No icon

சிலை வழிபாடா?

ஒரு தெளிவான விளக்கம்

கத்தோலிக்கத் திருஅவை இன்று சந்திக்கும் பலவேறு சிக்கல்களிலே பெந்தகோஸ்தே தாக்கம் அல்லது ஊடுருவல் என்பதும் ஒன்றாகும்.

இறைவார்த்தை என்றால் என்ன? இறைவார்த்தையின் நான்கு நிலைகள் யாவை? இறைவார்த்தைக்கு அர்த்தம் தரும் ஐந்து அகராதிகள் எவை? என்பனவற்றைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளாமல் வெறுமனே அடிப்படை வாத கண்ணோக்கில் (Fundamentalism) மட்டும் உற்று நோக்கி, கத்தோலிக்கத் திருஅவையிலே சிலையை வழிபடுகிறார்கள் எனத் தவறாக குற்றம் சுமத்துகிறார்கள்.

போதுமான இறையியல் அடிப்படைகளோ, விவிலிய அறிவோ இல்லாத கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் பலர், இவர்களின் பேதகப் போதனையில் சிக்குண்டு சிதறுவதுண்டு.

எனவே, சிலைவழிபாடு பற்றிய சரியானப் புரிதல் இன்று மிகவும் அவசியமான ஒன்றாகவே உள்ளது. சிலை வழிபாடு என்றால் என்ன என்று இப்போது காண்போம். தொடர்ந்து அடுத்த கட்டுரையில் மிகமிகத் தேவையான இறைவார்த்தையின் பரிமாணம் பற்றிக் காணலாம்.

கலை எல்லாம் சிலை ஆகுமா?

சிற்பம், சித்திரம், இசை, நாடகம் ஆகியன கலைகள் ஆகும். சிற்பி செதுக்குகின்ற உருவங்கள் அல்லது சிலைகள் (Statues) எல்லாம் கலைவடிவங்களே. நாம் வடிக்கும் கலைகள் யாவும் இறைவனுக்கே சொந்தம். அவையனைத்தும் இறைவனைப் புகழ வேண்டும், இறைபுகழ் பாட வேண்டும். அவைகளை அர்த்தம் தரும் விதத்திலே பயன்படுத்துவது என்பது இறைவனின் வழியும், மொழியும், விருப்பமுமாக உள்ளதால், அவை தன்னிலே உருவ வழிபாடோ, சிலைவழிபாடோ ஆகிவிடாது. அதற்குரிய ஆதாரங்கள் விவிலியத்திலே நிறையக் காணக் கிடக்கின்றன.

திரு நூலில் புதைந்துள்ள கலை வடிவங்களைக் கற்றுப் பயனடைய வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும்.

சிலை வழிபாடு என்றால் என்ன?

படைக்கப்பட்ட மனிதர்கள் யாவரும் முற்றிலும் படைத்த இறைவனுக்கே சொந்தம். அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை அன்பு செய்ய வேண்டும் என்பது நமக்கு இறைவன் கொடுத்த முதன்மையான கட்டளை ஆகும். அதாவது, நம் வாழ்க்கையிலே முதல் இடம், முக்கிய இடம், முன்னுரிமை இடம் இறைவனுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்கு மாறாக படைத்த இறைவனுக்கு மனிதன் தான் தரவேண்டிய முதல் இடத்திலே, வேறு எதை வைத்தாலும் அது சிலை ஆகிவிடும்.

அந்தச் சிலை என்பது ஓர் ஆளாக, பொருளாக அல்லது நம்மை உந்தித் தள்ளும் அல்லது நாம் விரும்பும் வேறு எதுவாகவும் இருக்கலாம். இதைவிடுத்து சிலை வழிபாடு என்பது வெறுமனே உருவ வழிபாடு மட்டும்தான் என்பது முழுமையான பொருள் அல்ல.

