No icon

அக்கறை உள்ள ஆயர்

“இரட்டிப்பு வாழ்த்துகள் சார்லஸ்”

பேரருள்பணி. ஜீவானந்தம் அவர்கள் கும்பகோணத்தின் புதிய ஆயராக அறிவிக்கப்பட்டவுடன், திருச்சி அருள்பணியாளர் ஒருவர் என்னிடம், “இரட்டிப்பு வாழ்த்துகள் சார்லஸ்” என்று கூறினார். ‘எதற்காக?’ என்று கேட்டேன். “உங்கள் நண்பர் ஆயராகியிருக்கிறார் என்பதற்காக ஒரு வாழ்த்து; அவர் உங்கள் ‘அக்கறை’ குழுவைச் சேர்ந்தவர் என்பதற்காக மற்றொரு வாழ்த்து” என்று உற்சாகமாகக் கூறினார்.

இதே காரணத்திற்காக இன்னும் பல அருள்பணியாளர்களும், பொதுநிலையினரும், துறவியரும் எனக்கும், ‘அக்கறை’ குழுவிலுள்ள மற்றவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! ஒருபுறம் நண்பருக்கு ஆயர் பணி வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி; மற்றொரு புறம் ஏராளமானோரின் மனத்தில் ‘அக்கறை’ இடம் பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சி. ‘அக்கறை நண்பர்’ என்று அவர்கள் அடையாளப்படுத்திக் கூறும் வாழ்த்துகளில் புதிய ஆயர் மீதான ஓர் ஆழமான எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வெளிப்படுவதை நாங்கள் உணர்கின்றோம்.

அவர்களுடைய எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வீண் போகாது. புதிய ஆயர் ஜீவானந்தம் அவர்கள் ஓர் அக்கறையுள்ள ஆயராகச் செயல்படுவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவர் அதிகம் பேசாதவர்; செயல்பாட்டில் முழு கவனம் செலுத்துபவர்; தான் நம்புவதையும், கடைப்பிடிப்பதையும் மட்டுமே மக்களுக்கும், உடன் அருள்பணியாளர்களுக்கும் கூறுபவர்; நேர்மையாளர்; போலி தனமோ, வெளிவேடமோ இவரிடம் துளியும் இருக்காது.

எல்லாரிடமும் எளிமையாகப் பழகுபவர். பொதுநிலையினரோ, அருள்பணியாளர்களோ, துறவியரோ யாராக இருந்தாலும், எத்தகைய பாகுபாடும், பாரபட்சமுமின்றி, எல்லாருக்கும் மதிப்பளிப்பவர், உறவாடுபவர். குறிப்பாக, பொதுநிலையினரை ஊக்குவித்து ஆற்றல்படுத்துவதில் தனிக்கவனம் கொண்டவர்.  எல்லாருடைய கருத்துகளுக்கும் திறந்த மனத்தோடு செவிசாய்ப்பவர். அதே வேளையில், கிறிஸ்தவ அன்புக்கும், சமூக நீதிக்கும், பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்கும் முதன்மைத்துவம் கொடுத்து, சமரசமற்ற முடிவுகளை எடுக்கக்கூடியவர். முழுமூச்சுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவர். எந்தப் பணியாக இருந்தாலும், அதை முழு மன ஈடுபாட்டுடன் நிறைவேற்றுபவர்.

கடந்த ஏழு ஆண்டுகளாக மறைமாவட்ட முதன்மைக் குருவாக இருந்து அவர் ஆற்றிய பணிகளில் வெளிப்பட்ட அவருடைய அர்ப்பணம் மிக்க செயலாற்றலையும், துணிச்சலான முடிவுகளையும் மறைமாவட்ட மக்கள் நன்கு அறிவார்கள். அவர் தனது சொந்த ஊராகிய மிக்கேல்பட்டியில் அருள்சகோதரிகளுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுப் பிரச்சினையை நேருக்கு நேராக எதிர்கொண்டு, ஊர் மக்களின் ஆதரவோடும், அரசு அதிகாரிகள் மற்றும் சமூக இயக்கங்களின் துணையோடும் தகர்த்தெறிந்து, எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்த விதம் இதற்கு ஒரு சான்று.

