது சாதனைதான். இதற்கு தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே துவங்கி சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே. சிவகுமார் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரையும் பாராட்ட வேண்டும். ராகுலின் பாரத் ஜோடா யாத்திரையின் தாக்கமும் இல்லாமலில்லை. அதுபோல காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளரான சுனிலின் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களும் இந்த வெற்றியை தந்திருக்கின்றன.

விகிதாச்சார அடிப்படையில் காங்கிரஸ் சுமார் 43 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.இந்திய தேர்தல் போக்குகளை வைத்துப் பார்த்தால், இது குறிப்பிடத்தக்க விழுக்காடு. பா... சுமார் 36 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கிறது. பா..கவின் வாக்கு விழுக்காடு அதிகம் குறையவில்லை என்றாலும் இரு கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருக்கிறது. நாடெங்கும் தற்போது காங்கிரசின் நிலையை ஒப்பிடுகையில் 7 விழுக்காடு முன்னணி என்பது காங்கிரசிற்கு பெரிய வெற்றியே! ஆட்சியமைக்கத் தேவையான 113 இடங்களைவிட 22 இடங்கள் கூடுதலாகப் பெற்று 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களில் வென்ற பா.. அதைத் தக்கவைத்துக் கொள்ளக்கூட முடியாமல் 66 தொகுதிகளுக்கு சரிந்திருக்கிறது. பா.. தோற்கும்போதெல்லாம், “ஆபரேஷன் கமல்”, ‘ஆபரேஷன் லோட்டஸ்போன்ற நடவடிக்கைகள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது குறித்துப் பேசுவார்கள். இப்போது அந்த வாய்ப்பு இல்லாமல் போயிற்று. கர்நாடக காங்கிரஸ் வெற்றிப் படிப்பினைகள் இனிவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான மூலக்கூறுகளாக மதவாதத்திற்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் என்றே நம்பலாம்.

மோடியும் சகாக்களும் - எச்சரிக்கிறோம்

அனுதாபங்கள் வேண்டாம் ஜி : வழக்கத்திற்கு மாறாக இம்முறை பா.. ஆட்சிக்கு எதிரான அலையை காங்கிரஸ் சாதுரியமாக எதிர்கொண்டது. பல மாதங்களுக்கு முன்பே 40 விழுக்காடுகமிஷன் அரசுஎன்று பா.. மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது காங்கிரஸ். அதற்கு பதிலடி கொடுக்க இயலாத பா..அவதூறு - அனுதாபம்என மடைமாற்றி வாக்கு சேகரிக்கத் தொடங்கியது. ஏப்ரல் 29 ஆம் தேதி தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய மோடி, காங்கிரஸ் தன் மீது சுமத்தியவிஷப்பாம்பு” (மல்லிகார்ஜுன் கார்கே சொன்னது), “தகுதியற்ற மகன்” (பிரியங்கா காந்தி சொன்னது) குற்றச்சாட்டுகளை தனது தேர்தல் பிரசாரத்தின் மையம் ஆக்கினார். காங்கிரஸ் கட்சி இதுவரை “91” முறை தன்னை ஏசியுள்ளதாக கணக்குப்பாடம் எடுத்து அனுதாபம் தேடினார். கூடவே, “என்னை பாம்பு என்று சொன்னார்கள், ஆனால் பாம்பு, சிவபெருமானின் கழுத்தில் உள்ள ஆபரணம். இந்த நாட்டு மக்களையும், கர்நாடக மக்களையும் நான் சிவனாகக் கருதுகிறேன். எனவே அந்த அறிக்கையை வரவேற்கிறேன்என்று சப்பைக்கட்டு கட்டினார். ஆனால் ஜி-யின் அனுதாபம் தேடும் முயற்சி பலிக்கவில்லையே!

