
ஆயர் ஜீவானந்தம் பெருமையோடு பேசப்படும் பேராசிரியர்!
ஜனவரி 13, 2024 சனிக்கிழமை மாலை மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டது. ‘கும்பகோணம் மறைமாவட்டத்திற்கு, புதிய ஆயர் அறிவிக்கப்பட்டுள்ளார்’ என்ற செய்தி எனது காதுகளில் ஒலித்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். எனது நெருங்கிய நண்பர், உடன் பணிபுரிந்த பேராசிரியர் ஆயராக அறிவிக்கப்பட்டது குறித்துப் பெருமை அடைந்தேன். ஆயர் ஜீவானந்தம் அவர்களோடு பணி செய்த நினைவலைகளைப் பகிர்ந்து கொள்வதில் நிறைவு காண்கிறேன்.
உடன் பணிபுரிந்த பேராசிரியர்களோடு கொண்ட தோழமை உறவு
2002-ஆம் ஆண்டு பேராசிரியராகச் சென்னை, பூவிருந்தவல்லி திரு இருதயக் குருத்துவக் கல்லூரியில் பணி தொடங்கியது முதல் அனைத்துப் பேராசிரியர்களுக்கும் பிடித்தவராக வலம் வந்தார். “அன்பர்களே! நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்” (கலாத்தியர் 5: 13) என்ற பவுல் அடியாரின் வார்த்தைகளை வாழ்ந்து காட்டியவர் அருள்தந்தை ஜீவானந்தம் அவர்கள்.
குருமடத்தின் வளர்ச்சிக்குத் திட்டங்கள் தீட்டுவதிலும், குருமாணவர்களின் உயர்வில் தனது பங்களிப்பை வழங்குவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். உடன் பணிபுரிந்த பேராசிரியர்களிடம் நட்புறவு கொண்டு உற்சாகமூட்டியது, இணைந்து இருந்த இடங்களை உயிரோட்டம் உள்ள இடமாக மாற்றியது மறக்க இயலாதது. அருள்தந்தை ஜீவானந்தம் அவர்களின் இருத்தலை (Presence) விரும்பாத உடன் பணியாளர்கள் இருக்க முடியாது. கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் தனது வார்த்தையாலும், இருத்தலாலும் சூழலை மாற்றக்கூடிய நல்ல மனிதர்.
குருத்துவக் கல்லூரியில் இருந்து மாற்றலாகி மறைமாவட்டம் சென்ற பிறகும், உண்மையான உறவில் தொடரக்கூடிய நல்ல நண்பர். தோழமை இல்லை என்றால், தோல்விகள் கூட சொந்தமென வாழும் என்பதற்கேற்ப தோல்விகள், துன்பங்கள் நடுவில் தனது தோழமை உணர்வினால் உடன் பணியாளர்களை உற்சாகமூட்டித் தூக்கி நிறுத்திய ‘அமீர் தந்தையை’ மனமார வாழ்த்துகிறேன்.
மாணவர்கள் கொண்டாடும் சிறந்த பேராசிரியர்
ஒரு நல்ல பேராசிரியருக்கு மாணவர்களின் மனங்களைச் சுடர் விட்டு எரியச் செய்வதே குறிக்கோளாய் இருக்கிறது என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் தந்தை ஜீவானந்தம். குருமடத்தில் மேய்ப்புப் பணி இறையியல் பாடத்தைக் கற்றுக் கொடுப்பதில் சிறந்த பேராசிரியர். தனது பங்குப்பணி வாழ்வின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து மாணவர்களை உருவாக்குவதில் தனிமுத்திரை பதித்தவர். வகுப்பறையில் மட்டுமல்ல, பணித்தளங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அறநெறியூட்டி பயிற்சி அளித்தவர். ஒரு சிறந்த பேராசிரியராக, வழிகாட்டியாக, இறையியல் துறை தலைவராக, தமிழ்ச் சங்க இயக்குநராக, நான்காம் ஆண்டு திருத்தொண்டர்களுக்கு வழிநடத்துநராகப் பணிபுரிந்து, மாணவர்களின் நலனில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்டவர்.
