No icon

வடக்கன்குளத்தில் புனித தேவசகாயம்

நீலகண்டனும் கிறிஸ்தவ மறையும்

பத்மநாதபுர அரண்மனையில் மன்னர் மார்த்தாண்ட வர்மனிடம் நீலகண்டன் என்பவர் கருவூல அதிகாரியாகப் பணியாற்றினார். குளச்சல் போரில் டச்சுப்படை தோல்வியுற்று, சரணடைந்தது. மன்னர் மார்த்தாண்ட வர்மன் டச்சுப்படை தளபதியான எஸ்தாக்கியோ தெ லனாயிடம் போர்த்தளவாடங்களை உருவாக்கும் பொறுப்பை வழங்கினார். அவருக்கு மேலாளராக நீலகண்டன் நியமிக்கப்பட்டார். இச்சூழலில், குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகளால் கவலையில் இருந்த நீலகண்டனுக்கு, எஸ்தாக்கியோ தெ லனாய் திருவிவிலியத்திலுள்ள யோபு கதையைக் கூறி திடப்படுத்தி, இயேசுவை அவருக்கு அறிமுகப்படுத்தினார். இவ்வாறு கிறிஸ்துவின்மீது கொண்ட ஆர்வம் நீலகண்டனை கிறிஸ்தவ மறையை ஏற்பதற்கு உந்தித்தள்ளியது.

லாசரஸ்ஆன நீலகண்டன்

நீலகண்டனின் ஆர்வத்தை அறிந்த எஸ்தாக்கியோ தெ லனாய், அவர் திருமுழுக்குப் பெற்றிட, வடக்கன்குளம் பங்குத்தந்தையான பரஞ்சோதி நாதருக்கு (ஜாண் பாப்டிஸ்ட் புத்தாரி) ஒரு கடிதம் எழுதி, நீலகண்டனிடம் கொடுத்து, அவரை வடக்கன்குளத்திற்கு அனுப்பி வைத்தார். இயேசுவின்மீது ஆர்வத்தால் 20 கி.மீ தொலைவு நடந்தே வந்தார். அவரது கிறிஸ்தவ வாழ்வு வடக்கன்குளத்தில் தொடங்கியது. திருமுழுக்குக்கு முன் 40 நாட்கள் உபதேசியார் ஞானபிரகாசம் நீலகண்டனுக்கு மறைக்கல்வி கற்பித்தார். புனித அருளானந்தரால் கட்டப்பட்ட ஆலயத்தில், வடக்கன்குளம் பங்குத்தந்தை ஜாண் பாப்டிஸ்ட் புத்தாரி அடிகள் அவர்களால் நீலகண்டனுக்கு 1745 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் அன்று, “லாசரஸ்என்ற பெயரால் திருமுழுக்கு கொடுக்கப்பட்டது. லாசரஸ் என்ற பெயருக்குகடவுள் உதவி செய்கிறார்என்பது பொருள். அதுவே, தமிழில்தேவசகாயம்என்று அழைக்கப்படுகின்றது. வியாகப்பிள்ளை என்பவர் தேவசகாயத்தின் ஞானத்தந்தையானார்.

ஞானப்பூவின் திருமுழுக்கு

சில திங்கள்கள் வடக்கன்குளத்தில் வாழ்ந்து, ஆன்மீகத்தில் வளர்ந்து, கிறிஸ்துவின் பாதைக்கு மக்களை அழைக்கும் பணியினை தம் வீட்டிலிருந்தே தொடங்கினார். ‘ஒருபோதும் கிறிஸ்தவனாக மாட்டேன்என்று திடமனதுடன் இருந்த தனது மனைவி பார்கவியிடம் தேவசகாயம் கிறிஸ்துவின் அன்பைப் போதித்தார். மக்களுக்காகத் தன்னை தியாகம் செய்த கடவுளின் சத்தியத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்ற அவரது அறிவுரையை முழு மனதுடன் ஏற்று தன் கணவருடன் வடக்கன்குளம் சென்றார் பார்கவி. பங்குத்தந்தை ஞானப்பூ என்ற பெயரில் பார்கவி அம்மாளுக்கு திருமுழுக்கு வழங்கினார்.

தேவசகாயத்தின் மறைசாட்சியம்

உயர்வகுப்பைச் சார்ந்த இந்துக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவக் கூடாது என்ற திருவிதாங்கூர் மன்னரின் கட்டளையை மீறி, கிறிஸ்தவ மதம் தழுவியதால் மன்னரையும், தெய்வங்களையும் இழிவுப்படுத்தினார் என்று தேவசகாயம் குற்றம் சுமத்தப்பட்டார். கைது செய்யப்படுவதற்குமுன், தேவசகாயம் வடக்கன்குளத்திற்கு வந்து, ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெற்று, தன்னையே இழப்பதற்கு ஆன்மீக அளவில் தயார்படுத்தினார். பெருவிளை என்ற இடத்தில் தேவசகாயம் கையில் விலங்கிடப்பட்டு மரத்தில் கட்டி வைத்துத் துன்புறுத்தப்பட்டார். அச்சமயத்தில் அவர் முகத்தில் சக்தி வாய்ந்த வெண்ஒளி வீசியதை அறிந்து அவர் முழந்தாளிட்டு வணங்கினார். அப்போது கையில் குழந்தை இயேசுவை ஏந்தியப்படி மாதாவும், சூசையும் திருக்குடும்பமாகக் காட்சியளிப்பதைக் கண்டார். தான் வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலயத்தின் மீது வைத்திருந்த பற்றினால்தான் இக்காட்சியைக் காண நேர்ந்தது என தந்தை புத்தாரி அடிகளாருக்குத் தெரிவித்தார்.

