No icon

புதிய ஆயரின் விருதுவாக்கும் இலட்சினையும்!

என்றோ ஒருநாள்

யாரோ ஒருவர்

நடந்த பாத அடிச்சுவட்டில்

பல ஆயிரம்பேர் நடந்ததால்

ஊருக்குப் பாதையாச்சு

தேசிய நெடுஞ்சாலையாச்சு!’

இன்று பாரபட்சம் இல்லாமல் நாடு முழுவதும் பயணித்து அனுபவிக்கின்றோம். இதுவே உலகம் முழுவதுமான அனுபவமாக இருக்கிறது. அன்று கலிலேயா, பாலஸ்தீனம் எங்கும் நடந்த இயேசுவின் பாதச்சுவடுகள் மண்ணில் மட்டுமல்ல; மனித மனங்களிலும், மனித இதயங்களிலும், மனித எண்ணங்களிலும் பதிந்ததால் சத்தியமும், தர்மமும், இலட்சியமும், மனிதமும் புத்துயிர் பெற்றன. அன்பும் - கருணையும், மன்னிப்பும் கண்விழித்துப் பார்த்தன. நேசமும்-பாசமும், சகோதரத்துவமும் துளிர்விட்டு முளைத்தன. அக்கறையும்-பொறுப்பும், பகிர்வும் மனிதத்தின் அறமாகியது.

இத்தகைய ஜீவகாருண்யத்தைச் சிருஷ்டிக்க வைத்த ஜீவ ஜோதியாகிய இயேசுவின் பாதச்சுவட்டை மனத்தில் மட்டும் சுமக்காமல், மக்கள் நலனிலும், உடன் பயணிக்கும் சகோதரக் குருக்களின் நலனிலும் தன் ஆயர் பணி வாழ்வை முன்னிறுத்தி ‘அவரது பாதச்சுவடுகளில்’(In His Footsteps) என்ற வாக்குத்தத்தத்துடன் நமது குடந்தை மறை மாவட்ட புதிய ஆயர் மேதகு A. ஜீவானந்தம் அவர்கள் அடி எடுத்து வைத்திருப்பது குடந்தை மறைமாவட்டத்திற்குப் புதிய ஒளி பாய்ச்சலாகவும், போற்றுதலுக்கும், மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் உரியதாகவும் உள்ளது.

காந்தியின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவன் அகிம்சாவாதி; பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவன் சமூகச் சீர்த்திருத்தவாதி; அம்பேத்கரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவன்  புரட்சிவாதி; காரல் மார்க்சின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவன் பொது உடைமைவாதி; சாக்ரடீஸின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவன் தத்துவவாதி; வள்ளலாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவன் சமய சீர்திருத்தவாதி. இப்படி எத்தனையோ ‘வாதிகள்’ இருந்தாலும், ‘மனிதகுலவாதி’ நமதாண்டவர் இயேசு கிறிஸ்து. அவரின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி அறச்சீற்றத்தோடும், அக்கறை துடிப்போடும், எளிய குணத்தோடும், ஆயர் ஜீவானந்தம் அவர்கள் பணிப் பொறுப்பேற்க வருவது குடந்தை மறைமாவட்டத்திற்குப் புதுப் பிறப்பளித்துள்ளது.  இத்தருணத்தில் புதிய ஆயர் ஜீவானந்தம் அவர்கள், தன் வாக்குத்தத்தத்தோடு நம்மையும் இணைந்து புத்துயிர் பெற அழைக்கின்றார்.

பாவி என்று ஒதுக்கப்பட்டவர்களையும், நோயால் ஊரை விட்டு விலக்கப்பட்டவர்களையும், துச்சமாய் நினைத்த வரிதண்டுவோரையும், விபசாரிகளையும், விதவைகளையும், பெண்களையும், குழந்தைகளையும், சமூக விளிம்பில் தள்ளப்பட்டவர்களையும், கைவிடப்பட்டவர்களையும் தேடித் தேடிச் சென்று அவர்கள் சார்பாய் நின்று இறைவனின் அன்பை வெளிப்படுத்திய இயேசுவின் பாதச் சுவடுகளைப் பின்பற்றி, புதிய சமூகம் படைக்கும் உயரிய நோக்குடன் புதிய ஆயரின் வாக்குத்தத்தம் இன்று நம்மையும் ஒன்றுசேர்த்து, புதிய மறை மாவட்ட இயக்கமுறையை உருவாக்க அழைக்கின்றது.

‘நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கைக் கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றை விடப் பெரியவற்றையும் செய்வார்’ (யோவான் 14:12) என்று இயேசு கூறியபடி, ஆயர் ஜீவானந்தம் அவர்கள், இறைவன்மீது கொண்ட அளப்பரிய ஆழ்ந்த இறை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், தன் வாக்குத்தத்தத்தின்படியும், இயேசுவின் ஆயர் பணியைத் தீர்க்கமாகச் செய்வார். இயேசு கிறிஸ்துவின் பெயரால் தன்னைவிட பெரிய காரியங்களையும் தனது சீடர் ஜீவானந்தம் அவர்களின் வழியாகச் செய்ய அவருக்கு வலிமையளிப்பார் என நம்புகிறோம்.

“நல்ல மனிதராக இருங்கள்; ஆனால், அதை நிரூபிக்க உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று பிரெஞ்சு நாட்டு எழுத்தாளர் பாவ்லோ கொய்லோ கூறுவது போல், ஆயர் ஜீவானந்தம் அவர்கள் நல்லவர், எளியவர், யாருக்கும் கெடுதல் நினையாதவர் என்பது உண்மை. இதனை நிரூபிக்க தன் உயிரினும் மேலான நேரத்தை வீணடிக்காமல், இயேசுவின் பாதச்சுவடுகளில் ஆயரின் பயணம் தொடரட்டும்.