மதவெறி எடுபடாது ஜி : வாழ்வாதாரம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளால் தற்போது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமது மதம் சார்ந்த பிரசார திட்டத்தால் அதிக பலன் இல்லை என்று பா.. மேலிடம் நன்கு உணர்ந்திருந்தாலும் வேறு வழியில்லாமல் மதம்சார் கருத்தியல்களை சீண்டி பார்த்தது. “சாலை, குடிநீர் வடிகால் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசத் தேவையில்லை. இந்து - முஸ்லீம் பிரச்சனை குறித்தும், இந்து தர்மம் குறித்தும் பேசி தேர்தலைச் சந்திப்போம். ஒரு முஸ்லீம் வாக்குகூட எங்களுக்குத் தேவையில்லைஎன்று வெளிப்படையாகவே அறிவித்தார் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கர்நாடகத்தில் 12.92ரூ முஸ்லீம்கள், 1.87ரூ கிறிஸ்தவர்கள். 224 தொகுதிகளில் ஒன்றில்கூட ஒரு கிறித்தவ வேட்பாளரையோ இசுலாமிய வேட்பாளரையோ பா.. நிறுத்தவே இல்லை.

மதச்சிறுபான்மையினருக்கு எதிராக அவர்களை அதட்டி மிரட்டி காhரியங்களைச் செய்ய கட்டாயப்படுத்தும் அரசியல் அமைப்புதான்பஜ்ரங் தளம்’. இதுபோன்ற அமைப்புகளின் வன்செயல்களுக்கு தடை விதிக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியதைச் சுட்டிக்காட்டிஇது பகவான் அனுமாருக்கு செய்யப்பட்ட அவமதிப்புஎன்று மேடைக்கு மேடை முழங்கினார் மோடி. இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘வாக்களிக்கச் செல்லும்போது ஜெய் பஜ்ரங் பலி என்று முழங்கியே வாக்களியுங்கள்என்று அறிவுரையும் கூறினார். ஒரு நாட்டின் பிரதமர் பேச வேண்டிய பேச்சா இது! இதனை கண்டுகொள்ளவும், கண்டிக்கவுமில்லை தேர்தல் ஆணையம். உத்தரப்பிரதேசத்தில் ராமனைப் போல, கர்நாடகத்தில் (பஜ்ரங்பலி) ஆஞ்சநேயரை முன்னிறுத்தும் இந்த முழக்கம் எடுபடும் என்று கருதினார்கள். ஆனால், கர்நாடக மக்களோதாங்கள் வணங்கும் ஆஞ்சநேயர் வேறு, ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் வேறுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.

தி கேரளா ஸ்டோரிபடத்தை எல்லாரும் பாருங்கள் என்றார் மோடி. “கர்நாடகத்தின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காதுஎன்று சோனியா காந்தி பேசியதைத் திரித்து, “கர்நாடகம் என்ற ஒரு மாநிலத்திற்கு இறையாண்மை என்பதன் மூலம் காங்கிரஸ் பிரிவினைவாதம் பேசுகிறதுஎன்றனர். ஊழல் செய்த முதல்வரைப் பற்றிப் பேசியது (லிங்காயத்து), அவர் சார்ந்த சமூகத்துக்கு எதிரானது என்று திசை திருப்பினர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகத்தில் கலவரங்கள்தான் நடக்கும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் பிரச்சாரம் செய்தார். இங்ஙனம் திரித்தும் மழித்தும் பழித்தும் பேசிய எந்த பேச்சுக்களும் திராவிட மண்ணில் எடுபடவில்லை.

