No icon

ஞானதூதன் 95 நூற்றாண்டை நோக்கி!

“செய்தித் திரட்டு”

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டுப் பயணத்தில் 95 ஆண்டுகள் பயணித்த சிறப்பு ஞானதூதன் இதழுக்கு உரிமையாகிறது.

மறைமாவட்டம் தோன்றிய ஐந்தாவது ஆண்டில், அதாவது, 1928 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் மறைமாவட்டத்தின் முதல் ஆயரான மேதகு ரோச் ஆண்டகை அவர்களால் தொடங்கப்பட்டது. இந்தக் கத்தோலிக்க மாத இதழ், சிப்பிக்குளம் மண்ணின் மைந்தரான அருள்தந்தை ஜே. எக்ஸ். பூபால ராயர் அடிகளாரை முதல் ஆசிரியராகக் கொண்டு, “அர்ச். சவேசியார் ஞானதூதன்என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியது. தமது பன்முகத் திறன்களோடு, எழுத்தாளராகவும் மிளிர்ந்த ஆயர் ரோச் ஆண்டகை ஒவ்வொரு மாதமும் இதழில் தவறாது எழுதி வந்தார். இருபத்தைந்து ஆண்டுகளாகச்செய்தித் திரட்டுஎன்னும் பகுதியைத் தொடர்ந்து எழுதி சாதனை புரிந்துள்ளார்.

அருள்தந்தை ஜே. எக்ஸ். பூபால ராயர் அடிகளாரைத் தொடர்ந்து, அருள்தந்தை பவுல் அலங்காரம், அருள்தந்தை மரிய மாணிக்கம், அருள்தந்தை மிக்கேல், அருள்தந்தை ஜே.எம். நிக்கொலாஸ் ஆகியோர் இதழாசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர். ஞானதூதன் இதழின் தொடக்கக் கால இதழ்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது ஒரு மனக்குறையே. தூதனின் மிகப் பழமையான பிரதியாக 1944 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இதழ் தம்மிடம் இருப்பதாக, 20 ஆண்டுகளுக்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஞானதூதனின் பவளவிழா மலரில் திரு. கலாபன் வாஸ் ஆவணப்படுத்தியுள்ளார்.

1956 முதல் 1960 வரை ஆசிரியராக இருந்த அருள்தந்தை அந்தோனி சேவியர் அடிகளாரின் காலம் ஞானதூதனின் பொற்காலம் என அழைக்கப்படத் தகுதி வாய்ந்தது. அக்காலத்தில்தான் ஞானதூதன் 7500 பிரதிகள் அச்சிடப்பட்டது என்னும் தகவல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதன்பின்னர் கடந்த 60 ஆண்டு காலத்தில் இந்த சாதனை முறியடிக்கப்படவேயில்லை. YSM, YCS என்னும் உலகளாவிய இளையோர் இயக்கங்கள் தொடங்கப்படுவதற்கு முன்பே நம் மறைமாவட்டத்தில் தொடங்கப்பட்டதேன் கூடு இயக்கம் பரவிய இடமெல்லாம் ஞானதூதன் வழிகாட்டியது. இனியும் அது நடக்குமா என்பது கேள்விக்குறியே?

தொடர்ந்து, அருள்தந்தை கபிரியேல் (1960-65), அருள்தந்தை ஜோசப் சேவியர் (1965-68), அருள்தந்தை ஸ்டீபன் கோமஸ் (1968-83), அருள்தந்தை குருஸ் அந்தோனி (1983-91), அருள்தந்தை ஹொமஸ் மொடுதகம் (1991-94), அருள்தந்தை சேசு அருளப்பன் (1994-98) ஆகியோர் ஆசிரியர் - மேலாளர்களாகப் பணியாற்றினர். இவர்கள் தத்தம் பாணியில் இதழை வளர்த்தெடுத்தனர். குறிப்பாக, அருள்தந்தை ஸ்டீபன் கோமஸ் காலத்தில் தாம் உட்பட, பொதுநிலை எழுத்தாளர்கள் அதிகமாக ஊக்கப்படுத்தப்பட்டு, ஞானதூதன் மக்களிடையே பிரபலமானது என்று பதிவு செய்துள்ளார் அமரர் முல்லை எம். பெர்க்மன்ஸ்.

1998 முதல் 2004 வரை ஆறாண்டுகள் (மிகச் சரியாக 75 மாதங்கள்) ஆசிரியர்-மேலாளர் பொறுப்பிலிருந்த அருள்பணி. குமார்ராஜாவின் காலத்தில் நிகழ்ந்தவை 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஞானதூதன் பவளவிழா மலரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. முதன்முதலாக, அலுவலகத்துக்குக் கணினி வாங்கப்பட்டது. இதழ் தற்போதைய A4 அளவுக்கு மாறியது. எழுத்தாளர்கள் அனைவருக்கும் சன்மானம் வழங்கக்கூடிய வகையில் இதழ் பொருளாதார மேம்பாடு அடைந்தது. லெயோ ஜோசப் உட்பட தமிழகத்தின் தலைசிறந்த கத்தோலிக்க எழுத்தாளர்கள் அனைவரும் எழுதியுள்ளனர். அமரர் வலம்புரி ஜான் 12 திங்கள்கள் எழுதியுள்ளார் என்பது ஒரு வியப்புதானே!

