No icon

தூத்துக்குடி மறைமாவட்டமும் குமுக (சமூக) ஈடுபாடு

பலகட்ட போராட்டங்கள்

கடவுள் வழங்கியுள்ள கொடையாகிய தூத்துக்குடி மறைமாவட்டம், இறையாட்சிப் பணித்தளக் கூறுகள் பலவற்றில் முதன்மையான இடங்களை வென்று திருஅவை வரலாற்றில் தடம் பதித்துள்ளது. குமுக ஈடுபாட்டுத் தளத்திலும், தமிழகத்துக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. நிலவளமும், கடல்வளமும், போராட்டக் களவளமும் பொருணை ஆறாய்ப் பொங்கி எழும் அருள் நலமும் கொண்டு, நூற்றாண்டு காலமாய் இயங்கச் செய்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம்.

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் குமுக ஈடுபாட்டுச் செயல்களுள் சில:

1. தாமிர உருக்கு ஆலை எதிர்ப்பு அலை உருவாக்கம்

1995 அக்டோபர் திங்களிலிருந்தே ஸ்டெர்லைட் எதிர்ப்புச் செயல்பாடு தொடங்கிவிட்டது. தூத்துக்குடி மறைமாவட்டத் தலைமைக் கோயில் உட்பட சில கோயில் அறிவிப்புகளின் போது தாமிர உருக்கு ஆலையினால் ஏற்படப் போகும் நோய்நொடி, சூழல் மாசு, தண்ணீர் பற்றாக்குறை, மீன்பிடித் தொழிலும், உழவுத் தொழிலும், உப்பளத் தொழிலும் பாதிப்படைதல் உள்ளிட்ட தீய விளைவுகளை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வூட்டப்பட்டது.

இந்துக்களும், இசுலாமியர்களும், தென்னிந்திய திருஅவைக் கிறித்தவர்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப நம் மறைமாவட்ட மக்கள் பலரும் களத்தில் நேர்மையாய் இயங்கினர். ஒரு நாள் அடையாள உண்ணாநிலை எனத் தொடங்கி 13 பேர் பங்கேற்ற கால வரையறையற்ற உண்ணாநிலை, தூத்துக்குடி வரலாறு காணாத அளவிலான மாபெரும் முழு அடைப்பு (பந்த்); தூத்துக்குடி துறைமுகத்தில் 15 மணி நேர பணி முடக்கத்தை ஏற்படுத்திய படகுகளோடும், கட்டுமரங்களோடும் நடத்தப்பட்ட கப்பல் மறியல் போராட்டங்கள் (தாமிரத் தாது கொண்டு வந்த கப்பலைத் துறைமுகத்துக்குள் விடாது மறியல்; துறைமுகத்துக்குள் நுழைந்துவிட்ட தாது கப்பலை வெளியேற்றுதல்.) கப்பலோட்டிய தமிழன் பிறந்த மண்ணில் கப்பல்களை விரட்டிய போராளிகள் எனப் பெயர் பெறச் செய்த போராட்டங்கள், இன்ன பிற புதுமையான போராட்டங்கள் என 40க்கும் மேற்பட்ட போராட்டங்கள் மறைமாவட்ட மக்கள் பலரது, பங்கேற்பால் நடத்தப்பட்டு குமுக ஈடுபாடு உணர்த்தப்பட்டது.

2. கார்னட் மணல் எடுப்பு தடுப்பு இயக்கம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் பிற சமயத்தவர் உட்பட பொதுநிலையினரது தலைமையில் இயங்கியது. அதுபோல, கார்னட் மணல் எடுப்புத் தடுப்பு இயக்கம் மக்கள், இளைஞர்கள் பலரது செயல்பாட்டில் இயங்கியது. கடலோரங்களிலே கலை வழியிலான (பாட்டு, வீதி நாடகம்) விழிப்புணர்வுக் கருத்துப் பரப்பல்கள் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடைபெற்றன. பேருந்து சிறைவைப்புப் போராட்டம் (1996 டிசம்பர் 16), காவல் துறையின் தடியடியையும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ளல், ‘பெருமணலும் நர்மதாவும் ஒன்றே என்று முழங்கியமேதாபட்கர் முன்னிலையில் நடத்தப்பட்ட கண்டனப் பொதுக்கூட்டம் எனப் பலவற்றிலும் மறைமாவட்ட மக்களும் குருக்களும் பங்கேற்றனர்.

3. அணு உலை எதிர்ப்புச் செயல் திட்டங்கள்

கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தே எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் 2002 ஆம் ஆண்டில் நடத்திய ஏழு நாள் மிதிவண்டிப் பரப்பலில் (ஓட்டப்பிடாரம் முதல் கூடங்குளம் வரை - 100 மிதிவண்டிகள்) மறைமாவட்ட இளைஞர்களும், இளம்பெண்களும் பங்கேற்றனர். மறைமாவட்ட ஆயர் பீற்றர் அவர்கள் தலைமையில் குருக்கள், பொதுநிலையினர் அடங்கிய குழு அணு உலை அமைப்பைப் பார்வையிடச் சென்றது. ஆயர் இவோன் அவர்கள் காலத்தில் இடிந்தகரையில் நடத்தப்பட்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

மக்களின் வாழ்வாதாரச் சிக்கலில் மறைமாவட்ட குருக்களும், மக்களும் ஈடுபாட்டுடன் போராடியதால் நடுவண் அரசு மறைமாவட்டத்தின் பொருளாதாரத்தையே முடக்கிப் போட்டது.

