No icon

​​​​​​​“குடந்தை மறைமாவட்டத்தைத் தன்னிறைவு உள்ள மறைமாவட்டமாக மாற்றுவேன்!”

கும்பகோணம் புதிய ஆயர் மேதகு ஜீவானந்தம் அமலநாதன் அவர்களுடன் ‘நம் வாழ்வு’ நேர்காணல்:

கும்பகோணம் மறைமாவட்டத்தின் 7-வது ஆயராகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்தச் செய்தியை அறிந்தவுடன், உங்களுக்குள் இருந்த மனநிலை என்ன?

“உண்மையைச் சொல்லப் போனால், அந்தச் செய்தி எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. உடனே ஒருவிதமான பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. ‘இவ்வளவு பெரிய பொறுப்பை நாம் எவ்வாறு நடத்தப் போகின்றோம்? எப்படி நிறைவேற்றப் போகின்றோம்? என்றதொரு பயம்தான் எனக்கு முதலில் ஏற்பட்டது. அதற்குப் பிறகு மற்றவர்கள் என்னிடம் பேசுகின்ற போதும், என்னை வாழ்த்துகின்ற போதும், கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு நம்பிக்கை பிறந்தது.

இதுநாள் வரை என் வாழ்வில் எதையும் நான் திட்டமிட்டுப் பெற்றுக்கொண்டதில்லை. அனைத்தும் இறைத் திட்டத்தின் படியே நடக்கும்; ஆகவே இந்நிகழ்வும் இறைவனாலும், திருத்தந்தையாலும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற திட்டம் என்று உணர்ந்துள்ளேன். இந்தப் பொறுப்பினையும் அவர்களுடைய உதவியோடு நிறைவேற்றலாம் என்று நான் முன் வந்திருக்கின்றேன்.”

உங்களுடைய குடும்பத்தைப் பற்றி நம் வாசகர்கள் அறிந்துகொள்ளலாமா?

“நிச்சயமாக! நான் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் இருக்கின்ற மிக்கேல்பட்டி என்ற பழம்பெரும் கிறிஸ்தவப் பாரம்பரியமிக்க ஒரு கிராமம். அப்பாவின் பெயர் அமலநாதன்; அம்மாவின் பெயர் அந்தோணியம்மாள் (எ) மரியபுஷ்பம். என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர்கள். இரண்டு மூத்த சகோதரிகள்; இளைய சகோதரர் ஒருவர்; மேலும் சகோதரி ஒருவர். நான் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தேன். நான்கு பேர்களும் அவர்களுடைய ஊரில் சிறப்பாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்; அதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். சிறுவயது முதலே நான் எனது சொந்த ஊரில் வளர்ந்ததில்லை. என் தந்தையின் அரசுப் பணிக்காக நாங்கள் வெளியூரிலேயே தங்கி இருந்தோம். வடமட்டம் என்ற கிராமத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்புவரை படித்தேன். அது முழுக்க முழுக்க இந்து மக்கள் வாழ்கின்ற ஒரு பகுதி. எங்கள் குடும்பம் மட்டும்தான் கிறிஸ்தவக் குடும்பம். ஆகவே, இந்து மக்களோடு மிக நெருக்கமாகப் பழகி வாழ்ந்தோம். அது ஓர் அற்புதமான சூழல்.”

தங்களின் இறையழைத்தலைப் பற்றிக் கூறுங்களேன்?

