No icon

இன்றும் தொடரும்...

புனித வெள்ளிகள்

உலகம் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்று அறிவியலாளர்களும், 230 கோடி ஆண்டுகள் என்று புவியியலாளர்களும் தங்கள் அறிவுக்கு எட்டியதைக் கொட்டியுள்ளனர். காலச் சக்கரத்தை ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள், நாள்கள், நிமிடங்கள், நொடிகள் எனப் பிரித்தும், வகுத்தும் யுகங்கள் பல கடந்துவிட்டன. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கிழமையின் பெயர் சூட்டி சில ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இவற்றுள் எத்தனையோ கோடி வெள்ளிக் கிழமைகள் விடிந்து, முடிந்து போயின. ஆனால், ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டும்புனித வெள்ளிஎன உலகினரால் முடி சூ(ட்)டப்பட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வெள்ளிபுனித வெள்ளிஆகிட ஒருவர் காரணரானார். அவர்தாம் இயேசு! அவர் வரலாற்றில் பிறந்து, வரலாற்றில் வாழ்ந்து, வரலாறாய் ஆனவர். ஒரு மனிதரின் இறப்பு, அவரது வாழ்வால் சிறப்படைகிறது. அவ்வாறே இயேசுவின் இறப்பு அவரது அர்ப்பண வாழ்வால் ஆழ்ந்த அர்த்தங்களைச் சுமந்து நிற்கின்றது. ஏனெனில், அது இயல்பாக நிகழ்ந்த இறப்பு அல்ல; அது ஒரு சமூகநீதி அரசியல் படுகொலை. இயேசுவின் கொலைக்குள் மலைப்புக்குரிய மானுட மதிப்பீடுகள் மலைபோல் நிறைந்துள்ளன. பணத்திற்காக, சொத்துக்காக, பதவிக்காக, போதைக்காக, அதிகாரத்திற்காக, சாதிக்காக, சமயத்திற்காக, மொழிக்காக எனத் தினந்தினம் நடந்தேறும் பல சுயநலக் கொலைகளுக்கு மத்தியில் நடந்தேறிய ஓர் இலட்சியமிக்க ஆளுமையின் கொலையை நாம் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.

இழக்கத் துணிந்த இயேசு

இயேசுவின் கொலை ஒரு விபத்தோ, தற்செயலானதோ, எதிர்பாராததோ அல்ல; தாம் கொலை செய்யப்படுவதைத் தாம் உணர்ந்தே ஒவ்வோர் அடியையும் அவர் எடுத்து வைத்தார். மானுட விடுதலைக்குத் தமது கையளிப்புத் தேவைப்படும் எனத் தெளிவுறத் தெரிந்திருந்தார். அநீதங்களுக்கு எதிராகவும், அடக்குமுறைகளுக்கு முரணாகவும், ஆதிக்கங்களுக்குச் சவாலாகவும் எழுந்து நின்றவர்களைக் கொன்று கொக்கரிக்கும் பழக்கத்தை உலகம் தன் வழக்கமாகக் கொண்டிருந்ததை இயேசு அறியாதவரும் அல்லர். தம்மை மனிதரிடையே அனுப்பிய தந்தையின் விருப்பத்தை இறையாட்சி வடிவில் விடியச் செய்திடத் தாம் கோதுமை மணியாய் இழந்திடல் வேண்டுமென இதயம் உணர்ந்தே ஒவ்வோர் அணுகுமுறையையும் அவர் மேற்கொண்டார்.

