No icon

ஆயர் ஜீவானந்தம் அவர்களின் ஜீவிதம்!

 ‘ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று

அது நீங்கள் அறியாத நேரத்தில்

நீங்கள் அறியாத ஏதோ ஒன்றைத்

தந்துவிட்டுப் போய்விடுகிறது’ 

என்று மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுல்லிக்காடு கூறுவார். அவரின் கூற்றின்படியே நமது ஆயர் ஜீவானந்தம் அவர்களின் வாழ்க்கை, சலனம் இல்லாமல் ஓடும் நதியைப் போன்று அற்புதமான ஒன்றாகும். அந்த ஜீவித ஓட்டத்தில் அவர் அறியாத நேரத்தில், அவர் அறியாத அற்புதங்கள் அரங்கேறியதுண்டு.

ஆடம்பரம் இல்லாமல், அமைதியாக வளைந்து நெளிந்து ஓடும் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் இயற்கை அழகு போர்த்திய அன்றைய சிற்றூரான மிக்கேல்பட்டியில் பிறந்தவர் நம் புதிய ஆயர் மேதகு A. ஜீவானந்தம் அவர்கள். நெல், தென்னை, வாழை, மா, பலா, வெற்றிலை, தேக்கு எனச் செழிப்பு மிக்க அழகிய கிராமம், இன்று 175 ஆண்டு காலப் பழமைக்குச் சொந்தமாக, பல மத நம்பிக்கையாளர்களை உள்ளடக்கிய மாபெரும் ஊராக உருவெடுத்து, சமய நல்லிணக்கத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது மிக்கேல்பட்டி.

அறிவூட்டிய தந்தை திரு. அமலநாதன், அன்பூட்டிய தாய் திருமதி. அந்தோணியம்மாள் இவர்களுக்குக் கிடைத்தற்கரிய மூன்றாவது முத்தாக பிறந்துஅமிர்தசாமிஎன்று திருமுழுக் காட்டப்பட்டவர். சுதந்திரப் போராட்டத் தியாகி ஜீவானந்தம் மீது ஆயரின் தந்தை தீவிர ஆன்ம காதல், பற்றுக்கொண்டதால் பள்ளி சேர்க்கையில்ஜீவானந்தம்என்று பதிவு செய்யப்பட்டார். அதுவே ஆயரின் பெருமை பேசும் அதிகாரப்பூர்வப் பெயராக, திருத்தந்தையின் அறிவிப்பாக, ஆயர் ஜீவானந்தம் என்று உலகறியப்பட்டுள்ளார்.

ஆயர் அவர்களுக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு இளைய சகோதரர்களும் மற்றும் ஓர் இளைய சகோதரியும் உடன் பிறந்த இரத்த சொந்தங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயர் அவர்களின் தந்தை அரசு வேலை நிமித்தம் வடமட்டம் என்ற கிறிஸ்தவர்கள் இல்லாத, கோவிலுக்குச் செல்ல இயலாத கிராமத்தில் வேலை செய்ததால், ஆயரின் தாத்தா கிறிஸ்தவ நம்பிக்கையில் பேரப்பிள்ளைகள் வளர்த்தெடுக்கப்பட முடியவில்லையே என்ற ஆதங்க அவதி அடைந்ததால், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை வடமட்டத்தில் படிப்பை முடித்துவிட்டு, தங்கள் சொந்தப் பூர்வீக ஊரான மிக்கேல்பட்டியில் குடியேறி தாத்தாவின் கவலைகளைக் களைந்து, 10-ஆம் வகுப்பைத் திருக்காட்டுப்பள்ளியில் முடித்து, அப்போதைய மிக்கேல்பட்டி பங்குத்தந்தை அருள்பணி. N. அருள்சாமி அவர்களின் அறிவுறுத்தலாலும், ஆதரவாலும், வழிகாட்டுதலாலும் குடந்தை திரு இருதய இளம் குருமடத்தில் சேர்க்கப்பட்டார்.