“9-ஆம் வகுப்பு முடித்த பிறகு நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை; திடீரென்று ஒரு நாள் என் தந்தை எங்களை அழைத்துக் கொண்டு எங்கள் சொந்த ஊரான மிக்கேல்பட்டிக்கு வந்தார். 10-ஆம் வகுப்பு படிக்கும்போதுதான் தினமும் ஆலயத்துக்குச் செல்லும் வாய்ப்பே கிடைத்தது. எல்லாச் செபங்களையும் கற்றுக்கொண்டு திருப்பலியில் பங்கேற்பதுடன், பங்குத் தந்தைக்கு உதவியாக இருந்தேன். அந்த ஒரு வருடத்தில் என்னைப் பார்த்துவிட்டு அப்பொழுது பங்குத் தந்தையாக இருந்த அருள்பணி. அருள்சாமி அவர்கள் ‘நீ குருமடத்தில் படித்துக் குருவாக வேண்டும்’ என்று கூறினார்.  தந்தையின் வழிகாட்டுதல்படி அடுத்த வருடமே மறைமாவட்டத்தில் இளம் குருமடத்தில் சேர்ந்தேன். சேரும்போது அப்போதிருந்த அதிபர் தந்தை அவர்கள் 10-ஆம் வகுப்பில் எனது மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால் சேர்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். நானும் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். ஆனால், பங்குத்தந்தை அருள்சாமி அவர்கள், ‘இல்லை, நீ கட்டாயமாகக் குருவாக வேண்டும்’ என்று சொல்லி பரிந்துரைக் கடிதம் ஆயருக்குக் கொடுத்து, மறுநாள் திரும்பி ஆயரிடம் வந்து பரிந்துரை செய்து, என்னைக் குருமடத்தில் சேர்த்துவிட்டார். அப்படித்தான் இளம் குருமடத்தில் சேர்ந்தேன்.”

கட்டுவோர் விலக்கிய கல்லே, இன்று மூலைக் கல்லாக மாறியிருக்கிறது. உங்கள் குருமடப் பயிற்சி பற்றிக் கூறுங்களேன்.

“11 மற்றும் 12-ஆம் வகுப்பினைச் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அதன் பிறகு  ஆங்கிலமும், இலத்தீன் மொழியும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. பிறகு, 1982-ஆம் ஆண்டு சென்னை, பூந்தமல்லி குருத்துவக் கல்லூரிக்குச் சென்றேன். அங்கு மூன்று ஆண்டுகள் தத்துவவியல் படித்தேன். பின்பு ஓர் ஆண்டு களப்பணியில் புறத்தாக்குடியில் இருக்கிற புனித சவேரியார் மாணவர் இல்ல விடுதிக் காப்பாளராக இருந்தேன். அதன் பிறகு நான் மீண்டும் நான்கு வருடங்கள் சென்னையில் பூவிருந்தவல்லி குருத்துவக் கல்லூரியில் இறையியல் பயின்றேன். 1990, மே திங்கள் 6-ஆம் நாள் குடந்தையிலேயே அப்போதைய ஆயராக இருந்த மேதகு பீட்டர் ரெமிஜியஸ் அவர்களால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டேன்.”

உங்கள் குருத்துவ விருதுவாக்கு எதுவாக இருந்தது?

“என் குருத்துவத் திருநிலைப்பாட்டிற்கு, ‘உண்மையினால் என்னை உமக்கு அர்ச்சனை ஆக்குகின்றேன்’ என்ற விருதுவாக்கினைக் கொண்டிருந்தேன். ‘எப்பொழுதும் ஆண்டவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்; உண்மைதான் உன்னை விடுதலையாக்கும்’ என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்நாள் வரை உண்மைதான் என்னை வழிநடத்தி வருகின்றது.”

உங்களின் பேராசிரியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட சில அனுபவங்களைக் குறிப்பிடுங்களேன்!

“நான் குருமடத்திற்குச் செல்லும்போது முதலில் அருள்பணி. அமலதாசன் அதிபர் தந்தையாக இருந்தார். அவர் மாணவர்களுக்குச் சரியான பாடங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதிலே கண்ணும் கருத்துமாக இருப்பார். ஒரு குருவினுடைய வாழ்விலே எவை முக்கியமானதாகக் கருதப்பட வேண்டும் என்பதிலே மிகவும் தெளிவாக இருப்பார். நன்றாக இருக்க வேண்டும்; நன்றாகச் செபம் செய்ய வேண்டும்; திருவிவிலியம் வாசிக்க வேண்டும்; தமிழ் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும்; ஆங்கிலம் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும்; பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், அப்பொழுது அவர் மற்ற பிற சமயங்களுடைய மக்களோடு நல்ல உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுவார். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், திடீரென்று ஒருநாள் விடுமுறையின்போது ‘எல்லாரும் நடந்து சாமிமலைக்குச் செல்லுங்கள்’; திடீரென்று ஒரு நாள் ‘CSI புனித தோமா ஆலயம் இருக்கிறது; அங்கெல்லாம் பார்த்துவிட்டு வாருங்கள்’ என்று அனுப்பி வைத்து, எங்கள் அனுபவத்தைப் பகிரச் சொல்லி, அதிலிருந்து அனைவரும் சமம் என்ற உணர்வை ஊட்டுவார்.”