சாதியப் பிரிவினை இனியும் வேகாது ஜி : முஸ்லீம்களின் நான்கு விழுக்காடு இடஒதுக்கீட்டை ரத்துசெய்துவிட்டு, அதை லிங்காயத்துகளுக்கும் ஒக்கலிகர்களுக்கும் தலா இரண்டு விழுக்காடாகப் பிரித்து வழங்கியது. எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 15-லிருந்து 17 விழுக்காடாகவும், எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 3-லிருந்து 7 விழுக்காடாகவும் உயர்த்தியது போன்ற சாதிரீதியான ஈர்ப்பும் பெரிதாக கைக்கொடுக்கும் என்று பா.. நம்பியது லிங்காயத்துகள் மத்தியில் ஓரளவு வாக்குவங்கியைப் பெற்றாலும், ஒக்கலிகர்கள் மத்தியிலோ, தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள் மத்தியிலோ பா.. போட்ட கணக்குகள் எடுபடவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் லிங்காயத்துக்களுக்கும் ஒக்கலிகர்களுக்கும் வழங்கப்பட்ட 2 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பறித்து மீண்டும் இசுலமியர்களுக்கே வழங்கிவிடுவார்கள் என்றும், பி.எஃப். அமைப்பை மீண்டும் கொண்டு வந்து விடுவார்கள் என்றும் பிரச்சாரம் செய்தனர்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் வலுவாக உள்ள கடலோர கர்நாடகா மாவட்டங்களைத் தவிர வேறெங்கும் இது எடுபடவில்லை. ஒக்கலிகர்கள் அதிகம் வசிக்கும் பழைய மைசூர் பகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றிபெற்றனர். மும்பை கர்நாடகா மாவட்டங்களில், லிங்காயத்துகளின் ஒருபகுதி வாக்குகள் காங்கிரஸுக்கு சென்றன. பா...வின் கோட்டையாகக் கருதப்படும் குடகு மாவட்டங்களில் ஏறத்தாழ அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பழைய மைசூர் பகுதிகளில் ஒக்கலிகர்களின் ஓட்டுகள் காங்கிரஸ்க்கு விழுந்ததற்கு காரணம், ஒக்கலிகர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள். குஜராத்தின் அமுல் நிறுவனத்தை கர்நாடகத்தில் திணிப்பதன் மூலம் கர்நாடக பால் கூட்டுறவு நிறுவனமான நந்தினியை பா.. அழிக்கிறது என்ற காங்கிரஸின் பிரச்சாரம் ஒக்கலிகர்களின் காங்கிரஸ் ஆதரவுக்கு அடித்தளமாய் அமைந்தது.

பா..-விற்கு தப்பிப் பிழைத்தது கடலோரக் கர்நாடகா மட்டும்தான். பெரும்பாலான கிராமப்புறப் பகுதிகளில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இது எதைக் காட்டுகிறதெனில் மதவெறியைத் தாண்டி வர்க்கப் பிரச்சனைகள்தான் தேர்தலில் அதிகம் எதிரொலித்துள்ளன என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். கடலோரக் கர்நாடகத்தில்கூட முஸ்லீம்களின் பொருளாதார வளர்ச்சியை, மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கு எதிராகக் காட்டி நீண்டகாலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் செயல்பட்டு வந்ததன் விளைவாக பா.. வென்றிருக்கிறது. அதேநேரம், ஹிஜாப் தடை, ஹலால் ஜிகாத், முஸ்லீம்களுக்கு இந்து கோயில்களைச் சுற்றி கடைவைக்க அனுமதி மறுப்பு போன்ற விவகாரங்களில் ஏழை - எளிய மக்களிடம் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிரான உணர்வே பிரதிபலித்துள்ளது. இருப்பினும் நகர்ப்புறங்களில் பா...விற்கு நல்ல வரவேற்பு. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், 2018 ஆம் ஆண்டைவிட பெங்களூரு பகுதியில் பா.. வெற்றியையும், அதிக தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.