கனிவும், அன்பும் ஒரு பேராசிரியருக்கு அவசியம் என்பதை உணர்ந்து கடைப்பிடித்தவர். மாணவர்கள் நல்லது செய்யும் பொழுது பாராட்டுவதும், தவறு செய்யும் பொழுது சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவதும் இவரது தனிச்சிறப்பு. தந்தை ஜீவானந்தம் அவர்களிடம் படித்து, குருக்களாகப் பணிபுரியும் பல மறைமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து குரல் எழுப்புவது ‘தெய்வம் ஆயர் ஆகிவிட்டார்’ என்று. மாணவர்கள் பார்வையில் தெய்வமாக வலம் வந்தவர் தனது பார்வையாலும், பாசத்தாலும் குருமாணவர்களின் நலனில் ஆர்வம் கொண்டவர் என்பதை அவரிடம் பயின்ற மாணவக் குருக்கள் இன்றும் சாட்சியம் வழங்குகிறார்கள்.
“நான் இன்று வாழ்வதற்கு என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், நன்றாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கே கடமைப்பட்டிருக்கிறேன்” என்ற மாவீரன் அலெக்சாண்டர் வரிகளுக்கு ஏற்ப பல குருக்கள் தங்கள் பணித்தளங்களில் நன் றாகப் பணி செய்வதற்குப் பேராசிரியர் தந்தை ஜீவானந்தம் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளதாக உறுதி தந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு குரு மாணவர்களால் கொண்டாடப்படும் பேராசிரியர் ஜீவானந்தம் ஆயராகி, பணி சிறக்க தொடர்ந்து வாழ்த்துகின்றேன்.
பணியாளர்களிடம் காட்டிய பாசமிகு பரிவு
‘நல்ல சூழ்நிலையில் நல்லவனாக இருப்பவன் மனிதன்; எல்லாச் சூழ்நிலையிலும் நல்லவனாக இருப்பவன் மாமனிதன்’ என்பதற்கேற்ப தந்தை ஜீவானந்தம் பூவிருந்தவல்லி குருமடத்தில் மனிதனாக அல்ல, மாமனிதனாகப் பயணித்தார் என்பதை மறுக்க இயலாது.
குருமடத்தில் பணிபுரிந்த பணியாளர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றிய பாசமிகு பணியாளர் தந்தை ஜீவானந்தம். பணியாளர்கள் பல சிக்கல்களோடு தந்தையிடம் சென்று அவரது வார்த்தையால் புத்துயிர் பெற்றுத் திரும்பியதைப் பல தருணங்களில் பார்த்து அதிசயித்திருக்கிறேன். தன் வேதனையை மறைத்துக் கொண்டு, பணியாளர்களின் வேதனை கண்டு பரிவு காட்டி, அன்பினை உணர்ந்த மனதுக்கு உரிமையாளர் தந்தை ஜீவானந்தம் அவர்கள்.
இவ்வாறு ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள அருள்திரு. ஜீவானந்தம் அவர்கள், இன்றும் பெருமையோடு பேசப்படும் பேராசிரியர். உடன் பணிபுரிந்த என்னைப் போன்ற பணியாளர்களின் நல்ல நண்பர். படித்துப் பயிற்சி பெற்று பணிபுரியும் மாணவக் குருக்களினால் கொண்டாடப்படும் சிறந்த பேராசிரியர், வழிகாட்டி, நெறியாளர். குருமடத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்குப் பரிவு காட்டிய பாசக்காரர்.
தந்தை ஜீவானந்தம் ஆயராகப் பொறுப்பேற்று தமிழக ஆயர்களில் தனித்துவமிக்கவராக வலம் வருவார் என்ற நம்பிக்கை என் போன்ற நண்பர்களுக்கும், குருமாணவர்களுக்கும் உண்டு. பெருமையோடு பேசப்படும் பேராசிரியர் ஆயர் ஜீவானந்தம் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம், செபிக்கிறோம்.
Comment