கண்டனையோ, கேட்டனையோ…
150 ஆண்டுகள் வாழ்வது எப்படி?
- Author ஜார்ஜி --
- Friday, 28 Jul, 2023
திரைப்பட நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில், “நான் 150 ஆண்டுகள் வாழ்வேன். அந்த வித்தை எனக்குத் தெரியும். அதை நான் சொல்ல வேண்டுமானால், 2026 ஆம் ஆண்டு என்னை நீங்கள் அரியணையில் ஏற்ற வேண்டும்” என்று அறிவிக்க, தமிழ் கூறும் நல்லுலகம், “அப்படிப்பட்ட வாழ்க்கையே எங்களுக்குத் தேவையில்லை” என்று சொல்லிவிட்டதாகக் கேள்வி. நெட்டிசன்களுக்குத்தான் ‘அல்வா’ கிடைத்தது மாதிரி ஆகிவிட்டது. அடுத்த சில நாள்களுக்கு ஓவர் டைமில் ‘ட்ரோல்’ செய்து கொண்டாடினார்கள். நடிகர் சரத்குமார் குறிப்பிட்ட அந்த இரண்டும் நடப்பதற்குத் தொலைதூர வாய்ப்பு கூட இல்லையென்றாலும், இது போன்று நம் நடிகர்களும், அரசியல்வாதிகளும் அவ்வப்போது நிஜ வாழ்வில் செய்யும் காமெடிகளைப் பார்த்து ‘ஹா ஹா’ என்று வாய்விட்டுச் சிரிப்பது, வாழ்நாளைக் கணிசமாக அதிகரிக்கச் செய்யும்.
நாம் எல்லாரும் அதிக நாள்கள் வாழ விரும்புகிறோம். இறப்பதில் யாருக்கும் பெரிய நாட்டம் இல்லை. ‘உதவித் தந்தை’ காலத்திலிருந்து, எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்மணியை அண்மையில் சந்தித்தேன். 90-ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் இரும்பு மனுஷி அவர்! இரண்டு கைகளிலும் செபமாலை வைத்திருந்தார். இரண்டையும் ஒரே நேரத்தில் உருட்டினார். கண்களால் எதிரில் இருந்த என்னை உருட்டினார். உடல் நலம் குறித்துக் கேட்டேன். “அதுக்கு என்ன? ஆண்டவன் எப்பக் கூப்பிட்டாலும் போறதுக்குத் தயாராய் இருக்கேன்” என்றார். திரும்ப யோசித்து விட்டு, “என்ன... இந்தக் கடைசி பேத்தியோட கல்யாணத்தைப் பார்த்துட்டா கொஞ்சம் நிம்மதியா கண்ண மூடுவேன்” என்றார். அவர் குறிப்பிட்ட கடைசி பேத்தி LKG முடித்து, இந்த ஜூனில்தான் UKG போயிருக்கிறாள்!
‘நீண்ட வாழ்க்கை நேர்மையாளருக்குக் கடவுள் தரும் பரிசு!’ என்று விவிலியம் சொல்கிறது. ‘நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி’ (நீமொ 16; 31). இருபது வயதிலேயே நரைத்தவர்களுக்கு இது பொருந்தாது (அவர்கள் தொடர்ந்து ‘டை’ அடித்து சமாளிக்க வேண்டும் என்பதே எனது பரிந்துரை). ஆண்டவரிடம் அச்சம் கொள்வதும் மனித ஆயுளை நீடிக்கச் செய்யும் இன்னொரு வழி (நீமொ 10: 27). “இறந்த பின் உம்மை நினைப்பவர் யார்? பாதாளத்தில் உம்மைப் போற்றுபவர் யார்?” (திபா 6: 5) என்று திருப்பாடல் ஆசிரியர் மாதிரி சொல்லி, “அதனால், ஆண்டவரே, நான் இறந்தால் உங்களுக்குத்தான் இழப்பு. என்னை உயிரோடு வைத்திருந்தால், உங்களுக்குத் தொடர்ந்து புகழ்ச்சி கிடைக்கும்; பூசை கிடைக்கும், காணிக்கை கிடைக்கும்” என்று ஆசை வார்த்தைகளை லஞ்சம் கலந்து, கடவுளைச் செல்லமாக ‘ப்ளாக்மெயில்’ செய்து பார்த்தால், ஏதும் பலன் கிடைக்கிறதா என்பதற்குத் தரவுகள் இல்லை. யாராவது முயற்சி செய்து பார்த்துவிட்டுச் சொல்லலாம். முகத்தைச் சுவர்ப் பக்கமாகத் திருப்பிக் கொண்டு ‘ஓ’ வென்று அழுதால், கைமேல் பலன் உண்டு. சந்தேகம் இருப்பவர்கள் இஸ்ரயேல் அரசன் எசேக்கியாவைக் கேட்டுப் பார்க்கலாம் (2அர 20:1-11). “நீர் உம் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்” என்று ‘get-ready’ ஆணை வந்த பிறகும் கூட, எசேக்கியா, “நான் எப்படி உம் திருமுன் முற்றிலும் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொண்டேன் என்பதையும், உமது பார்வையில் எப்படி நேர்மையானதையே செய்தேன் என்பதையும் நினைத்தருளும்” என்று சொல்லி பிழியப் பிழிய அழுததால், கடவுள் இரங்கி, “சரி, சரி... கண்ணைத் துடை. இன்னும் 15 ஆண்டுகள் எடுத்துக் கொள்” என்று அந்த இடத்திலேயே வாழ்நாள் நீட்டிப்பு ஆணை கொடுத்திருக்கிறார்.