“இன்றைய உலகம் வாழ்ந்து காட்டுபவர்களுக்கான பெரும் தேவையில் உள்ளது. போதிப்பவர்கள் அல்ல; வாழ்ந்து காட்டுபவர்கள்தான் அதிகம் தேவைப்படுகின்றனர். முழங்கிப் பேசுவது பெரிதல்ல; நமது முழு வாழ்க்கையின் வழியாக என்ன பேசுகிறோம் என்பதே முக்கியம்” என்கிற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் (புனித பேதுரு சதுக்க உரை, மே 18, 2023) வழிகாட்டலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஜீவானந்தம்.

தனிப்பட்ட வாழ்வில் இவர் எளிமையான வாழ்வு முறையைக் கடைப்பிடிப்பவர். பொதுச் சொத்தையோ, நிதியையோ கையாள்வதில் நூறு விழுக்காடு நேர்மையானவர். ஆயர் இல்ல வாகனத்தை முதன்மைக் குரு பணிக்கு மட்டுமே பயன்படுத்துவாரே தவிர, தனது தனிப்பட்ட பயணங்களுக்குப் பயன்படுத்த மாட்டார். தனது இருசக்கர வாகனத்திலும், ஆட்டோவிலும், பேருந்திலும், தொடர்வண்டியிலுமே பயணிப்பார். ஏதாவது வேலையாகப் பல இடங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள நண்பர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொள்வார். வாய்ப்பிருந்தால் இரவு தங்கி நீண்ட நேரம் நட்புடன் உரையாடுவார். அங்கு விருந்தினர் அறையோ, படுக்கை வசதியோ இல்லையென்றால், தரையில் பாய் விரித்துப் படுத்துக்கொள்வார். மாற்று ஏற்பாடு ஏதேனும் செய்ய நாம் முயன்றாலும், அதை நிராகரிப்பார்.

தொண்டு ஆற்ற வந்தோரில் பலர் இன்று தொண்டு ஏற்பவராக உருமாறியுள்ள சூழலில், “தொண்டு ஏற்பதற்கு அல்ல; மாறாக, தொண்டு ஆற்றுவதற்கும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும்...” (மாற் 10:45) வந்த இறைமகன் இயேசுவின் அடியொற்றித் தலைமைத் தொண்டராகத் தானும் செயல்பட்டு, உடன் அருள்பணியாளர்களையும், துறவியரையும், பொதுநிலைத் தலைவர்களையும் அதே தலைமைப் பண்பாட்டிற்குள் கொண்டு வரும் தலைமைத்துவப் புரட்சி இவருடைய உள்ளத்தில் கருக்கொண்டிருக்கிறது.

சென்னை பூவிருந்தவல்லி தூய இதய குருத்துவக் கல்லூரியில் 1990-இல் பயிற்சியை முடித்த ஜீவானந்தம் உள்ளிட்ட வகுப்புத் தோழர்கள் நாங்கள் எங்களுடைய அனுபவப் பதிவாக 2015-ஆம் ஆண்டு ‘அக்கறை: தமிழகத் திரு அவையின் தலைமைத்துவப் பண்பாடு’ என்கிற நூலையும், 2020-ஆம் ஆண்டு ‘அக்கறை 2020: தமிழகத் திரு அவையின் நிதி நிர்வாகப் பண்பாடு’ என்கிற நூலையும் வெளியிட்டோம். இந்த இரண்டு நூல்களும் தமிழகத் திரு அவையில் குறிப்பிடத்தக்க சலனத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தின.

இந்நூல்களின் வழியாகக் கிறிஸ்தவத் தன்மையிலான தலைமைத்துவப் பண்பாட்டையும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை கொண்ட நிதி நிர்வாகப் பண்பாட்டையும், தமிழகத் திரு அவையில் உருவாக்க வேண்டும் என்கிற அக்கறையை எங்களோடு இணைந்து வெளிப்படுத்தி வந்துள்ள நண்பர் ஜீவானந்தம், அத்தகைய தலைமைத்துவப் பண்பாட்டைத் தனது மறை மாவட்டத்தில் உருவாக்குவதற்கான திட்டங்களை முனைப்புடன் முன்னெடுப்பார் என்றும், மாற்றங்களை முதலில் தன்னுடைய ஆயர் பணி நடைமுறைகளிலிருந்தும், அணுகுமுறைகளிலிருந்தும் தொடங்குவார் என்றும் உறுதியாக நம்பலாம்.

Comment