No icon

விண்ணேற்பு-சுதந்திர தின விழாச் சிந்தனைகள்

மனிதத்தைப் புனிதப்படுத்துவோம்!

உடல்-ஆன்மா: சில முரண்பாடுகள்

உயர்ந்தது உடலா? ஆன்மாவா?’ என்ற விவாதம் மிகவும் பழமையானது. தத்துவ ஞானிகள், ஆன்மிகவாதிகள் மற்றும் இறையியலாளர்கள் போன்றோர் இவை பற்றிச் செய்த ஆய்வுகள் பல உள்ளன. ‘உடல் அழியக்கூடியது; ஆன்மாவோ நிலையானதுஎன ஆன்மாவை உயர்த்திப் பேசுவோர் பலர் உள்ளனர். கிரேக்க ஞானிகளான சாக்ரடீஸ் மற்றும் பிளேட்டோ போன்றோர், ‘உடல் என்னும் சிறையில் ஆன்மா சிக்கியுள்ளதுஎன்றார்கள். துறவு மடங்களில் இச்சைகளையும், பலவீனங்களையும் கட்டுப்படுத்த, தன் உடலைத் தானே கசையால் அடித்துக்கொள்ளும் ஒறுத்தல் முயற்சிகளும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டன என்பது வரலாறு! இவ்வாறு உடல் சிறுமைப்படுத்தப்பட்டும், ஆன்மா பெருமைப்படுத்தப்பட்டும் பல கருத்தியல்கள் உருவாகின. ஆனால், அரிஸ்டாட்டில் என்ற ஞானியோ, உடலையும்-ஆன்மாவையும் படிநிலைப்படுத்தாமல், ஒருங்கிணைந்த நிலையில் செயல்படுவதாகக் கருதினார்.

சிறுமைப்படுத்தப்படும் உடல்

கால ஓட்டத்தில் பல பண்பாடுகளில் தோன்றியதூய்மை-தீட்டுஎன்ற ஆதிக்கக் கருத்தியல் பாலின அடிப்படையில் உடலைப் படிநிலைப்படுத்தியது. அதன் தாக்கத்தை நம் சமூகங்களில் இன்றளவும் காண இயலும். ஆணின் உடல் ஆஜானுபாகுவாக, கம்பீரத் தோற்றமளிக்க வேண்டும் என்றும், பெண்ணின் உடலுக்குக் கண்கவர் நளினம் மட்டுமே அழகு என்றும் பல கருத்தியல் திணிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், மூன்றாம் பாலினத்தவர் உடலையோ, கேலிப் பொருளாகப் பார்க்கும் வக்கிரப் புத்தியும் மனிதரின் உள்ளத்தில் ஊடுருவியுள்ளது.

சாதிச் சாக்கடையில் சுகம் கண்ட சமூகத்திற்கு ஆதிக்கவாதிகள் உடல் புனிதமாகவும், ஒடுக்கப்பட்டோர் உடல் தீட்டாகவும் தெரிகிறது. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினச் சிறுவன்மீது வேண்டுமென்றே சிகரெட் பிடித்தவாறு சிறுநீர் கழித்த ஆளுங்கட்சியின் ஆதரவாளரின் ஆதிக்கத் திமிர், ஒடுக்கப்பட்டோரின் உடலைப் பற்றிய மனிதநேயமற்ற மனநிலையைத் தோலுரிக்கிறது. இவ்வாறு, உடலைப் பற்றிய பல்வேறு கருத்துருவாக்கங்கள் பல வடிவங்களில் ஆதிக்கத்தை நிரந்தரப்படுத்தவும், ஒடுக்குமுறையை நியாயப்படுத்தவும் வலம் வருகின்றன.  

