No icon

பெரிய வியாழன்

இதை என் நினைவாகச் செய்யுங்கள்!

இன்றைய நாளைபுனித வியாழன்அல்லதுபெரிய வியாழன்என்று அழைக்கின்றோம். இயேசு தம் சீடர்களுடன் அமர்ந்து, பேசி, உரையாடி, உணவுண்டு, அன்பின் கட்டளையை வழங்கிய இந்நாளை மிகுந்த கவனத்துடனும், அர்ப்பணத்துடனும் கொண்டாடி மகிழ்கின்றோம். ‘Maundy Thursdayஎன்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்நாளின் பொருள்மிகு இயேசுவின் செயல்களை உற்றுநோக்குவோம். ‘Mandatumஎன்னும் இலத்தீன் வார்த்தையின் பொருள் - ‘கட்டளைஎன்பதாகும். இரண்டு முக்கியக் கட்டளைகளை இன்று இயேசு தம் சீடர்களுக்கும், நமக்கும் வழங்குகின்றார்:

1. நான் உங்களை அன்பு செய்தது போல், நீங்களும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும். 2. நான் உங்களின் பாதங்களைக் கழுவியது போன்று, நீங்களும் மற்றவர்களின் பாதங்களைக் கழுவ வேண்டும். இவ்விரு கட்டளைகளையும் நமது கிறிஸ்தவ வாழ்வில் கடைப்பிடித்தால் மட்டுமே இறையரசின் நற்செய்தியை இவ்வுலகின் எல்லா இடங்களுக்கும் நம்மால் சுமந்து செல்ல முடியும். இவ்விரு கட்டளைகளையும் இயேசு இறுதி இராவுணவின் பொழுது தமது சீடர்களுக்கு வழங்குகின்றார்.

ஒருவரோடு அமர்ந்து உணவு உண்கின்ற பொழுது உறவு ஆழப்படுகின்றது; மகிழ்ச்சி இரட்டிப்பாகின்றது; துன்பங்கள், சோகங்கள், இழப்புகளின் வலியும், வேதனையும் குறைகின்றது. இறைவனோடு ஒரே பந்தியில் அமர்ந்து-அவர் வழங்கும் விண்ணக உணவை (நற்கருணையை) உண்ணும் நாம், இவ்விரு கட்டளைகளையும் நமது அன்றாட வாழ்வின் செயல்பாடுகளிலிருந்து தூரமாய் நிறுத்தி வாழ்ந்துவிட்டால், அவ்வுணவின் (நற்கருணை யின்) பலனை நாம் பெறாமலே கடந்து சென்று விடுவோம்.

உணவே உறவு - உணவே ஒன்றிப்பு

இன்று ஆண்டவர் இயேசு திரு அவையின் இயக்கமாய், நமது அன்றாட அர்த்தமிகு கிறிஸ்தவ வாழ்வில் சவால் விடுகின்ற நற்கருணையை ஏற்படுத்திய நாள்.  1கொரி 11:23-26, மத் 14:22-24, லூக் 22:17-22 ஆகிய இறைவார்த்தைகளின் பகுதிகளில் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய அந்நிகழ்வினை நற்செய்தியாளர்களும், பவுலடியாரும் நமக்கு நினைவுபடுத்துகின்றனர்.

நாம் அன்றாடம் உண்கின்ற உணவு, நமது உடலின் அங்கமாக, ஆற்றலாக, இரத்தமாக மாறுகின்றது. உணவு இல்லையேல் ஒருவருக்கு ஆற்றலும், வலிமையும், திராணியும் இல்லாமல் போகும். ஒருவர் உண்டுவிட்ட உணவை, அவரின் உடலிலிருந்து பிரித்து எடுத்திட இயலாது. தமது சீடர்களின் வாழ்வில் தமது போதனையும், உடனிருப்பும் இறுதி வரை நிலைத்து நின்று, அவர்களின் அன்றாட வாழ்வு, சாட்சியம் மிகுந்ததாய் அமைந்திடவே நற்கருணையை உணவாக ஏற்படுத்தினார் ஆண்டவர் இயேசு.

ஒருவரோடு உணவு உண்ணும் பொழுது, வேறுபாடுகள் மறைகின்றன. ஒற்றுமை மேம்படுகின்றது. ஒன்றிப்பு வெளிப்படுகின்றது. நற்கருணையின் சமூகத்தில் வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பது, நற்கருணை வாழ்வின் பிறழ்சாட்சியம் என்பதை இன்றைய நாள் நினைவுறுத்துகின்றதுநற்கருணைச் சமூகம் அனைவரையும் உள்ளடக்கிய சமூகம்முதியோர், இளையோர், குழந்தைகள், பெண்கள், படித்தவர், பாமரர், செல்வந்தர், ஏழை என்று எல்லாரும் சமமாக நடத்தப்படுவதுதான் இயேசுவின் இராவுணவு நமக்குச் சொல்லும் அடிப்படைச் செய்தி.