தொடக்க நூல் காலத்தில் மனிதர்கள் ஏகப்பட்ட ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். வெள்ளத்திற்கு முன் 10, வெள்ளத்திற்குப் பின் 10 என ஆதாமில் தொடங்கி ஆபிரகாமில் முடிகின்ற தொடக்க நூலின் 20 ‘குலமுதுவர்கள்’ - உண்மையில் குல முதியவர்கள்! டெண்டுல்கர் பல ஆட்டங்கள் ஆடி எடுத்த நூறுகளை ஒரே ஆட்டத்தில் எடுத்திருக்கிறார்கள்.
வெள்ளத்திற்கு முன் உள்ள பத்துக் குலமுதுவர்களும் சராசரியாக 912 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். இதில் 969 ஆண்டுகள் வாழ்ந்து முதல் பரிசைத் தட்டிச் செல்பவர் மெத்துசேலா (தொநூ 5:17). ஆதாம் 930 ஆண்டுகள் (தொநூ 5:5). இந்தக் குழுவில் இலமேக்கு என்பவர் மட்டும் பாவம்... மிகச் சிறிய வயதிலேயே இறந்து விட்டார் - வெறும் 777 ஆண்டுகள்தாம் (அவர் மனைவி இந்த அநியாயத்தை எப்படி ஏற்றுக்கொண்டாரோ தெரியவில்லை? !). ஏனோக்கு விசயம் வேறு மாதிரி. அவர் சாகவே இல்லை. வெள்ளத்திற்கு முன்னதான 1500 ஆண்டுகால தலைமுறையினரில் ஏறக்குறைய எல்லாருமே, முதல் மனிதன் ஆதாமை நேரில் பார்த்து ‘ஹலோ’ சொல்லியிருக்கக் கூடும் என்பதும் அல்லது ஆதாமை நேரில் பார்த்தவர்களை அவர்கள் பார்த்திருக்கக் கூடும் என்பதும் பிரமிப்பூட்டும் சாத்தியங்கள்!
வெள்ளத்திற்குப் பின் நிலைமை மாறுகிறது. கடவுளுக்கு அலுத்திருக்க வேண்டும். எண்ணிக்கையை இறுக்கிப் பிடிக்கின்றார். குலமுதுவர் சேம் 600 ஆண்டுகள், ஏபேர் 464 ஆண்டுகள், தெராகு 205 ஆண்டுகள் என மழைக்குப் பிந்திய இரண்டாம் பாதி ஆட்டத்தில், மனித வாழ் ஆண்டுகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, கடைசி குலமுதுவர் ஆபிரகாம் 175 ஆண்டுகள் மட்டுமே வாழ்கிறார். பின்னாள்களில் இது இன்னும் மட்டுப்படுகிறது. மோசே 120 ஆண்டுகள் (இச 34:1-8) வாழ்ந்தது கூட அவர் காலத்திற்குச் சற்று அதிகம்தான். சீக்கிரமே மனித ஆயுள் ஒரு சீர்தன்மை அடைந்துவிட்டதைத் திருப்பாடலில் பார்க்க முடிகிறது. ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருப்பாடலின் இந்த வரி, “எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது” (திபா 90:10) இந்த நவீன ‘மல்டி ஸ்பெஷால்டி-எக்ஸ்ரே - எம்.ஆர். ஸ்கேனிங் -ரேடியாலஜி’ காலத்திலும் உண்மையாக இருப்பது ஆச்சர்யமே!
இன்றைக்கு யாரும் 900 ஆண்டுகள் வாழ ஆசைப்படுவார்களா என்று தெரியவில்லை. நினைத்துப் பாருங்கள்! 900 கிறிஸ்மஸ், 900 தீபாவளி, 150 பொதுத்தேர்தல்கள், 46,800 ஞாயிறு திருப்பலிகள், 46,800 மறையுரைகள், கணக்கில்லாத குழந்தைகள், அவர்கள் எல்லாருக்கும் கல்விக் கட்டணம், கல்யாணம், சீர்வரிசை... தலை சுற்றுகிறதல்லவா? அத்தனை நீண்ட வாழ்வை சுவாரஸ்யமாக வைக்கக்கூடிய நோக்கங்களும், வேடிக்கைகளும் கிடைப்பது கடினம்.
