‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’
மணிப்பூர் இன்று ‘மயானப்பூர்’ ஆகிறதோ?
இன, மதக் கலவரத்தால் அமைதியாக இருந்த மணிப்பூர் மாநிலம், இன்று பற்றி எரிகின்றது! எங்கே அது மயானப்பூர் ஆகி விடுமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. இரு மாதங்களாகத் தலைவிரித்தாடும் இந்த வன்முறை வெறியாட்டங்களை, மாற்றாந்தாய் எண்ணம் கொண்டு வேடிக்கைப் பார்க்கும் ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க. அரசைக் கண்டித்து ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ எனும் அமைப்புடன் இணைந்து, மதுரை கத்தோலிக்க திரு அவையும், பிற கிறிஸ்தவச் சபைகளும் மாபெரும் மக்கள் பேரணி- கண்டனப் பொதுக் கூட்டத்தை 2023, ஜூலை 16, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மதுரையில் நடத்தினர். மதுரை அரிஸ்டோ மருத்துவமனை அருகில் இருந்து தொடங்கப்பட்ட இந்தப் பேரணியானது, மதுரை பழங்காநத்தத்தை வந்தடைந்ததும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டமானது அங்கு நடத்தப்பட்டது. மதுரை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ந.ஜெயச் சந்திரன் பேரணி, பொதுக்கூட்டத்தை தலைமையேற்று நடத்தினார். மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு. அந்தோணி பாப்புசாமி, மதுரை CSI ஆயர் ஜெய்சிங் பிரின்ஸ் மற்றும் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் சிறப்புரையாற்றினார்கள். மதுரை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வி. உமா மகேஸ்வரன் நன்றியுரை வழங்கினார். ‘மணிப்பூர் மயானப்பூர் ஆவதோ!’ என்னும் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்கள் இட்டும் அருள்தந்தையர்களும், அருள்சகோதரிகளும் மற்றும் பொதுமக்களும் இக்கண்டனப் பேரணி, பொதுக்கூட்டத்தில் பங்கு கொண்டனர்.
Comment