4. சேதுக்கால்வாய்த் திட்ட எதிர்ப்பு

மன்னார் வளைகுடா உலகத் தரம் வாய்ந்த கடல் பூங்காவாகும். அதன் ஊடாகக் கப்பல் செல்லும் பாதை அமைப்பது பன்னாட்டு நிறுவனங்களின் திட்டம், பயண நேரத்தைக் குறைப்பதும் இலாபத்தைப் பெருக்குவதும் அவர்களின் நோக்கம்.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செயலை

ஊக்கார் அறிவுடை யார் (463)

வளர்ச்சி கருதி அடிப்படையானவற்றை இழந்து போக வைக்கும் எச்செயலையும் அறிவுடையவர்கள் செய்யவே மாட்டார்கள். எனவே அறிவார்ந்த இயற்கை ஆர்வலர்கள் கடலோர ஊர்களில் பயணம் மேற்கொண்டு, இராமநாதபுரத்தில் சேதுக்கால்வாய் கூட்டம் ஏற்பாடு செய்தனர். இப்பணியை முன்னெடுத்தவர்கள் தூத்துக்குடி மறைமாவட்ட மண்ணைச் சார்ந்த தோழர்கள்.

5. பனைத் தொழிலாளர் உழைப்பு மாண்பு

பலகட்ட போராட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. சாதி வேறுபாடுகள் பாராது இயக்க உணர்வோடு மறைமாவட்ட மக்கள் பலரும் பங்கேற்ற முறைமை அருமை. பனைத் தொழிலை மேம்படுத்தி பனைப் பொருள்களை விற்பனை செய்ய வாய்ப்பும் அமைப்பும் மறைமாவட்டத்தில் வழங்கப்பட்டன. ஈடுபாடுமிக்க அருள்பணியாளர்கள் மக்களின் உதவியோடு தொடர்கின்றனர்.

6. மீன்பிடித் தொழிலும் மீனவர் வாழ்வும்

கடலோரத்தில் வாழும் மீனவர்கள் சந்தித்திடும் பல்வேறு வகையான சிக்கல்களின் போது மறைமாவட்டம் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. செயல்திட்டங்களை வகுத்து கல்லாமொழியில் மீனவர்களுக்கான வாழ்வியல் வளர்ச்சி நடுவம் அமைத்துள்ளது.

7. உரிமை வாழ்வுப் பணிக்குழு

குமுகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமை வாழ்வுப் பணிக்குழு திருஅவையில் உள்ளது. டிசம்பர் 10 ஆம் நாளில் (தலித் கிறிஸ்தவர்களுக்கு, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பையும், இட ஒதுக்கீட்டையும் மறுக்கும் சட்டம் வந்த நாள்.) மறைமாவட்ட அளவிலான போராட்டங்கள் நடத்தப்பட்டன. மறைமாவட்ட மக்களும், குருக்களும் டெல்லிக்குச் சென்று போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

8. கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம்

சிறுபான்மையினர் உரிமை மற்றும் மாண்போடு வாழ வேண்டும் என்பதற்காகக் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் தமிழகத் திருஅவையில் தொடங்கப்பட்டது; மறைமாவட்டத்தில் இயங்கி வருகிறது. மக்களை அரசியல்படுத்த வேண்டும் என்பதே இயக்கத்தின் நோக்கம். மக்களின் மாண்பு, வாழ்வாதாரம் பாழாக்கப்படும் போது போராட்டங்களில் பங்கு பெறுகிறது.

9. சாதி மறுப்புச் செயல்பாடுகள்

எங்கேனும் சாதியத் தீண்டாமை இருக்கிறது என்றால் அதைக்கண்டறிந்து நீக்குவதற்கான முயற்சியை மறைமாவட்ட நிர்வாகமும், குருக்களும், மக்களும் மேற்கொண்டுள்ளனர். இறையாட்சி நெறிப்படி புதிய மறைமாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று நன்முயற்சிகள் பல நடத்தப்பட்டுள்ளன.

நிறைவாக

மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகின்றன (உரோ. 9:16). மாந்தர்களின் நல்லெண்ண விருப்பமும் நம்பிக்கை நிறை உழைப்பும், கடவுள் இரக்கத்தோடு செயல்படுவதற்கு அடிப்படைகள், ‘போராடுவதும் பக்தியேஎன்று செயல்பட்ட புனித ஆஸ்கார் ரொமேரோ போன்று செயல்பட மறைமாவட்ட உறுப்பினர்கள் அழைக்கப்படுகிறோம். குமுக ஈடுபாடு பொங்கிப் பெருகட்டும்! நூற்றாண்டு விழா மகிழ்ச்சி பண்பும் பயனும் உள்ளதாகட்டும்!

Comment