“And miles to go before I sleep” என்றார் அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட்.
எத்தனை மைல்கள்? யாருக்குத் தெரியும்?
‘செந்தமிழ்ச் செம்மல்’ என்றும், ‘தமிழ்ப் பாடநூல் முன்னோடி’ என்றும் அழைக்கப்பட்ட ஜி.யு. போப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். “எனது கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என எழுதுங்கள்” என்ற அவரது வேண்டுகோள் பிரசித்தம். ஆங்கிலிக்கன் மதகுரு. 1820 ஆம் ஆண்டு கனடாவில் பிறந்து, 19 வயதில் மறைபரப்பாளராகத் தமிழகம் வந்தவர். தமிழ் மொழியின் இலக்கணங்களையும், இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றுக் கொண்டார். கல்விப் பணிக்கு முக்கியத்துவம் தந்தார். சாயர்புரத்தில் அவர் ஆரம்பித்த பள்ளியில், திறமையான ஆசிரியர்கள், தமிழ், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் போன்ற மொழிகளையும், கணிதம், தர்க்கம் போன்ற பாடங்களையும், பகல், இரவு என இரு வேளைகளிலும் மாணவர்களுக்குக் கற்பித்தார்கள். நன்னூல், தொல்காப்பியம் போன்ற நூல்களின் கடினம் கருதி, எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில், போப் எளிய இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார். இவரது ‘Elementary Tamil Grammar’ திரு.வி.க. வாசித்த முதல் இலக்கண நூல் என்று சொல்லப்படுகிறது. தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுக்கொண்டார். திருக்குறளை முதன் முதலில் முழுமையாக ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிட்டவர் இவரே. நாலடியாரையும் அப்படியே. திருக்குறளை ‘இயேசுநாதரின் இதய ஒலி’ என்றும், ‘மலை உபதேசத்தின் எதிரொலி’ என்றும் புகழ்ந்தார்.
திருக்குறள் போதிக்கும் அறத்தில் இருக்கும் அழுத்தமான கிறிஸ்தவச் சாயலை அடிப்படையாகக் கொண்டு, ஒருவேளை திருமயிலாப்பூரில் வசித்த திருவள்ளுவர், அங்கு மறைப்பரப்பு பணி செய்த தோமாவின் கிறிஸ்தவப் போதனைகளைக் கேட்டு, அதன் தாக்கத்தில் திருக்குறளை எழுதியிருக்கலாம் என்று அவர் முன்வைத்த கருதுகோள் பல அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடைசி காலத்தில் இங்கிலாந்துக்குத் திரும்பி, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு கற்பித்தார். ஒரு நாள் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத் தலைவரிடம் ஜி.யு. போப் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் பெருமைகள் குறித்து பேசிக்கொண்டிருந்தார். பல்கலைத் தலைவர் பிரமித்து, “போப், இத்துணை அருமையான நூலை நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடக்கூடாது?” என்று கேட்டார். அப்போது போப்பின் வயது 77. போப் “தலைவரே, அது மிகக் கடினமான வேலை. நீண்ட நாள்கள் தேவைப்படும். திருவாசக மொழிப்பெயர்ப்புப் பணியை முடித்து வெளியிட நான் ஒன்றும் சாகா வரம் பெற்றவன் இல்லையே!” என்று நகைச்சுவையாகச் சொன்னார்.
பல்கலைத் தலைவர் போப்பின் தோள்களைப் பற்றிக்கொண்டு, “போப், உனக்கு ஒன்று தெரியுமா? ஒரு பெரிய வேலையைத் துவங்கி நடத்துவதுதான் நீண்ட நாள் வாழ்வதற்குரிய சிறந்த வழி. நீ திருவாசக மொழிப்பெயர்ப்புப் பணியைத் துவங்கி செய். அது முடியும் வரை சாகமாட்டாய்” என்றார்.
அது அப்படியே நடந்தது. அறிவுரை கொடுத்த பல்கலைத் தலைவர் சீக்கிரம் இறந்து விட்டார்! ஆனால், போப் உயிருடன் இருந்து, திருவாசகத்தை மொழிப்பெயர்த்து, 1900 ஆம் ஆண்டு, தன் எண்பதாவது வயதில் வெளியிட்டார். அந்த மகத்தான தமிழ் மாணவன் உறங்க, இன்னும் 8 ஆண்டுகள் ஆயின!
நீண்ட நாள் வாழ நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
(இந்த வார கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)
Comment