வடக்கன்குளத்தின் புதிய பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற பிரான்சிஸ்க்கு கிளமெண்ட் தேவசகாயம் பற்றி அறிந்து, உபதேசியரான ஞானத்தந்தையுடன் சென்று அவரைச் சந்தித்து ஒப்புரவு அருட்சாதனமும், நற்கருணையும் அளித்து வந்தார். தேவசகாயம் தன்னைச் சந்தித்த பங்குத்தந்தையிடம், ஞானப்பூவை வடக்கன்குளம் அழைத்து செல்லும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின் விலங்கு கட்டுண்ட தன் கையால் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து ஆசீர் அளித்தார். பல்வேறு சித்திரவதைகளுக்கு பிறகு, ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் 5 குண்டுகள் துளைக்கப்பட்டு உயிரிழந்தார் தேவசகாயம். காட்டு வேலைக்குச் சென்ற மக்கள் விலங்குகள் விட்டுச் சென்ற தேவசகாயத்தின் மீதி உடலையும் எலும்பையும் கோட்டாறுக்கு எடுத்துச் சென்று, இறுதி மரியாதை செய்தனர். பத்மநாதபுரம் அரண்மனையிலிருந்து பெறப்பட்ட தேவசகாயத்தின் ஓலைச் சுவடியும் தலைச்சீராவும் அவர் திருமுழுக்குப் பெற்ற வடக்கன்குளம் ஆலயத்தில் திருப்பண்டங்களாக மக்களால் போற்றப்படுகிறது.

மனமாற்றம் வெற்றியின் திறவுகோல்

தன் கணவனின் சாட்சிய முடிவை எண்ணித் துவண்ட ஞானப்பூ அம்மை கிறிஸ்தவ வாழ்வில் தடுமாறினார். வடக்கன்குளம் மக்களின் அன்பும், ஆதரவும், மறைப்போதகமும் மீண்டும் ஞானப்பூ அம்மை கிறிஸ்தவத்தில் உறுதிபெற உதவியது. ‘கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால் அது உயிரற்றதாயிருக்கும்’ (யாக் 2:17) என்னும் இறைத்தொடருக்கேற்ப கிறிஸ்துவுக்காக எத்துன்பத்தையும் தாங்கும் உறுதிகொண்டார். மறைபோதகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார். உற்றார் உறவினர் என்றில்லாமல் வடக்கன்குளம் மக்களும் கிறிஸ்தவத்தில் ஊன்ற வழிகாட்டினார். இனம், இடம் என்ற பாகுபாடுகளைக் களைந்து கிறிஸ்தவ வாழ்வில் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் ஊட்டினார். சாதி, மதம், ஏழை, பணக்காரர் எனப் பாகுபாடு பாராமல் அனைவருக்கும் உதவினார். வடவை மண்ணில் குடிமை சமத்துவம் நிலைக்கப் பாடுபட்டார். 15 ஆண்டுகள் வடக்கன்குளத்தில் வாழ்ந்து கோவிலில் திருப்பணிகள் புரிந்தும், குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்பித்தும் தாம் பெற்ற நம்பிக்கையை வாழ்ந்து காட்டினார்.

ஞானப்பூ அம்மாள் 1766 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். வடக்கன்குளம் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். வடக்கன்குளம் கல்லறைத் தோட்டத்தின் நடுவில் புனித வியாகுல அன்னை ஆலயத்தின் கிழக்குப்புறம் அமைந்திருக்கும் ஞானப்பூ அம்மாளின் கல்லறையையும் மக்கள் கண்டு செல்கின்றனர். திருப்பயணிகளின் வருகையால் அக்கல்லறைத் தோட்டம் ஞானப்பூ கல்லறைத் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

புனிதர் தேவசகாயம்

திருத்தந்தை அவர்களால் தேவசகாயம் மறைசாட்சியாக (28.06.2012) அறிவிக்கப்பட்டபின் பங்கிலுள்ள மக்கள், தங்கள் இல்லங்களில் அவரின் படத்தை வைத்து ஜெபித்து வந்தனர். வடக்கன்குளத்தில் ஒவ்வொரு மாதமும் 2 வது வெள்ளிக்கிழமையில் தேவசகாயம் நவநாள் நடத்தப்பட்டு வருகிறது.

உரோமையில் 15.05.2021 அன்று திருத்தந்தை தலைமையில் தேவசகாயம் புனித நிலைக்கு உயர்த்தப்பட்டார். வடக்கன்குளத்திலிருந்து பங்குத்தந்தை ஜாண் பிரிட்டோ தலைமையில் வடக்கன்குளம் மக்கள் உரோமை சென்று புனிதரின் ஆசீர் பெற்று வந்தனர்.

புனிதர் தேவசகாயத்திடம் மன்றாடும் பலர் தம் கிறித்தவ வாழ்வில் உறுதிப்படுகின்றனர். அவரது பரிந்துரை மன்றாட்டால் வியத்தகு அருள் வரங்களை, நன்மைகளை மக்கள் பெறுகின்றனர்.

Comment