No icon

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சார்ந்த சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயக அடிகள் தமிழை முறையாகப் பயிலத் தொடங்கியபோது (1941) அவருக்கு அகவை 28. இளமை முதல் ஆங்கிலக் கல்லூரியில் கவனம் செலுத்தி, அதில் புலமைபெற்று பின் இலத்தீன், இத்தாலியம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்த்துக்கேயம், ஸ்பானிஷ் முதலிய மேலை மொழிகளைப் பயின்று பயன் கண்ட பின்னரே அவர் தமிழ் பயிலத் தொடங்கினார். 1940 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் சேர்ந்து வடக்கன்குளம் புனித தெரசா உயர்நிலைப்பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கியபோது, ஞாயிறு வழிபாட்டில் மறையுரையாற்றுவதற்காக அவர் தமிழை முறையாகப் பயிலத் தொடங்கினார். 1941-45 ஆகிய நான்காண்டு காலம் தமிழ் பயின்ற அவர் தமிழின் சிறப்பிலும் செழிப்பிலும் உள்ளத்தைப் பறிக்கொடுத்தவராக, மேலும் தமிழைப் பயின்று தம் தமிழறிவை வளப்படுத்த விரும்பினார். அன்றைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு திபூர்சியஸ் ரோச் ஆண்டகை அடிகளின் விருப்பத்தை ஏற்று அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் பயில இசைவு வழங்கினார். அன்றைய காலக்கட்டத்தில் ஒரு கிறித்தவக் குரு அண்ணாமலை போன்ற ஒரு பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வது மிகவும் அரிதான ஒன்று. ஆகவே தனிநாயக அடிகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி தமிழில் புலமை பெற செய்து அவர் உலகத் தமிழ்தூதராக மாறவும், மலரவும் வழிவகுத்த பெருமை தூத்துக்குடி மறைமாவட்டத்துக்கும் அதன் முதல் ஆயர் மேதகு ரோச் ஆண்டகைக்கும் உரியது என்பதில் ஐயமில்லை.

அண்ணாமலையில் பயின்று தமிழில் முதுகலைப்பட்டமும் தமிழாய்வு முதுகலைப்பட்டமும் அவர் பெற்றார். தமிழாய்வுப் பட்டத்துக்காக இவர் எழுதியNature in ancient Tamil Poetry என்னும் நெய்வேடு பலராலும் போற்றப்பட்டுப் பல சிறப்புகளைக் கண்டது. “ஐரோப்பியருக்குச் சங்க இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதற்கு இதனினும் சிறந்த நூல்கள் இல்லை என ஐரோப்பியத் தமிழறிஞராகிய கமில் சுவலபில் இதனைப் பாராட்டி எழுதியுள்ளார்.

அண்ணாமலையில் பயின்றபோதே தமிழைத் தரணியெங்கும் எடுத்தோதவேண்டும் என்னும் தணியாத தாகம் இவருக்கு இருந்ததாக இவரது வகுப்புத் தோழர் முதுமுனைவர் . அய். சுப்பிரமணியம் (தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர்) தெரிவித்துள்ளார்.

அதன் முதல்படியாக 1948 ஆம் ஆண்டில் தூத்துக்குடி புதுக்கிராமத்தில் தமிழ் இலக்கியக் கழகத்தை நிறுவி அதன்மூலம் இலக்கியத் திறனாய்வுக் கூட்டங்களை நடத்தினார். நல்ல இலக்கிய நூல்களையும் வெளியிட்டார். பின், 1949-51 ஆம் ஆண்டுகளில் சப்பான், சிலி, பிரேசில், மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ் பற்றிய சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பல்வேறு ஐரோப்பிய மொழிகளை அறிந்திருந்ததால் அந்தந்த நாட்டு மொழிகளிலேயே உரையாற்ற இவரால் இயன்றது.

1952 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற இவருக்கு வாய்ப்புக் கிடைத்தபோது ரோச் ஆண்டகை கல்விப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள இவருக்கு ஆசியும், ஒப்புதலும் வழங்கினார் என்பதை நாம் நன்றியுடன் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளோம்.

1952 - 61 ஆண்டுகளில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வியியல் துறையில் பணியாற்றியபின் 1961 - 69 ஆண்டுகளில் மலேசியப் பல்கலைக்கழக இந்தியவியல் துறைப் பேராசிரியராகவும், தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டார். தொடக்கநிலையில் இருந்த இந்தியவியல் துறையைத் திட்டமிட்டு வளர்த்து ஆளாக்கிய பெருமை அடிகளார்க்கு உரியது.

தமது உலகத் தமிழ்த் தூதுப் பயணத்தின்போது தமிழ் ஆராய்ச்சி முடிவுகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்துவது தேவை என்பதை உணர்ந்து TAMIL CULTURE என்னும் ஆங்கில முத்திரங்கள் ஆய்விதழைத் தாமே ஆசிரியராக இருந்து அடிகளார் நடத்தி வந்தார். உலகின் பலதுறை அறிஞர்களையும் தமிழாய்வுத் துறைக்கு ஈர்த்த பெருமை இவ்விதழுக்கு உண்டு.

