No icon

நானும், புதிய ஆயரும்!

சனவரி 13, 2024 அன்று மாலை 4.30 மணிக்கு நண்பர் பேரருள்திரு. ஜீவானந்தம் அமலநாதன்  அவர்கள் ஆயராக நியமிக்கப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடைந்து, அவரை வாழ்த்த கும்பகோணம் விரைந்தேன். ஆயர் F. அந்தோணிசாமி அவர்கள் திருத்தந்தையின் தூதுவர் அனுப்பிய நியமனக் கடிதத்தை வாசித்து முடித்தபின், தனது ஏற்புரையில், “இந்த ஆயர் நியமனத்தை நான் பெருமையாகவோ, பதவியாகவோ நினைக்கவில்லை; இறைவனுக்கும், இறை மக்களுக்கும் பணி செய்ய ஒரு வாய்ப்பாக நினைக்கின்றேன்என்று கூறி, எப்போதும் தனக்குரிய எளிமையை, பொது நன்மைக்காகப் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார் புதிய ஆயர்.

குடந்தை இளம் குருமடத்தில் வகுப்புத் தோழர்களாக 1980-களில் ஆரம்பித்த எங்கள் நட்புப் பயணம் சென்னை பூவிருந்தவல்லி திரு இருதயக் குருமடம் தத்துவயியல் மற்றும் புறத்தாக்குடி புனித பிரிட்டோ மாணவர் விடுதியில் விடுதிக் காப்பாளர்களாக ஓர் ஆண்டு பயிற்சி, மீண்டும் நான்கு ஆண்டுகள் இறையியல் பயிற்சி என்று தொடர்ந்தது. இளம் குருக்களாக நான் நடுவலூரிலும், புதிய ஆயர் பாத்திமாபுரம் பங்கிலும் இருந்தபோது அடிக்கடிச் சந்தித்து, இறைப்பணி வாழ்வின் இன்ப-துன்பங்களைப் பகிர்ந்து கொண்டோம். எங்கள் இருவரது குடும்பங்களும் இன்றுவரை நெருங்கிய நட்புடனும், அன்புடனும் பழகி வருகின்றனர்.

இளம் குருக்களாக மறைமாவட்டத்தில் பணிபுரிந்த நேரங்களில் எல்லாருக்கும் குறிப்பாக, எளியோருக்கும் சமூக நீதியும், பங்கேற்பும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல நேரங்களில் இணைந்து குரல் எழுப்பியுள்ளோம். உயர் கல்விக்கு நான் லூவெயின் பல்கலைக்கழகத்திற்கும், ஆயர் ஜீவானந்தம் உரோமைக்கும் சென்றோம். விடுதலை இறையியல், தலித் இறையியலால் நான் ஈர்க்கப் பெற்றேன். ஆயர் அவர்கள் தனது முனைவர் பட்டத்திற்குக்கூட்டொருங்கியக்கத் திரு அவைஎன்ற தலைப்பிலேயே தனது ஆய்வினை மேற்கொண்டார். இருவரும் இறையியலில் முனைவர்களாக நாடு திரும்பினோம். இறைமக்கள், எளிய மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொள்ள பல்வேறு நிலைகளில் சிந்தித்தோம்.

தமிழ்நாட்டில் பல்வேறு மறைமாவட்டங்களில் பணி செய்யும் எமது வகுப்புத் தோழர்களோடு எமது குருத்துவ வெள்ளி விழாவின் போதுஅக்கறை - 2015’  என்ற நூலை நாங்கள் வெளிக்கொணர்ந்தோம். தமிழ்நாடு திரு அவையில் கூட்டொருங்கியக்கத் தலைமை, பொதுநிலையினர் பங்கேற்பு, பெண்களின் பங்கேற்பு, விளிம்புநிலை மக்கள் குறிப்பாகத் தலித் மக்களின் பங்கேற்பு, ஊடகங்களைச் சிறப்பாக, நற்செய்திப் பணிக்குப் பயன்படுத்துதல் என்பதை வலியுறுத்தினோம்.

திரு அவையில் சாதியும், தீண்டாமையும் வேரறுக்கப்பட வேண்டும் என்பதை எமது வகுப்புத் தோழர்களோடு குறுநூல் வடிவில்அக்கறை - 2022’ என்று வெளிக்கொணர்ந்தோம். எமது தோழமை சித்தாந்த நிலையிலும், எமது பணி வாழ்வில் இன்ப-துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் தொடர்கின்றது. திரு அவையில் ஆயர் நியமனத்தில் சீர்திருத்தம் தேவை என்பதை நண்பர் என்ற முறையில் எடுத்துரைத்திருக்கிறேன்.

இவர் குடந்தை மறைமாவட்ட ஆயராகப் பல சவால்களை எதிர்கொள்வார். கூட்டொருங்கியக்கத் திரு அவையாகக் குடந்தை திரு அவை மாற தேவையான முயற்சிகளை மேற்கொள்வார் என்பதில் ஐயமில்லை. 125 ஆண்டுகளைக் குடந்தை மறைமாவட்டம் கடந்து செல்கிறது. எளிமை, இறைமக்களிடம் அன்பான அணுகுமுறை, எல்லாக் குருக்களிடமும் திறந்த மனத்துடன் பழகும் தன்மை, எளிய தலித் மக்கள்மீது சிறப்பான அக்கறை... இவை ஆயர் ஜீவானந்தம் அவர்களின் தனிப்பண்புகள்! குடந்தை திரு அவையை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல நண்பர் ஆயர் ஜீவானந்தம் அவர்களை வாழ்த்திச் செபிக்கின்றேன்.

Comment