No icon

‘நமக்கோ விண்ணகமே தாய்நாடு’

கஸ்டமர் வந்திருக்கார்!

2023, பிப்ரவரியில், உலகளாவிய திரு அவையின் மாதாந்திரச் செபக் கருத்தாக ‘பங்கு’ எனும் தலைப்பைப் பரிந்துரைத்து,  போப் பிரான்சிஸ்  வெளியிட்ட வீடியோ செய்திக் குறிப்பில்,  “சில நேரங்களில் நமது கோயில்களின் வாசலில் ‘அனுமதி இலவசம்’ (Free Admission) என்ற தகவல் பலகையை வைக்க வேண்டுமோ என நினைக்கின்றேன். பங்குகள் சிலர் மட்டுமே வந்து போகக்கூடிய  மனமகிழ் மன்றங்களாக இல்லாமல், எல்லாருக்கும் சம வாய்ப்புத் தருகின்ற ஒரு சமூகமாக இருக்க வேண்டும். பெருந்தன்மை மற்றும் சேவையைக் கற்றுத் தரும் பள்ளிக்கூடங்களாக மாற வேண்டும். நம் பங்குகள் செயல்படும் முறையை நாம்  மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று வருத்தம் தோய்ந்த இத்தாலியன் மொழியில், கத்தோலிக்கப் பங்குகள் பற்றி அவர்  கவலைப்பட்டுச் சொன்னதை, ‘சப்-டைட்டில்’களின் துணையோடு கேட்டு, நானும் என் ‘பங்குக்குக்’ கவலைப்பட்டேன்.

பங்கு ஒரு தனியார் நிறுவனம்போல இயங்கக் கூடாது என்பதுதான் திருத்தந்தையின் அக்கறை.

பங்கு என்னும் அமைப்பு குறித்து சிறிது யோசிக்கலாம். 

நிறுவனத் திரு அவை என்னும் கட்டடத்தின் ஆதாரச் செங்கல் பங்கு. பல பங்குகள் இணைந்து ஒரு மறை மாவட்டம் உருவாகின்றது. பல மறை மாவட்டங்கள் இணைந்து உரோமை ஆயரின் கீழ் திரு அவை அமைகின்றது. பங்கினைக் குறிக்கும் ‘parish’ என்ற ஆங்கிலச் சொல், ‘parochia’ என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது என்றும், அந்த இலத்தீன் வார்த்தை  ‘Paroikia’  என்ற கிரேக்க வேர் சொல்லிலிருந்து வந்தது என்றும் மொழியியலாளர்கள் சொல்கிறார்கள். ‘Paroikia’ என்றால் sojourners, அதாவது ‘அந்நிய நாட்டவர்கள்’, ‘பயணத்தில் இருப்பவர்கள்’, ‘குறுகிய காலமே ஓரிடத்தில் தங்கியிருப்பவர்கள்’ என்று அர்த்தம். இதற்கும், ‘பங்கு’ என்ற சொல்லின் நவீனப் புரிதலுக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் யோசிக்கலாம். சொல்கிறேன்...

மிகச் சுருக்கமான விவரிப்பில், வாழ்வின் மிகப் பெரிய தத்துவங்களை ‘just-like-that’ பாணியில் சொல்லிச் செல்லும் சூஃபி ஞானக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பின்வருவது என்னுடைய ஆல்-டைம் ஃபேவரிட்!

ஒரு சுற்றுலாப் பயணி ஒரு சூஃபி ஞானியின் வீட்டிற்குப் போனார். ஞானியின் வீட்டில் ஒரு கட்டிலும், ஒரு சிறிய கெரசின் விளக்கும் தவிர, வேறு எதுவும் இல்லை.  ஏறக்குறைய காலி வீடு. பயணிக்கு ஆச்சர்யம்!

“உங்களது சாமான்கள் எல்லாம் எங்கே உள்ளன?” என்று பயணி கேட்டார். ஞானி அதற்கு, “உன் சாமான்கள் எல்லாம் எங்கே?” என்று பயணியிடம் திருப்பி கேட்டார்.