மலேசியாவில் பணியாற்றியபோது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் உறுப்பினராக அடிகளார் நியமிக்கப்பட்டார். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்களை ஒன்றுகூட்டி ஆண்டுதோறும் உலக அளவில் ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடத்தத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்னும் கருத்தை அடிகளார் முன் வைத்தபோது தமிழ் வளர்ச்சிக் கழகமும், தமிழக அரசும் அதை ஏற்றுக் கொண்டனர். இன்னும் அத்திட்டம் செயல்வடிவம் பெறவில்லை. 1964 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் ஆறாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை டில்லியில் நடைபெற்ற உலகக் கீழ்த்திசை அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழறிஞர்களின் துணையோடு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை அமைத்தார் அடிகளார். இம்மன்றமே கோலாலம்பூரில் (1966) நடந்த முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னை (1968), பாரீஸ் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981) ஆகிய எல்லா உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளையும் நடத்தியது. 1980 ஆம் ஆண்டில் உயிர் நீத்த காலம் வரை அடிகளாரே இம்மன்றத்தின் உயிர் நாடியாக விளங்கினார்.

இந்திய நாகரிகத்தின் முழுமையையும் இலக்கியச் செழுமையையும் உரியமுறையில் ஆராய்ந்தறிய வடமொழி அறிவோடு தமிழறிவும் இன்றியமையாதது என்பதை அறிஞர் உலகத்துக்கு உணர்த்திய அடிகளார், உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தமிழ்த்துறையினை நிறுவிட உதவினார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் சிறப்புச் சொற்பொழிவாளராகச் சென்று வந்தார்.

தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு மட்டுமின்றி, தமிழ் சார்ந்த எல்லாத் துறைகளுமே தமிழ் ஆய்வுக்கு உட்பட்டவைதாம் என்பதை அடிகளார் வற்புறுத்தி வந்தார். பிற நாட்டு இலக்கியங்களோடு தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வது தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் என அவர் நம்பிச் செயல்பட்டதை அவரது எம்.லிட் முனைவர் பட்ட ஆய்வேடுகள் மெய்ப்பிக்கின்றன.

16 ஆம் நூற்றாண்டில் அச்சிடப் பெற்ற முதல் தமிழ் நூல்களாகிய கார்த்தில்யா, தம்பிரான் வணக்கம், கிரீசித்தியானி வணக்கம், அடியார் வரலாறு (Flos Sanctorum) போன்ற பல நூல்களை அவர் ஐரோப்பிய நூலகங்களில் ஆய்வு செய்து கண்டுபிடித்துத் தமிழ் உலகுக்கு வெளிப்படுத்தினார். ஆசியா கண்டத்தில் முதன்முதலில் அச்சேறியது தமிழ்மொழியே என்பதை இதன்மூலம் அவர் மெய்ப்பித்தார். 1679 ஆம் ஆண்டில் கேரள நாட்டு அம்பலக் காட்டில் அச்சிடப் பெற்ற தமிழ் போர்த்துக்கேய அகராதியையும் கண்டுபிடித்து முதல் மாநாட்டின் போது வெளியிட்டார்.

தம்பிரான் வணக்கம் (1578), கிரீசித்தியானி வணக்கம் (1579), அடியார் வரலாறு (1586) ஆகிய நூல்களைத் தமிழாக்கித் தந்தவர் முத்துக்குளித்துறையின் முதல் பங்குத்தந்தை எனப் போற்றப்படத்தக்கவராகிய எண்டிரீக்கே எண்டிரீக்கசு என்ற இயேசு சபைத் துறவியாவார். இவற்றுள் அடியார் வரலாறு தூத்துக்குடியை அடுத்த புன்னைக்காயலில் அச்சிடப்பெற்றதாகும்.

தூத்துக்குடி மறைமாவட்டக் குருவாக இறுதிவரையில் விளங்கிய தனிநாயக அடிகளார் தூத்துக்குடிப் பகுதியில் வாழ்ந்து பணிபுரிந்த எண்டிரீக்கசு அடிகளாரின் தமிழ் நூல்களைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தியமை மிகவும் பொருத்தமாகும்.

சமயப் பணிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட தனிநாயக அடிகளார் சமயப் பணியோடு தமிழ்ப் பணியையும்  இணைத்துச் செயல்பட்டமை பெருமைக்கு உரியதாகும். அவ்வாறு தமிழுக்குத் தொண்டாற்றும் வாய்ப்பினை அவருக்கு வழங்கிய தூத்துக்குடி மறைமாவட்டத்துக்குத் தமிழகம் நன்றி கடமை கொண்டது.

Comment