No icon

மதுபோதைக்கு எதிராகத் தூத்துக்குடி மறைமாவட்டம்

“குடி ஒரு மூளை நோய்”

1956 ஆம் ஆண்டு உலக நல வாழ்வு மையம் (WHO) “குடி ஒரு மூளை நோய் என அறிவித்துள்ளது. மது போதைப்பொருட்கள் ஒருவகை வேதிப்பொருட்களால் தயாரிக்கப்பட்டு, அதை உட்கொள்ளும்போது அது மூளையில் பல்வேறு சீரழிவுகளை ஏற்படுத்தி, மனித உடல்களின் பாகங்களைச் சிறிதுசிறிதாக அழித்து, பிறகு அது அவர்களது உயிரையும் எடுத்து விடுகிறது என்பதை அறுதியிட்டு கூறுகிறது.

ஞானத்தகப்பன் புனித சவேரியார்

புனித பிரான்சிஸ்கு சவேரியார் இந்த மதுபோதை வகைகளுக்கு எதிராக ஓர் அடித்தளம் அமைத்தவர் ஆவார். மணப்பாட்டிலிருந்து, புன்னைக்காயலில் அவரது உதவியாளராக இருந்த பிரான்சிஸ் மன்சுலாஸ் அடிகளாருக்கு 1544 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி எழுதிய கடிதத்தில்மக்களைக் குடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்என்று வேண்டுகோளை விடுத்து சென்றார்.

உவரியில் இறையடியார் சூசைநாதர்

18.11.1921 முதல் 14.05.1930 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள உவரி பங்குக்கு இறையடியார் அந்தோனி சூசைநாதர் பங்குப் பணியாளராகப் பணியாற்றி வந்தார்கள். உவரியில் பணியாற்றியபோது அங்கு மக்களின் பொருளாதார வளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி, கல்வி வளர்ச்சிக்கு மதுபோதையினால் உருவாகிய சமூக சீரழிவுகள் பெரும் தடையாக இருந்தது. குறிப்பாக அவர்கள் மத்தியில் நிகழ்ந்த கலவரங்கள், சேமிப்பின்மை, சமாதானமின்மை, இளம் விதவைகள், குடிநோய் மரணங்கள், அனைத்தையும் அவர் சிறப்பு கவனத்தில் எடுத்துக் கொண்டார்.

ஏற்கனவே தேசத்தந்தை காந்தியடிகள், தந்தை பெரியார் போன்ற மகான்களின் போதை எதிர்ப்பு முழக்கத்தில் தன்னையே ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1912 ஆம் ஆண்டிலிருந்து உவரியில் இறையடியாருக்கு முன்பாக மறைபரப்புப் பணியாற்றிய அருட்தந்தை மக்காபேட் சே. என்ற இயேசு சபை துறவியால் ஆரம்பிக்கப்பட்டிருந்த பரிசுத்த அமலோற்பவ மாதா சபையை சூசைநாதர் அவர்கள் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை என்று மாற்றி அமைத்தார்கள்.

பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபையின் வாக்குறுதிகளும் - தீர்மானமும்

இன்று தூத்துக்குடி மறைமாவட்டத்தில் 58 பங்குகளில் இந்த சபை செயல்பட்டு வருகிறது. இந்த சபையில் சேரும் அனைத்து உறுப்பினர்களும் மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு தடவை பங்குத்தந்தையர்கள் முன்னிலையில் மாதாவின் உருவத்தைத் தொட்டுமாதாவின் சாட்சியாக மது அருந்த மாட்டோம். பணம் வைத்து சூதாட மாட்டோம்என்ற இரண்டு சத்திய வாக்குகளைத் தீர்மானம் செய்து வாக்குறுதிகளை புதுப்பிப்பார்கள். மேலும் இந்த சபையில் சேர்பவர்கள் தங்களை மட்டுமல்லாமல் தங்கள் குடும்பம், சார்ந்த அவர்களது வாழ்வில் நடைபெறும் திருமணங்களில், குடும்ப விழாக்களில், திருவிழாக்களில் இத்தகைய மது போதைப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் உறுதி எடுப்பார்கள். மேலும் குடி நோயாளர் குடும்பங்களைச் சந்தித்தல், தியானக் கூட்டங்கள் ஏற்படுத்துதல், நோயாளிகளுக்கு விழிப்புணர்வு கொடுத்தல், மருத்துவ வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்துதல் பெற ஊக்குவித்து உதவிகள் செய்து வருகிறார்கள்.

தமிழ்நாடு அறியச் செய்த திருமிகு வைகோ அவர்கள்

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க சபையை ஒரு நூலின் மூலம் படித்து அறிந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திருமிகு வைகோ அவர்கள் 12.12.2012 அன்று உவரியில் இறையடியார் அந்தோனி சூசைநாதர் உருவச் சிலைக்கு அன்றைய பங்குத்தந்தை அருட்பணி.பர்னபாஸ் அடிகளாரோடு இணைந்து மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்கள். பின்னர் உவரியிலிருந்து மதுரை வரை பூரண மதுவிலக்குக் கோரி நடைபயணம் மேற்கொண்டார்கள். தற்போது இந்த சபையானது தமிழ்நாட்டின் மற்ற மறைமாவட்டங்களுக்கு ஒரு முன்மாதிரி சபையாக, இயக்கமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சபையின் கிளைகள் கோட்டாறு மறைமாவட்டம் மற்றும் பாளை மறைமாவட்டம் வரை பயணிக்கிறது.

பணிகளின் இலக்கு மக்கள்

இந்த சபையானது குடிநோயாளர்களுக்கு மருத்துவ உதவியும், குடிநோயாளிகள் மற்றும் வளர்வாழ் மாணவர்கள், இளைஞர்களுக்கு விழிப்புணர்வும் கொடுத்தும் பேரணிகள், கருத்தரங்கம், பட்டிமன்றங்கள், தெருக்களில் வீதி நாடகம் என பல்வேறு வடிவங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தும் வருகிறது. மேலும் நாகர்கோவில், திருச்சி இயேசு சபை போதை நோய் பணிக்குழுவோடு இணைந்து மருத்துவப் பணியும் ஆல்கஹாலிக் அனானிமஸ் (AA) குழுவோடு இணைந்து குடிநோயாளர்களுக்கு உதவியும் செய்து வருகிறது.

மறைமாவட்ட நூற்றாண்டு திட்டத்தில் மதுவிலக்கு மறுவாழ்வு இல்லம்

இன்றைய சூழ்நிலையில் சிறுவர்கள், வளர்வாழ் இளைஞர்கள், திருமணமானவர்கள், குடும்பங்கள் என ஊடகப் போதைகளாலும், மது போதைகளாலும் பாதிக்கப்பட்டு வருவதை தூத்துக்குடி மறைமாவட்டம் உணர்ந்துள்ளது. மறைமாவட்ட நூற்றாண்டு விழா திட்ட வளர்ச்சியின் பயனாக திருநெல்வேலி மாவட்டத்திலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் குடிபோதை மறுவாழ்வு இல்லம் அமைக்க மறைமாவட்ட நூற்றாண்டு செயற்குழு தீர்மானித்துள்ளது. அதன் பயனாக 2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி அன்று திருக்குடும்பங்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் நாளில் அவரது அருள் ஆசீரோடு மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் மறைமாவட்டக் குருக்கள், இறைமக்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு இறையடியார் சூசைநாதர் பெயரால் குடிபோதை மறுவாழ்வு இல்லம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

Comment