1. முதன்மைக் கட்டளை: (காண் விப 20: 23-24, 34:14)

நானே உன் கடவுளாகிய ஆண்டவர். என்னைத் தவிர வேறு தெய்வம் உனக்கு இருத்தல் ஆகாது. இதர தெய்வங்களை வணங்கவோ, வழிபடவோ வேண்டாம். உங்களுக்கென சிலைகளையோ, உருவங்களையோ செய்து கொள்ள வேண்டாம்.

2. விவிலியம் காட்டும் சிலைகள்

. கொலோ 3:5, பேராசை ஒரு சிலை

ஆகவே உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்து விடுங்கள்.”

. எசே 23:49 “நீங்களும் உங்கள் காமவெறி, சிலைவழிபாடு ஆகிய குற்றங்களின் பாவ வினையைச் சுமப்பீர்கள்.”

. 1பேது 4:3 “நீங்கள் கடந்த காலத்தில் செய்து வந்தது போதும், அவ்வப்பொழுது நீங்கள் காமவெறி, இச்சை, மதுமயக்கம், களியாட்டம், குடிவெறி, வெறுப்புக்குரிய சிலைவழிபாடு ஆகியவற்றில் காலத்தைக் கழித்தீர்கள்.”

எனவே, சிலைவழிபாடு என்பது வெறுமனே உருவ வழிபாடு மட்டுமல்ல; ஊனியல்புக்கு அடுத்த பல செயல்களோடு தொடர்பு படுவதை நன்கு உணர்தல் வேண்டும்.

3. கல், கல்தூண், கற்பலகைக் காட்டும் இறை பிரசன்னம்

. குலமுதுவர் யாக்கோபின் கல் : (காண் தொநூ 28:22)

குலமுதுவர் யாக்கோபு பயணம் ஆகிறார். லூசு என்னும் இடத்தில் வந்தபோது இரவாகிவிட்டது. ஒரு கல்லை எடுத்து தலைக்கு வைத்துக்கொண்டு உறங்கினார். விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையே உள்ள ஓர் ஏணியை கடவுள் காட்சியாகத் தந்து, தனது வாக்குறுதியை வழங்குகிறார். கண்விழித்த யாக்கோபு அங்கு இறைவன் இருப்பதை உண்ர்ந்து, அவ்விடத்துக்குபெத்தேல் எனப் பெயரிட்டார். தலைக்கு வைத்திருந்த கல்லை நினைவுத் தூணாக நாட்டி, எண்ணெய் வார்த்தார்.

இங்கு கடவுள் இருக்கிறார். இது அச்சத்திற்குரிய இடம். விண்ணக வாயில் என்றார். இந்தக் கல் இறைபிரசன்னத்தின் அடையாளமாக நிறுவப்பட்டதை அறிய முடிகிறது.

. யோர்தான் ஆற்றின் கற்கள் : (காண் யோசு 4: 1-7)

இஸ்ரயேலர் பயணம் ஜோசுவா தலைமையில் செல்ல, யோர்தான் குறுக்கே நிற்கிறது. இறைபிரசன்னப் பேழையைச் சுமந்தபடி யோர்தானில் இறங்க, யோர்தான் இரண்டாகப் பிரிந்து வழிவிடுகிறது. ஆற்றின் நடுவே வந்ததும் இஸ்ரயேல் பன்னிரு குலத்தினரும் குலத்திற்கு ஒரு கல்லை எடுத்து, தோளில் சுமந்து வர, யோசுவா கட்டளை இட்டார். அவர்களும் அவ்வாறே செய்தனர். இக்கற்களை வருங்கால இஸ்ரயேல் மக்களுக்கு இந்நிகழ்வின் நினைவாகக் கொள்ள இக்கற்கள் பயன்பட்டன மட்டுமல்ல; இக்கற்களில் வெளிப்பட்ட இறைபிரசன்னம் எரிக்கோ கோட்டை இடிந்து விழவும் காரணமானது.