2003 ஆம் ஆண்டு ஞானதூதனின் 75 ஆம் ஆண்டு பவளவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அந்த ஆண்டில் எழுத்தாளர் பயிற்சிப் பாசறை, ஊடக விழிப்புணர்வுப் பாசறைகள், நூல் வெளியீடு என 10 பவளவிழா நிகழ்வுகள் நடைபெற்றன என்று பவளவிழா மலரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அருள்தந்தையர் வெனான்சியுஸ் (2004-2006), ஜேம்ஸ் விக்டர் (2006-2011), என். . பன்னீர்செல்வம் (2011-2013), ஃபிராங்க்ளின் (2013-2014), பெஞ்சமின் (2014-2015),  வெனி இளங்குமரன் (2015-2019) ஆகியோர்  தூதனின் ஆசிரியர்களாக அரும்பணியாற்றினர். அருள்பணி. ஜேம்ஸ் விக்டர் காலத்தில் தூதன் புதிய பரிமாணங்களைத் தொட்டது. குறிப்பாக, அரசியல் விழிப்புணர்வுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. இலங்கை (அகதிகள்) ஏதிலியர், புலம்பெயர்ந்தோர் பற்றிய தூதனின் பார்வையும், பரப்புரைகளும் பலரின் பாராட்டையும் பெற்றன. இந்தக் கால கட்டத்தில்தான் ஞானதூதனின்தூதனார்அடையாளம் (லோகோ) மாற்றப்பட்டு, தற்போதுள்ள அடையாளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அருள்பணி. வெனி இளங்குமரனின் காலத்தில் தூதனின் தனித் தமிழ் அழுத்தம் கவனம் பெற்றது. 2023 பிப்ரவரி இதழில் இந்தத் தலைமுறை குழந்தைகளைப் பற்றிய கவலைஆசிரியரிடமிருந்துபகுதியில் வெளிப்படுகிறது. அலைபேசியை அறிந்திருக்கும் அளவு இன்றைய குழந்தைகள் சமூக மதிப்பீடுகளை அறிந்திருக்கவில்லை. “வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கும், பெரியவர்களுக்கும் மரியாதை கொடுக்கத் தெரியவில்லை. ஆலயத்தில் பெரியவர்கள் நின்றுகொண்டிருக்கும்போது, குழந்தைகள் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள்என்று நம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அருள்தந்தையர்கள் தூதனின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் பொதுநிலை எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் பங்களித்திருக்கின்றனர் என்பது பறைசாற்றப்படவேண்டிய உண்மை. அருள்தந்தை ஸ்டீபன் கோமஸ் அவர்களின் காலத்திலிருந்து (1968-1983) முல்லை எம். பெர்க்மன்ஸ், கலாபன் வாஸ், பொ.. ராசமணி, ஹெலன் ஞானப்பிரகாசம், லெயோ ஜோசப் எனத் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள் ஞானதூதனில் தடம் பதித்திருக்கின்றனர். இவர்களில் திரு. கலாபன் வாஸ், திரு. முல்லை எம் பெர்க்மன்ஸ், திருமதி ஹெலன் ஞானப்பிரகாசம் மூவரும் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஞானதூதன் பவளவிழாவில்ஞானதூதன் விருதுவழங்கி, கௌரவிக்கப்பட்டனர்.

முன்னொரு காலத்தில் பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்த ஞானதூதன் தற்பொழுது தன்னிறைவு அடைந்துள்ளது சிறப்பானது. இதற்கு திங்கள் தோறும் வெளியிடப்படும் நீத்தார் நினைவு விளம்பரங்களும் ஒரு காரணம். இறந்தோரை மறவாது, அவர்களுக்காக மன்றாடவும், அவர்களின் மறைவு பற்றி பிறர் அறிந்துகொள்ளவும் தூதன் உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

நூறாண்டு நிறைவு செய்யும் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் 95 ஆண்டுகளை நிறைவுசெய்து சாதனை படைத்துள்ளது ஞானதூதன். இந்நேரத்தில் ஞானதூதனின் தொடக்க காலம் தொட்டு இந்நாள்வரை அதன் வளர்ச்சிக்காக உழைத்த அத்தனை பேரையும் நினைத்து போற்றுகிறோம். இன்னும் 5 ஆண்டுகளில் நூறாண்டு காணவிருக்கும் நமது தூதன் தன்னை மீண்டும்புதுப்பித்து, இன்னொரு நூறாண்டுக்கான புதிய பாய்ச்சலைத் தொடங்க வேண்டும் என்பதே தூதனின் நேயர்கள் அனைவரின் ஆவல்.

Comment