நீங்கள் வீணடிப்பது மக்களின் வரிப்பணம் ஜி : பிரதமராக பதவியேற்றதில் இருந்து மோடி அதிக நேரம் செலவழித்த மாநிலம் கர்நாடகா என்கின்றன தகவல்கள். கடந்தாண்டு மழைவெள்ளத்தால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டபோதும், அவர்கள் தங்களது உடமைகளை இழந்தபோதும் கர்நாடகத்தின் பக்கம் திரும்பிக்கூட பார்க்காத மோடி கடந்த 2023 ஆண்டு ஜனவரி 12 முதல் தேர்தலுக்கு முன்புவரை எட்டு முறை கர்நாடகாவிற்கு பயணம் செய்தார். அவையனைத்தும் அவரது தேர்தல் பரப்புரையாகவே அமைந்திருந்தன. அவரது வருகைக்கான செலவுகளோ பலகோடி. சில உதாரணங்கள் இதோ: மோடியின் நகரப் பயணத்திற்காக பெங்களூரு சிவில் அமைப்பு ரூ. 24 கோடி செலவிட்டது; யோகா தின வருகைக்காக கர்நாடகா குடிமை அமைப்புகள்  ரூ. 56 கோடி செலவிட்டது; கலபுர்கி பயணத்தில் சில மணிநேரங்களுக்கு 11.18  கோடி செலவிடப்பட்டது; பெலகாவியில் மோடியின் நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட ரூ.14 கோடி செலவு; பிப்ரவரி 27 அன்று மோடி வருகையின் போது கர்நாடகா அரசு 36.43 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது; தார்வாட் ஐஐடி திறப்பு விழாவிற்கு ரூ.9.5 கோடி செலவிடப்பட்டது. இதெல்லாம்  யாருடைய  பணம் ஜி? பொது மக்களின் பலகோடி வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

எல்லாருக்குமான ஆட்சியும் வளர்ச்சி திட்டங்களும் தேவை

வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்சனைகளில் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் உத்தரவாதங்களையும் நலத்திட்டங்களையும் தேர்தலில் அறிவித்தது காங்கிரஸ். அதாவது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10 கிலோ அரிசியும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் 2000 ரூபாய் நிதியுதவியும், வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு, 2 ஆண்டுகளுக்குவேலையில்லா படிப்பணமும்இன்னும் பலத் திட்டங்கள்.

இதனை அன்பளிப்பு கலாச்சாரம், நிறைவேற்ற முடியா வெற்று வாக்குறுதிகள் என்று மோடியும் அவரது சகாக்களும் விமர்சித்தனர். ஆனால் தங்கள் தேர்தல் அறிக்கையில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வருடத்தில் மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகள் வரும் மாதங்களில் வழங்கப்படும் என்று பா.. அறிவித்தது. அத்தோடு ஒவ்வொரு முனிசிபல் கவுன்சில் வார்டிலும்அடல் ஆஹார் கேந்திராஎன்கிற உணவு மையம் அமைக்கப்படும். இதன் மூலம் மலிவு விலையில் உணவு கிடைக்கும். தினமும் அரை கிலோ நந்தினி பால், மாதந்தோறும் ஐந்து கிலோ தானியம், வீடற்ற ஏழைகளுக்கு பத்து லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் பா.. வாக்குறுதி அளித்தது.

இலவசங்களை முன்னிலைப்படுத்தியே ஆட்சி நடத்தும் கேவலம் வேறெந்த நாட்டிலும் இந்தளவிற்கு இல்லை. நலிந்தவர் வாழ்விற்கான திட்டங்களை அவர்களுக்கு உரிமைகளாக வழங்குவது மாண்பிற்குரியது. அதைவிடுத்து தங்களது பதவி நாற்காலிக்கான இலவச கலாச்சாரத்திலிருந்து இந்தியா விடுபடுவது சிரமம்தான். வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் தங்களது வாக்குறுதிகளை செயல்பாடுகளாக விரைந்து செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து வென்றெடுக்க வேண்டும்.

இனிதான் தீவிர வேலையிருக்கு

பலவற்றைச் சொன்னாலும், கர்நாடகத் தேர்தல் ஏன் முக்கியம் பெறுகிறது? என்கிற கேள்விக்கு ஒரே பதில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மதவெறி பாசிச பா.. ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும். அதற்கு தேசிய கட்சியான காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியாக திரட்ட வேண்டும். அதனை எப்படி செய்வது என்பதற்கு கர்நாடகத் தேர்தல் முடிவுகள் சிறந்ததொரு எடுத்துக்காட்டு. இனிதான் நாம் தீவிரமாய் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. மமதையின்றி, உரையாடி, விட்டுக்கொடுத்து, ஏற்றுக்கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டிய அவசரம் அதிகம் உள்ளது. இந்து ராஷ்டிரத்தின் தென்னிந்திய நுழைவாயிலாக கர்நாடகத்தைப் பிடித்துவிட்டோம் என்றும் அடுத்து கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு என ஒவ்வொரு மாநிலங்களாக ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்றும் கொக்கரித்துக் கொண்டிருந்த காவி பாசிஸ்டுகளின் முகத்திரைக் கிழித்து பாடைக்கட்ட வேண்டிய அவசரத்தில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.