3. மோசே உடைத்த கற்பலகைகள் (காண் விப 31:34)

கடவுள் தம் விரலால் எழுதிய பத்துக் கட்டளைகளைக் கொண்ட கற்பலகைகளை மோசே சுமந்தவராக மக்களிடம் வந்தார். மக்கள் கன்றுக்குட்டியை வழிபடுவது கண்டு சினமுற்று, தன் கையிலிருந்த இறைவனின் கட்டளைகளைக் கொண்ட கற்பலகைகளை வீசி எறிந்து உடைத்து விட்டார். மீண்டும் ஆண்டவர் கூறியபடி இரு பலகைகளுடன் மலைமீது ஏறிச்சென்று, நாற்பது நாள் உண்ணாமல் இருந்து, இறைவனின் கட்டளைகளை எழுதியபின் மீண்டும் மக்களிடம் வந்தார்.

கடவுள் தம் கையால் எழுதிய கற்பலகைகளை மோசே உடைத்த போதும், கடவுள் அவர்மீது கோபம் கொள்ளவில்லை. கடவுள் தாமே எழுதிய வரிவடிவ இறை வார்த்தைகளைத் தாங்கிய கற்பலகைகளை விட, அதற்குப் பொறுப்பாளியான மோசே இங்கே இறைவனின் முன்னிலையிலே உயர்ந்து நிற்பதை நாம் உற்று நோக்கினால், நம்மால் உய்த்துணர முடியும்.

4. உடன்படிக்கைப் பேழையிலே: காண் (விப 25: 26, 27, 28)

பத்துக் கட்டளைகளைக் கொண்ட கற்பலகைகள், அதை வைப்பதற்கு உரிய சித்திரம் மரத்தில் செய்யப்பட்ட மரப் பேழை, பொன்னாலான வளையங்கள், பசும் பொன்னாலான இரக்கத்தின் இருக்கை, பொன்னால் செய்யப்பட்ட இறக்கைகள் கொண்ட இரு கொம்புகள் அல்லது சிற்பங்கள், பொன் தோரணங்கள், தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், குவளைகள், விளக்குத்தண்டுகள், பத்து மூடுதிரைகள், திரு உறைவிடத்தின் மேலே கூடாரம், தொங்குதிரை, தூயகம், திருத்தூயகம், நடுவில் உடன்படிக்கைப் பலகை, பலிபீடம், திரு உறைவிட முற்றம், அணையா விளக்கு, இன்னோரன்ன அம்சங்களைக் கொண்ட கலைவடிவமாக இறைபிரசன்னப் பேழை அமைக்கப்பட்டது. அங்கு குருத்துவப் பணிசெய்ய ஆரோனின் குலம் கடவுளால் தேர்வு செய்யப்பட்டது. கடவுள் குடிகொள்ளும் பேழை கடவுள் சொன்னபடி கலை அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டது என்பதை உணரும் போது, கலைவடிவங்கள் எல்லாம் கடவுளுக்கு எதிரான சிலைகள் அல்ல என்பதை உணர்தல் வேண்டும். யோர்தானை இரண்டாகப் பிரித்ததும், மாபெரும் எரிக்கோ கோட்டையைத் தகர்த்ததும் இந்த பேழையில் வெளிப்பட்ட இறைபிரசன்னம் தான் என்பதை நன்குணரவேண்டும். இதனால் இறைபிரசன்னத்தை வெளிக்காட்டும் கலைவடிவங்களை முதன் முதலாக வடிக்கச் சொன்னவரே கடவுள்தான் என்பதில் ஐயமுண்டோ?

5. வெண்கலப் பாம்பு (காண். எண் 21:4-9)

கொள்ளிவாய்ப் பாம்புகள் கடித்து மக்கள் மடிகின்றனர். மோசே முறையிடவே வெண்கலப் பாம்பு ஒன்று செய்து கோலில் மாட்டி உயர்த்தவும், கடியுண்டவர்கள் அதனை உற்று நோக்கவும், நோக்கியவர்கள் நலமடையவும் வழி வகுத்தவர் நம் கடவுள் அல்லவா? இந்த வெண்கலப் பாம்பு என்ன? கலையா? இல்லை சிலையா? இது கலையும் இல்லை, சிலையும் இல்லை. இது ஒரு குறியீடு (Symbol).