சமூகத்தில் ஏழ்மையின் காரணமாக எள்ளி நகையாடப்பட்டவர்களின் நண்பராகி, உடலால் மட்டுமன்றி, உள்ளத்தாலும் காயப்பட்டிருந்த மாற்றுத்திறனாளர்களின் மனவிரும்பியாகி, கைவிடப்பட்டக் கைம்பெண்களின் வேதனைகள் கண்டு உரிமைக் குரலாகி, கண்டுகொள்ளப்படாத சின்னஞ்சிறு குழந்தைகளின் அரவணைப்பாளராகி, மனச் சிறைகளில் அடைபட்டு, அல்லலுற்றவர்களின் ஆதரவாளராகப் பணியாற்றினார். இத்தகையோரை முன்னிறுத்தினால், தாம் புறந்தள்ளப்படுவோம் என உறுதிபட உணர்ந்திருந்தார்.

சமூக வெளியிலிருந்து சமகால மாந்தராலே கடைநிலைக்குத் தள்ளப்பட்ட சாமானியர்களோடு கைகோர்த்து வாழ்ந்திடின் பழிசுமத்தப்படும்; பெயர் கெடுக்கப்படும்; உயிர் பறிக்கப்படும் என்பதையெல்லாம் உள்ளுணர்ந்தே செயல்பட்டார். தம் விடுதலைப் பணிக்கான பரிசு சிலுவை வடிவில் வருமென மும்முறை சீடர்களுக்கும் வெளிப்படுத்தினார் (மாற்கு 8:31, 9:31, 10:33-34).

இயேசுவின் சிலுவைச் சாவு சொல்லும் மூன்று நிலைப்பாடுகள்

1. நீதி சாகாது

இயேசுவின் காலத்துப் பாலஸ்தீன மக்கள் உரோமைப் பேரரசின் கொடுங்கோலாட்சியினாலும், யூத இனச் சட்டங்களாலும், வாழ்விடக் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த மரபுகளாலும், இவைகளுக்கு உறுதுணையாகிய சமயத்தாலும் அடிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அதிலும் குறிப்பாக, ஏழையரின் அன்றாட வாழ்வு பெருங்கேள்வியாகவே இருந்தது. அநீதமும், பாரபட்சமான நீதியும் வெகு சாதாரணமாகக் கையாளப்பட்டு வந்ததை இயேசுவின்நேர்மையற்ற நடுவரும், கைம்பெண்ணும் பற்றிய உவமை’ (லூக் 18:1-8) துல்லியமாய் நமக்குக் கூறுகிறது. அதேவேளையில், இந்த அநீதத்தன ஆட்சிப் போக்கைக் கடந்து செல்ல முடியாமல் பலர் மனம் கொதித்து எழுந்தனர்; புரட்சி இயக்கங்களாக உருவெடுத்தனர்; அங்கும் இங்குமாகத் தங்கள் எதிர்ப்பு அலைகளை வெளிப்படுத்தினர். ஆனால், அவர்கள்கலகக்காரர்கள்’, ‘புரட்சியாளர்கள்’, ‘அரசுக்கெதிரானவர்கள்என முத்திரை குத்தப்பட்டு, கொடூரச் சிலுவைச் சாவுக்கு ஆளாக்கப்பட்டனர்.

ஒருவிதத்தில் உரோமை அரசு மக்களிடையே அச்சம் பாய்ச்சி அடக்கி ஆளும் அணுகுமுறையைக் கையாண்டு வந்தது. “அநீதியை எதிர்க்க முடிந்தவர், அதை எதிர்க்காவிடில் அநீதிக்குத் துணை போகிறார்என்ற யூதச் சொல்லாடல் இயேசுவின் இதயத்திற்குள் ஆழமாய் வேரூன்றியிருந்தது. எனவேதான்நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்” (மத் 5:6) என்று மனிதருக்குள் நிலைக்க வேண்டிய நீதிக்கான வேட்கையைப் படிப்பினையாக்கினார். அநீதி கண்டு அடங்கிப் போவது அர்த்தமுள்ள வாழ்வல்ல; நீதிக்கான குரல் எழுப்புகையில், நம் குரல்வளை இறுக்கப்பட்டு, உயிர் பறிக்கப்பட்டாலும் நீதி சாகாது என்ற நிலைப்பாடு இயேசுவுக்குள் கனன்று கொண்டிருந்தது. அதனைத் தம் சாவால் சாத்தியமாக்கினார். இயேசுவின் உயிர் உலகெங்கும் நீதி நிலைக்கக் கொடுத்த விலைமதிக்கவியலா விலை.