இயேசுவின் இறுதி இராவுணவுப் பந்தியில் இயேசுவுக்கு மிக நெருக்கமான சீடரான யோவானும், இயேசுவை மறுதலித்த பேதுருவும், காட்டிக் கொடுத்த யூதாசும், தங்களுக்குச் சீடர்களின் மத்தியில் முதன்மையான இடம் வேண்டும் எனக் கோரிய செபதேயுவின் மகன்களும் உண்டு. இவர்கள் எல்லாரையும் ஒன்றிணைக்கும் கருவியாக இயேசுவின் இராவுணவு அமைகிறது.

இந்த இறுதி உணவின் பொழுது அவர்களின் மத்தியில் உரையாடல்கள், தர்க்கங்கள், கருத்து வேறுபாடுகள் நிச்சயம் வெளிப்பட்டிருக்கும். ஆனால், இயேசு என்றும் அவர்களின் தலைவர் - அவர்களை ஒன்றிணைக்கும் காரணியாய் அமைந்து, அவரின் பாடுகளின் பிறகு, அப்பம் பிட்டு அவர் செய்த செயலை நினைவுகூரும் இச்செயல் பிற்காலங்களில் சீடர்களையும், தொடக்கக் காலக் கிறிஸ்தவர்களையும் ஒன்றிணைக்கும் அடிப்படைக் காரணமாகவே அமைந்தது.

இன்று இயேசுவின் பெயரும், இயேசு ஏற்படுத்திய நற்கருணையும் நம்மை ஒன்றிணைக்கின்றதா? நற்கருணையில் ஒரே அப்பத்திலும், ஒரே கிண்ணத்திலும் நாம் பங்கெடுத்தாலும் (கொரி 11:17-19), நமக்குள் ஒன்றிப்பு ஏற்படாமல், பிளவுகளும், பிணக்குகளும் ஏற்படுவதன் காரணம் என்ன? இயேசு ஏற்படுத்திய நற்கருணை வெறும் ஆடம்பரச் சடங்காய் மட்டுமே நம் வாழ்வில் கடந்து செல்லக்கூடாது.

அப்பமும் இரசமும்-துண்டும்-தண்ணீரும்

இயேசு தமது சீடர்களின் பாதங்களைக் கழுவிய நிகழ்வினை இன்றைய நற்செய்தியில் யோவான் குறிப்பிடுகின்றார். இயேசு நற்கருணையை, அப்பத்தின், இரசத்தின் வழியாக ஏற்படுத்தியதாக யோவான் நற்செய்தியாளர் பதிவிடவில்லை; மாறாக, தமது இடுப்பில் கட்டிய துண்டினாலும், பாதம் கழுவும் நீரினாலும் நற்கருணையில் பொதிந்துள்ள மறைப்பொருளை விளக்குகிறார்.

நமது நினைவில் வாழும் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 2003-ஆம் ஆண்டின் பெரிய வியாழன் கொண்டாட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “பாதம் கழுவும் நிகழ்வும், திருவருட்சாதனமாகிய நற்கருணையும் அன்பென்னும் ஒற்றை மறைப்பொருளின் இரண்டு வெளிப்பாடுகள். இவ்வன்பின்  மறைப்பொருளை, இயேசு தமது சீடர்களின் கரங்களில் இன்று ஒப்படைத்து, ‘நான் செய்தது போன்று... நீங்களும் செய்ய வேண்டும்எனப் பணிக்கின்றார்” (யோவா 13:15). நீங்கள் மற்றவர்களின் பாதங்களைக் கழுவினால் நலமாய் இருக்கும், எனக்குப் பிடித்தமானதாய் இருக்கும் என்று இயேசு தமது விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை; மாறாக, சம்மட்டி கொண்டு ஓங்கி அறைந்தது போன்று சீடத் துவத்தின் நிபந்தனை ஒன்று மட்டுமே; ‘பாதம் கழுவுவதிலும், பணிப்புரிதலிலும்என்று உரக்கக் கூறுகிறார். இயேசுவின் பாதம் கழுவும் சடங்கு, நற்கருணையின் மொத்த விளக்கத்தையும், அதில் உள்ளடங்கிய சவாலையும் நம் கண்முன் நிறுத்துகின்றது.