சென்னை, பூவிருந்தவல்லி திரு இருதய உயர் குருமடத்தில் மெய்யியல், இறையியல் பயின்று, 1991-மே மாதம் 6-ஆம் தேதி அன்றைய ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அவரின் முதல் திருநிலைப்பாட்டு நிகழ்வில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1990-1991            : அம்மன்பேட்டை

                                துணை பங்குத் தந்தை

1991-1992            : திரு இருதய இளம்குருமடம்,

                               குடந்தை

1992-1993            : பாத்திமாபுரம் பங்குப் பணி

1993-1998            : கபிஸ்தலம் பங்குப் பணி

1998-2002            : திரு இருதய உயர் குருமடம்,

                               சென்னை

2003-2008            : முனைவர் படிப்பு, உரோம்

2008-2014            : திரு இருதய உயர் குருமடம்,

                               சென்னை

2014-2015            : பங்குப் பணி, அமெரிக்கா

2015-2016            : பூண்டி மாதா பசிலிக்கா அதிபர்

2016-2024            : ஜனவரி 13, மறைமாவட்டக்

                               குருகுல முதல்வர், குடந்தை

2024                      : ஜனவரி 13, மாலை 4.30 மணி

                                குடந்தையின் புதிய ஆயராக

                                அறிவிப்பு

2024                      : பிப்ரவரி 11 மாலை 4.30 மணி

                                ஆயராகத் திருநிலைப்பாடு,

                                குடந்தை

ஆயரின் பெற்றோர் வடமட்டத்தில் குடியிருந்தபோது, ஒரு நாள் பணிக்குச் சென்ற ஆயரின் தந்தை வீடு திரும்பிய இரவு நேரத்தில் எந்தவித முன் செய்தி எதுவும் சொல்லாமல், ஒரு லாரியில் வீட்டுப் பொருள்கள் அனைத்தையும் ஏற்றிக்கொண்டு, அனைவரையும் அழைத்துக்கொண்டு பூர்வீகமாக உள்ள மிக்கேல்பட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தது புரியாத புதிராகவே குடும்பத்தினர் அனைவருக்கும் இருந்தது. ஆனால், அதுவே ஆயரின் அன்றைய சிறுபிள்ளைப் பருவத்தில் கடவுளின் திருவிளையாடலின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.

மிக்கேல்பட்டியில் குடியேறிய ஒரு வருடத்திற்குப் பிறகு குருமடத்தில் சேர்ந்ததும், கபிஸ்தலத்தில் பங்குப் பணி ஆற்றிக் கொண்டிருந்தபோது, பூந்த மல்லி குருமடத்தில் குருமாணவர்களை உருவாக்கும் போதனா பணிக்கு அழைக்கப்பட்டதும், அமெரிக்காவில் பணியாற்றியபோது மறைமாவட்ட ஆயரின் அழைப்பை ஏற்று பங்குப் பணியை இரத்து செய்து விட்டு, பூண்டி பசிலிக்கா அதிபரானதும், பூண்டி பசிலிக்காவிலிருந்து ஒரு வருடத்தில் மறைமாவட்ட முதன்மைக் குருவானதும், எட்டு ஆண்டுகள் மறைமாவட்ட முதன்மைக் குரு பணி தொடர்ச்சியில் மறைமாவட்டப் புதிய ஆயராகத் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டதும் ஆயர் ஜீவானந்தம் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த வியப்பூட்டும் நிகழ்வுகளாகவே உள்ளன. அனைத்தையும் இறை திருவுளப் பார்வையில் பார்க்கின்றபோது, அனைத்தும் இறைச் செயலாகவே உள்ளன.

 ஆயர் ஜீவானந்தம் அவர்களின் எளிமைதான் அவரின் வலிமையாக ஓங்கி, நெடிந்து, உயர்ந்து, வளர்ந்து நிற்கும் சக்திகளாக மக்கள் மனத்தில் பதிந்திருக்கின்றன. ‘தலையில் வைத்துக் கொண்டாடப்படும் அனைத்தும், என்றாவது ஒரு நாள் தரையில் தூக்கி வீசப்படும்; தயாராக இருங்கள். அடுத்து நீங்களாகக் கூட இருக்கலாம்என்னும் சொற்களை மனத்தில் பதித்தவராக என்றுமே பெருமையையும், புகழையும், பாராட்டையும் பொருட்டாகப் பொருட்படுத்தாதவர் ஆயர் ஜீவானந்தம் அவர்கள்.

We carry may to impress others. But Values we hold will inspire others!’ - என்பதற்கேற்ப தனக்கென உயர்வான பொருள்கள் எதையும் வைத்துக்கொள்ளாமல், பிறரை விழி விரியச் செய்கின்ற உயர்வான மதிப்பீடுகளை மட்டுமே கொண்ட நம் ஆயர், தன் எளிமைமிகு குணங்களால் பணி செய்த இடங்களில் மட்டுமல்ல, பார்த்த, பழகிய, பேசிய அனைத்துத் தரமனிதர்களும் இவரின் உறவுகளாக மாறிப்போனார்கள்.