குருத்துவ வாழ்வு, நீங்கள் பணி செய்த இடங்கள், அதில் கிடைத்த அனுபவங்கள் பற்றிக் கூறுங்களேன்?

“முதலில் அம்மன்பேட்டை என்ற கிராமத்தில் இரண்டு வருடம் உதவிப் பங்குத் தந்தையாகவும், அதற்குப் பிறகு ஒரு வருடம் இளங்குருமடத்தில் உதவித் தந்தையாகவும் பணிபுரிந்தேன். பின்பு 1993-ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கிற பாத்திமாபுரம் என்ற கிராமம்தான் என் முதல் பங்கு. ஐந்து வருடங்கள் அங்கு பங்குத் தந்தையாகப் பணி செய்தேன். அது ஒரு மறைபரப்புப் பணித்தளம். எல்லாருமே இந்துகளாக இருந்து கிறிஸ்தவர்களாக மதம் (மனம்) மாறியவர்கள். ஆகவே, இந்துப் பாரம்பரியம் அதிகமாகவே இருந்து வந்தது. அது ஒரு சவாலாக இருந்தாலும், எனக்கு நல்ல அனுபவங்களைக் கொடுத்தது. அப்பொழுது அந்தக் கிராமத்திற்குப் பேருந்து வசதிகூட கிடையாது; நல்ல சாலை கிடையாது; ஐந்து கிலோ மீட்டர் தொலைவு நடந்தே வர வேண்டும். இல்லையென்றால் இரு சக்கர வாகனத்தில் வர வேண்டும். இருந்தாலும், அதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை. ஆலயத்தின் பின்புறத்திலே ஒரு சிறிய அறையிலே பூசை வைப்பதற்குப் பொருள்கள் வைத்திருந்த அறையிலே தங்கியிருந்து பணிபுரிந்தேன். அதற்குப் பிறகுதான் குருக்கள் தங்குவதற்கு வீடு கட்டப்பட்டது. பாத்திமாபுரம் பங்கில் பணிபுரிந்த காலம்தான், நான் மிக மகிழ்ச்சியாக இருந்த காலம். அங்கிருந்த அருள்சகோதரிகளின் சிறந்த ஒத்துழைப்புடன் அந்தக் கிராமத்தில் பணிபுரிந்தது இறைவன் கொடுத்த அற்புதமான ஆசீர்வாதமாக இருந்தது. அது உண்மையாகவே நல்ல மனநிறைவைக் கொடுத்தது. அதற்கு பிறகு 2002-ஆம் ஆண்டிலே கபிஸ்தலம் என்ற புதிய பங்கு உருவாகியது. அதில் முதல் பங்குத்தந்தையாகச் சென்றேன். அதுவும் எனக்கு மகிழ்ச்சியை, நிறைவைக் கொடுத்த ஒரு பணித்தளம். ஏனென்றால், மக்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். புதிய பங்குத் தந்தை என்பதால் பல காரியங்களை என்னோடு சேர்ந்து செய்தார்கள். ஒன்று சொல்ல வேண்டுமென்றால் யாருடைய உதவியும் எதிர்பாராமல், நம்முடைய சொந்தக் காலில் நின்று நாம் காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற உணர்வை மக்களுக்குக் கொடுத்தேன். இரண்டு வருடங்கள் பணிபுரிந்தபோது வெளியில் எங்கிருந்தும் பணம் வாங்காமல் ஏழை மக்களிடமிருந்தே அவர்களுடைய உடல் உழைப்பு, அவர்களுடைய சிறிய பொருளுதவி இவைகளைக் கொண்டே நல்ல பல காரியங்களை அங்கே நான் செய்ய முடிந்தது. அதுவும் எனக்கு மகிழ்ச்சி கொடுத்தது.”

குருமடத்தில் உங்களின் பேராசிரியர் பணி எப்படி இருந்தது?