6. மீட்பர் இயேசு கூட ஒரு குறியீடு தான் (Jesus is a Symbol Too)

மீட்பராக இம்மண்ணில் அவதரித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னைக் குறியீடுகளோடு முற்றொருமை ஆக்கினார். (Jesus Identifies himself with Symbols).

. பாம்பு

மோசே பாலை நிலத்தில் கோலில் பாம்பை உயர்த்தியது போல மனுமகனும் சிலுவையில் உயர்த்தப்பட வேண்டி இருந்தது.

. யோனாவின் அருங்குறி

அருங்குறி ஒன்று கேட்டவர்களிடம் இயேசு, “யோனா மூன்று இரவும், மூன்று பகலும் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்தது போல மனுமகனும் இருக்க வேண்டும் என்றார்.

. எருசலேம் ஆலயம்

இயேசு, “இந்த ஆலயத்தை இடித்து விடுங்கள். மூன்று நாளில் கட்டி முடித்து விடுவேன் என்றார் தனது உடலாகிய ஆலயத்தைக் குறித்து இயேசு சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை.

7. மாட்சி மிகு இறைபிரசன்னங்கள் (The glorious presences of God)

இறைவனின் மாபெரும் பிரசன்னங்களை திருநூல் மிகத் தெளிவாக எடுத்து இயம்புகிறது. எரியும் செடி, மேகம், நெருப்புத்தூண், பேழை இவைகளில் வெளிப்பட்ட இறைவனின் மாட்சி மிகு பிரசன்னங்கள் மீட்பின் வரலாற்றில் இஸ்ரயேல் மக்களை உடனிருந்து வழி நடத்தியது. மோயீசனின் கோலில் இருந்த இறைபிரசன்னம் மாபெரும் எகிப்திய பேரரசை எதிர்த்து நின்றது மட்டுமல்ல; செங்கடலைப் பிளந்தது, கற்பாறையைப் பிளந்து நீர்ஊற்றை வரவழைத்தது. இதனை நம்பிய புனித தேவசகாயம் அதனை நினைவுகூர்ந்து, பாறையில் மூட்டால் இடித்து நீர் சுரக்கச் செய்யவில்லையா?

8. சமயங்கள் குறியீடுகளால் வளர்ந்தவை (Religion is Nothing but Symbol)

அறிவைக் கடந்தவர் கடவுள். அவரை வெறும் ஆறறிவால் அல்லது பகுத்தறிவால் ஆய்ந்து அறிவது அல்லது விளக்கிப் புரியவைப்பது என்பது சரியான வழிமுறை அல்ல; அறிவின் வழிமுறையே மொழி ஆகும். அதனைக் கடந்து சாயல்கள், அடையாளங்கள், குறியீடுகள், மூலப்படிவங்கள் (images, signs, symbols, archy types) வழியாக அறிந்து உணர்வதே உரிய வழிமுறை ஆகும். ஆறறிவுக்கு மேலே இருக்கின்ற ஞானம், உள்ஒளி, உள்ளுணர்வு, உணர்வு நிலை, நம்பிக்கை, இறைவார்த்தை (Wisdom, Insight, Intuition, Consciousness, Faith and Word of God) ஆகியவை வழியாக அறிதலே உரிய வழிமுறை ஆகும். விவிலியத்தை வெறும் மொழி அறிவால் மட்டுமே அறிய முயல்வோர் முழுமைப் பார்வை இல்லாதோரே ஆவர். ஏனெனில், வரிவடிவ அல்லது மொழிவடிவ இறை வார்த்தைக்கு ஒரு வரம்பு உண்டு. அதைத்தாண்டி திருநூல் மட்டும் தான் (Bible Alone) என்ற கோட்பாட்டைக் கொண்டிருப்பது என்பது ஓர் அரைகுறை மறைவாழ்வே ஆகும்.

Comment