ஆயரின் முதல் பங்குப் பணித்தளமான பாத்திமாபுரத்தில் பணி செய்தபோது, பயணத்திற்குப் பேருந்து வசதியோ, வாகன வசதியோ கிடைக்காதபோது, செல்லும் லாரி கேரேஜில் அமர்ந்து கொண்டு பயணம் செய்த பல நிகழ்வுகள் உள்ளன. சுவையான சுவாரசியங்களும், பல திடுக்கிடும் திருப்பங்களும், ‘திக் திக்திகில்களையும் கொண்ட ஒரு திரைப்படமாக ஆயரின் பங்கு வாழ்க்கையை எடுத்தால் வெற்றிகரமாக நூறு நாள்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடப்படும்.

இக்கரைக்கும் அக்கரைக்கும்

பரிசல் ஓட்டிப் பரிசல் ஓட்டி

எக்கரை என்கரை என்று மறக்கும்

இடையோடும் நதி மெல்லச் சிரிக்கும்

என்ற கவிஞர் கல்யாண்ஜியின் கவித்துவம் போல, ஆயர் ஜீவானந்தம் அவர்கள் தன் குருத்துவ வகுப்புத் தோழமைக் குருக்களுடன்அக்கறைஎன்ற இரண்டு தொகுப்புப் புத்தகங்களை வெளியிட்டு, தமிழகத் திரு அவையில் ஆயர்கள், குருக்கள் மற்றும் பொதுநிலையினர் மத்தியில் அதிர்வலைகளை உண்டு பண்ணியவர்.

பொருளாதார மேம்பாட்டு நிர்வாகம், சமூக நீதி  போன்ற தளங்களில் கிறிஸ்துவின் புதிய ஒளியைப் பாய்ச்சியவர். மக்கள் மையம் கொண்ட நவீனத்துவ மேய்ப்புப்பணியில் ஆயர் அவர்கள் அனைவரையும் மையம் கொண்ட மேம்பாட்டு நலச் செயல்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்துச் செய்வார் என்பது பெரும்பான்மையோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ‘அக்கறைஆயரின் அக்கறைகள் மெய்ப்பட வாழ்த்துவோம்.

கூடாரங்கள் வேறு வேறாக இருக்கட்டும்;

ஆனால், இதயங்கள் மட்டும் ஒன்றிணைந்திருக்கட்டும்” 

என்று கூறிய நபிகள் நாயகத்தின் பொன்னான வாக்கின்படி, ஆயர் அவர்கள் மனித இதயங்களை இணைக்கின்ற சமய நல்லிணக்க ஆர்வலராகத் தனக்கு வாய்ப்புக் கிடைத்த நேரங்களிலும், இடங்களிலும், நிகழ்வுகளிலும் ஒன்றிணைந்து செயல்பட்டு, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை வளமைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். அதன் நீட்சியாக ஆயரின் தொடர் பயணம், பிளவுபட்ட, பிரிவுபட்ட, காயப்பட்ட மனித உள்ளங்களுக்கு மருந்திடும் சமய நல்லிணக்க, ஆக்கப்பூர்வச் செயல்பாட்டாளராக ஆயர் பணியைச் சிறப்பிப்பார் என்பதில் ஐயம் இல்லை.

ஒரு மீனின் துள்ளல் அளவே வாழ்க்கைஎன்று கல்பட்டா நாராயணம் கூறுவார். துள்ளல் தான் வாழ்க்கை. அந்தத் துள்ளல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கேலி, கிண்டல், சாதனை, சரித்திரமாகக் கூட இருக்கலாம். ஆனால், எல்லாமும் ஒரு மீனின் துள்ளல் அளவுதான். அத்தகைய துள்ளல் அளவு வாழ்வை ஆயர் அவர்கள் சரித்திரமாக மாற்றுவார். சக தோழமைக் குருக்கள், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள், மாற்று மத நம்பிக்கையாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அன்பு செய்து, இறை அரசைக் கட்டி எழுப்பஅவரது  பாதச்சுவடுகளில்என்ற பொன் மொழிகளோடு தன் ஆயர் பணி வாழ்வில் அடி எடுத்து வைக்கும் மேதகு ஆயர் A. ஜீவானந்தம் அவர்களை வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம், செபிப்போம்.

Comment