மோடி என்கிற பிம்பத்தை உடைப்போம்: மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து மக்கள்நலன்சார் சந்திப்புகள், கூட்டங்களில் அதிகம் பங்கெடுப்பதைவிட தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களுக்கு செல்வதுதான் வாடிக்கை. நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிராக உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை ஒவ்வொரு தேர்தலிலும் மோடியின் முகம்தான் பிரதிபலிக்கப்படுகிறது. அனைத்து தேர்தல்களிலும் பா..கவுக்கு போடும் ஓட்டுக்கள் நேரடியாக தனக்கே வருகின்றது என்று மோடியே சொல்லிக் கொள்கிறார். சமீபத்தில் அமித்ஷாவும்கர்நாடகத்தை மோடியிடம் ஒப்படைத்துவிடுங்கள்என்று வேண்டுகோள் விடுத்தார். இந்தியா கூட்டாட்சி நாடு என்பதனை உடைத்து பாசிசத்தைக் கட்டியெழுப்ப முனையும் பா.. வகையறாக்கள் இனி நமக்கு பெரிதாக என்ன செய்யப் போகிறார்கள்? மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மதவெறி என்று மக்களை கூறுபோட்டு குளிர்காய்வார்கள்.

மக்கள் பிரச்சனைகளை முக்கியத்துவப்படுத்துவதிலும்;,  கூட்டணிக்கட்சிகளை அரவணைத்து செல்வதிலும் அதிக அக்கறை காட்டுவோம். வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் முக்கியம் என்கிற புரிதல் கர்நாடகத் தேர்தலில் நன்கு வெளிப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் தேர்தல்களுக்கு இது ஒரு குறியீடு. மதச்சார்பற்ற அரசியலை சனநாயகப்பூர்வமாக எடுத்துச் செல்ல காங்கிரஸ் கூட்டணிகளைச் சரியாகக் கையாள வேண்டும். இதில் சமீபகாலமாக தேக்கம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, உத்தரப் பிரதேசத்தில் பா..கவுக்கு எதிரான பெரிய கட்சியாக சமாஜ்வாதி கட்சிதான் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் பிரச்சாரம் செய்வது, ஆட்களை நிறுத்துவது பா..-விற்குதான் சாதகம். தங்கள் கட்சி பெரும்பான்மையில்லாத எல்லா மாநிலங்களிலும் இந்தப் போக்கை காங்கிரஸ் மாற்றிக்கொண்டால் இனியும் நிச்சயம் காங்கிரஸ் முக்கிய சக்தியாக உருவெடுக்கும். கர்நாடகா மாநிலத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்த மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் நட்புணர்வைப் பேண வேண்டும். இனி தொடர்ந்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. கர்நாடகம் தந்திருக்கும் வெற்றியோடு இணைந்த பாடங்களை திறமையாக கையாண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாசிச ஆட்சியை அடியோடு அகற்றும் வேலையை காங்கிரசும், மதச்சார்பற்ற ஏனைய மாநில கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்படுத்தினால் மோடி என்கிற பிம்பம் வீழ்த்த முடியாதது அல்ல என்பது நிரூபணமாகும்.

முதல்வர் சித்தாராமையாவும் துணை முதல்வர் சிவக்குமாரும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஏனைய மதச்சார்பற்ற சக்திகள் யாவரும் இணைந்து இந்திய சனநாயக தேரை இழுப்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.. ஆட்சிக்கு முடிவுரை எழுத வாய்ப்பாக அமையும். இணைந்து செயல்படுவோமா?

Comment