“என்னிடம் எப்படிப் பொருள்கள் இருக்கும்? நான் பயணியாயிற்றே!” என்றார் அவர். அதற்கு ஞானி, “நானும் பயணியே” என்றாராம்.

Sojourner! சூஃபிசத்தின் இந்த ஞானத் தீற்றலையும், ‘நமக்கோ விண்ணகமே தாய்நாடு’ என்று பிலிப்பியர் 3:20 சொல்வதையும் இணைத்துப் பார்த்தால், பங்கு எப்படி ஒரு Paroikia  என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அந்நியத் தேசத்தவர் போல, உல கோடு பெரிய ஒட்டுதல் எதுவும் இல்லாமல், விண்ணகத்தை நோக்கிப் பயணப்பட்டிருப்பதையே தீவிர நோக்காகக்  கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்களின் ஒரு குழுவே paroikia. ஒரு கத்தோலிக்கப் பங்கு உறுப்பினர் மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா? என்பது வேறு கேள்வி!

என்னதான் நம் திரு அவை ஓர் உலக அமைப்பாக இருந்தாலும், வெளியாள்களுக்கு ஒரு கோட்பாடாகத் தெரியும் கிறிஸ்தவம், கோயில் வழிபாடு, கொண்டாட்டம், சேவை முன்னெடுப்புகள் எனத் தொட்டு உணரக்கூடிய உடல் வடிவம் பெறுவது ‘பங்கு’ என்ற அமைப்பில்தான். அதனால்தான் போப் பிரான்சிஸ், “பங்கு - உலகத் திரு அவையின் உள்ளூர் முகம்” என்று சொல்கிறார். ஒரு பங்கின் இயல்பையும், செயல்பாட்டையும் வைத்துதான் திரு அவை மதிப்பிடப்படுகிறது. ஒரு பானைப் பொங்கலின் ஒரு சோறு - பங்கு! 

நம் பங்குகள் எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகின்றன? சமூகம் போன்றா? அல்லது நிறுவனம் போன்றா?

பங்குப் பணியாளராக என் ஒரு வருட நீண்ட வரலாறில், எனக்கு நேர்ந்த இரண்டு அனுபவங்கள் இங்கே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சம்பவம் 1:

எங்கள் ஆலயத்தில் தோட்ட வேலை பார்ப்பவர் செஞ்சி ஊர்க்காரர். பெங்களூரில் ஒரு ஹோட்டலில் ‘house-keeping’ பணி சில வருடங்கள் செய்திருக்கிறார். நிறுவன அனுபவம் இருக்கிறது. படிக்கவில்லை. 50 வயது மதிக்கலாம்.  நான் ‘அண்ணன்’ என்று அழைப்பேன். தலை நரைத்துப் போனதாலோ என்னவோ ஊர்க்காரர்கள் ‘அய்யா’ என்பார்கள். வெள்ளந்தி! ‘நீ’, ‘வா’, ‘போ’ என்பவை அவருடைய அகராதியில் மிக மரியாதையான சொற்கள்! “இன்னாப்பா இது, ஒன்னோட ஒரே பேஜாராக் கீது...”, “மாட்ட இஸ்துக்கினு போய்க்கினே இரு...” போன்ற அவரின் சொற்றொடர்கள் ஊர்க்காரர்கள் மத்தியில் பிரபல்யம். ஒரு நாள் காலை ஏழு மணி. நான் உள்ளறையில் ஏதோ வேலையாய் இருந்தேன். அறைக் கதவு ‘டமார் டமார்’ என்றது. திறந்தேன். தோட்டக்கார அண்ணன்தான்! ஒரு பெரிய மண் வெட்டியை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு நின்றார். அதிகாலையில் அவசரமாக என்னைக் குழி தோண்டிப் புதைக்கும் அளவுக்கு நான் தவறு ஒன்றும் செய்ய வில்லையே என்று யோசித்தவாறு, “என்ன விசயம்ணா?” என்றேன். “உன்னைப் பார்க்க ஒரு கஸ்டமர் வந்திருக்கார்” என்றார். நான் ஒரு கணம் குழம்பி நின்றேன்.  “என்ன? யார் வந்திருக்கா?” “அதான்... ஒரு கஸ்டமர் வந்திருக்கார். உன்னைப் பாக்கணுமாம்! ‘என்ன விசயம் சொல்லுயா?’ன்னு கேட்டா, அத்த உன் கையிலதான் சொல்வாராம்.”