அன்பு செய்யவும், மன்னிக்கவும், துணை நிற்கவும், ஏற்றுக்கொள்ளவும், நோய் தீர்க்கவும், பசிபோக்கவும், தோழமை கொள்ளவும், எல்லாரும் கடவுளின் பிள்ளைகள் என்ற சமத்துவத்தை நிலைநாட்டவும், பிறரின் பாதங்களைத் தொட்டுக் கழுவவும், பிறரின் சுமைகளை இறக்கவும், பிறரின் கண்ணீரைத் துடைக்கவும்... இப்படியான உயர் குணாதிசயங்களைப் பெற்று வாழ்வதோடு மட்டுமல்லாமல், பணி செய்யும் மண்ணிலும், பயணிக்கும் இடங்களிலும், சந்திக்கும் மனிதர்களிடத்திலும் இயேசுவின் பாதச்சுவடுகளின் மகிமையை எடுத்துரைக்கவும், வாழ்ந்து காட்டவும் முடிவெடுத்து, புதுயுகம் உருவாக்கும் ஆயர் ஜீவானந்தம் அவர்களின் உருவாக்கப் பணிகள் வெற்றிபெற வாழ்த்துகிறோம், வணங்குகிறோம், செபிக்கின்றோம், துணை நிற்கின்றோம். வாழ்க ஆயர்! வெல்க அவர் பணி!

இலச்சினை:

தூய ஆவி: “படைப்பின் தொடக்கத்தில் நீர்த் திரளின் மேல் அசைந்தாடிக் கொண்டிருந்த கடவுளின் ஆவி” (தொநூ 1:2); “இயேசுவைப் பாலைநிலத்தில் வழிநடத்திய தூய ஆவி” (லூக்கா 4:1); “பயந்திருந்த திருத்தூதர்களின் மீது இறங்கி வந்து, அவர்களை ஆட்கொண்டு ஒளிர்வித்த தூய ஆவியார்” (திப 2:4); ஞானம், மெய்யுணர்வு, அறிவுத்திறன், நுண்மதி, ஆற்றல், இறைப்பற்று, இறை அச்சம் ஆகிய கொடைகளால் புதிய ஆயரையும் ஆட்கொண்டு ஒளிர்வித்து, இயேசுவின் பாதச்சுவடுகளில் பயணம் செய்ய வரம் அருள்வாராக!

திருவிவிலியம்: தூய ஆவியானவர் ஆயர் ஜீவானந்தம் அவர்களின் அகத்தை இறைவார்த்தையால் ஒளிர்விக்கவும், ஆயர் அவர்கள் அவ்வொளியால் திடப்படுத்தப்பட்டு ஊக்கத்தோடும், உறுதியோடும், உளமகிழ்வோடும் இயேசுவின் பாதச்சுவடுகளில் பணியாற்றி, நல்ல ஆயனாகப் பயணிக்க ஆற்றல் தரும் அனுதின ஆன்ம உணவாகத் திருவிவிலியம் அமைவதாக!

இயேசுவின் பாதச்சுவடுகள்: ஆயர் ஜீவானந்தம் அவர்களின் வாக்குத்தத்தமான ‘அவரது பாதச் சுவடுகளில்’ (In His Footsteps) எனும் இலக்கு பயணத்தைத் தொடர்ந்து நினைவூட்டி, செயல்பாட்டிற்கு இட்டுச்செல்லும் இயேசுவின் பாதச்சுவடுகள்.

அலங்கார அன்னை:

தாயின் கரம் இருக்க கலக்கம் இல்லை

தாயின் மடி இருக்க கவலை இல்லை

தாயின் துணை இருக்க கண்ணீர் இல்லை

தாயின் பாதம் இருக்க பயமே இல்லை!

குடந்தை மறைமாவட்டத்தை 125 ஆண்டுகளாகக் காத்து வரும் தூய அலங்கார அன்னை தன் மகன் இயேசுவின் பாதச்சுவடுகளில் பணி செய்ய, பயணம் செய்யும் ஆயர் ஜீவானந்தம் அவர்களை ஆட்கொண்டு பாதுகாத்துக்கொள்வார்.

செம்மறி ஆடு: பழைய ஏற்பாட்டில் பலியிடப்பட்ட பாஸ்கா ஆட்டுக்குட்டிக்குப் (விப 12:21-28) பதிலாக, புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து அனைத்துக்குமான ஒரே கடவுளின் ஆட்டுக்குட்டியாக மாறிப்போனார் (யோவா 1:36).  கல்வாரியில் சிலுவையில் இயேசு தொங்கியபோது எல்லாக் காலத்திற்குமான ஒரே கடவுளின் ஆட்டுக்குட்டியாகப் பரிகாரப் பலியானார் (மத் 27:54). அத்தகைய பரிகாரப் பலியாகிய இயேசுவின் உன்னதப் பலியை ஆயர் ஜீவானந்தம் அவர்கள் தினமும்  ஒப்புக்கொடுத்து  தலத் திரு அவையை நல்வழி நடத்தும் நல்ல ஆயனாக, தன்னையும் பரிகாரப் பலியாக்கி இயேசுவின் பாதச்சுவடுகளில் பயணிக்க இறைவன் அருள்புரிவாராக!

Comment