No icon

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா ஒரு மறைபொருள்

இந்தப் பிரபஞ்சம் ஒரு மறைபொருள்; நாளும் பொழுதும், இந்தப் பூமியும் ஒரு மறை பொருள்; இங்கே உயிர் வாழ்க்கை ஒரு மறைபொருள்; மரம், செடி, கொடி, புல், பூக்கள்... என்று பல்லுயிர்கள் மறைபொருள்; விதவிதமாய் மிருகங்கள், வண்ணமயமாய்ப் பறவைகள் யாவும் மறைபொருள். மனித வாழ்க்கை ஒரு மறைபொருள். ஆண், பெண் என்பதும், குழந்தைகள் பிறப்பும் என்னே மறைபொருள்!

திரு அவை ஒரு மறைபொருள்; திருமணம் ஒரு மறைபொருள்குருத்துவம் ஒரு மறைபொருள்; திருப்பலி ஒரு மறைபொருள்; திருஅருள்சாதனங்கள் மறைபொருள்! இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

மறைபொருள் என்றால் என்ன? நம்முடைய அறிவுக்கு எட்டாத, மெய்யியலால் விளக்க முடியாதவை என்பதா? இல்லவே இல்லை; மாறாக, இறைவன் என்னும் பரம் பொருளால் வெளிப்படுத்தப்பட்டு,   அறிவைத் தாண்டி நமது உள்ளம் ஏற்றுக்கொள்ளும் உண்மைகள்! அவை வார்த்தைகளில் விவரித்திட முடியாத, ஆனால், நம்மை வாழச் செய்கின்ற மெய்மைகள்!

இந்த வரிசையில் வார்த்தை மனிதர் ஆனதும், உருவம் இல்லாத அருவமான கடவுள் மனித உடல் எடுத்தும் கணவன்/ஆண் துணையின்றி கன்னி மரியா குழந்தையைப் பெற்றதும், அவரது குழந்தை இயேசுஇறைவனும், மனிதனும்என்பதும் மறை பொருள் அல்லாமல் வேறென்ன? ஆம், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவும் ஒரு மறைபொருள் அல்லவா! இந்த விந்தையைச் சிந்தையில் இருத்தி, உள்ளத்தில் ஏற்று ஆச்சரியங்களின் ஆண்டவனை ஆராதிப்போம்.

வார்த்தை மனிதராகி, நம்மிடையே குடிகொண்ட கிறிஸ்துமஸ் எனும் இந்நிகழ்வைச் சுற்றி ஏராளமான புனைவுகள் உள்ளன. தனி மனித, குடும்ப, சமூகக் கலாச்சாரத்தில் காலத்தின் கோலத்தால் குடில்கள், தோரணங்கள், பரிசுப் பொருள்கள், வாழ்த்து அட்டைகள், பல்வகைப் பாடல்கள், வழிபாடுகள், ஆராதனைகள், கேக்குகள், இனிப்புகள், விடுமுறைக் கொண்டாட்டங்கள் என்று... இன்று அதற்குப் பல்வகைப் பரிமாணங்கள் இருக்கின்றன. மனுக்குலம் பிழைத்திருக்க, தழைத்திருக்க இவை எல்லாம் தேவை. ஆனால், இந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் வியப்பை ஒரு குடிலுக்கு முன்பாக அமைதியாய் அமர்ந்து இறைவார்த்தையின் ஒளியில் மட்டுமே இரசித்து, ருசித்துப் பார்க்கிறேன். என்னோடு இந்த மாபெரும் மறைபொருளைக் கொண்டாட வாருங்கள்! குடிலில் இருக்கின்றன மூன்று மனித உயிர்கள்: 1) கன்னி மரியா  2) யோசேப்பு  3) குழந்தை இயேசு. மூன்று என்னும் பரிபூரணம் இங்கே மட்டும்தானா? இயேசுவின் பிறப்பைச் சுற்றி எல்லாமே மூன்று மூன்று மூன்றுதான். இந்த எழிலை இனி ஆழமாய்க் காண்போம்.

I. கடவுளைத் தேடியோர் மூன்று ஜோடிகள்: 1) செக்கரியா- எலிசபெத்  2) யோசேப்பு-மரியா  3) சிமியோன்-அன்னா.

II. இயேசுவின் பிறப்பு நிகழ்வில் மூன்று வகை பிறஇனத்தவர்: 1) இடையர்கள்  2) பெரிய ஏரோது  3) மூன்று ஞானிகள்.

III. இயேசுவின் பிறப்பில் விண்ணகம் அருளும் கொடைகள் மூன்று: 1) அன்பு (யோவா 3:16);  2) மகிழ்ச்சி (லூக் 2:10); 3) அமைதி (லூக் 2:13,14).

IV. இவ்விழாவில் வெளிப்பட்ட கடவுளின் இயல்பு மூன்று: 1) தந்தை  2) மகன்/வார்த்தை 3) தூய ஆவி.

மூவொரு கடவுள் என்னும் மறைபொருள் மங்கள வார்த்தை நிகழ்வில்தான் நேரிடையாய் வெளிப்பட்டதுஎன்பார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல். கிறிஸ்தவத்தின் முதல் நம்பிக்கையாளர் கன்னி மரியா. அவர் நமது நம்பிக்கையின் தாய்.

V. இயேசுவில் வெளிப்பட்ட பண்புகள் மூன்று: 1) மனிதன் (யோவா 1:14);  2) குழந்தை (எசா 9:6); 3) ஏழை (பிலி 2:6; 2கொரி 8:9).

VI. இறைவெளிப்பாட்டிற்கு முன்பாக நமது பதில்மொழி மூன்று:1) ஆராதனை  2) அர்ப்பணம்  3) நற்செய்தி அறிவிப்பு.

VII. இயேசு வழங்கும் ஆசீர்கள் மூன்று: 1) பாவங்கள் மன்னிப்பு (மத் 1:21);  2) கடவுள் நம்மோடு-இம்மானுவேல் (மத் 1:23); 3) நம்மைச் செல்வந்தராக்க (2கொரி 8:9).

VIII. மூன்று ஞானிகள்; மூன்று வகைப் பரிசு கள்:கஸ்பார் : பொன் - அரசர். ● மெல்கியோர்: தூபம் - கடவுள். ● பல்தசார் : வெள்ளைப்போளம் -துன்புறும் மெசியா.

IX. உலகோர் அனைவருக்குமானவர் இயேசு

இது கிறிஸ்தவர்கள் பண்டிகை மட்டுன்று. ● இயேசு பொதுவான சாமிகிறிஸ்து பிறப்பு (லூக் 2:10) மக்கள் அனைவருக்கும். ● கிறிஸ்துவின் உயிர்ப்பு (மத் 28:19) எல்லா இனத்தாரையும். ● பெந்தகோஸ்து (திப 2:17) மாந்தர் யாவர் மேலும் குடிலின் முன் புனித பிரான்சிஸ் அசிசியார், நற்கருணையின் முன் புனித தாமஸ் அக்குவினாஸ் இதைத்தான் தியானித்துப் பணிந்தார்கள். கன்னி மரியாவும் இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தன் இதயத்தில் பதித்துச் சிந்தித்து வந்தார். வாருங்கள், நாமும் இந்த இயேசு என்னும் மறைபொருளை ஆராதிப் போம். வாழ்வுக்குப் பொருள் சேர்ப்போம்.

 

Comment