“அப்போது சென்னை பூவிருந்தவல்லி குருத்துவக் கல்லூரியிலிருந்து பணிபுரிவதற்கு அழைப்பு வந்ததும் எதிர்பாராத ஒன்று. ஏனென்றால், நான் சென்னையை விட்டு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன. அங்கே அதிபர் தந்தையாக இருந்த அருள்பணி. S. அந்தோணிசாமி அவர்கள் நான் படித்த காலத்தில் இருந்ததைப் பார்த்து, என்னை அழைத்தார். 2002 முதல் 2003 வரை ஒரு வருடம் அங்கே பணிபுரிந்தேன். அதற்குப் பிறகு என்னை மேற்படிப்புக்காக உரோம் நகருக்கு அனுப்பினார்கள். அங்கே இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் மறைப்பரப்பு மேய்ப்புப்பணி இறையியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். 2008-ஆம் ஆண்டு என்னுடைய படிப்பை முடித்து மீண்டும் சென்னை திரு இருதயக் கல்லூரிக்கு வந்து பணி செய்ய ஆரம்பித்தேன். ஆறு வருடங்கள் 2014 வரை நான் பணிபுரிந்தேன். அதுவும் சிறந்த அனுபவமாக இருந்தது.

மாணவர்கள் பொறுப்பாக இருப்பதற்கு நாம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையோடுதான் நான் அங்குப் பணிபுரிந்தேன். ஆசிரியர் பணியும் எனக்கு மனநிறைவைக் கொடுத்தது. எந்த நாளிலும் நான் வருத்தப்பட்டதே இல்லை. ஏனென் றால், எல்லா இடங்களிலும், எந்த நேரத்திலும் கடவுள் என்னோடு இருக்கின்றார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை என்னிடத்தில் உண்டு. அதற்குப் பிறகு, நான் ஒரு வருடம் அமெரிக்காவிற்கு இடைவிடுப்புக்காகச் (Sabbatical leave) சென்றேன். அங்கு ஒரு பங்கிலே பணிபுரிவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அங்கு இரண்டு வருடங்கள் இருக்கலாம் என்றுதான் சென்றேன். ஆனால், ஒரு வருடத்திற்குள் எங்கள் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி ஆண்டகை அவர்கள் ‘நீங்கள் கட்டாயமாக மறைமாவட்டத்திற்கு வந்துதான் ஆக வேண்டும்’ என்றார். மேலும், ‘13 வருடங்கள் நீங்கள் மறைமாவட்டத்தை விட்டு இருந்துவிட்டீர்கள்... வாருங்கள்’ என்று சொல்லி என்னை அழைத்து 2015-ஆம் ஆண்டிலே பூண்டி மாதா பசிலிக்காவில் அதிபராகவும், பங்குத் தந்தையாகவும் என்னை நியமித்தார். அதுவும் நான் திட்டமிட்டதோ, எதிர்பார்த்ததோ அல்ல. ஒரு வருடத்திற்குள் ஆயர் அவர்கள், மறைமாவட்டத்திற்குத் தலைமை இடத்திற்கு வரவேண்டும்; எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்; முதன்மைக் குருவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனக்குப் பூண்டியில் ஒரு வருடம்தான் பணி முடிந்தது. நல்ல வசதியான இடம், நிறைய மக்கள் வருவார்கள். எல்லாம் இருந்தும் வருவதற்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. இருந்தாலும் ஆயர் அவர்கள் மறைமாவட்டத்திற்கு அழைத்தபோது நான் மறைமாவட்டக் குரு, மறைமாவட்ட நலன்தான் முக்கியம் என்ற எண்ணத்தோடு ஏற்றுக்கொண்டேன். ஆயர் இல்லத்தில் மறைமாவட்ட முதன்மைக் குருவாகப் பணியாற்றி வருகிறேன்.”

குருத்துவத்தில் முழுமை பெறும் நீங்கள், உங்கள் ஆயர் பணிக்கான விருதுவாக்கு என்ன?

“எனது மனத்திலே பட்ட ஒரே எண்ணம்: ஆண்டவருடைய வழியில் நாம் செல்ல வேண்டும். ‘அவரது அடிச்சுவடுகளில்’ என்ற இறைவார்த்தையைத்தான் என்னுடைய விருதுவாக்காக வைத்திருக்கின்றேன். அவரது அடிச்சுவடுகளில், அவருடைய வழியில் நாம் செல்வதற்கு நேர்மையோடும், உண்மையோடும் முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் என் மனத்தில் தோன்றியது. எனவேதான், இந்த விருதுவாக்கினை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.”