கஸ்டமர்??!! நான் வெளியில் வந்து பார்த்தேன். போர்ட்டிக்கோவில் ஒரு பங்கு உறுப்பினர் குடும்ப அட்டையோடு காத்திருந்தார். பெரியவர்! சந்தா கட்ட வந்திருந்தார். அவரை அலுவலகத்திற்குள் அழைத்து, வேலையை முடித்து அனுப்பி விட்டு, தோட்டக்காரரைக் கூப்பிட்டேன். இந்த முறை அண்ணன் ஒரு பெரிய கடப்பாரையோடு வந்தார்.

நான் அவரிடம், “அண்ணா, நல்லா கவனிச்சுக்கோங்க! நீங்கள் முன்னாடி ஹோட்டல்ல வேலை பார்த்தப்ப, அங்க வர்றவங்கள கஸ்டமர்னு சொல்லியிருப்பீங்க! அது ஓக்கே! ஆனா, இங்கே வர்றவங்க எல்லாரும் பங்கு ஆள்கள்! கஸ்டமர் கிடையாது. இவுங்கள ‘வாடிக்கையாளர்’னு சொல்லவும் கூடாது; வாடிக்கையாளர் மாதிரி இவுங்கள நடத்தவும் கூடாது. சரியா? இப்பப் பாருங்க.. இந்த இரண்டாம் வத்திக்கான் சங்கம் என்ன சொல்லுதுன்னா...” என்று நான் தொடர்ந்தபோது, அண்ணன் கடப்பாரையின் முனை கூராக இருக்கிறதா என்று சரிபார்த்ததால், ‘டக்’கென்று ஒரு 20 ரூபாய் தாளைக் கொடுத்து, “சரி, போய் ஒரு டீயும், வடையும் சாப்பிடுங்க” என்று அவரை அவசரமாக அனுப்பிவிட்டு, பின் ‘ஏன் அவர் அப்படிச் சொன்னார்?’ என்று நிதானமாக யோசித்துப் பார்த்தேன்.

இன்னும் பழைய பழக்கம் போகவில்லை என்று சமாதானம் செய்துகொள்ளலாம்.  அல்லது சற்று நேர்மையாக யோசித்தால், அவர் முன்பு வேலை பார்த்தச் சூழலுக்கும், இப்போது இருக்கிற பங்கு சூழலுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை அவர் காணவில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். அவரைப் பொறுத்தமட்டில் நான் இன்னொரு முதலாளி! Just another owner! சிலர் என்னிடம் பணம் கொடுக்கிறார்கள். சிலருக்கு நான் பணம் தருகிறேன். சிலருக்கு நான் சில சேவைகள் செய்கிறேன். சிலர் எனக்குச் சில சேவைகள் செய்கிறார்கள். ஏதேதோ வேலைகள் நடக்கின்றன. ஆனால், இதையெல்லாம் தாண்டி, பங்கு என்பது வெறும் ஒரு சேவைப் பரிமாற்றக் களம் அல்ல; இது ஒரு சமூகம்! 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை, ஒரு பண்பாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கும், முன்னெடுத்துச் செல்லும் அடிப்படை அமைப்பு இது என்பதை அந்த எளிய மனம் புரிந்துகொள்ள போதுமான அக, புறக் காரணங்களை நான் அவருக்குத் தரவில்லை என்பதுதான் உண்மை!

