No icon

​​​​​​​ஜனவரி 26: இந்தியக் குடியரசு தின சிறப்புக் கட்டுரை

​​​​​​​இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாறு

உலக வரைபடத்தில் மிகச் சிறப்பானதோர் இடத்தை இந்திய ஜனநாயகக் குடியரசு பெற்றுள்ளது. இன்று சற்றேறக் குறைய 142 கோடி மக்களைத் தன்னகத்தே கொண்டு உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பல நூறு ஆண்டுகளாய் வெளி நாட்டு அரசுகளுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் விடுதலை பெற்றது. ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று, நமக்கானதொரு சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இருக்கின்றோம். உலக நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களை ஒப்பிடுகிற பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் மிகச் சிறப்பானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்திய நாட்டில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அரசியல் அமைப்பு நிர்ணய சபை ஒன்று உருவாக்கப்பட்டது. அதனுடைய தலைவராகப் பின்னாளில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் இருந்தார். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவிற்குத் தலைவராக உலகப் புகழ் பெற்ற டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் தலைமை ஏற்றார்கள். இந்தியா பல்வேறு சமயங்கள், பல ஆயிரம் சாதிகள், பல நூறு இனக் குழுக்கள், பல மொழிகள், பல்வேறு கலாச்சார-பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் என்று ஒரு துணைக் கண்டமாகத் திகழ்கிறது.

சுதந்திரத்திற்கு முன்னால் 400-க்கும் அதிகமான சிற்றரசுகளாகப் பிரிந்து கிடந்த இந்தியா, சுதந்திரத்திற்குப் பிறகு ஒன்று சேர்க்கப்பட்டு, தற்போதைய நிலவியல் இந்தியா உருவாக்கப்பட்டது. எனவே, இந்த இந்தியாவைப் பார் போற்றும் வண்ணம் சிறப்புமிக்க ஒரு நாடாக உருவாக்குவதற்காக அரசியல் நிர்ணய சபையில் இருந்தவர்கள் ஒன்றுகூடி இந்த மாபெரும் சட்டப் புத்தகத்தை உருவாக்கினார்கள். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாள்கள் நடைபெற்ற இந்த அரசியலமைப்பு நிர்ணய சபையில், இறுதியில் 1949-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி அரசியலமைப்புச் சாசனம் அதன் உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டது.

1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இது செயல்பாட்டிற்கு வந்தது. அன்று முதல் இன்று வரை இந்திய நாட்டில் இருக்கின்ற அனைத்து அமைப்புகளும், இந்திய நாட்டின் எல்லாக் குடிமக்களும் அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். எவ்வளவு உயர் அதிகாரத்தில் இருந்தாலும் சரி, எவ்வளவு ஏழையாக இருந்தாலும் சரி, எல்லாரும் சமமானவர்கள் என்பதை உறுதி செய்வதுதான் அரசியலமைப்புச் சட்டத்தினுடைய மிகப்பெரிய சிறப்பம்சம். உலகத்திலேயே மிக நீளமான அரசியலமைப்புச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான். இதனுடைய உருவாக்கக் காலத்தில், 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் அகில உலக ஐக்கிய நாடுகள் அவையில் அகில உலக மனித உரிமை பிரகடனம் வெளியிடப்பட்டது. அதனுடைய முக்கியமான கருத்துகள் உள்வாங்கப் பெற்று, இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

எல்லாக் குடிமக்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்கிறது. அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நடை முறைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருடைய கடமைகளும் பிரிவு 51A-வில் அழகாக வரையறுக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சாசனம் நமக்கு வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்ற பொழுது, அவற்றை உரிமையாகப் பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றங்களில் நாம் வழக்கு தொடுத்து, உரிமைகளை உறுதி செய்வதற்கான வழி வகை காணப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் சில அடிப்படை அம்சங்களை (BASIC STRUCTURE) ஒருபொழுதும் அரசு மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தால் சொல்லப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்புச் சட்டத்தை விளக்கும் பொறுப்பை உச்ச நீதி மன்றத்திற்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது.

மிகச் சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்தை நாம் கொண்டிருக்கிறோம் என்பதை அதனுடைய முகவுரையில் (PREAMBLE) நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இதனை உருவாக்கியவர்கள் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் என்றாலும், அரசியலமைப்புச் சட்டம் சொல்வதெல்லாம் (WE, THE PEOPLE OF INdia) இந்தியக் குடிமக்களாகிய நாம், இதனை உருவாக்கி இந்த நாளில் ஏற்றுக்கொள்கிறோம் என்பதுதான் இதனுடைய மிக முக்கியமான அம்சம்.

இது நீதியை வழங்கக் கூடியதாக, சமூக-அரசியல்- பொருளாதாரத் தளங்களில் ஏற்றத்தாழ்வற்ற நீதியை அனைவருக்கும் உறுதி செய்வதாகவும், இந்தியக் குடிமக்களிடையே சுதந்திரத்தை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை உறுதி செய்கிறது. இந்தியக் குடிமக்களாகிய நாம் யாருக்கும் அடிமை இல்லை என்றும், நம் அனைவருக்கும் வாக்குரிமை இருக்கிறது என்பதையும், நாமே அரசுகளைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதையும், அரசுகளை வீழ்த்துவதற்கான சக்தி குடிமக்களிடமே இருக்கிறது என்பதையும், அரசுகள் மக்கள் நல அரசாகச் (WELFARE STATE) செயல் பட வேண்டும் என்பதையும் அரசியலமைப்புச் சட்டம் சுட்டிக் காட்டுகிறது.

குறிப்பாக, இந்தியாவை நாம் ஓர் இறையாண்மை மிக்க, பொருளாதாரத்தில் சமத்துவத்தைப் பேணுகின்ற, சமய சார்பற்ற மக்களாட்சி குடியரசாக ஏற்படுத்துகிறோம் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை சொல்கிறது. எனவே, மிகச் சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்தை வாசிப்பதும், அதனைக் குழுக்களில் நாம் யோசிப்பதும், உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பிறப்பிடம், சமூக அந்தஸ்து இன்னும் பல வேறுபாடுகளைக் களைந்து, இந்தியத் தாயின் பிள்ளைகளாக ஒருங்கிணைந்து உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டியது நமது உரிமை என்பதையும், அமைதியான, வளர்ச்சி நிறைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக, அதனை அழிக்க நினைக்கின்ற தீய சக்திகளிடமிருந்து அரசியலமைப்புச் சட்டத்தை, அதன் கொள்கைகளை, அது வழங்குகின்ற உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைய வேண்டும் என்பதே இன்று நம்மில் இருக்கின்ற மிகப்பெரிய கடமையாகும்.

அனைவருக்கும் இனிய

அரசியலமைப்புச் சட்ட நாள் வாழ்த்துகள்!

Comment