2. மன்னிப்பு மடியாது

அடுத்தவரிடம் அன்பு; பகைவரிடம் வெறுப்புஎன்பதே யூதருக்கான மரபுவழிச் சட்டம் (மத் 5:43). அச்சட்டத்தைக் கவிழ்த்துப் போட்டுமன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்” (லூக் 6:37) என்ற மாற்றுப் பார்வையை மனங்களுள் விதைத்து அறுவடை செய்ய முனைந்தவர் இயேசு. தாம் போதித்ததோடு மட்டுமன்றி, சாவின் விளிம்பிலும் அதைக் கடைப்பிடிக்கத் தவறவில்லை. தம்மை அணு அணுவாய் சித்திரவதை செய்து, கொன்று கொண்டிருந்தவர்களையும் மன்னிக்கும் மன மாண்பை இயேசு தன்னகம்  கொண்டிருந்தார். நகைத்தலையும், பகைத்தலையும், பழித்தலையும், அவமதித்தலையும், இறுதியில் உயிர் இழத்தலையும் மன்னிப்பால் எதிர் கொள்ளும் மனவளம் அவரது இயல்பாக இருந்தது.

மன்னிக்கும் வேலை கடவுளுக்கானது’ (லூக் 5:21) என்ற மழுங்கிய சிந்தனையை மாற்றி, ‘மன்னித்தல் மனிதர் எல்லாருக்குமானதுஎன்ற புதுச் சிந்தையை மரணத்தின் வாசலில் நின்று துணிந்துரைத்தார். அந்தப் பெருந்துணிச்சல்தான் சிலுவை மரத்தில் ஆணிகளால் அறையப்பட்டுத் தொங்கிய நேரத்திலும், “தந்தையே, இவர்களை மன்னியும்...” (லூக் 23:34) என்று அவரை மன்றாட வைத்தது. ‘பழிக்குப் பழிவாங்குதல்என்பதைக் காயப்படுத்தலால் அல்ல; ‘கரிசனைமிக்க மன்னித்தலாலும்ஏற்படுத்த முடியுமென நிரூபித்தவர் இயேசு. இதனையே அமெரிக்க எழுத்தாளர் ஜோஷ் பில்லிங்ஸ்மன்னிப்பதைப் போன்ற முழுமையான பழிவாங்கல் உலகில் வேறேதும் இல்லைஎன்று நயமாகக் குறிப்பிடுகின்றார். மானுடத்தின் ஆழமான தேவையும், மிக உயர்ந்த சாதனையும் மன்னிப்புதான் என்னும் உயர் பார்வையை உயிர் கொடுத்துக் கற்றுத் தந்தார் நம் நண்பர் இயேசு. அது உலகெல்லாம் உலா வர வேண்டும் என்பது அவரது தாகமும், தளரா முனைப்புமாய் இருக்கிறது.

3. அன்பு அழியாது

அன்பின் எல்லையில்லாச் சக்தியை அகம் உணர்ந்தவர் இயேசு. எனவேதான் தம் போதனைகளின்போதுகேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்என்று பன்முறை சொன்னாலும், ‘அன்பு செய்தலைஒரு கட்டளையாகப் பிறப்பித்தார். ‘அன்பு, பெறுவதைவிட அதிகம் கொடுக்கும்என்னும் தத்துவத்தைத் தம் ஏக்கமாகவும், அது மானுட நோக்கமாகவும் இருக்கவும் விரும்பினார்.