சம்பவம் 2:

கிராமத்திலிருந்து ஓர் இளைஞர் வந்து, தனது திருமணம் சரிசெய்யப்பட வேண்டும் என்றார். படித்தவர். அரசாங்க கான்ட்ராக்ட் வேலைகள் எடுத்துச் செய்யும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். மனைவியும் படித்தவரே! கோயிலுக்கு வந்து போக இருந்த குடும்பங்கள்தாம். கொரோனா காலத்தின்போது ஆலயங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், இரண்டு குடும்பங்களும் கூடிப் பேசி, ஓர் எளிய சமூக நிகழ்வாக ‘திருமணத்தை’ செய்து வைத்துவிட, அவர்கள் சேர்ந்து வாழத் துவங்கி, இப்போது ஒரு குழந்தையும் ஆகிவிட்டது. குழந்தைக்குத் திருமுழுக்குக் கொடுக்க வேண்டும்.

அவரை அமர வைத்து, முதலில் திருமணத்தைச் சரி செய்ய வேண்டும் என்ற அவர் முடிவுக்கு நன்றி சொன்னேன். பின்னர் அதில் உள்ள பல்வேறு அடுக்குகளை விவரித்தேன். திருமுழுக்குச் சான்றிதழ்கள் பெறுதல், ஓலை எழுதுதல், அடிப்படை ஞானத் தயாரிப்பு, திருமணத்தைச் சரிசெய்தல், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பெறுதல், பின்னர் குழந்தைக்குத் திருமுழுக்கு... என நான் சொன்ன எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட்டு, “process-ஐ துவங்குகிறேன்” என்று சொல்லிக் கிளம்பியவர்,  ஒரு கணம் தயங்கி நின்றார்.

“வேறெதுவும் தகவல் வேண்டுமா?” என்று கேட்டேன். ஒரு மாதிரியான ஆட்டுப் புன்னகை ஒன்று தந்து, தலையை இலேசாகச் சொறிந்து கொண்டே, “இல்ல... இதுக்கெல்லாம் என்ன ஃபார்மாலிட்டிஸ் ஃபாதர்? சொல்லுங்க... ஏற்பாடு பண்ணிடுறேன்” என்றார்.

புரிகிறதா? அரசாங்க அலுவலகப் பரிபாஷை யில், ‘ஃபார்மாலிட்டிஸ்’ என்றால், ‘இலஞ்சம்’ என்று அர்த்தம். இளைஞர் தன்னுடைய ‘பேப்பர் வொர்க்’ சரி செய்யப்பட பங்கிற்கு எவ்வளவு இலஞ்சம் தர வேண்டும் என்று நாசூக்காகக் கேட்கிறார்.

‘கஸ்டமர்’, ‘ஃபார்மாலிட்டிஸ்’ - சில வேளைகளில் ‘ஃபீஸ்’ (கல்லறை மந்திரிக்க எவ்வளவு ஃபீஸ், ஃபாதர்?)... இவையெல்லாம் சும்மா வார்த்தைகள் தானே என்று சிலர் நினைக்கலாம். தவறு! ஆங்கிலத்தில் ‘narrative’ என்று சொல்வார்கள். இவை ஒரு சூழ்நிலையைப் பிரதிபலிக்கிற, தீர்மானிக்கிற, உருவாக்குகிற சொல்லாடல்கள்!  ஏதோ ஒன்று சரிச் செய்யப்பட வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிற எச்சரிக்கை மணிகள்!

தனியார் நிறுவனங்களின் வியாபார மனப்பான்மை, திரு அவையில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அதேவேளையில், நம் பங்கு மேலாண்மையில் ஒரு ‘level of professionalism’ தேவை என்பது என் கருத்து. ஏன்? எப்படி? அது பற்றி வேறொரு கட்டுரையில்!

அதுவரை, இது அந்நிய நிலம்தான் ஆனாலும், நமக்குக் கொடுக்கப்பட்டது குறுகிய காலம்தான் ஆனாலும், இந்தப் பயணத்தை கைகோர்த்து, குழுவாகக் கடப்போமே?  என்ன சொல்கிறீர்கள்?

(இந்த வார கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

Comment