குருத்துவமும், உடனிருப்பும்

ஒருவரின் குருத்துவ நிலைப்பாட்டு நிகழ்வு மட்டும் ஒருவரைக் குருவாக அடையாளப்படுத்துவதில்லை; மாறாக, ஒருவரின் உடனிருப்பு (Solidarity) மட்டுமே குருத்துவ வாழ்வின் பணியாளராக அடையாளப்படுத்துகின்றது. இயேசு லேவியர் குலத்தில் பிறக்கவில்லை. அவரின் சமகாலக் குருக்கள் செலுத்திய பலியை அவர் செலுத்தவில்லைஎருசலேம் ஆலயத்திற்குப் பலமுறை சென்றாலும், அவ்வாலயத்தின் தூயகத்திற்குச் சென்று பலி செலுத்தவில்லை. ஆயினும், எபிரேயர் மடலில் இயேசுவைப் பெரிய குருவாக அந்நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இயேசுவின் அன்பும், அக்கறையும், அவர்களின் துன்ப நிகழ்வில், நோயில், தேவையில், இறப்பில், தனிமையில், புறக்கணிப்பில் வெளிப்படுத்திய தோழமையும், ஒன்றிப்பும், தந்தையின் அன்பினை, இரக்கத்தினை வெளிப்படுத்திய நிகழ்வுகளும், அவரைச் சிறந்த இணைப்பாளராக (எபி 8:6) மக்களின் உள்ளத்தில் பதித்தது. எனவேதான் இயேசுவை எல்லாத் தலைமைக் குருக்களையும்விட பெரிய, சிறந்த தலைமைக் குருவாக அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இன்றைய நாளில் நாம் கொண்டாடும் குருத்துவம், மக்களின் வாழ்வில் தாக்கத் தையும், இறை அன்பினையும் வெளிப்படுத்த அவசியமானது - உடனிருக்கும் மனநிலை, அவற்றை முன்னிறுத்தி எடுக்கின்ற நிலைப்பாடு மற்றும் அதன் செயல்பாடுகளுமே!

குருத்துவமும், உருவாக்கமும்

குருத்துவப் பணி என்பது கிறிஸ்தவக் கோட்பாடுகளையும், நம்பிக்கைச் சத்தியங்களையும், திரு அவையின் படிப்பினைகளையும் மற்றவர்களுக்கு வழங்குகின்ற பணியாக மட்டும் நின்றுவிட்டால் போதுமானதல்ல; குருத்துவப் பணியின் முதன்மையான, முழுமையான நோக்கம் - உருவாக்கும் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகின்றார்.

நான் எதற்காகக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டிருக்கின்றேன்?’ என்னும் கேள்வியைப் பணிக் குருத்துவத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் இன்றைய நாளில் எழுப்புவது சாலச்சிறந்தது. எனது பணிக்குருத்துவ வாழ்வின் நோக்கம் என்ன? எனது குருத்துவ வாழ்வின் நோக்கமே - இறைவனின் ஆசீரினால், அர்ச்சிப்பினால், அருளினால் ஆரோனைப் போன்று நமது திருவுடைகளும் வாழ்வும் நிறைந்து - நமது ஆடையின் விளிம்புகளை நிறைக்கின்றது (திபா 133:2).

இவ்வாசீரும், கொடைகளும் நமது சமூகத்தின் விளிம்புகளை நனைக்க வேண்டும். இவ்வாசீரும், நன்மைகளும் விளிம்புகளை நோக்கிச் செல்ல வேண்டும். இச்சமூகத்தின் விளிம்புகளில் வாழ்வோரை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

பிறரின் தந்தையாய், தாயாய், சகோதரராய் வாழ்வதே உருவாக்கப் பணியின் பொறுப்புணர்ச்சியாகும். பணிக் குருத்துவ வாழ்வில்-திருத்தொண்டு பணிக்கான அழைப்பினை ஒருபொழுதும் மறந்திடலாகாது. பணிவிடை புரிவதென்பது, பிறருக்கு நமது நேரங்களைத் தருவது (Available), எனது தனிப்பட்ட திட்டங்களையும், விருப்பங்களையும் தவிர்த்து, கடவுளின் ஆச்சரியங்களுக்குத் திறந்த மனத்தோடு உற்றுநோக்கி ஏற்றுக்கொள்வது. அவரின் திட்டத்தோடு இணைந்து செல்வது. ஒருவரின் பணிக் குருத்துவ வாழ்வு, தனிப்பட்ட வெற்றிகளையும், இமாலயச் சாதனைகளையும், பட்டங்களையும், படிப்புகளையும், வானளாவிய கட்டடங்களையும் கட்டுவதல்ல; மாறாக, இது உடன் சென்று, உடன் பயணித்து, அனைவரையும் உள்ளடக்கிக் கைகோர்த்து இறைச்சமூகத்தை உருவாக்குவதே!

Comment