கும்பகோணம் மறைமாவட்டம் தனது 125-ஆம் ஆண்டைக் கொண்டாடவிருக்கிறது. இம்மறைமாவட்டத்திற்கான தங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?

“பொதுநிலையினரின் ஈடுபாடு அதிகமாக இருக்க வேண்டும். நிறைய பொறுப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். குருக்கள் எல்லாப் பொறுப்புகளையும் தங்கள்மேல் வைத்துக் கொள்ளாமல், பொதுநிலையினரைத் தயார்படுத்தி, உற்சாகப்படுத்தி அவர்களைச் செயல்பட வைக்க வேண்டும் என்பது முக்கியமான குறிக்கோளாக எனக்கு இருக்கிறது. இரண்டாவது, மறைமாவட்டத்தைத் தன்னிறைவு உள்ள மறைமாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கான வாய்ப்புகளும் மறைமாவட்டத்தில் இருப்பதாக நான் உணர்கிறேன். எல்லாக் குருக்களுமே அதைத் தேவையென்று உணர்கின்றார்கள். அந்தக் கனவோடு இனி நான் பயணம் செய்ய விரும்புகிறேன்.”

மேலும், நீங்கள் கும்பகோணத்திற்கு மட்டும் ஆயர் அல்லர்; தமிழ்நாட்டின் ஆயர் பேரவையின் உறுப்பினரும் கூட. ஆகவே, தமிழ்நாட்டுத் திரு அவைக்கு தங்களின் பரிந்துரைகள்...

“நமது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் சமூக ஈடுபாட்டில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்; அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்; அதற்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும். அனைவரும் இணைந்து பயணிக்கும் திரு அவையாக நம் தமிழ்நாட்டின் திரு அவை மாற வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ‘இணைந்து பயணிக்கும் திரு அவை’ என்றுதான் நமக்கு அழைப்பு விடுக்கிறார். மதவாத சக்திகள் நாட்டைப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் ஏற்படுகிறது. ஆகவே, அரசியல் ரீதியாக இந்த மதவாத சக்திகளை எதிர்கொள்வதற்கான தயாரிப்பை நம் மக்கள் பெற வேண்டும்; அதற்கான செயல்பாடுகளில் ‘நம் வாழ்வு’ இதழ் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என விரும்புகிறேன், வாழ்த்துகிறேன்.”

நமது தமிழ்நாடு திரு அவையின் தனிப் பெரும் இதழான ‘நம் வாழ்வு’ வார இதழ், தனது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இந்த இதழின் வாசகர்களுக்குத் தாங்கள் விடுக்கும் அழைப்பு என்ன?

“நம் வாழ்வு’ வாரந்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. அதனுடைய பார்வை, பரந்துபட்ட பார்வையாக இருக்கிறது. அரசியலைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் அக்கறையோடு பல நல்ல கருத்துகளைக் கொண்டிருக்கின்றது. நம்முடைய கத்தோலிக்கப் பார்வையும் கொடுக்கப்படுகிறது. இன்னும் அதிகமாக எல்லாருடைய கரங்களிலும் இது தவழ வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். இந்தப் பொன் விழா ஆண்டிலே என் வாழ்த்துகளையும், என் பாராட்டுகளையும் ‘நம் வாழ்வு’நிர்வாகத்திற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மறைமாவட்டத்திலும் இந்த இதழ் எல்லாரிடமும் கிடைப்பதற்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.”

அன்பு ஆயர் அவர்களே, ஆயராக, இணைந்து பயணிக்கின்ற திரு அவையாகக் குடந்தை மறைத்தளத்தைச் சிறப்புடன் உருவாக்கி, நீங்கள் இறையரசுப் பணியைத் திறம்படச் செய்திட ‘நம் வாழ்வு’ வாசகர்கள் சார்பாக எங்களுடைய வாழ்த்துகளையும், வணக்கங்களையும், செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கின்றோம். மிக்க நன்றி!

Comment