உடலும், ஆன்மாவும் புனிதமே: வரலாற்றில் தளநகர்வு

திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்நவம்பர் 1, 1950 ஆம் ஆண்டு அன்று வரையறுத்து, மரியாவின் விண்ணேற்பை இறை நம்பிக்கைக் கோட்பாடாக அறிவித்தார். “கடவுளின் மாசற்ற தாய் மரியாவின் மண்ணக வாழ்வின் பயணம் முடிந்தபோது, உடலோடும், ஆன்மாவோடும் விண்ணக மகிமைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்என்பதே அக்கோட்பாட்டின் சாராம்சமாகும். இந்த நிகழ்வு திரு அவை வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் மிக முக்கியத் தருணங்களாகும்.

இரண்டு உலகப் போர்கள் நடந்து முடிந்து இலட்சக்கணக்கான உயிரிழப்புகள், பேரழிவுகள் மற்றும் குடும்பங்களில் சிதைவுகள் ஏற்பட்டன. இச்சூழலில், அவநம்பிக்கையும், நிச்சயமற்ற வாழ்வும் பல கேள்விகளை உள்ளங்களில் பதியமிட்டு, வாழ்வின் பொருள் பற்றிய கேள்விகள் எழுந்தன. காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திர வாழ்வை விரும்பி பல நாடுகள் அறச் சீற்றத்தோடு போராடத் தொடங்கின. இச்சூழலில் அறிவிக்கப்பட்ட இந்தக் கோட்பாடானது, ‘ஆன்மா மட்டுமே கடவுளின் பார்வையில் உயர்ந்ததுஎன்ற ஒருதலைச் சார்பு கருத்தியலுக்கு முற்றுப்புள்ளியிட்டதோடு, உடல் மற்றும் மனித வாழ்வு பற்றிய புதிய சிந்தனைகளின் எழுச்சிக்கு வித்திட்டது.

உடலானது தூய ஆவியார் தங்கும் கோவில்என்ற இறையூக்கச் சிந்தனை வலுப்பெற்றது (1கொரி 6:19). மேலும், கடவுளின் திருவுளத்தைத் தெளிந்து தேர்ந்து, நீதியின் வழியில் விவேகத்தோடும், இறை நம்பிக்கை வாழ்வில் துணிவோடும், மனக்கட்டுப்பாட்டோடும் பயணிப்போருக்குக் கடவுள் தரும் மீட்பு ஆன்மாவிற்கு மட்டுமல்ல; மாறாக, உள்ளம், உடல் மற்றும் ஆன்மா என ஒட்டுமொத்த மனித வாழ்வையும் புனிதப்படுத்துகின்றார் என்ற சிந்தனையும் பரவலாகி நம்பிக்கையை விதைத்தது. இவ்வாறு, கடவுள் உலகிற்குத் தரும் இத்தகைய மீட்பு எல்லோருக்கும் உண்டு என்பதையும், இறை பிரசன்னத்தில் நம்மைப் பேரின்பத்தில் என்றும் திளைக்க வைக்கிறது என்பதையும் இந்தக் கோட்பானது உறுதிப்படுத்துகிறது.

ஆதிக்க ஒழிப்பே சுதந்திர வாழ்வு

அன்னை மரியாவின் விண்ணேற்பு உறுதிப்படுத்தும் ஒட்டுமொத்த மனிதருக்குமான விடுதலையையும், புதிய வாழ்வுக்கான நம்பிக்கையையும் சுதந்திர இந்தியா ஒவ்வொரு இந்தியருக்கும் வழங்கக் கடமைப்பட்டுள்ளது. நம் மண்ணின் 76வது சுதந்திர தினம் நம் சமூகத்தை மீள்பார்வை செய்து பட்டை தீட்டவும், மழுங்கிப் போன உள்ளங்களைச் சாணை பிடிக்கவும் அழைப்பு விடுக்கிறது.

ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டாலும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் வேற்று நாடுகளிலிருந்தே நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்கி புதிய காலனியாதிக்கத்தை உருவாக்குகின்றன. மேலும், பெண் விடுதலையை நசுக்கும் ஆணாதிக்கம், ஒட்டுண்ணிகளாக ஊடுருவும் அடிப்படை வாதங்கள், பேரினவாதக் கொள்கைகள், வளர்ந்து வரும் சலுகைசார் பொருளாதாரம் மற்றும் பிரித்தாளும் அரசியல் சக்திகள் போன்றவற்றால் இந்திய இறையாண்மை கேள்விக்குறியாகிறது.

சமயச் சுதந்திரத்தை இந்திய அரசியல் சாசனம் அங்கீகரித்தாலும், சமயத்தின் பெயரால் திட்டமிட்டு நடத்தப்படும் கலவரங்கள் நிம்மதியற்ற எதிர் காலத்தை உருவாக்குகின்றனவறுமையிலிருந்து சாமானியரின் விடுதலை என்பது கேள்விக்குறியாகிறது. பணம் படைத்தோருக்குக் கிடைக்கும் வசதிகள் ஏழையருக்கு இன்னும்  எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்தச் சூழலில், ஒட்டுமொத்த விடுதலையை வென்றெடுப்பது எப்படி? ‘அந்நியருக்கு அடிமையாக மாட்டோம்என்ற நாம், ‘எம்மவரை அடிமைப் படுத்துவோம்என்று சமூகத்தில் ஆதிக்கத்தை நிறுவ நினைப்பது அறவே ஒழிக்கப்பட வேண்டிய முரண்பாடே!

உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியுமன்றோ! அவை வளமான எதிர் காலத்தையும், நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல” (எரே 29:11) என்ற கடவுளின் கரிசனையை ஆள்வோர் உள் வாங்க வேண்டும். பாதிக்கப்பட்டோர் சார்பான இயேசுவின் நிலைப்பாடு (லூக் 4:18-19) ஒட்டு மொத்தப் படைப்பையும் விடுதலை வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது.

என்ன செய்யலாம்?

விண்ணேற்பு மற்றும் சுதந்திர நாள் ஒருங்கே முன்வைத்த சிந்தனைகளில் இழையோடிய சில செயல்பாடுகளை இங்கே அடையாளப்படுத்துகிறேன்.

● தூய்மை-தீட்டு கருத்தியல் தாக்கத்தால் புரையோடிய சமூகத்தை, மனிதநேய வழியில் திசை வழிப்படுத்தி, ‘கடவுள் படைத்த உடலும், உயிரும் மாண்புக்குரியவைஎன்ற சிந்தனையை மறைக்கல்வியிலும், பள்ளிகளிலும் பரவலாக்கம் செய்து, நல்ல ஆளுமைகளை உருவாக்குவது நம் கடமையாகும்.

● கடவுளின் பார்வையில் ஆண்-பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் அனைவரும் அன்புக் குரியவர்களே என்பதை பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்ப்பது, ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குறிப்பாக, இளைய சமூகத்தைப் பணம் கொழிக்கும் தொழிலுக்குத் தயாரிக்கும் நாம், மனிதநேயத்தோடு வாழவும் கற்றுக் கொடுப்போம்.

● சாதி-சமய-மொழியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளால் காயப்பட்ட இந்தியப் பன்மைத்துவச் சமூகத்தில், உரையாடல்கள் வழியாகத் தோழமையை வளர்த்தெடுக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தோடு ஒத்துப்போகும் இயேசுவின் இறையாட்சி விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி போன்றவற்றைத் திரும்பத் திரும்ப ஊரறியச் செய்ய வேண்டும்.

நம் வாழ்வும், நாம் வாழும் பரந்துபட்டப் பிரபஞ்சமும் கடவுள் கொடுத்த கொடைகளே! அவற்றைக்கூத்தாடி கூத்தாடி போட்டுடைக்காமல்’, பொறுப்புடன் மானுடத்தையும், இம்மண்ணையும் புனிதப்படுத்த நம்மால் இயன்றதைச் செய்வோம்.

Comment