இளமையான இயேசுவின் இறப்பு ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல; மாறாக, அது முழுக்க முழுக்க அன்பின் தற்கையளிப்பு. அடிமட்ட மக்கள் மீதான இயேசுவின் அளவற்ற அன்பின் வெளிப்பாடு. “அன்பு செய்யும் கலையைக் கற்றவர் அனைத்தையும் சாதிக்கிறார்என்கிறார் புனித வின்சென்ட் பல் லோட்டி. இயேசு தம் ஆழ்ந்த அன்பால் தம்மையே இழந்தார். அந்த ஈடிணையற்ற இழப்பால் எல்லா இதயங்களிலும் நுழைந்து இன்னும் வாழ்கிறார்.

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவா 15:13) என்ற சொல்லாடலுக்குச் சொந்தமான இயேசு, தம் உயிர் தானத்தின் வழியாகச் சிறந்த அன்பின் சின்னமானார். தம்மை ஏற்காத உலகிற்குச் சிலுவைச் சாவு வழியாகத் தம்மையே பரிசாக்கினார். பண பலமும், அரசியல் மேலாதிக்கமும், அதிகாரத் துஷ்பிரயோகமும், அநியாயப் போர்களும், அநீதச் சட்டங்களும் கோலோச்சிய காலத்தில், இயேசுவின் கொலை ஒரு தனிமனிதன் மீதான தாக்குதல் அல்ல; அது ஒட்டுமொத்த மானுட குலத்தின்மீது ஏவப்பட்ட அசாத்திய அச்சுறுத்தல்.

அன்பிற்கு முரணான வன்தனங்கள் எல்லாமே நேயத்திற்கு எதிரான வன்தளங்கள்; சிலுவைக் கொலையின் நீட்சிகள். அதற்காக நாம் அன்பைத் துறந்திட வேண்டும் என்றல்ல; இன்னும் அன்பில் ஆழ்ந்து அர்ப்பணராய் வாழ வழிகாட்டுவதே இயேசுவின் சிலுவைக் கொலைக்கான தன்னளிப்பு.

நிறைவாக

இயேசுவின் சிலுவைக் கொலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்து முடிந்துவிட்ட ஒரு நிகழ்வு அல்ல; அநீதிக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்புவோர் வீழ்த்தப்படுகையில், நீதிச் சார்புமிக்க நிலைப்பாடுடன் உண்மையை வெளிச்சப்படுத்துவோர் மிதிக்கப்படுகையில், குழந்தைகள், பெண்கள், கைவிடப்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளர்களின் வாழ்வு நலனுக்காய் போராடுவோர் நசுக்கப்படுகையில், சுற்றுச்சூழல் காக்கும் பணியில் தங்களைக் கரைக்கும் இயற்கை ஆர்வலர்கள் பொசுக்கப்படுகையில், சாதி, சமய, நிற, பால் பாகுபாடுகளைக் களைந்து சமத்துவச் சமூகம் படைக்கத் துடிப்போர் தீக்கிரையாக்கப்படுகையில், இலஞ்சம், கலப்படம், பதுக்கல், விலைவாசி, அரசியல் எதேச்சதிகாரம் போன்றவற்றை எதிர்ப்போர் இல்லாமலாக்கப்படுகையில் இயேசுவின் சிலுவைக் கொலை இன்றும் தொடர் நிகழ்வாகிறது.

தீமை, நிலையான வெற்றியை ஒருபோதும் கொடுக்க முடியாது. நீதி, மன்னிப்பு, அன்பு எனும் நேய காவியங்களே இப்பூமியை நகர்த்தும் நெம்பு கோல்கள். அதற்காக உழைத்து உயிர் கொடுக்கும் அர்ப்பண தீபங்களுக்காக இன்னும் ஆயிரமாயிரம்புனித வெள்ளிகள்பிறந்து புன்னகைக்கின்றன. ஏனென்றால், உயர்ந்த இலட்சியத்தோடு வாழும் ஒருவருக்கு இறப்புகூட இன்னொரு பிறப்புதான்.

வெள்ளிக்குப் புனிதம் சேர்க்க வாழ்த்துகள்!

Comment